இரண்டு நல்ல ஆரம்பங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் சில சமயங்களில் அபூர்வமாக சில நல்ல நிகழ்ச்சிகள் நடந்துவிடுகின்றன. பொதுவாக எப்போதும் ஆட்டம் பாட்டு வெட்டி அரட்டை என்றே போகும் நிகழ்ச்சிகளின் மத்தியில், மனிதன் வெறுத்து ஓடத்தக்க சீரியல்களும் உண்டு. இதையெல்லாம் எப்படித்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்களோ? அதுவும் சீரியல்களில் வரும் வில்லி பாத்திரங்களைப் பார்த்தாலே, வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வஞ்சகம், சூது, வன்முறை என்று எதையெல்லாம் குழந்தைகளின் பார்வையில் இருந்து ஒதுக்கி வைக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் தான் இந்த வில்லிகள் வலியுறுத்துகிறார்கள்.

மருந்துக்கும் இயல்பே இல்லாத பாத்திரங்கள் இவை. மோசமான சினிமாவின் மிச்சம் மீதி பாதிப்பு இது. இது ஒரு தொடர்ந்த தலைவலி என்று விட்டுவிட வேண்டியதுதான். நான் சொல்ல வந்தது வேறு.

தற்செயலாய் தொலைக்காட்சி சேனல்களை மாற்றிக்கொண்டே வந்தபோது, டிஸ்கவரி சேனல் தட்டுப்பட்டது. நிறுத்திப் பார்த்தால், டிஸ்கவரி தமிழில் வேறு பேசத் தொடங்கியது. எப்போதில் இருந்து டிஸ்கவரி தமிழில் வரத் தொடங்கியது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து டிஸ்கவரி சேனல், கட்டணம் வசூலிக்கும் சேனல். அதனால் அது பொதுவாக வீட்டில் கேபிள் மூலம் வரும் சேனல்களில் இடம்பெறாது.

மிக அழகாகவும், அவ்வப்போது அபத்தமாகவும் டிஸ்கவரி நிகழ்ச்சிகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் பேசுகின்றன. டிஸ்கவரி நிகழ்ச்சிகளின் தரத்தையும் அதன் பெருமையையும் நான் பேசி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. ஆனால், எனக்கு உவப்பளித்தது அதன் தமிழாக்கம்தான்.

பேச்சு மொழிக்கு மிக நெருக்கமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். எளிமையாக, சுலபமாகப் புரியக்கூடிய வகையில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். முக்கியமான, டெக்னிக்கலான ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். அதையெல்லாம் தமிழ்ப்படுத்தும் கொடுமையைச் செய்யவில்லை. குரலில் ஏற்ற இறக்கம், வேறுபாடு காட்டுதல் என்று நிகழ்ச்சியை ஒட்டி, யோசித்தே பின்னணி குரல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நல்ல சிரத்தையும் செய்யப்பட்டுள்ள முயற்சி இது.

ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர்களுடைய மொழிபெயர்ப்பின் தரம், நகைப்புக்கு இடமளிக்கிறது. ஒரு சமையல் நிகழ்ச்சியில், சில்வர் ஃபாயிலை, வெள்ளி இலை என்றார்கள். Time Wrap என்பதை தமிழில் என்னவோ சொல்லுகிறார்கள்.

சீரியல் வில்லிகளைப் பார்த்து மனம் நோவதை விட, இயற்கையின் விகாசத்தைப் பார்ப்பதும், மொழிபெயர்ப்பு நகைச்சுவையைக் கேட்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இரண்டாவது நிகழ்ச்சியும் இதே போல் ஓர் அதிசயமான நாளில்தான் கண்டுபிடித்தேன். செப்டம்பர் 2009 கடைசியில்தான், பாலிமர் டிவி என்றொரு புதிய சேனல் தொடங்கப்பட்டது. அல்லது விரிவுபடுத்தப்பட்டது. ஏற்கெனவே, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் லோக்கல் கேபிள் சேனலாக உலா வந்த பாலிமர் டிவி, இப்போது சாட்டிலைட் சானலாக மறுஅவதாரம் எடுத்திருக்கிறது.

