பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

பா.பூபதி


சக மனிதர்களை நாம் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்ற அளவுகோல் இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுகிறது. அறிமுகமில்லாத மனிதர் என்றாலும் அவரின் மீது நம் கால் பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கும் பழக்கம் இன்னும் அழிந்துவிடவில்லை. ஆனால் தொழில் என்று வரும்போது இதே அளவு மதிப்பை சக மனிதர்களுக்கு நாம் கொடுக்கிறோமா என்று யோசித்தால் பதில் எதிர்மறையான பதில்தான் வரும். தொழிலில் இரண்டு விதமாக சக மனிதர்களை அவமதிக்கிறோம். ஒன்று பொருள் சார்ந்தது – அவர்களின் நலன் மீது அக்கரையில்லாமல் மோசமான பொருற்களை விற்பது, இரண்டாவது நேரடியாக அவர்களை அவமதிப்பது. நீங்கள் தினமும் பேருந்துதில் பயணம் செய்பவரா? ஆம் எனில் இந்த நேரடியான அவமதிப்பு உங்களுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு இடத்திற்கு மிக விரைவாக செல்ல வேண்டுமானால் நீங்கள் அரசாங்க பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மனிதர்களைவீட நேரம்தான் முக்கியம். அரசாங்க பேருந்துகளை பொருத்தவரையில் சரியான நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறதோ இல்லையோ சரியான நேரத்திற்கு பேருந்து நிலையத்தை வந்து சேர்ந்தாக வேண்டும் அப்போதுதான் அடுத்த ஊழியர் அவருடைய பணி நேரத்தில் வண்டியை ஓட்டிச்செல்ல முடியும். இதனால் அரசு ஊழியர்களுக்கு நேரம்தான் முக்கியம் மனிதர்கள் அல்ல ஏவபட்ட அம்புபோல செல்வார்கள். நிற்க வேண்டிய பல இடங்களில் வண்டி நிற்காது. பேருந்தில் ஆட்கள் குறைவாக இருக்கிறார்களே இப்படி பல இடங்களில் பேருந்தை நிருத்தாமல் ஓட்டினால் நஷ்டம் ஏற்படுமே என்ற கவலையெல்லாம் அவர்களுக்கு கிடையாது ஏனெனில் பேருந்தில் லாபம் வந்தாலாலும், நஷ்டம் வந்தாலும் அவர்களுக்கு சம்பளம் வந்துவிடும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மக்களை பற்றியும், மக்களின் தேவை பற்றியும் அக்கரை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேலை நீங்கள் அரசு பேருந்தில் ஏறிவிட்டால் அவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியத்தில் உங்களை சரியான நேரத்திற்கு கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

உங்களுக்கு எந்தவித அவசரமும் இல்லை நிதானமாக சென்றால் போதும் என்றால் நீங்கள் தனியார் பேருந்தில் சினிமா பாட்டு கேட்டுக்கொண்டே செல்லாம். ஆனால் விரைவாக செல்ல வேண்டுமானால் கண்டிப்பாக நீங்கள் தனியார் பேருந்தில் தப்பித்தவறிகூட ஏறக்கூடாது. அரசு பேருந்து உழியர்களின் எண்ணத்திற்கு எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் தனியார் பேருந்து ஊழியர்கள். இவர்களை பொருத்தவரையில் நேரமெல்லாம் முக்கியமில்லை பேருந்து முழுவது மக்களால் நிரம்பியிருக்கவேண்டும் அதுதான் இவர்களது நோக்கம். பேருந்து நிற்க வேண்டிய ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பேருந்தை நிறுத்தி இதற்குமேல் பேருந்தில் ஏறுவதற்கு யாரும்மில்லை என்று உறுதிசெய்த பிறகுதான் அங்கிருந்து பேருந்து புறப்படும். சில நேரங்களில் வண்டியை எடுய்யா சீக்கிரம் என மக்கள் கத்த ஆரம்பித்த பிறகுதான் வண்டி புறப்படும். உள்ளே இவ்வளவு பேர்தான் ஏறமுடியும் என்ற வரைமுறையேல்லாம் கிடையாது. உள்ள இருப்பவன் நிற்க கூட கஷ்டப்படுவானே என்று யோசிக்காமல் ஞாயிற்று கிழமையில் கறிக்கடைக்கு கோழிகளை கொண்டு செல்லும் வண்டிபோல
முடிந்தவரை வண்டியை நிரப்பி உள்ளே இருப்பவர்களை கடுப்பாக்கிவிடுவார்கள்.

எல்லாவற்றையும்வீட அவர்களிடையே தொழிலில் போட்டி ஏற்படும் பாருங்கள் அப்போதுதான் பேருந்து நிற்குமிடத்தில் இருப்பவர்களை அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று தெரியும். தேவையான நேரத்தில் ஒரு பேருந்தும் வராது. ஆனால் வர ஆரம்பித்தால் மூன்ரு அல்லது நான்கு பேருந்துகள் ஒன்றாக வரும். மூன்று பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயற்சிக்கும். முதலில் வரும் பேருந்து பின்னால் இரண்டு பேருந்து வருவதை பார்த்ததும் அங்கு நிறுத்தாமல் சென்றுவிடுவார்கள். ஒருவேலை அந்த பேருந்திலிருந்து யாராவது அங்கு இறங்கவேண்டியிருந்தால் வண்டியை சில விணாடிகள் மட்டுமே நிறுத்துவார்கள் அதற்குள் நீங்கள் இறங்கிவிட வேண்டும். நீங்கள் வயதானவராக இருக்கலாம், உடல் ரீதியாக குறையுள்ளவராக இருக்கலாம் அதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாதது வண்டி ஓடும் வேகத்தை குறைத்து நிறுத்துவது போல் ஓட்டுவார்கள் அதை பயன்படுத்தி நீங்கள் இறங்கிவிட வேண்டும் இல்லையெனில் அவர்களின் வசைமொழிக்கு ஆளாகவேண்டியிருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் கடைசியாக வந்த பேருந்து நிற்கவேண்டிய இடத்தில் நிற்காமல் கொஞ்சம்தூரம் தள்ளிப்போய் நிருத்துவார்கள் அந்த பேருந்தில் ஏறவேண்டியவர்கள் ஓடிப்போய் ஏறுவார்கள். ஆக பேருந்தில் ஏற வேண்டிய பல நபர்கள் மூன்று பேருந்து வந்தாலும் அதில் அவர்களால் பயணம் செய்ய முடியாது. இது போன்று பல பேருந்துகள் ஒரே நேரத்தில் வருவது தற்செயலான ஒன்று அல்ல திட்டமிட்டே செய்யப்படுத்தப்படுகிறது. ஒருமுறை தனியார் பேருந்து நடத்துனரிடம் பயணி ஒருவர் கேட்டார் ‘ஏன் சார் இண்ணிக்கு லேட்டா வந்திட்டீங்களா’ அதற்கு நடத்துநர் இப்படி பதில் சொன்னார் ‘அதெல்லாம் ஒன்னுமில்லை எப்போதும் இப்படித்தான் லேட்டா வருவோம் சரியான நேரத்தில் வந்தால் நானும் ஓட்டுனரும் மட்டும்தான் பேருந்தில் இருப்போம்’.

ஒவ்வொரு பேருந்துக்கும் பயணம் செய்ய வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆனால் அந்த நேரத்தில் போதுமான அளவு மக்கள் வண்டியில் ஏறமாட்டார்கள். உதாரணமாக காலையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில் வரும் பேருந்துகளில் அதிகம் மக்கள் ஏறுவார்கள் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு வரவேண்டிய பேருந்து வேண்டுமென்றே சற்று தாமதமாக வந்து அதிகமாக மக்களை ஏற்றிச்செல்ல முயற்சி செய்யும். இந்த முயற்சியில் மக்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறாகள் என்பதை நீங்கள் பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஒருமுறை தனியார் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் காரணமாக படியில் கொஞ்சம் பேர் நின்று கொண்டு வந்தார்கள் அதில் ஒருவரின் கைபை கீழே விழுந்துவிட்டது வண்டியை நிறுத்துங்க நிறுத்துங்க என்று கத்துகிறார் அதை பேருந்து நடந்த்துனர் எரிச்சலுடன் ஒருமுறை பார்த்துவிட்டு அடுத்த ஸ்டாப்பில் நிற்கும் அங்கு இரங்கிக்க என்று சொல்லிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்திவிட்டார் காரணம் பின்னால் இன்னொரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது இவர் வண்டியை நிறுத்தினால் பின்னால் வரும் வண்டி இவர்களுக்கு முன்னால் சென்று அடுத்து பேருந்து நிற்குமிடத்தில் உள்ள மக்களை ஏற்றிக்கொள்வார்கள் அதனால் இவர்கள் வண்டியை நிறுத்தவில்லை. அடுத்த பேருந்து நிற்குமிடம் வந்தது அந்த நபர் கீழே இறங்கி கைபையை தேடி ஓடினார் கிடைத்ததா என தெரியவில்லை. அதை பற்றி நமெக்கென்ன கவலை நமக்கு தொழில் தானே முக்கியம்.

இது போன்ற விசயங்களை கட்டுப்படுத்த அல்லது ஒழுங்குபடுத்த ஏற்கனவே ஏதாவது வாகனச்சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. அப்படி ஒரு சட்டம் இருந்தால் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என யார் கண்கானிக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் அரசாங்கம் கரிசனமாக ஒரு வேலை செய்துள்ளது அது சொகுசு பேருந்து. மேற்கண்ட பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்க விரும்பினால் சொகுசு பேருந்தில் பயணம் செய்யலாம் அதில் கூட்டம் இருக்காது, நிதானமாக செல்லும், நிருத்தச்சொன்னால் நிருத்துவார்கள், அனைவருக்கும் இடம் இருக்கும் ஆனால் அதில் பயணம் செய்தால் அதிகம் செலவு ஆகும், அதை பற்றி அரசு கவலையில்லை. பணம் இருந்தால், பிரச்சனைகளை விரும்பாவிட்டால், அதில் பயணம் செய்யுங்கள் அதற்குகூட தகுதியில்லையென்றால் இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் அனுசரித்து செல்லத்தான் வேண்டும். அரசியல்வாதிகள் பாவம் அவர்களே தேர்தல் வரும்போதுதான் மக்களை பார்த்து ஏதாவது பேசுகிறாகள் மற்ற நேரங்களில் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறார்கள் இதனால் இதுபோன்ற சிறு பிரச்சனைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

மக்களைப்பொருத்தவரையில் பேருந்தில் எந்த மாதிரியான அவமரியாதை ஏற்பட்டாலும் இது எப்போது நடப்பதுதானே என சகித்திக்கொள்ள பழகிவிட்டார்கள். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். ஒரே ஒரு வழி உள்ளது மேற்கண்ட நிகழ்ச்சியின் மூலம் நான்கைந்து பேர்கள் இறந்துபோனால் எதிர்க்கட்சிகள் அதை ஒரு பிரச்சனையாக்கினால் அரசாங்கம் ஏதாவது செய்யும். நாமாக ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டுமானால் பணரீதியாக நம்முடைய தகுதியை உயர்த்திக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து இனி எந்த தேர்தலும் நடக்காது என்றே நினைக்கிறேன். டி.வி கொடுத்தால் ஓட்டு போடும் மக்கள் அடுத்த தேர்தலில் மிக்ஸி அல்லது கிரைண்டர் கொடுத்தால் நிச்சயம் ஓட்டு போடுவார்கள்.

saireader@gmail.com

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி