நினைவுகளின் தடத்தில் – (33)

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

வெங்கட் சாமிநாதன்


அந்நாட்களில் எனக்குப் படிக்கக் கிடைத்த ஜகன்மோஹினி இதழ் ஒன்றே ஒன்று தான். ஆனந்த விகடன் அளவில் சுமார் அறுபதோ எண்பதோ பக்கங்கள் கொண்ட பத்திரிகை அது. மாதப் பத்திரிகை. அந்த இதழில் வெளிவந்திருந்த வை.மு.கோதை நாயகி அம்மாளின் நாவல் என்ன, நான் படித்த அத்தியாயத்தில் என்ன கதை சொல்லப்பட்டிருந்தது என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. மோகி சுத்தானந்த பாரதியார் பக்கங்களில் ஒரு பெரிய பட்டியல் அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கடைசியில் தரப்பட்டிருந்தது. இவற்றை யெல்லாம் தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அந்தப் பட்டியலின் முடிவில் இருந்தது. வை.மு.கோ எனக்கு அப்போது தான் தற்செலாகக் கிடைத்த ஜகன் மோகினி இதழின் மூலம் அறிமுகம் என்றாலும், யோகியாரை நான் முன்னதாகவே அறிந்தும் படித்திருந்தேன். பாடப்புத்தகத்திலும் அவரது பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது என்று நினைவு. தமிழ் பற்றி அவர் எழுதிய புத்தகம் ஒன்று படித்திருந்தேன். அவர் மொழிபெயர்த்திருந்த விக்டர் ஹ்யூகோவின் நாவல் ‘ஏழை படும் பாடு’ படித்திருந்தேன். அக்காலங்களில் யோகியார் எனக்கு மிகவும் ஆதர்சமாக இருந்தவர். நிறையவும் எழுதியவர். ‘பாரத சக்தி மகா காவ்யம்’ எழுதிக் கொண்டிருந்தார் எனத் தெரியும். அதிலிருந்து ஒரு பகுதி பாடப்புத்தகத்தில் இருந்ததோ ஒரு வேளை என்று ஒரு நினைவு நிழலாடுகிறது.

பானாதுரை ஹைஸ்கூலுக்குப் போகும் வழியில் காந்தி பார்க்குக்குப் பிறகு டவுன் ஹைஸ்கூலுக்கு எதிரே கடைத்தெரு. அந்தவழியாகத் தான் பள்ளிக் கூடத்துக்கு அனேக நாட்கள் போவேன். ஒரு புத்தகக் கடையில் ஒரு நாள் காலையில் அன்றாட பத்திரிகைத் தலைப்புச் செய்திகளோடு தொங்கவிடப்பட்ட போஸ்டரில் ‘பிரபல எழுத்தாளர் புதுமைப் பித்தன் மறைந்தார்” என்று இருந்தது. அப்போது தான் புதுமைப் பித்தன் பெயரையே முதலில் கேள்விப்படுகிறேன். முதன் முதலாகக் கேட்கும் அந்தப் பெயர் நினைவில் நிலைத்துவிடக் காரணம், அதற்கு அடுத்த வாரம் அப்பா நடத்தி வந்த சர்குலேஷன் லைப்ரரிக்கு வந்த கல்கி இதழில் புதுமைப் பித்தன் படமும், அவர் எழுதிய ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்னும் நீண்ட கதையும் கல்கியின் சில பாராட்டு வரிகளோடு பிரசுரமாகியிருந்தது. கதை படிக்க தமாஷாக இருந்தது. அப்போதெல்லாம் கல்கி யைத் தவிர வேறு பிரபல எழுத்தாளர் யாரையும் நான் படித்தவனில்லை. என் வகுப்பில் இருந்த கவிஞனான ஆர். ஷண்முகம் மூலம் கிடைத்த ஓர் இரவு நாவல் படித்ததை வைத்துக்கொண்டு ரகுநாதனைச் சேர்க்க முடியாது தான். இரண்டு வருடங்கள் கழித்து ஹிராகுட்டில் வேலை பார்க்கத் தொடங்கிய பிறகு தான் ரகுநாதன், அழகிரிசாமி, புதுமைப் பித்தன் போன்றவர்கள் என் படிப்பு புதிய தடங்களுக்கு மாற வழி அமைக்கிறார்கள். அது 1951-ல். அது மிகப் பெரிய மாற்றம். அது பின்னர், உரிய இடத்தில்.

கதைக் கடல் என்றோ என்னவோ ஒரு புத்தகம். காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக் கடை ஒன்றில் பார்த்தேன். பல அயல் மொழிச் சிறு கதைகளின் தொகுப்பு. அது எப்படி பின்னர் என் கைக்குக் கிடைத்தது என்பது நினைவில் இல்லை. அதையெல்லாம் வாங்கிப் படிக்க என்னிடம் காசு இருந்ததில்லை. ஆனால் எப்படியோ கிடைத்து அதில் படித்த ஒரு கதை, ஐரோப்பிய மொழிபெயர்ப்புக் கதை நினைவில் இருக்கிறது. ஒரு செல்வந்த வணிகன். அடிக்கடி வெளியூர்களுக்கு வியாபார நிமித்தம் போய்விடுபவன். வீட்டில் அவனது இளம் மனைவி. தொடர்ந்து அடிக்கடி தனிமையில் இருக்கும் இளம் மனைவிக்கு ஒரு வாலிபத் துணை கிடைக்கிறது. அவர்களுக்கிடையே கள்ளக் காதல். ஒரு நாள் திடீரென்று, அவர்கள் இருவரும் வீட்டினுள் இருக்கும் போது வெளியூர் சென்றிருந்த கணவன் வந்து விடுகிறான். அவசர அவசரமாக காதலனை வெளியே அனுப்புவதற்கு வழி தெரியாது, அவனை பக்கத்து அலமாரிக்குள் அடைத்துக் கதவைச் சாத்துகிறாள். உள்ளே வந்த கணவன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் பயத்தையும் மிரட்சியையும் கண்ட கணவன், திகைத்து, என்ன விஷயம் என்று கேட்கிறான். ஒன்றுமில்லையே என்று கூட சொல்ல அவள் தடுமாறுகிறாள். அவனுக்கு சந்தேகம் வலுக்கிறது. அவள் பதிலில் திருப்தி அடையாது சுற்றுமுற்றும் பார்க்கிறான். சாத்தியிருக்கும் அலமாரியின் மேல் அவள் கண்கள் விட்டு விட்டுப் பதிவதைக் கண்டு, அலமாரியில் என்ன இருக்கிறது, அப்படி மிரண்டு பார்க்கிறாய்? என்று கேட்டுக்கொண்டே அலமாரியைத் திறந்து பார்க்க அலமாரியை நோக்கிச் செல்ல, அவள் ஒடிச் சென்று அலமாரிக்கு முன்னால் நின்று கொண்டு, “இதில் ஒன்றுமில்லை என்றேனே” என்று பதட்டத்துடன் கூச்சலிடுகிறாள். அவன் சற்று திகைத்து நின்று பின் “சரி, பதறாதே, இதில் ஒன்றுமில்லையல்லவா?,” என்று சொல்லிக்கொண்டே, தன் வேலையாளைப் பார்த்து, “நீ போய் கொத்தனாரை உடனே அழைத்து வா. கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது என்று சொல்” என்று அனுப்புகிறான். கொத்தனார் வருகிறான். “இந்த மூடியிருக்கும் அலமாரியைத் திறக்காது, அதை அடைத்து ஒரு சுவர் எழுப்பு. என் முன்னாலேயே உடனே செய்” என்று கட்டளையிட, எல்லோரும் பார்த்திருக்க சுவர் எழுகிறது சற்று நேரத்தில். திடுக்கிட்ட மனைவி செய்வதறியாது, ஏதும் சொல்லவும் முடியாது தவிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் ஒரு கொத்தனார் வருகிறான். அலமாரியை அடைத்து சுவர் எழுப்பப்படுகிறது.

அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள் அந்த இளம் மனைவி. அங்கிருந்து வந்த வேதனை கலந்த ஒரு முனகல் குரல் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது. பின் அடங்கிவிட்டது, என்று அந்தக் கதை முடிகிறது.

இந்த மாதிரி கதையா இதற்கு முன் நான் படித்ததே இல்லை. படித்ததும் மனசு என்னவோ மாதிரியாக இருண்டு போயிற்று. அந்த உணர்வை என்னவென்று சொல்வதற்குத் தெரியவில்லை. சோகமான கதைகள், படங்கள் பார்த்து துக்கம் தொண்டை அடைத்து, பேசமுடியாமல் போவது, அழுவது என்பதெல்லாம் இல்லை. அப்படி நேர்ந்தது, கும்பகோணத்தில் நான் படித்துக்கொண்டிருந்த போது தான், 1948–ல், முதன் முதலாக, அனேகமாக கடைசியாகவும் பார்த்த ஒரு ஹிந்தி படம். விஜய லக்ஷ்மி டாக்கீஸில் பார்த்தேன். ஜுக்னு என்பது படத்தின் பெயர். கும்பகோணத்திற்கு ஹிந்தி படம் வருமா? பார்க்க ஜனங்கள் வருவார்களா? அப்போது கும்பகோணத்துக்கு இங்கிலீஷ் படம் வந்து கூட நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க ஹிந்தி படம்? இப்போது நினைத்துப் பார்க்கும் போது புதிராகவும் வேடிக்கையாகவும் தான் இருக்கிறது. மதுரையில் ஹிந்திப் படங்களுக்கு ஒரு கூட்டம் இருந்தது. அன்மோல் கடி, ரத்தன் என்ற இரண்டு படங்கள் பார்த்தது பற்றி எழுதியிருந்தேன். அதன் பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருஷத்திற்குப் பிறகு இப்போது ஜுக்னு. நன்றாக் ஞாபகம் இருக்கிறது. திலீப் குமாரும், நூர்ஜஹானும் நடித்தது. நூர்ஜஹான் மிகப் புகழ் பெற்ற பாடகி, பாகிஸ்தான் பிரிந்ததும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாள், பாகிஸ்தானின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய போது ராணுவத்தில் தலைமையில் இருந்த ஜெனரல் யாஹ்யா கானுக்கு மிகவும் பிரியமானவள், தன் ஓய்வு நேரங்களில் நூர்ஜஹானை அழைத்து பாடச்சொல்லிக் கேட்பது அவர் விருப்பம் என்பதெல்லாம் பின் வருடங்களில் நம்மை வந்தடைந்த செய்திகள். இதெல்லாம் படிக்க, சொல்ல சுவாரஸ்யமாக இருந்தாலும் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் மசாலாவும் சேர்ந்து சுவை கூட்டப்பட்டது என்று நினைத்துக் கொள்வேன். பின்னர் எண்பதுகளிலோ அல்லது தொன்னூறுகளிலோ என்னவோ நூர்ஜஹான் இந்தியா வந்திருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் நூர்ஜஹானின் ரசிகர்கள் இன்றும் அவர் விட்டுச் சென்ற பழைய நினைவுகளோடு வாழ்வதாகவும் அவர் திரும்ப எப்போது வந்து அந்நினைவுகளைப் புதுப்பிப்பார் என்று காத்திருந்ததாகவும், திலீப் குமார் மிக அழகான கவித்வமான உருதுவில் பேசினார். சுமார் 40-50 வருட பிரிவிற்குப் பிறகும் திலீப் குமாருக்கும் நூர்ஜஹானுக்கும் இடையே இன்னமும் உயிர்த்திருக்கும் ஈர்ப்பு திலீப் குமாரின் பேச்சில் கனிந்திருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம், ஒரே படமாகிவிட்ட அந்தப் படம் எனக்குப் பார்க்கக் கிடைத்ததில், அதுவும் கும்பகோணத்தில், எனக்கு மகிழ்ச்சி தான். சோகமயமான பாத்திரங்களில் அமைதியுடனும் ஆழத்துடனும் நடிப்பதில் பெயர் பெற்ற அவரது சோக குணச்சித்திரத்தையும், திரை இசைக்கே பெயர் பெற்றிருந்த நூர்ஜஹானையும் ஒருசேர ஜூக்னுவில் கிடைத்தது பற்றி பின்னர் வெகு வருடங்களாக நான் நினைத்து மகிழ்ந்ததுண்டு. இதையெல்லாம் மீறி திலீப் குமாரின் உச்ச கட்ட சோகத்தின் ஆழத்தையும் அமைதியையும் ஜோகன் (1950 என்று நினைக்கிறேன்) என்ற படத்தில் பார்த்த பிறகு ஜுக்னுவின் நினைவுகள் மங்கிவிட்டன.

இதெல்லாம் போகட்டும். கும்பகோணத்தில் 1948-ல் ஜுக்னு பார்த்த போது, எனக்கு திலீப் குமார் நூர்ஜஹான், இருவரையும் அப்போது தான் தெரிந்துகொள்கிறேன். ஹிந்தி அந்த வருடம் தான் படிக்க ஆரம்பித்திருந்தேன் என்றாலும், படத்தின் ஹிந்தி எனக்குப் புரிந்ததில்லை. பள்ளிப் பாடப்புத்தகத்தில் கற்பிக்கப்படும் ஹிந்தி வேறு. திலீப் குமாரும் நூர்ஜஹானும் பேசும் ஹிந்தி வேறு பாஷைதான். இருப்பினும் அந்தப் படம் என்னில் மிகுந்த பாதிப்பை விட்டுச் சென்றது. கல்லூரியில் பெண்கள் ஆடிப்பாடி செய்யும் கலாட்டா எனக்கு நினைவில் இருக்கிறது. கடைசியில் தன் காதலில் தோல்வியுற்ற திலீப் குமார் ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் கடைசிக் கட்டம் நினைவிலிருக்கிறது. இந்த இருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகம் என்னையும் வெகு தீவிரமாகப் பற்றியது. படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தூங்க முடியவில்லை. என்ன உலகமடா இது என்று துக்கம் துக்கமாக வந்தது. இந்த துக்கம் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்து பின் என்னை அறியாமலேயே அது மறைந்தும் போனது. இது போல என்னில் வெகுவாக மனசஞ்சலத்தை ஏற்படுத்தியது மிக அரிதாகவே நடந்துள்ளது. 1961-லோ என்னவோ தில்லி ரிவோலி சினிமாவில் Alfred Hitchhock-ன் Psycho படம் பார்த்துவிட்டு பீதியில் உறைந்து கிடந்தேன் இரண்டு நாட்களாயிற்று அதிலிருந்து விடுபட.

வெங்கட் சாமிநாதன்/ 19.11.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்