ஒரு நாள் காலை, நிகழ்ச்சிகளை மாற்றிக்கொண்டு இருந்த எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பாலிமர் டிவியில், ஒரு அழகிய பெண், இந்தி சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார். முதலில் இந்தி எழுத்துகளை வெள்ளை போர்டில் எழுதிப் போட்டு, உச்சரிப்புச் சொல்லித் தந்தார். அதன் பிறகு, இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்ட பயன்பாட்டு வாக்கியங்களைச் சொல்லிக் கொடுத்தார். இறுதியில் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், எல்லாவற்றையும் மீண்டும் சொல்லித் தந்தார்.

என் மனம் அவர் சொல்லித் தந்த இந்தியில் போகவில்லை. இந்தியத் தொலைக்காட்சியிலேயே முதன் முறையாக, தமிழ்த் தொலைக்காட்சியிலேயே முதல்முறையாக என்றெல்லாம் போட்டு தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்களே. பாலிமர் டிவிகாரர்கள் தாராளமாக, ‘தமிழ்த் தொலைக்காட்சிகளையே முதல் முறையாக, திராவிடப் பாரம்பரியத்தை எதிர்த்து, இந்தி சொல்லிக்கொடுக்கப்படும்’ என்று சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாமோ?

எனக்கு இந்த நிகழ்ச்சியை விட, இது தரும் செய்திகள் தான் முக்கியமாகத் தோன்றின.

1. இந்தியை வைத்தே நாற்பது ஐம்பது ஆண்டுகாலம் அரசியல் நடத்திய ஒரு மாநிலத்தில், இப்படிப்பட்ட ஓர் நிகழ்ச்சி நடைபெற முடியும் என்று என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அதுவும் ஒரு தொலைக்காட்சியில் வரும் என்று நினைக்கவே முடியவில்லை.
2. தமிழகத்தில் ஒரு வித சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளான மொழி, இந்தி. அதைக் கற்பதோ, பேசுவதோ, பயன்படுத்துவதோ கூட, தயக்கத்துடனும் அச்சத்துடனும்தான் செய்யப்பட வேண்டியிருந்தது.
3. மேலும் இந்தியை ஆதரிப்பவர்கள், ஆதரிக்காதவர்கள் என்று இரண்டு பிரிவுகள் உருவாகி, அதற்குப் பல்வேறு சாயங்களும் பூசப்பட்டு, ஒருவரை ஒருவர் விலக்கி வைத்துக்கொள்வது, அதிகாரத்தின் துணை கொண்டு தம் ஒன்றை மற்றொன்று மறைக்க முயல்வதும் தமிழகத்தின் சமீபகால சரித்திரம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தி என்பது பாவமூட்டையைச் சுமந்துகொண்டு இருக்கும் மொழி. அதற்குக் கொடுக்கப்பட்ட வண்ணங்கள் அப்படி.

இதையெல்லாம் மீறி, ஒரு தொலைக்காட்சிச் சேனலில், இந்தியைச் சொல்லிக்கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என்றால், முதலில் அவர்களுடைய துணிவைப் பாராட்ட வேண்டும்.

இரண்டு, காலமாற்றம் ஏற்படுவதின் அறிகுறியாகவும் இந்த நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளலாம். இந்தி வெறுப்பு, எதிர்ப்பு, அதைக் கொண்டு ஒரு அரசியல் தலைமையைக் கட்டி எழுப்ப முற்படுவது என்பதெல்லாம் மெல்லக் கனவாக பழங்கதையாக ஆகிக்கொண்டு இருக்கிறது. 20 ஆண்டுகளை ஒரு தலைமுறைக் காலம் என்று எடுத்துக்கொண்டால், இந்தி எதிர்ப்பு இயக்கங்கள் முடிந்து இரண்டு தலைமுறைக் காலம் ஆகிவிட்டது. மெல்ல அதன் மிச்சங்கள் அழிந்துவரும் காலம் இது. மேலும், இன்றிருக்கும் பெற்றோராலும் மாணவர்களாலும் இந்தியை எந்தவிதமான சாய்வுகளும் இல்லாமல் பழைய சரித்திரச் சுமைகளும் இல்லாமல் பார்க்க முடிகிறது. அதைப் கற்றுக்கொள்வதின் தேவையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான், இந்தியைக் கற்றுத் தரும் நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்.

இரண்டுமே நல்ல ஆரம்பங்கள். நிறைவு தரும் ஆரம்பங்கள்.

http://www.nesamudan.com
Email: venkatesh.nesamudan@gmail.com

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்