பாலாவை இழந்த கணங்களில்…

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

ரெ.கார்த்திகேசு


1961இல் நான் ஒரு 21 வயது கிராமத்து இளைஞனாக குவால லும்பூருக்கு ரயிலில் வந்து இறங்கினேன். மலேசிய வானொலியில் வேலை கிடைத்த பெருமிதம் உள்ளத்தில் இருந்தாலும் அதுவரை சிறு நகர்களிலும் ரப்பர் தோட்டங்களில் மட்டுமே வாழ்ந்திருந்த எனக்கு குவால லும்பூர் பெருநகர் பெருத்த அச்சத்தை ஊட்டியது. அங்கு எனக்குத் தெரிந்த என்னை ஆதரிக்கக் கூடிய ஒரே மனிதர் நான் “அண்ணே” என்று பாசமாக அழைக்கும் கவிஞர் கா.பெருமாள்தான். அவரையும் முன் பின் பார்த்ததில்லை. என் உடன் பிறந்த அண்ணன் ரெ.ச.வும் பெரியப்பா மகனான அண்ணன் சுந்தரமும் ரிங்லட்டில் இருந்தபோது அவரை அறிந்திருந்தார்கள். அந்த அறிமுகத்தை வைத்துத்தான் பெருமாளுக்கு நான் கடிதம் எழுதி என் தலைநகர் பயத்தைத் தெரிவித்திருந்தேன். அவர் எனக்கு எழுதிய பதிலில் “வா தம்பி! பயப்படாமல் வா! நான் என்ன உன்னைத் தெருவிலேயா விட்டுவிடுவேன்?” என தனக்கே உரிய கம்பீரத்தில் எழுயிருந்தார்.

ரயிலிலிருந்து என்னை அழைத்துப் போக வந்திருந்த பெருமாள், கூடவே ஒரு இளைஞரையும் அழைத்து வந்திருந்தார். கருத்த முகத்தில் பளீர் என்ற சிரிப்புடன் என்னுடன் கைகுலுக்கிய அந்த இளைஞர் பத்திரிகைகளில் வந்த என் கதைகள் மூலம் என்னை அறிந்திருந்தவர் என்றும் என்னைப் போலவே எழுத்துப் பைத்தியம் என்றும் அறிந்தபோது எனக்கு தலைநகர் திடீரென மிகவும் நட்பான இடமாகத் தோன்றியது. அந்த இளைஞர்தான் ப.சந்திரகாந்தம்.

ஆனால் தலைநகரில் என்னை அணைத்துக் கொள்ள மேலும் இரு நேசக்கரங்கள் இருக்கின்றன என்பதை அப்போது நானறிந்திருக்கவில்லை.

இரா. பாலகிருஷ்ணன் வானொலியில் பணியாளராகச் சேர்ந்த அதே 1961இல்தான் நானும் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். அவருக்கு ஒரு மாதம் பின்னர் சேர்ந்தேன். மலேசிய வானொலியின் அலுவலகம் அப்போது செலாங்கூர் கிளப் அருகில் அமைந்திருந்த ஃபெடரல் ஹவுஸ் கட்டிடத்தில் 5ஆம் 6ஆம் மாடிகளில் இயங்கி வந்தது. 5ஆம் மாடி அலுவலகமாகவும் 6ஆம் மாடி ஒலிப்பதிவு/ஒலிபரப்பு ஸ்டுடியோக்களாகவும் செயல்பட்டு வந்தன.

பாலாவுக்கு ஆரம்பத்தில் பணியாளர்களுக்கான பொது இடத்தில்தான் மேஜை கொடுக்கப்பட்டிருந்தது. என்னுடைய மேஜையும் எதிரிலேயே. உயர்ந்த உருவமுடைய பாலா நாற்காலிக்குள் புதைந்து கால்களை நீட்டி உட்கார்ந்திருப்பார். அவர் பூட்சுகள் என் சப்பாத்துக்களில் வந்து இடிக்கும். அவரிடம் ஒரு பட்டண நாகரிகத் தோற்றம் இருந்தது. மிக நேர்த்தியாக உடை உடுத்துவார். சிகரெட் கையில் அல்லது வாயில் புகைந்து கொண்டிருக்கும். சரளமாக, சுத்தமாக ஆங்கிலம் பேசுவார். அவரைச் சுற்றி ஒரு பெரிய மனிதருக்குரிய ஒளிவட்டம் இருக்கும் என்றால் அது இப்போது மிகைப்படுத்திச் சொல்வது போல இருக்கும். ஆனால் 21 வயது கிராமத்து இளைஞனான எனக்கு அப்படித்தான் தோன்றியது.

