சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

முனைவர் மு. பழனியப்பன்,


மனிதன் சமுதாயச் சார்புடையவன். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டமைப்பில் உள்ளான். அவனின் தனி முயற்சி ஒரு புறம் அவனை உயர்த்தினாலும் அவன் சமுகத்தின் ஒரு அங்கமாக அந்தச் சமுகத்தின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவனாக வாழ்ந்தால் மட்டுமே அனைவராலும் போற்றப் படுகிற உயர் நிலைக்கு உயரமுடியும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் (140)

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு (425)

மேற்சுட்டிய குறட்பாக்களும் மனிதன் சமுகச் சார்புடையவன் என்பதை உணர்த்துவனவாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பண்பே மனிதர்க்குத் தேவையான அடிப்படை பண்பாகும். இப்பண்பினை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் சமுகத்தில் உள்ள அனைத்து மக்களோடும் இடையீடு இன்றிப் பழகவேண்டும். அனைவரும் மாசற்ற அன்பு கொள்ள வேண்டும். சண்டை சச்சரவு அற்ற ஒப்பற்ற உலகாக இவ்வுலகு உயர்வர்தற்கு இதுவே சரியான வழி. அந்த உன்னத வழியை உலகம் அடைவதற்காகவே இலக்கியங்கள், தத்துவங்கள் போன்றன நாடுகள் தோறும் தோன்றின. தோன்றிக் கொண்டு இருக்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற புறநானூற்றுப் புலவன் இன் சொல் இன்னுலகம் முழுமைக்கும் ஏற்கப்பட்டிருப்பதன் நோக்கமும் இதுவே ஆகும்.

சமுதாயக் கூட்டத்தில் மக்கள் அனைவரும் சரிசமம் என்ற போதிலும் அவர்களுடன் பழகுகின்ற போது, அன்பைப் பகிர்ந்து கொள்கின்றபோது அவரவர் குணம், பண்பு பார்த்தே பழகவேண்டி இருக்கிறது. மனிதர்களின் குணம், பண்பு போன்றன வெளிப்பட தெரிவதில்லை. அவை உடலுக்குள், உணர்வுக்குள், மனதிற்குள் புதைந்து கிடக்கின்றன. புதைந்து கிடக்கும் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இக்குணம் பண்பு போன்றவற்றிற்கான நிலையில் மனிதர்களைப் பிரித்து அறிந்து கொள்வது மிக்கடினம். இந்த கடின நிலையை எளிதாக்கிட வள்ளுவர் சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைகோடல், பெரியாரைப் பிழையாமை, சுற்றந்தழால் போன்ற பல அதிகாரங்களில் மனிதர்களை இனம் பிரிந்து அறிந்து கொள்ள ஏற்ற வழிகளை எடுத்துச் சொல்லியுள்ளார்.

மனிதன் சார்ந்து வாழ வேண்டிய சமுதாய அமைப்பு என்பது சுற்றத்தார், நண்பர்கள் போன்றோரை உள்ளடக்கியதாகும். நண்பர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களிடம் நட்பு பாராட்ட “நட்பு, தீநட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல்” போன்ற பல அதிகாரங்கள் வழிகாட்டுகின்றன. சுற்றத்தார் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாகக் கிடைத்தது சுற்றந்தழால் என்ற ஒரே ஓர் அதிகாரம் ஆகும்.

சுற்றந்தழால் என்ற அதிகாரம் பொருட்பாலில் அரசனுக்கு கூறப்படுகிற அரசியல் சார்புடைய கருத்துக்கள் கொண்ட பகுதியில் வைக்கப் பெற்றுள்ளது. அரசன் சுற்றத்தாரைக் காத்து அவர்களுக்கு நன்மை செய்து, தானும் நன்மை பெற்று வாழ வேண்டும் என்ற நிலையில் இது வள்ளுவரால் படைக்கப்பெற்றுள்ளது.

என்றாலும் இக்காலத்தில் சுற்றந்தழால் என்ற பண்பு ஆள்பவருக்கு உரிய பண்பா என்ற கேள்வி சில அறிஞர்களால் எழுப்பப்டுகிறது. இது குடியாட்சி நிலையில் ஆள்பவருக்கு உரிய பண்பு ஆகாது என்று கருதுகிறார் க. ப. அறவாணன்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்களைக் கொண்டு ஆளப்பெறும் குடியரசு அமைப்பில் ஆளுவோர் தம் உறவினரைத் தழுவி இருத்தலும், பதவி அளித்தலும் குடியரசு முறைக்கு ஏற்பானவை அல்ல” (க. ப. அறவாணன்., திருக்குறள் சிறப்புரை, ப. 209) என்ற க. ப. அறவாணனின் கருத்து சிந்தனைக்குரியது.

இருப்பினும் ஆள்பவர் மன்னராக இருப்பினும், தேர்ந்தெடுக்கப் பெற்ற மனிதராக இருப்பினும் அவர் தனித்து இயங்கமுடியாதவரே ஆவார். அவர் சுற்றத்தால், மற்ற அதிகாரிகளால், நண்பர்களால் ஆன கூட்டத்தால்தான் நன்மையோடு இயங்கமுடியும். இச்சூழலில் சுற்றந்தழால் என்ற அதிகாரம் உணர்த்தும் சமுதாய நெறி அனைத்து மனிதர்க்கும் உரிய நெறியாகின்றது.

இக்கருத்திற்கு அரண் செய்வதாக சமுதாய மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் பின்வருமாறு இவ்வதிகாரத் தேவையை எடுத்துரைக்கின்றார்.

“சுற்றம் ஆக்கம் தரும். பாதுகாப்பு தரும். சுற்றம் சூழ வாழ்தல் ஒருகலை. சுற்றம் பேணி வாழ்தலுக்கு இடையறாத அன்பு, நினைவில் வைத்துப் பாராட்டுதல், அன்பு காட்டுதல், ஒத்துப் போதல், குற்றம் பாராட்டாது இருத்தல் ஆகியன தேவையானது. நாடள்வோருக்கும் சரி, தனி ஒருவராய் வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும்சரி சுற்றம் தேவை” (குன்றக்குடி அடிகளார், திருக்குறள் உரை, ப. 158) என்ற அடிகாள் அவர்களின் கருத்து மனிதருக்கான சுற்றத்தின் இன்றியமையாமை எடுத்துரைப்பதாக உள்ளது.

சுற்றந்தழால் என்ற அதிகாரத்தில் சுற்றத்தார் இயல்பும், சுற்றத்தால் ஏற்படும் நன்மை, சுற்றத்தினைப் பேணிக்காக்க வேண்டிய முறைமை, பிரிந்த சுற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற முறைமை முதலியன வள்ளுவரால் எடுத்துரைக்கப்படுகின்றன.

சுற்றத்தார் இயல்பு
சுற்றத்தோடு தொடர்பற்று, பற்றற்றுச் சிலர் வாழ்ந்த போதிலும் அவர்களை ஒதுக்கிவிடாது தேவையான நேரத்தில் வந்து இருந்து உதவி செய்து பழமை பாராட்டும் பேரியல்பு சுற்றத்தாருக்கு மட்டுமே உண்டு என்ற அனுபவப் பாடத்தை இவ்வதிகாரத்தின் தலைக்குறள் எடுத்துரைக்கின்றது.

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள (521)

பழமை பாராட்டும் இப்பண்பு சுற்றத்தாரின் தனிச்சிறப்பாகும். மாதவி கண்ணகியின் உறவை ஏற்றிப் போற்றும் பாங்கு இக்குறளுக்கு இலக்கியமாகும்.

மணிமேகலையைக் கண்ணகியின் மகள் என உரிமைப்படுத்துகிறாள் மாதவி. மாதவிக்கும் கண்ணகிக்கும் இடையே நிலவிய முரண்பாடு மாதவியின் மகளான மணிமேகலையின் தொடர்வால் உறவாக மாறும் தன்மையைப் பெற்றது.

கண்ணகியும் கோவலனும் ஒருங்கிருக்கும்போது மாடலன் கூறும் மொழிகள் வழியாகக் கண்ணகி மணிமேகலையின் பிறப்பை அறிந்து மௌனமாகவே ஏற்றுகிறாள். மேலும் வஞ்சிக்காண்டத்தில் மாதவியின் மணிமேகலையின் துறவினை எடுத்தியம்பும் அடித்தோழி வாயிலாகவும் இந்தச் சொந்தம் வலுவான நிலையைப் பெறுகிறது.

கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற்றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேருர் கனையெரியூட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
(மணிமேகலை 5156)

என்ற அடிகளில் உள்ள உறவின் தொடர்பு மேற்குறளுக்கு இலக்கியம் என்பதில் ஐயமில்லை.

இதற்கு அடுத்த நிலையில் சுற்றத்தாரால் ஏற்படும் நன்மைகள் வள்ளுவரால் எடுத்துரைக்கப்படுகின்றன.

