அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

அப்துல் அஸீஸ்


இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம்.

இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும் இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.

ச‌வுதி ம‌ன்ன‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு புத்த‌க‌த்தை எழுத‌ மாரிஸ் புக்காயிலை ப‌ணித்தார் என்று தெரிய‌வில்லை என்றாலும், ப‌ல‌ ஹேஷ்ய‌ங்க‌ள உல‌வுகின்ற‌ன‌. ஒன்று ந‌வீன‌ ம‌ருத்துவத்தில் பரிணாமவியல் சொல்லித்தரப்படுவதாகவும், அதன் படி அல்லாஹ் மனிதனை படைக்கவில்லை என்றும், குரங்குகளே மாறி மாறி மனிதனாக ஆகிவிட்டன என்றும் கூறப்படுவதாக ச‌வுதி இமாம்கள் கருதினர். இதனால், நவீன மேலை நாட்டு மருத்துவர்களை கொன்டு சவுதி மன்னர் தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றும் கருதினர். உடல் ந‌ல‌ம் குன்றியிருந்த‌ ச‌வுதி ம‌ன்ன‌ர் இப்ப‌டி ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்தை ம‌றுக்க‌ விரும்ப‌வில்லை. ஆக‌வே இப்ப‌டி ஒரு புத்த‌க‌த்தை எழுதி ச‌வுதி இமாம்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ விரும்பினார் என்றும் க‌ருத‌ இட‌முண்டு.

இந்த புத்தகம் வெளிவந்ததும் இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அல் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதே என்பதை ஆணித்தரமாக நிறுவ உபயோகப்படுத்தப்பட்டது.

இதே வேளையில் அல் குர் ஆனும் பல்வேறு மொழிகளில் புதிய மொழிபெயர்ப்பாக வெளிவரத்தொடங்கியது. இதற்கு ஆதாரமாக சவுதி அரசாங்கத்தின் இஸ்லாமிய பிரச்சார பிரிவு உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும், அரபி மொழி பரவலுக்கும் ஏராளமாக செலவழித்தது. இதனால், அரபி மொழி கற்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றினர்.

அரபி மொழி அறிவும், மாரிஸ் புக்காயீலின் புத்த‌க‌மும் ஒரு புதிய‌ பாதையை இஸ்லாமில் உருவாக்கியுள்ள‌து என்றால் அது மிகையாகாது.

அறிவிய‌ல் ரீதியில் அல் குர்ஆனுக்கு த‌ஃப்ஸீர் எழுதுவ‌தை இது தொட‌ங்கி வைத்துள்ள‌து.

ஜ‌க‌ல்லூல் எல் ந‌க்க‌ர் என்ற‌ எகிப்திய‌ விஞ்ஞானி, புவியியலில் தற்போது கண்டறியப்பட்டுள்ள விஷயங்களை அல் குர் ஆன் எப்படி அன்றே சொல்லியுள்ளது என்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் Committee of Scientific
Notions in the Glorious Qur’an. Supreme Council of Islamic Affairs என்ற எகிப்து அரசாங்க அமைப்பில் சேர்மனாக இருக்கிறார்.

குரானுக்கு தஃப்ஸீர்கள் (விளக்கங்கள்) எழுதுவது என்பது நான்கு அடிப்படை விஷயங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.

முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்.

இரண்டாவது அல் குர்ஆனின் வசனங்களை நபிகள் பெருமானாரே (ஸல்) ஹதீஸ்களில் விளக்கியிருக்கும் இடங்களை வைத்து விளக்குவதாகும்.

மூன்றாவது சஹாபாக்கள் (நபிகள் பெருமானாரின்(ஸல்) தோழர்கள்) அல்குரானை விளக்கி போதித்ததை கூறும் ஹதீஸ்கள் மூலமாக விளக்குவதாகும்.

நான்காவது சஹாபாக்களின் போதனையின் கீழ் கற்றுக்கொண்ட மற்றவர்கள் விளக்குவதை வைத்து விளக்குவதாகும்.

ஆனால், இந்த நான்கு தஃப்ஸீர்களையும் உதறித்தள்ளிவிட்டு, தற்போது தான் தோன்றித்தனமாக அறிவியல் புத்தகங்களை வைத்து அல்குரானின் வசனங்களை விளக்க முற்பட்டுள்ளார்கள் இந்த புதிய தலைமுறையினர். இவர்களில் இந்திய அளவில் ஜாகிர் நாயக் அவர்களும் அவரை பின் தொடர்ந்து தமிழ்நாட்டு முஸ்லீம்களில் பலரும் இது போல அறிவியல் புத்தகங்களை முன்னே வைத்துகொண்டு அல் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத முற்பட்டுள்ளார்கள்.

இது ஆபத்தான போக்கு மட்டுமல்ல, இது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு அடுக்காத போக்குமாகும்.

இது குறித்து என் நண்பர்களுடன் நீண்ட விவாதம் புரிந்துள்ளேன். முதலில் என்னுடைய வாதத்தினை கேலியாக பார்த்த பலரும் என்னுடைய விவாதத்தில் உள்ள உள்ளக்கிடக்கையை உணர்ந்துள்ளனர். இதனை திண்ணை வாசகர்களுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு சகோதரருடன் நடந்த விவாதத்தினையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

அல் குர்ஆன் மீண்டும் மீண்டும் (11:1, 41:3, 41:44, 54:17, 54:22, 54:32, 54:40 இன்னும் பல வசனங்களில்) தன்னை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக இயம்புகிறது. ஆகவே இதற்கு நேரிடையாக அரபியில் அர்த்தம் என்னவோ அதனையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்களோ அல் குர்ஆன் கூறுவதை மறுத்து, அது குழப்பமாகவும், மறைபொருளாகவும் கூறப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு தலையைச் சுற்றி விளக்கம் கூற முற்படுகிறார்கள்.

எவனொருவன் அல் குர்ஆனுக்கு தன்னுடைய சொந்தக்கருத்தை கூறி அதுவே சரியென்று இயம்புகிறானோ அவன் தவறு செய்கிறான் என்று நபிபெருமானார்(ஸல்) இயம்பியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட தவறான தஃப்ஸீர்கள் மூன்று வழியை சேர்ந்தவை. முதலாவது தத்துவ ரீதியாக விளக்குவது. அதாவது கம்யூனிஸ்டு ஒருவர் அல் குர்ஆனில் கம்யூனிஸ்ட் தத்துவங்கள்தான் இருக்கின்றன என்றும் அதன் வசனங்களை திரித்து கம்யூனிஸ கொள்கைக்கு தகுந்தாற்போல மாற்றி விளக்கம் கூறுவதாகும். ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் பலர் இதுபோல கம்யூனிஸ பார்வையில் அல் குர்ஆனை பார்த்து விளக்கம் கூறியுள்ளன. நல்லவேளையாக ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இது போன்ற தவறான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.

இது போன்ற இன்னொரு முயற்சியே சூஃபி வழியாகும். அதாவது அல் குர்ஆனின் வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று கருதிக்கொண்டு அதற்கு ஒவ்வொரு சூஃபியும் ஒரு விளக்கம் கொடுப்பதாகும். ஒவ்வொரு அல் குர்ஆன் வசனத்துக்கும் ஒன்றின் உள்ளே ஒன்றாக ஏழு அடுக்காக மறைபொருள் உண்டு என்று இவர்களாக எழுதிக்கொண்டனர். ஆனால், இதுவும் தவறானதொன்றே என்பது வெளிப்படை.

அடுத்ததாக வந்துள்ள தவறான தஃப்ஸீரே விஞ்ஞானப்பூர்வமாக அல் குர்ஆனை விளக்கும் முறையாகும். இதுவும் நபிபெருமானார்(ஸல்) அவர்களின் நேரடியான கண்டிப்பையும் உதாசீனம் செய்து மனம் போன போக்கில் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சியாகும்.

உதாரணமாக கீழ்க்கண்ட வசனங்களை உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்வதாக கற்பனை செய்துகொள்கின்றனர் அறிவியல் தஃப்ஸீர்காரர்கள்.

37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்! கீழ்திசைகளின் இறைவன்.

37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.

70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கண்டுபிடிக்க, கீழ்வருமாறு கூறுகின்றனர்.

“உங்கள் தட்டையான உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.

ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விரித்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும். இதிலிருந்து புவி –ன்பது உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா”

அல் குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரே ஒரு கிழக்குதான், ஒரே ஒரு மேற்குதான் அறியப்பட்டிருந்தது என்றால், இந்த வசனம் பெரும் பிரச்னையை கிளப்பியிருக்கும் என்பது நிச்சயம் இல்லையா? எந்த ஒரு ஹதீஸிலும் இது பற்றிய கேள்வியை காணமுடியாது. ஏன் அந்த காலத்திய அரபியர் யாரும் பல கிழக்கு திசைகளை பற்றியும் பல மேற்கு திசைகளை பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கவில்லை?

சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான். அதுமட்டுமல்ல இரண்டு எல்லை கிழக்குகளுக்கும் இடையே இருப்பது பல கிழக்குகள், இரண்டு எல்லை மேற்குகளுக்கு இடையே இருப்பது பல மேற்குகள். அதனால்தான் பன்மையில் கிழக்குகளும் மேற்குகளும் குறிப்பிடப்படுகின்றன.

அப்போது பல கிழக்குகளும் பல மேற்குகளும் இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். இஸ்மயீல் இப்னு கதீர் அவர்கள் 700 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த வசனங்களுக்கு தஃப்ஸீர் எழுதும்போது பனிக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் மறைகிறான். கோடைக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் சூரியன் மறைகிறான் என்று தஃப்ஸீர் எழுதியுள்ளார். சூரியன் கடுங்குளிர் காலத்தில் ஒரு கிழக்கில் உதிப்பவன் கோடைக்காலம் வர வர கிழக்கு திசை மாறிக்கொண்டே செல்கிறது. பன்னெடுங்காலமாக இந்த இரண்டு கிழக்குகளுக்கு இடையே சூரியன் உதிக்கும் திசை மாறுகிறான் என்பதை மக்கள் அறிந்தே வந்துள்ளார்கள்.

ஆனால், இந்த வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு, பல கிழக்கு திசைகள் என்பதே கிடையாது, பல கிழக்கு திசைகள் இருக்கவேண்டுமென்றால் அது கோளமாகத்தான் இருக்கவேண்டும் என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கேட்காத கேள்விக்கு தஃப்ஸீர் எழுதுகிறார்கள்.

27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.

இதே போல ஹதீஸ்களுக்கும் தஃப்ஸீர் எழுத ஆரம்பித்துள்ளார்கள்.

உதாரணமாக கீழ்க்கண்ட ஹதீஸை பார்ப்போம்

Bukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

அல்குரான் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் கொடுக்கும் இந்த ஹதீஸ் மிக முக்கியமான ஹதீஸாகும்.

பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!

ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.

ஆனால், அல் குர்ஆனை நம்பாத விஞ்ஞானிகள் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா? பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்?

ஆனால், இந்த ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்க முனைந்த ஒரு சகோதரர் இது நபி (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் கூறிய தவறான விஷயம் என்று விளக்கம் அளிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது “விழுப்புரம்” போய்டிச்சா என்று கேட்பது போன்றது இது என்று விளக்கம் அளிக்கிறார். விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று ரயிலில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம். ஆகவே பேச்சுவழக்கில் சூரியன் செல்கிறது என்று நபி(ஸல்) கூறுகிறார். ஆனால், சூரியன் செல்லவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்பது அவருக்கு தெரியும் என்று ஒரு சகோதரர் கூறுகிறார்.

ரயிலில் உள்ள அனைவருக்கும் விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று தெரியும். ஆனால், நபிகள் பெருமானார்(ஸல்) எந்த இடத்திலாவது சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்த்திசையில் சுற்றுகிறது என்று கூறியுள்ளாரா என்று சகோதரர் காட்டவேண்டும். அதே போல, ரயில் உட்கார்ந்திருக்கும் மற்றவர்கள் போல, அந்தகாலத்திய அரபுகள் அனைவரும் சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்று அறிந்திருந்தார்கள் என்று காட்டவேண்டும்.

மேலும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் தவறான தகவல்கள் பலவற்றை கூறியிருக்கிறார் என்றும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சகோதரர் ஒத்துக்கொள்வாரா?

குரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று இவர்கள் எழுதிவிடலாம். இன்னும் இவர்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். இவர்களோ, அல் குர்ஆனும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி. ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வ‌து என்று தெரிய‌வில்லை.

ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. தரையானது உருண்டையாக இருந்தால், எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா? அரேபியாவில் மறைந்த பின்னாலா? அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா? அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா? இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள்? உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே? எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான‌ உல‌க‌த்தில் சூரியன் எங்குமே மறைவதில்லையே! சூரியன் மறையவே மறையாதபோது எப்படி மறைந்த பின்னர் அல்லாவை சஜ்தா செய்வதோ, அல்லது அனுமதி கேட்பதோ நடக்கும்?

ஒவ்வொரு நாளும் சூரிய‌ன் ச‌ஜ்தா செய்ய‌ செல்வ‌தை ந‌பி(ஸ‌ல்) குறிப்பிட்டு சூரிய‌ன் தின‌ந்தோறும் ச‌ஜ்தா செய்ய அர்ஷை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார். தினந்தோறும் ஓடுவதை குறிப்பிட்டு சொன்னதை கியாமத் நாளை நோக்கி ஓடுவதாக இட்டுக்கட்டி கூறுகிறார்கள். இவர்களே சற்று ஹதீஸை படித்து பார்க்க அழைக்கிறேன். எந்த அளவுக்கு அதன் மீது இட்டுக்கட்டுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டுகிறேன்.

மேலும் தரை உருண்டை என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அல்லாஹ் இறக்கிய வசனங்களோ திரும்பத்திரும்ப தரை என்பது தட்டை என்றே கூறுகின்றன.

இவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் ந‌ல்ல‌து. உல‌க‌ம் த‌ட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை இவர்கள் கூறுவது வியப்புக்குரியது.

2.22 firaashaw
2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான் (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

13.3 Madda
13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்! இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்! அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

15.19 madadnaahaa
15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.

20.53 mahdan
20:53 ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).

43.10 mahdan
43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.

50.7 madadnaahaa
50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

51.48 farashnaahaa
51:48 இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

71.19 bisaaTaa
71:19 ‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

78.6 mihaadaa
78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

79:30 dahaahaa
79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

88.20 suTiHat
88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

91:6 tahaha
91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா, பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ பொருளில் எத்தனை வார்த்தைக‌ள் உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.

அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

ஆனால், பதிலுக்கு இவர்களோ, “கோளத்தின் மீது எதையும் விரிக்க முடியாதா?” என்று கேட்கிறார்கள்.

இவரிடம் கேட்கிறேன். கோள‌த்தின் மீது விரிப்ப‌தாக‌ எங்கே அல்லாஹ் இற‌க்கியிருக்கிறான்? நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து? அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார்? நானா நீங்க‌ளா?

ஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை
நிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. . என்றும் உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹ் எதற்கு எதையும் மறைமுகமாக சொல்லவேண்டும் என்று இவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறவேண்டுமென்றால், அவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. கோளத்தின் மீது விரித்திருக்கிறோம் என்று அவன் தெளிவாக இறக்கியிருந்திருப்பான். நேரடியாகவே சொல்லியிருந்திருப்பான். இந்த உலகத்தையும் மனிதர்களையும் உருவாக்கிய அல்லாஹ், இந்த மனிதர்களுக்காக பயந்துகொண்டு மறைமுகமாக சொல்லியிருக்கிறான் என்றல்லவா இவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்?

பிறகு பதில் கூறிய சகோதரர் ”நீங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் அல் குர்ஆனை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்” என்று அறிவுரை கூறுகிறார்

இவர்கள் இதனைத்தான் செய்கிறார்கள் போலிருக்கிறது. முதலில் அறிவிய‌ல் நூல்க‌ளை ப‌டித்துவிட்டு அத‌ற்கு த‌குந்தாற்போல‌ அல் குர்ஆனை சிந்திப்ப‌து ச‌ரியான‌தா என்று சிந்திக்க‌ வேண்டுகிறேன். இன்று த‌க்காளி ந‌ல்லது என்று அறிவிய‌ல் சொல்லும். நாளை த‌க்காளி கெட்ட‌து என்று அறிவிய‌ல் சொல்லும். அத‌ற்கு ஏற்றாற்போல‌ அல் குர்ஆனை ப‌டிக்க‌ வேண்டுமா? அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா?

அல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற
முடியாது. பொருள் கூறக்கூடாது.

இவர்களின் வாதத்தின் படி அல் குர்ஆனின் சில ஆயத்துக்களின் பொருளை சிந்தித்து பூரணமாய் விளங்க உலகின் அனைத்து துறைகளிலும் தேற்சி பெற்றிருக்கவேண்டும் என்கிறார்கள்! இப்போது அல் குர்ஆன் தப்சீர்கள் பல, ஒரு நபரால் மட்டுமே எழுதப்படுகிறது. அப்போது, அவர் எத்துறையில் வல்லுனராய் உள்ளாரோ அத்துறையில் மட்டுமே செம்மையாக சிந்தித்து சரியான பொருளை தர முடியும். அதே நேரம் பல துறையை சார்ந்த விற்பன்னர்கள் ஒன்றுகூடி எழுதினால் அது கிட்டத்தட்ட முழுமையான தப்சீராய் அமையும் என்பது இவர்களது வாதம். இது நேராக நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைக்கும் கண்டிப்புக்கும் ஆட்பட்டது என்பதி நாம் கூறித்தெரியவேண்டியதில்லை.

இவரது செய்தியின் படி, ”சமீபத்தில், அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதி இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட, “அறிவியல் வழிகாட்டி அல் குர் ஆன்” என்ற புத்தகம் படித்தேன். அதில் அவர் விலங்கியல் பேராசிரியர் என்பதால் அந்த அறிவினூடேயே பல ஆயத்துகளை அறிவியல் விளக்கொளியில் சிந்தித்து இருந்தார். அதன்பயனாய், பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாய், முதஷாபிஹாத் (இறைவன் மட்டுமே பொருள் அறிந்துள்ள)வசனங்கள் என்று இதுகாறும் கூறப்பட்ட, “55:6 – செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன” வசனத்திற்கு அவரின் விளக்கம்: எந்த உயிர்க்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை. தலையை பூமியில் வைப்பதே சஜ்தா. தாவரங்களுக்கு தலை வேர்ப்பகுதி. ஆகவே, அதனை தரையில் வைத்து அவை எப்போதும் சுஜூது செய்கின்றன என்கிறார்!”

டி.ஏ.எம். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ஆகிய‌ இட்டுக்க‌ட்டுப‌வ‌ர்க‌ள், அறிவிய‌லை வைத்துக்கொண்டு அல் குர்ஆனை நிரூபிக்க‌ முனைகிறார்க‌ள். அல் குர்ஆன் யார‌து நிரூப‌ண‌த்துக்கும் காத்திருக்க‌வில்லை. இப்ப‌டியெல்லாம் நிரூபிக்க‌ முனைவ‌து மேலும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும்தான் இப்படிப்பட்ட இட்டுக்கட்டுபவர்களை ஆட்ப‌டுத்தும்.

உதாரணத்துக்கு செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன என்ற வசனத்துக்கு ஹபீப் முஹம்மது சொல்லும் விளக்கத்தை பார்க்கலாம். எந்த உயிருக்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை என்று இவராக ஒன்று சொல்கிறார். அல்லது பல செடி கொடிகள் வேர்களே இல்லாமல் வேறு மரங்களில் வளர்கின்றன. அவற்றின் வாய் மேலே இருக்கிறது. சில செடிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. அவற்றின் வாய் எங்கே இருக்கிறது? அவைகள் எப்படி ஸுஜூது செய்யும்? செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா? ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம்? இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று இவர்களாக ஒரு வாய்-தலை வியாக்கியானம், அதற்கு இன்னொரு விளக்கம் என்று இவர்களே அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுத கிளம்பி விடுகிறார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக சொல்லும் பரிணாமவியல் எப்படி அல் குர் ஆனில் இருக்கிறது என்று விலங்கியல் பேராசிரியர்கள் தப்ஸீர் எழுதிவிட்டார்களா? அப்படி எழுதவில்லை என்றால், ஏன் எழுதவில்லை?

ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம் என்று இவர்களாக விஞ்ஞானிகளிடம் தஃப்ஸீர் எழுத அழைப்பு விடுக்கிறார்கள்.

அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் அல் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும்தான். அறிவியல் புத்தகங்கள் மூலமாக அல்ல.

நாளை அறிவியல் புத்தகங்கள் மாறினால், இன்னொரு தஃப்ஸீர் எழுதுவார்களா அல்லது அல் குர்ஆன் தவறு என்று எழுதுவார்களா? இன்று வரும் விஞ்ஞானிகள் நேற்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்கிறார்கள். நாளை வரும் விஞ்ஞானிகள் இன்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்வார்கள். இதுதான் விஞ்ஞானத்தை வைத்து தஃப்ஸீர் எழுதுவதில் உள்ள பெரிய தவறு.

10:60 அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி
என்ன நினைக்கிறார்கள்?

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்

azizabdul1973@yahoo.com

Series Navigation

அப்துல் அஸீஸ்

அப்துல் அஸீஸ்