அந்த ஆரம்ப காலத்தில் இந்தியப் பகுதியின் தலைவர் இராமச்சந்திர ஐயர். மேற்பார்வையாளர் எம்.எஸ்.சுவாமிநாதன். சீனியர் ஒலிபரப்பாளராக கமலா. உடன் அலுவலர்களாக கா.பெருமாள், எஸ்.ஆர்.எம்.பழனியப்பன், நாகசாமி பாகவதர், புவனேஸ்வரி, வசந்தா ஹரிஹரன் (என்னுடன் வேலைக்குப் புதிதாக எடுக்கப் பட்டவர்) முதலியோர் இருந்தோம். பீட்டரும் தோமஸ் மாத்தியூஸும் மலாக்காவிலும் சுந்தரராஜ் பினாங்கிலும் இருந்ததாக நினைவு.

பாலா பட்டதாரியானதால் விரைவில் இந்தியப் பகுதிக்குத் தலைவராகி விடுவார் என்ற பேச்சு எல்லார் வாயிலும் அடிபட்டது. அதோடு மலேசிய வானொலியின் துணை இயக்குநரான (பின்னர் தலைமை இயக்குநர்) டோல் ராம்லிக்கு அவர் நண்பர் என்பதால் பிற இனத்து ஒலிபரப்பாளர்களுக்கும் அவர் மீது மரியாதையும் இருந்தது.

பாலா எல்லோரோடும் அன்பாகப் பழகுவார். சமவுரிமை கொடுத்துப் பழகுவார். வானொலிக்கும் கலை உலகுக்கும் புதியவரானாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோடு இரவு நேரங்களில் ஸ்டுடியோவில் நெடு நேரம் இருப்பார். அப்புறம் அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டுபோய் சாப்பாடும் வாங்கிக் கொடுப்பார். மிக நேரமாகிவிட்டால் எங்களை வீட்டிலும் கொண்டு விடுவார்.

விரைவிலேயே பாலாவுக்குப் பகுதியின் தலைவர் பொறுப்பு கொடுக்கப் பட்டது. அந்த நாற்காலியில் முழுத் தகுதியோடு அமர்ந்து பதவிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் அவர்தான்.

நான் வேலைக்குச் சேர்ந்த முதல் ஓரிரு நாட்களிலேயே தமிழ் வருடப் பிறப்பு வந்தது. அன்றைக்கு ஒரு நண்பர் வீட்டில் பாலாவுக்குச் சாப்பாடு. பாலா, பெருமாள் அண்ணனையும் என்னையும் உடன் அழைத்து அவர் காரிலேயே கொண்டு சென்றார். அந்த விருந்தில்தான் நான் பாலாவின் ஆத்ம நண்பர் பத்மநாதனையும் (பின்னர் துணையமைச்சர்) சந்தித்தேன். பாலாவைப் போலவே கண்டவுடன் கட்டிப்பிடித்துக் கொள்ளும் அன்பு பத்மாவிடமும் இருந்தது.

தலைநகர் வாழ்வின் ஆக்ககரமான அம்சங்களை நான் பாலாவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். தன்னம்பிக்கை, உழைப்பு, முன்னேற்றம், சகோதரத்துவம், நட்பு ஆகியவற்றின் உன்னத பரிமாணங்கள் பாலாவிடம் கண்டேன். என் வாழ்வில் நான் அதுவரை சந்தித்த மனிதர்களிடமிருந்து அவர் வேறுபட்டவராக இருந்தார். அவருடைய ஆளுமை வியக்கவைப்பது; கண்டவரை ஈர்த்துக் கொள்ளுவது.

நான் ஒரு புதிய ஒலிபரப்பு உதவியாளன் என்ற முறையில் என் சீனியர்களிடம் பாடம் கற்றுக் கொண்டிருந்தேன். எனக்கு அன்போடு கற்றுக் கொடுத்தவர்களில் முதல்வர் கா.பெருமாள். அடுத்தவர் புவனேஸ்வரி. பாலாவுக்கும் இவர்கள்தான் ஒலிபரப்பின் ஆரம்பத் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்.

வேலை செய்ய நான் ஆர்வமாக இருந்தாலும் என்னிடம் தயாரிப்புப் பொறுப்புக்களை ஒப்படைக்க குறிப்பாகச் சுவாமிநாதன் தயாராக இல்லை. அவரிடம் கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும் அவர் இசையவில்லை. “ஆகட்டும் பார்க்கலாம்” என்றே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடம் நான் செல்லச் சண்டை போடுக்கொண்டிருந்ததை பாலா தன்னறையிலிருந்தவாறு கேட்டிருக்கிறார். அப்போதுதான் பாலாவுக்குத் தலமைப் பதவி கொடுக்கப் பட்டிருந்த நேரம். தனியறையும் அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. பாலா என்னை அறைக்குள் அழைத்தார். “கேசு, இந்த வாரத்திலிருந்து என் பொறுப்பிலுள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் நீங்களே செய்யுங்கள்” என என்னிடம் ஒப்படைத்தார். அவற்றுள் முக்கியமான நிகழ்ச்சி “ஐ.நா.பேசுகிறது” என்பது என நினைவு. அன்று ஒரு கற்றுக்குட்டியான என்மேல் அவர் வைத்த நம்பிக்கை அவர் மறையும் வரை அப்படியே இருந்தது என்றே நினைக்கிறேன்.

பாலாவின் காலத்தில் வானொலி இந்தியப் பிரிவு மிகுந்த வளர்ச்சி கண்டது. ஒதுக்கப்பட்டும் கவனிக்கப்படாமலும் இருந்த பல அம்சங்களில் பாலா துணிச்சலாகப் பேசி முன்னேற்றங்களை ஏற்படுத்தினார்.

ஒலிபரப்பு நேரம் அதிகரிக்கப் பட்டது. நிகழ்ச்சிகளுக்கு அதிக நிதியைப் போராடி வாங்கினார். முழு நேர பகுதி நேர அலுவலகர்களை அதிகப் படுத்தினார். கலைஞர்களுக்கு சன்மானத்தை உயர்த்தினார். புதிய நிகழ்ச்சிகளுக்கான கருத்துக்களை யார் முன்வைத்தாலும் ஆதரித்து உற்சாகப் படுத்தி செயல் படுத்தச் செய்தார்.

முறையான கல்வித்தகுதி இல்லாததால் அரசாங்கத்தில் முழு நேர வேலை பெற இயலாமல் இருந்த பல கலைஞர்களை பாலா பகுதி நேரக் கலைஞர்களாகக் கொண்டு வந்து பின்னர் அவர்களை முழுநேரப் பணியாளர்களாகவும் ஆக்கினார். அவர்களுள் ரெ.சண்முகம், பைரோஜி நாராயணன், மைதீ அசன்கனி, மாரியப்பன், துளசி கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவார்கள். பின்னர் உரிய தகுதிகளோடு கிருஷ்ணன், ஆரோக்கியசாமி, தேவதாஸ், அப்துல் மஜீது, மைதீ சுல்தான், ரெங்கநாதன், பார்த்திபன் முதலிய பலர் வந்து சேர்ந்தார்கள்.

பாலாவின் காலத்தில்தான் இலக்கிய நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. உள்ளூர்க் கவிஞர்களைப் பாடல் எழுத வைத்து உள்ளூர் இசையமைப்பாளர்களை இசையமைக்கச் செய்து உள்ளூர் பாடகர்களைப் பாடச் செய்து ஒலியேற்றினார். நல்ல ஆலோசனைகள் யாரிடமிருந்து எப்போது வந்தாலும் அவர் நிராகரித்ததில்லை. முழு நேர ஒலிபரப்பாளர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் ஆளுக்கு அரை மணி நேரம் கொடுத்து, நீங்கள் விரும்பும் எதையும் செய்யலாம் எனக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுத்தார். இதன் மூலம் மறைந்திருந்த பலரின் கற்பனா திறன் வெளிப்பட்டது.

“இளைஞர் உலகம்”, இலக்கிய நிகழ்ச்சியான “பூச்சரம்”, “இலக்கியப் பாடல்கள்”, “இலக்கிய நாடகம்” கவிதை நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் ஆகியவற்றை அறிமுகப் படுத்தியவர் அவர். இதையெல்லாம் பார்த்து “முதியோர்களுக்கு மட்டும் ஏன் நிகழ்ச்சி இல்லை?” என எஸ்.ஆர்.எம். ஒருநாள் வேடிக்கையாகக் கேட்க, அடுத்த வாரமே “முதியோர் உலகம்” வந்தது. எஸ்.ஆர்.எம்.மே அதன் தயாரிப்பாளர் ஆனார்.

கர்நாடக இசைக்கான நேரத்தைக் கூட்டியவரும் பாலாதான். வானொலியில் நேயர்கள் தொலைபேசி அழைப்புக்கள் மூலம் பேசுவதும் அவர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மேடை நிகழ்ச்சியான “கலப்படம்” பல காலமாக நடை பெற்று வந்தாலும் ஆண்டில் உச்சகட்டமான “வானொலி விழா” என்னும் பெரும் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி அவரின் ஆதரவில்தான் மேடையேறியது. அது அறிமுகப் படுத்தப்பட்ட முதலாண்டில் நான்தான் அதன் தயாரிப்பாளராக இருந்தேன்.

பாலா பல்கலைக் கழகத்தில் நல்ல தமிழாசிரியர்களிடம் தமிழ்ப் படித்து வந்தவர். பேராசிரியர் ராஜாக்கண்ணு போன்றவர்கள் அவருக்குத் தமிழறிவை ஊட்டியது மட்டுமின்றி தூய தமிழின்பாலும், முறையான உச்சரிப்பின் மீதும் ஒரு காதலையே உண்டாக்கியிருந்தனர். ஆகவே மலேசிய வானொலியில் மொழியைப் பொறுத்த அளவில் நிலவிய ஏனோதானோ நிலைமையை அவர் சீர்படுத்தினார்.

செய்தியிலும் பிற நிகழ்ச்சிகளிலும் தூய தமிழ் நிலவிற்று. மொழிபெயர்ப்பில் அதிக அக்கறையுடைய பாலா ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதில் மிக அக்கறை காட்டினார். “பாராளுமன்றம்” என்னும் சொல் “நாடாளுமன்றம்” என ஆனது அவர் காலத்தில்தான்.

1966இல் நான் என் சுய முயற்சியில் HSC சான்றிதழுக்குக் கருத்தில்லாமல் படித்து சுரத்தில்லாமல் தேர்வெழுதி சுமாரான தேர்வு பெற்றிருந்தேன். தமிழிலும் பொதுத்தாளிலும் மட்டும் “ஏ” பெற்றிருந்தேன். இதை அறிந்த பாலா என்னைப் பல்கலைக் கழகத்திற்கு மனுச் செய்யச் சொன்னார்.

தயங்கித்தான் மனுச் செய்தேன். இடம் கிடைத்தது. மீண்டும் போய்ச் சேரத் தயங்கினேன். வேலையை விட்டால் யார் கல்விச் செலவும் வாழ்க்கைச் செலவும் கொடுப்பார்கள் என்ற தயக்கம்தான். ஆனால் பாலா தான் உதவுவதாகச் சொன்னார். வானொலியில் பகுதி நேரமாக நிகழ்ச்சிகள் தயாரிக்க வாய்ப்புக்கள் வழங்கினார். நான் பட்டம் பெறும் வரை பெரும் துணையாக இருந்தார். இந்தப் பட்டம் என் வாழ்க்கையை மடை மாற்றியது.

பாலாவின் இந்த ஆக்ககரமான போக்கே நான் பின்னாளில் ஒரு கல்வியாளனாக ஆனபிறகு என்னிடம் ஆலோசனை கேட்டு வந்த அனைத்து மாணவர்களுக்கும் “முதலில் தயக்கமில்லாமல் பல்கலைக்கழகம் போய்ச் சேருங்கள்; அப்புறம் ஆறுதலாகக் கவலைப் படுங்கள்” எனச் சொல்ல வைத்தது. இந்த ஆலோசனையைப் பின் பற்றிய யாரும் ஏமாறவில்லை என்பதை இப்போது உயரிய பதவிகளில் இருக்கும் பலரைச் சந்தித்துப் பேசும் போதும் உணர்கிறேன்.

1970 வாக்கில் பாலாவுக்கு மலேசிய வானொலி புதிய பொறுப்புக்களைக் கொடுத்தது. வானொலிக்கான தேசியப் பயிற்சி நிலையம் (இன்று IPTAR) ஒன்றை அமைக்கும் பணியை அவர் ஏற்றார். இந்தப் பணியை அவர் ஏற்று நடத்திய காலத்தில் இந்தப் பயிற்சி நிலையத்தை மையமாக வைத்து ஆசிய/பசிஃபிக் வட்டாரத்துக்கான ஒலிபரப்புப் பயிற்சி நிலையம் (இன்றைய APIBD) அமைக்கவும் முற்பட்டார். இன்றும் இயங்கி வரும் இந்த இரு நிலையங்களும் இவரின் விடா முயற்சி, விவேகம், தன்னம்பிக்கை, திறமை இவற்றின் அடிப்படையில் எழுந்தவையாகும்.

ஆசிய/பசிஃபிக் ஒலிபரப்புப் பயிற்சி நிலையத்தை நிறுவ அவர் யுனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டபோது அவருடைய செயல்திறன் உலகமெங்கணும் பரவுவதாயிற்று. ஒரு அனைத்துலக அமைப்பை நிறுவக்கூடிய இலட்சியக் கனவு, பெரிதாகச் சிந்திக்கும் மனம், தடைகளை உடைத்தெறியும் வன்மை, எண்ணியதை அடையும் திண்மை, பின்னடைவில் உடைந்துவிடாத விவேகம் ஆகிய அவரின் சிறப்பியல்புகள் வெளிப்பட இந்த அனைத்துலகப் பணி அவருக்கு உதவியது. அந்த நிலையத்தில் மிகத்திறமையான வெளிநாட்டு நிபுணர்களை அமர்த்தி ஒலிபரப்புப் பயிற்சித்துறையில் பல புதுமைகளையும் புகுத்தி அதன் அனைத்துலகத் தரத்தை உயர்த்தியதில் பாலாவுக்கே முதன்மைப் பங்கு உண்டு. இந்தக் காலத்தில் project management என்று சொல்லப்படும் நிபுணத்துவத் துறையில் பாலா மிகச் சிறந்து விளங்கினார்.

மலேசியப் பல்கலைக் கழகங்களுள் முதன் முறையாக மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம் ஒலிபரப்புத் துறையை அமைக்க விரும்பியபோது பாலா அதன் ஆலோசகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தார். அந்தப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரிலிருந்து, பதிவதிகாரிகள், டீன்கள், துறைத்தலைவர்கள் அனைவரும் பாலாவை பெரிதும் மதித்தார்கள்.

நான் அப்போது மலேசிய வானொலியில் என் வாழ்க்கை தேங்கிப் போய்விட்டதாக உணர்ந்திருந்தேன். மேற்கல்வி பெற வேண்டும் என்னும் ஆசை தீவிரமாக என்னைப் பற்றியிருந்தது. பாலாவிடம் அதைச் சொல்லி வைத்திருந்தேன். மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் ஒரு வேலை வாய்ப்பு வந்தபோது பாலா என்னைப் பரிந்துரைத்தார். அது என் வாழ்வை மீண்டும் மடை மாற்றியது.

இந்தக் கால கட்டத்தில் பாலா பல அனைத்துலகப் பிரமுகர்களின் அறிமுகங்களைப் பெற்றார். அவர்களில் பலர் கல்விமான்கள்; பலர் ஒலிபரப்புத் துறை நிபுணர்கள்; சிலர் அனைத்துலக நிறுவனங்களின் நிர்வாகிகள். தம்முடைய இடைவிடாத அனைத்துலகப் பயணங்களினால் வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியத் தூதுவர்களையும் அவர் பழகி நண்பர்கள் ஆக்கிக் கொண்டிருந்தார். அதே போன்று வானொலியோடு தொடர்பு கொண்ட பல மலேசிய அமைச்சர்களும் பாலாவுடன் நெருக்கமான நட்புறவுடன் பழகினார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் துங்கு அஹ்மாட் ரித்தாவுடீன் (அன்னாள் தகவல் அமைச்சர்) டத்தோ ஸ்ரீ லிங் லியோங் சிக் (அன்னாள் துணைத் தகவல் அமைச்சர்) ஆகியோர்.

பாலாவின் ஒலிபரப்பு பயிற்சித் துறைச் சேவைகளுக்காக கானடா நாட்டின் ரையர்சன் அறக்கட்டளை (Ryerson Foundation) பாலாவுக்கு 1988இல் அதன் ஃபெல்லொஷிப் விருதளித்துக் கௌரவித்தது. இந்த மிக உயரிய விருதைப் பெற்ற ஒரே மலேசியர் பாலாவே ஆவார்.

தனது பதவிக்கும் அதிகாரத்துக்கும் வெளியேயும் பாலா நிறைந்த நண்பர்களையும் அன்பர்களையும் பெற்றிருந்தார். சமுதாய அக்கறை அவருக்கு நிறைய இருந்தது. அரசியலில் துன் சம்பந்தன் அமைச்சராக இருந்த காலத்தில் பாலா அவருக்கு உற்ற நண்பர். துன் அவர்களின் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்க அமைப்புக் காலத்தில் மலேசிய வானொலி மூலம் அவர் நிறைந்த விளம்பரங்களும் பிரச்சாரங்களும் செய்ய இடம் கொடுத்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் வானொலியில் “ஒரு சொல் கேளீர்” என்று துன் அவர்களின் நல்லுரையை அவர் இடம்பெறச் செய்ததும் உண்டு.

துன்னுக்குப் பின் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் காலத்திலும் பாலா அவருக்குத் துணையாகவும் ஆலோசகராகவும் இருந்தார். அரசியலில் நுழைந்த அறிவார்ந்த பட்டதாரிகளான டத்தோ பத்மநாதன், டத்தோ சுப்பிரமணியம் ஆகியோர் பாலாவின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்பட்டனர். டத்தோ வி.எல்.காந்தனின் அரசியல் நுழைவுக்கும் ஆதரவாக இருந்தார். இவர்கள் மூவரும் தொடர்ந்து பாலாவின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்தனர்.

மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பி.நாராயணன் அவர்களும் பாலாவின் நண்பர். பி.பி.என். விடுதி கட்டிய காலத்திலும் அதைப் பராமரிக்கும் காலத்திலும் பாலா அவருக்கு உதவியாக இருந்தார். அந்தக் கால கட்டத்தில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் டாக்டர் இராம சுப்பையாவும் பாலாவுக்கு அணுக்கமாகவே இருந்தார். இவர் பின்னர் பி.பி. என். விடுதியின் நிர்வாகத் தலைவர் ஆனார். தொடர்ந்து அந்த விடுதியின் மேலாளர்களாகப் பொறுப்பு வகித்த வி.என்.இராமச்சந்திரன் (பின்னர் சைம் டார்பியில் உயர் அதிகாரி), அங்கு மாணவராக இருந்த நா.கோவிந்தன் (பின்னர் UDA அதிகாரி, மாஜு ஜெயா இயக்குநர்) ஆகியோர் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.

தொழில்துறை, வர்த்தகத்துறை ஆகியவற்றில் இருந்த இந்தியப் பிரமுகர்களில் பலர் பாலாவுக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு அவர் பல நன்மைகளைப் பெற்றுத் தரவும் முடிந்தது. பினாங்கில் வள்ளல் ரெங்கசாமிப் பிள்ளை, ஜோகூரில் நடேசன் செட்டியார் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள். இலங்கைத் தமிழர் சமூகத்தின் பிரமுகர் தான் ஸ்ரீ தருமலிங்கமும் பாலாவின் தோழரே.

மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் துறையினரிடமும் பாலா தொடர்ந்து தொடர்புகள் அறாமல் இருந்தார். தனிநாயகம் அடிகளார் காலத்தில் அவரை அழைத்து வானொலியில் உரையாற்ற வைத்தார். பின்னர் அடிகளார் முயற்சியில் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது (1968), பாலா தோளோடு தோள் நின்று உதவினார். அதன் பின்னரும் அன்னாளைய விரிவுரையாளர் ஹமீது, பேராசிரியர் சிங்காரவேலு, டாக்டர் இராம சுப்பையா ஆகியோரிடமும் அவர் மிகுந்த அன்பு பூண்டிருந்தார். டாக்டர் இராம சுப்பையாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பேரில் அமைந்த உபகாரச் சம்பள நிதிக்கு பாலாவே தலைவராக இருந்தும் வந்தார்.

ஒரு வகையில் பாலாவின் அன்பு வலை இந்தியச் சமுதாயத்தில் முக்கியமானவர்கள் அனைவரையும் பின்னியிருந்தது என்று சொல்லலாம். கே.எல். இந்திய சமூகத்தில் அவரை அறியாதவர் எவருமில்லை என்ற ஒரு நிலைமை இருந்தது.

இதற்கு மேல் கலையுலகத்தினரிடமும் பாலா நட்புறவோடு இருந்தார். உள்ளூர்க் கலைஞர்கள் வானொலியில் அதிக வாய்ப்புப் பெற எல்லா வசதிகளையும் பாலா பெற்றுத் தந்தார். அதோடு வெளிநாட்டிலிருந்து வரும் கலைஞர்களையும் பாலா அன்போடு அரவணைத்து ஆதரித்தார். இவர்களில் சீர்காழி கோவிந்தராஜன், பரதக் கலைஞர் அலர்மேல் வள்ளி ஆகியோர் பாலாவின் குடும்ப நண்பர்களாக ஆகினர். மற்றும் பாலமுரளி கிருஷ்ணா, (கிளாரினட்) நடராஜன், லால்குடி ஜெயராமன், மஹாராஜபுரம் சந்தானம் போன்றோரும் மிகத் தொடக்க காலத்திலேயே பாலாவின் ஆதரவையும் அன்பையும் பெற்றவர்கள். இன்னும் பிரபலங்கள் அல்லாத தொடக்க நிலைக் கலைஞர்கள் கூட பாலாவின் ஆதரவைத் தேடி வந்தால் பயன் பெறாமல் போனதில்லை.

தம் பதவி ஓய்வுக்குப் பின் பாலா “மக்கள் ஓசை” நாளிதழின் நிர்வாக வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் இருந்தவாறு அந்தப் பத்திரிக்கையின் தீவிர சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பக்கபலமாகவும் தொடர்ந்து இருந்தார்.

பாலாவைக் கண்களுக்குப் பக்கத்திலேயே வைத்து நான் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருடைய பெருமைகள் எனக்கு பிரமிப்பை ஊட்டியிருக்கலாம். ஆனால் பாலா நோயால் சாய்ந்துவிட்ட நாட்களில் அவரைப் பார்க்கவும் விசாரிக்கவும் வந்த நண்பர்களை, பிரமுகர்களைப் பார்த்தபோது, அவர்களுடன் பேசியபோது, அவரின் அன்பு வலை எத்தனை விரிவானது என்பதும், அவரது ஆளுமை பற்றிய எனது பிரமிப்பு நானாகக் கற்பித்துக் கொண்டதல்ல என்பதும் எனக்கு உறுதிப்பட்டது. அவரின் இறப்பின் போது வந்து குவிந்த மனிதர்கள், அவர்கள் அங்கு பகிர்ந்து கொண்ட செய்திகள், மலர்மாலைகள், செய்திகள் ஆகியவற்றைக் கண்டபோது பாலாவின் இழப்பை இந்தச் சமூகம் எத்தனை சோகத்துடன் எதிர்கொண்டிருக்கிறது என்பதும் புரிந்தது.

அவர் திருமேனி தகனத்துக்கு இயந்திரத்தின் உட்சென்ற வேளையில் என் வாழ்வின் ஒரு பகுதியும் எரிந்துபோனது என உணர்ந்தேன்.

எனினும் எந்த மனிதரின் மரணத்திலும் – அவர் எத்தனை உயர்ந்தவராயினும் – மற்றவர்களின் வாழ்க்கை திகைத்துப் போய் நின்று விடுவதில்லை. காலம் தானாக நம்மை வாழ்க்கை ஓட்டத்தில் தள்ளுகிறது. இருப்பினும் மீதியுள்ள நாட்களை ஒரு தளர்ச்சியுடனும் வெறுமையுடனும்தான் எதிர் கொள்ளுகிறோம், அதுவும் நிற்கும் நாள் வரும் என்ற உண்மையை மேலும் உறுதிப் படுத்தியவாறு….

[ஆர்.பாலகிருஷ்ணன் 25 மே 299இல் நுரையீரல் நோயினால் மறைந்தார்]

எனது வலைப்பூ: http://reka.anjal.net/

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு