தெய்வம் நீ என்றுணர்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

பா.பூபதி


பாரதி சொன்ன வீரியமிக்க வார்த்தைகளில் ஒன்று “தெய்வம் நீ என்றுணர்” சொல்வதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையான வார்த்தை இது. ஆனால் அகத்தில் செல்வந்தராக யார் விளங்குகிறார்களோ அவர்களால் மட்டுமே அடையக்கூடிய நிலை இது, புறத்தில் மட்டுமே செல்வந்தராக விளங்கும் பிச்சைக்காரர்களால் இந்த உணர்வை நிச்சயமாக உணர முடியாது. புறத்தில் மிக ஏழ்மையாக வாழ்ந்தாலும் அகத்தில் எல்லோரையும்வீட செல்வந்தனாக வாழ்ந்தவர் பாரதியார். அதனால்தான் ”தெய்வம் நீ என்றுணர்” என்று அவரால் சொல்ல முடிந்தது.

நம்மால் ஏன் அப்படிப்பட்ட உயர்வான நிலையை உணர இயலாது போனது என்பதை யோசித்தோமானால், நம் மனதில் நிறைந்துகிடக்கும் தாழ்வு மனப்பாண்மையும் அதை மேலும் அதிகரிக்கும்படியான நம்முடைய செயல்பாடுகளும்தான் காரணம் என்பது தெரியவரும். நம்மை தாழ்த்திக்கொள்ளும் எண்ணங்கள் நம் மணதில் ஆழப்பதிந்துபோனதற்கு எந்த மாதிரியான செயல்பாடுகள் காரணமாக அமைந்தது என பட்டியலிட்டால் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக நம்முடைய வழிபாட்டு முறையும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். நம்முடைய வழிபாட்டு முறை நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு எப்படி காரணமாக அமைந்தது என்பதை தெரிந்துகொள்ள நாம் ஆரம்பத்தில் இருந்து அதாவது கடவுள் வாழ்த்திலிருந்து நம்முடைய நடவடிக்கைகளை சற்று பின்னோக்கி பார்க்க வேண்டும்.

கடவுள் வாழ்த்து:

கடவுளை தொடர்பு கொள்ள நாம் செய்யும் பிராத்தனை முறையானது பெரும்பாலும் வாழ்த்துதல் அல்லது வாழ்த்திப்பாடுதல் என்ற வகையில்தான் அமைந்திருக்கிறது. இந்த வாழ்த்துதல் அல்லது வாழ்த்திப்பாடுதலில் இரண்டு வகை உண்டு.

1. சிறியோர்கள் தங்களைவீட ஏதாவது ஒருவகையில் உயர்ந்தோர்களின் பண்புகளை வியந்து போற்றி, அவர்களின் ஆசியை அல்லது அருளை எதிர்பார்த்து வாழ்த்திப்பாடுவது அதாவது பக்தர்கள் கடவுளின் அருளை வேண்டி கடவுளை வாழ்த்திப் பாடுவது போன்றது.

2. பெரியோர்கள் தங்களைவீட எதாவது ஒருவகையில் சிறியோர்களாக உள்ளவர்களை எல்லாம் பெற்று விளங்குமாறு ஆசிர்வதித்து வாழ்த்துவது அதாவது கடவுள் பக்தர்களை வாழ்த்துவது மற்றும் பெற்றோர் குழந்தைகளை வாழ்த்துவது போன்றது.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிமையானது சிறியோர்கள் தங்களைவீட ஏதாவது ஒருவகையில் உயர்ந்தோர்களை வாழ்த்துவது என்பது தங்களிடம் இல்லாத ஒன்றை பெறுவதற்காக அமைந்திருக்கும் அது அருளாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். ஆனால் பெரியோர்கள் தங்களைவீட ஏதாவது ஒருவகையில் சிறியவர்களாக உள்ளவர்களை வாழ்த்துவதென்பது பெருந்தன்மையுடன் எதையும் எதிர்பாராமல் செய்வது.

எதையும் எதிர்பாராமல் செய்யும் வாழ்த்துக்களானது நம்முள் சிறந்த ஆளுமை பண்புகள் வளர காரணமாக அமையும். அதேபோல எதையாவது மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்து செய்யும் வாழ்த்துக்களானது நம்முள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி நம்முடைய ஆளுமைப் பண்புகளை பாதிக்கும்.

ஆளுமைப் பண்பை பாதிக்கும் பிராத்தனை முறை:

ஆரம்ப காலத்திலிருந்து இப்போதுவரை நம்முடைய கடவுள் வாழ்த்துக்களில் எதையும் எதிர்பார்க்காத பெருந்தன்மை என்பதே பெரும்பாலும் இருந்ததில்லை. எதாவது ஒரு தேவையை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பிராத்தனை இதுவரை இருந்துவந்துள்ளது. திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து முறையில்கூட துன்பமில்லாமல் வாழ, நெடுங்காலம் வாழ, நன்மை தீமைகளை எதிர்கொள்ள, மனக்கவலை தீர, பிறவிக்கடலை கடக்க, பயனுள்ள வாழ்க்கை வாழ என எதாவது ஒரு தேவையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கிறது.

தேவையை அடிப்படையாகக் கொண்ட பிராத்தனை முறையானது சிறியோர்கள் பெரியவர்களை வாழ்த்தும் முறையை சார்ந்தது. இப்படிப்பட்ட வாழ்த்துதலில் வாழ்த்துபவர் தன்னை தாழ்த்திக்கொண்டு கடவுளை உயர்த்தி, கடவுளின் சிறப்புகளை வாழ்த்துவதாக அமைந்திருக்கும். இப்படித்தான் ஆண்டாண்டுகாலமாக நடந்துவருகிறது. இதனால் பிராத்தனையின் மூலமாக நம்மை அறியாமலேயே நம்முடைய ஆளுமைப்பண்புகளின் தரத்தை நாம் குறைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு நிறைவான தன்மையுடன், பெருந்தன்மையுடன் நம்முடைய பிராத்தனை இருந்ததில்லை. நம்மை தூய்மையற்றவர்களாகவும், பாவம் செய்தவர்களாகவும், எதாவது ஒருவகையில் குறை உள்ளவர்களாகவும் நினைத்துக்கொண்டு நம்மை தூய்மை படுத்திக்கொள்ள நம்மைவீட மிகவும் தூய்மையானவரும், மிக உயர்வான நிலையில் இருப்பவருமான கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம். இதனால் நாம் தூய்மை அடைகிறோமோ இல்லையோ, நாமும் உயர்வான சிந்தனை கொண்டவர்கள்தான், நாமும் சிறந்த ஆளுமை பண்புகளை கொண்டவர்கள்தான் என்ற சிந்தனை நம் மனதில் இருந்து முற்றிலும் நீங்கி தாழ்வு மனப்பான்மைதான் ஏற்படுகிறது. தாழ்வு மனப்பாண்மை கொண்டவர்களின் பிராத்தனை எப்போதும் தங்களை தாழ்த்திக் கொள்வது போல் இருக்கும்.

கடவுளையே வாழ்த்திய பாரதி:

நமக்கு தேவையான விசயங்கள் நம்மிடம் இல்லை என்பதற்காக நாம் உயர்வானவர்கள் இல்லை என்பதாகிவிடாது. உதவி கேட்கப்போகிறோம் என்பதற்காக நாம் நம்முடைய பண்புகளை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மனிதர்களிடம் கேட்கும் உதவியாக இருந்தாலும் சரி, கடவுளிடம் கேட்கும் உதவியாக இருந்தாலும் சரி.

”தான் யாருக்கும் குறைந்தவனல்ல, தானும் மற்றவர்களைப்போல தூய்மையான உயர்வான பண்புகளை கொண்டவன்” என்ற உயர்வான சிந்தனைகளை கொண்டவர் பாரதி. அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார் என்று நமக்குத்தெரியும். அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாத நிலையிலும் சிந்தனையளவில் ஒரு ராஜா போல வாழ்ந்தவர் பாரதியார். மற்றவர்களிடம் யாசிக்கும் போதுகூட அவரது பேச்சு உத்தரவிடும் தோரனையில் இருக்கும்.

” நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவைநேரே இன்றெனக்குத் தருவாய்” பாரதியாரின் இந்த ஒற்றை வரியில் அவரது ஆளுமையின் தன்மை நமக்கு விளங்கும். வரங்கள் கேட்கும் வார்த்தையில் பயமில்லை, தாழ்வுமனப்பாண்மை இல்லை, நடுங்குதல் இல்லை தெளிவாக துணிவாக கேட்கிறார். கூடவே வரங்கள் கிடைக்க வேண்டிய காலகட்டத்தையும் அவரே முடிவு செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட உயர்வான எண்ணம் கொண்டிருந்ததால் தான் பாரதிக்கு கடவுளையே வாழ்த்தும் துணிவு இருந்திருக்கிறது. அவருடைய வசண கவிதையில் கடவுள்களை பின்வருமாறு வாழ்த்தியுள்ளார்.

தெய்வங்களை வாழ்த்துகிறோம்
தெய்வங்கள் இன்ப மெய்துக
அவை வாழ்க
அவை வெல்க
தெய்வங்களே!
என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்
என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர்.
எவற்றையும் காப்பீர்
உமக்கு நன்று
தெய்வங்களே!
எம்மை உண்பீர், எமக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உண வாவீர்

பாரதியாரின் வசன கவிதை வரிகளில் வரும் வார்த்தைகளை கவணித்து படித்துப் பாருங்கள் “தெய்வங்களை வாழ்த்துகிறோம், தெய்வங்கள் இன்ப எய்துக” அதாவது தெய்வங்கள் நன்றாக இருக்க வேண்டும் தெய்வங்கள் இன்ப மெய்த வேண்டும் என்று வாழ்த்துகிறார். இறைவனின் புகழை பாடி, தான் நன்றாக இருக்க வேண்டும் என்று பாரதியார் பாடவில்லை தெய்வங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். தெய்வங்கள் நன்றாக தங்களுடைய தொழிலை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறார். எதுவுமில்லாத ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்த நிலையிலும் கூட தெய்வங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் பாரதியாரின் குணம் எவ்வளவு சிறப்புடையது.