சுற்றத்தாரால் ஏற்படும் நன்மைகள்
அன்பு மாறாத சுற்றம் ஒருவனுக்கு அமைந்தால் அது அவருக்கு குன்றாத செல்வம் பலவும் தரும். (522) கரையில்லாத குளத்தில் நீர் தங்காதைப் போல சுற்றத்தார் துணையில்லாதவனின் வாழ்க்கையும் பயனற்றுப் போய்விடும். (523)
இதனோடு தொடர்புடையதாக பின்வரும் நாலாடியார் பாடல் அமைகின்றது.
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால்
கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தாங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்
கேளிரைக் கானக் கெடும் (211)

கரு சுமந்தபோதும், ஈன்றபோதும் ஏற்பட்ட வருத்தங்கள் குழந்தையைப் பெற்றபின் அக்குழந்தையைப் பார்த்தபின் தீருவதுபோல வருத்தம் உற்றவர்கள் தம் சுற்றத்தாரைப் பார்த்தால் அவ்வருத்தம் தீர்வார்கள் என்ற பொருளுடையதாக இப்பாடல் அமைகின்றது.

உறவினர்களின் துணை மனிதத் துயரத்தை ஓட்டும் பயனுடையதாக உள்ளது என்பதை இவற்றின்வழி உணரமுடிகின்றது.

சுற்றத்தாரைப் பேணும் முறை
ஒருவன் செல்வந்தனாக இருக்கிறான் என்றால் அவன் அச்செல்வத்தால் பெரும்பயன் சுற்றத்தைக் காக்க வேண்டுவதே ஆகும்.(524) இனிய சொற்கள், கொடைத்தன்மை உடையவனிடத்தில் அடுக்கடுக்காகச் சுற்றம் சூழ்ந்து நிற்கும்.(525) பெருங்கொடை கொடுப்பவனிடத்திலும், கோபப்படாதவன் இடத்திலும் சுற்றத்தார் சூழ்ந்து நிற்பர். (526) காக்கை தன் இனத்தைக் கூட்டி உண்ணுவது போல சுற்றத்தாரை அழைத்து அரவணைத்துக் கொள்ளவேண்டும் (527). இக்குறள்கள் தரும் இலக்கணத்தின்படி பல இலக்கியங்கள் அமைந்துள்ளன.

`குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின்வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை’
(கம்பராமாயணம். இலங்கைக்கேள்விப்படலம், 143)

தயரத மன்னன் இராமனால் ஏற்கப் பெற்ற சுற்றங்கள் அனைவருக்கும் தந்தையாக மாறிப் பொலிவுற்றான் என்ற கம்பனின் அடிகள் மேற்குறள்களின் பாற்பட்டதே. வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றதற்குக் காரணம் சுற்றம்தான் என்பதைக் கூறவும் வேண்டுவதில்லை.

வேந்தனும் சுற்றமும்
இவ்வதிகாரத்தின் நிறைவில் இடம்பெறும் முன்று குளட்பாக்கள் வேந்தர்கள் சுற்றத்தோடு கொள்ளவேண்டிய உறவுநிலையை எடுத்துரைக்கின்றன.

வேந்தன் சுற்றத்தாரின் தரமறிந்து அவர்களின் பெருமைக்கேற்ப செல்வ வரிசைகளை அளித்து அவர்களின் உறவைப் போற்றிக் கொள்ள வேண்டும். (528) காரணம் கருதியோ, காரணம் இன்றியோ பிரிந்து சென்ற சுற்றத்தார்கள் மீண்டும் இணைவது இயல்பு. இதற்குக் காரணம் கருதத் தேவையில்லை(529) அவ்வாறு வரும் சுற்றத்தாரைத் தேர்ந்தே தமராக்கிக்கொள்ள வேண்டும் (530).

இக்குறட்பாக்கள் வேந்தருக்கு மட்டுமல்லாது சாதாரண மனிதர்களுக்கும் உரிய முறைமையே ஆகும். சுற்றத்தாருக்குள் ஏற்படும் மனக்கசப்புகளுக்குக் காரணம் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம் என்ற நிலை எல்லா தரப்பினருக்கும் உரியதே.

வீடணன் வருகை புரிந்தபோது அவனைத் தமராக்கிக் கொள்ள இராமன் யோசித்தே முடிவு செய்கிறான். இந்தப்பகுதி மேற்குறள்களுக்கு இலக்கியமாகலாம்.

எனவே வள்ளுவர் வாய்மொழிகள் எக்காலத்திற்கும், எத்தரப்பினர்க்கும் இயல்பான நல்லறங்களைக் கூறக் கூடிய தன்மையது என்பதை மீண்டும் இக்குறள்கள் வாயிலாக நிலைநிறுத்துக் கொள்ள முடிகின்றது.

மேலும் சுற்றத்தார்கள் ஒரு மனிதனின் உயர்விற்கு மிக முக்கியமான காரணமாக அமைகின்றனர். அவர்களைப் பேணிக்காக்க கோபமின்மையும் கொடைத்தன்மையுமே தேவை என்ற அடிக்கருத்தை மனித குலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முனைவர் மு. பழனியப்பன்,
பேருரையாளர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

— muppalam2006@gmail.com
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்