நம்முடைய ஆளுமைப்பண்புகள் பொதுவாக சிறப்பானதாகத்தான் இருக்கும். ஆனால் நமக்கு ஒரு தேவை ஏற்பட்டு அதை பெறுவதற்காக நாம் மற்றவர்களிடம் செல்லும்போதுதான் நம்முடைய உயர்வான பண்புகளை இழந்து, வெட்கத்துடன் தயங்கித் தயங்கி, தாழ்வு மனப்பாண்மையுடன் உதவிகேட்கிறோம். உதவி கேட்ட பிறகும் நமக்கு உதவி கிடைக்குமா கிடைக்காமல் போய்விடுமா என ஏக்கப்பட்டுக்கொண்டே காலந்தள்ளுகிறோம். ஆனால் பாரதியார் வரங்களை கேட்டுவிட்டு அது எப்போது கிடைக்கும் என காத்திருக்க விரும்பாமல் கிடைக்க வேண்டிய காலத்தையும் வரம் தருபவரிடம் சொல்லும் தைரியம் பெற்றிருப்பதை கவணித்துப்பாருங்கள்.

மளிகை கடைக்கு செல்லும்போது வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை எடுத்துச் செல்வது போல்தான் நாம் இறைவனை சந்திக்க பலவிதமான கோரிக்கைகளுடன் செல்கிறோம். கோரிக்கையின் நோக்கம் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். பக்கத்து வீட்டுக்காரனை கூட பிராத்தனை பட்டியலில் சேர்த்துக் கொள்ளாத நாம் எங்கே இருக்கிறோம்!, தெய்வங்கள் வாழ்க என்று வாழ்த்தும் பாரதியார் எங்கே இருக்கிறார்! இப்படி தெய்வங்களையே வாழ்த்தும் மனப்பாண்மையை பெற்றிருப்பதால்தான் பாரதியாரால் “தெய்வம் நீ என்றுணர்” என்று சொல்ல முடிந்தது. குறுகிய மனப்பாண்மையை கொண்டிருக்கும் நம்மால் நாம் தெய்வம் என்பதை உணர முடியாது, அதை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். அதற்குத்தேவையான ஆளுமைப் பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் பிராத்தனை:

நம்முடைய குறுகிய மனப்பாண்மையை விட்டு விட்டு நம் மனதை விசாலப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முதலில் தேவைப்பட்டியலுடன் கோவிலுக்கு செல்வதை நிறுத்திக் கொண்டு காரணம் எதுமில்லாமல் கோவிலுக்கு செல்ல வேண்டும், பின்னர் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போதும் தெய்வங்களை வாழ்த்திப் பழக வேண்டும். ”பிச்சை எடுக்கவே சென்று பழகிய நாம் பிச்சை போடும் நிலைக்கு வந்து விட்டதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.” தேவையை மனதில் வைத்துக்கொண்டு வியாபாரியை பார்க்க செல்வதைப்போல செல்லாமல் நமக்கு மிகவும் பிடித்த ஒருவரை காரணமின்றி பார்க்க செல்வதைப்போல நாம் கடவுளிடம் செல்ல வேண்டும். இதனால் மனம் விசாலப்படும் இந்த நிலைய அடைந்தால் தான் தெய்வங்களின் மீது நமக்கு உண்மையான அன்பும் அக்கரையும் வளரும்.

தெய்வங்களை வாழ்த்தவே இவ்வளவு பயிற்சியும் முயற்சியும் நாம் எடுதுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால் “தெய்வம் நீ என்றுணர்” என்று சொன்னாரே பாரதி அந்த நிலைய அடைய நாம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்! அதற்கு நாம் எவ்வளவு முதிர்ச்சியான பரந்து விரிந்த மனதை பெற்றிருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

நாம் தெய்வம் என்று நம்மை உணர்கிறோமோ இல்லையோ அதை நோக்கி செல்வதற்கு முதல் படியாக எதையாவது எதிர்பார்த்து தேவைப்பட்டியலுடன் கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, பாரதியை போல கடவுள்களை வாழ்த்துவதற்காக கோவிலுக்கு செல்வோம். வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒன்றை கேட்டுக்கொண்டே இருந்த நமக்கு கொடுப்பதென்பது புதிதாகத்தான் இருக்கும். காரணமின்றி கொடுப்பதன் மூலமாக சிறப்பான ஆளுமையை நாம் வளர்த்திக்கொள்ள முடியும்.

தெய்வங்களை வாழ்த்துகிறோம்
தெய்வங்கள் இன்ப மெய்துக.

saireader@gmail.com

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி