முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

மலர் மன்னன்



அண்மையில் எகிப்துக்குச் என்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா கெய்ரோ பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது, எகிப்தின் தலை நகரான கெய்ரோவைக் காலத்தை வென்ற நகரம் என்று வர்ணித்தார். அது எகிப்தின் பண்டைய நாகரிகத்திற்கு அவர் வழங்கிய மரியாதையின் அடையாளம் ஆகும். அவ்வாறு எகிப்தின் புராதனக் கலசாரத்தை சிலாகித்த ஒபாமா, அந்தத் தொன்மையான நாகரிகம் சிதைந்து போனதற்குக் காரணம் யார் என்பதையும் நினைவூட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருவேளை வேண்டுமென்றே கூட அதைச் சொல்ல மறந்து விட்டார்.

அராபிய ஆக்கிரமிப்பாளர்கள் முரட்டுத் தனமாக உள்ளே புகுந்து தமது சமய நம்பிகைகளை வலுக்கட்டாயமாகத் திணித்து, அவர்களது கோட்பாடுகள் மட்டுமே இறைவனால் அங்கீகாரம் பெற்றவை என பிரகடனம் செய்து, அவை தவிர வேறு எதற்கும் உலகில் இடமில்லை என்று சாதித்ததன் விளைவாகத்
தான் எகிப்தின் தொன்மையான கலாசாரம் காணாமற் போனது. எங்கள் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்; இல்லையேல் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொடூரமான முறையில் செத்து மடி என்பதுதான் அவர்களது ஒரே செய்தி. இன்று எகிப்தில் அதன் பூர்வ குடிகளே இல்லை. இருப்பவர்கள் அனைவரும் அராபியரும், அராபியருடன் சம்பந்தப்பட்ட கலப்பினத்தவரும்
தான்.

ஹிந்துஸ்தானத்தின் மக்கள் வியக்கத் தக்க அளவில் இயல்பாகவே அமைந்த ஆன்மிக முதிர்ச்சியின் பயனாக எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கிற்குப் போய்ச் சேர்பவைதான் என்று மிகுந்த பெருந்தன்மையுடன் இருக்கப் போக, அதன் விளைவாக ஆப்கானியரும் அராபியரும் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கி, அதன் உச்ச கட்டமாக அறுபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானமே ஒரு ரத்தக் களறியான பிரிவினையைச் சந்திக்க நேர்ந்தது. ஹிந்துஸ்தானத்தை மேலும் பிளவு படுத்தும் முயற்சியும் இன்னமும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் உலகிற்கு நற்செய்தி வழங்கிய ஒபாமா, அதற்கு முன் வரலாற்றின் ரத்தக் கறை படிந்த பக்கங்ளைப் புரட்டிப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மக்கள் தொகைப் பெருக்கத்தில் சமன் இல்லாத காரணத்தால் பல நாடுகள் பின்னர் எத்தைகைய நிரந்தரமான சங்கடங்களுக்குள்ளாக நேர்ந்தது என்பது அவருக்குத் தெரிய வந்திருக்கும். அமெரிக்காவில் முகமதியர் பிற சமூகத்தாருக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் முனைந்து முன்னேறி வருவதோடு, மற்றவர்களுடன் கலந்துறவாடி வருவதாகவும் அவர் மிகுந்த பெருமிதத்துடன் முஸ்லிம் உலகத்திற்கு அவர் அறிவித்ததால் இதைக் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று ஹிந்துஸ்தானம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்சினை மக்கள் தொகைப் பெருக்கத்தில் சமன்பாடு இல்லாமல் போயிருப்பதுதான். ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் தொகை குறைந்துகொண்டே வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முகமதியரின் வழிபாட்டுத் தலமான மசூதி இல்லாத மாநிலமே அமெரிக்காவில் இல்லை என்பது ஒபாமாவின் இன்னொரு பெருமித பிரகடனமாகும். இது மிகவும் பெருமைப் பட வேண்டிய விஷயம்தான். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் பிற சமயத்தவர் தமது வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதிலும் குறிப்பாக இஸ்லாமின் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிற சவூதி அரேபியாவில் பிற சமயத்தவர் தமது கைப் பையிலோ சட்டைப் பையிலோ தமது சமயச் சின்னங்கள் அல்லது இறை வடிவங்கள் உள்ள படத்தை வைத்திருந்தால் அது சமய நெறிக் கண்காணிப்புக் காவலரால் உடனே கிழித்தெறியப் பட்டுக் குப்பைக் கூடையில் எறியப் படும் என்பதையும் அவர் தெரிவித்திருக்கலாம்.

ஒபாமா தமது உரையில் குரானிலிருந்து ஏராளமான வசனங்களை எடுத்தாண்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. துரதிருஷ்ட வசமாக, இஸ்லாம் வலியுறுத்தும் உலகளாவிய சகோதரத்துவம் என்பது இஸ்லாமியர்களுக்குள்ளாகத்தானேயன்றி, அனைத்து சமயத்தவருக்கும் பொதுவாகச் சொன்னது அல்ல என்பதையும் அவர் சொல்லியிருக்கலாம். பிற சமயங்களைச் சார்ந்த மக்களை அவர்கள் இஸ்லாமை ஏற்கும்வரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது என்பதையும் அவர் கூறியிருக்கலாம்.

ஒரு தரப்பில் மட்டுமே சமயப் பொறையும், எல்லா வழிகளும் இறைவனை எய்துவதே என்கிற பெருந்தன்மையும் இருந்தால் அது சமரச சன்மார்க்கத்திற்கும் நிரந்தர உலக சமாதானதிற்கும் போதாது என்பதையும் ஒபாமா முஸ்லிம் உலகிற்குத் தாம் அளித்த செய்தியில் குறிப்பிட்டிருக்கலாம்.

ஒபாமா தமது உரையில் அமெரிக்காவிற்கும் முஸ்லிம் உலகிற்கும் பிணக்கு இருப்பதாகக் குறிப்பிட்ருப்பதும் பொருத்தமாக இல்லை. முஸ்லிம் உலகின் மகுடம் என்றே கூறத் தக்க சவூதி அரேபியாவுடனும் இஸ்லாமியக் குடியரசு என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பாகிஸ்தானுடனும் அதற்கு மிக மிக நெருக்கமான உறவு உள்ளது. அதே போல வேறு பல இஸ்லாமிய நாடுகளுடனும் அதற்கு நல்லுறவு நீடிக்கிறது. வேறு வழியின்றியே அது பாகிஸ்தானுடன் உறவு கொண்டாட வேண்டியுள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் பங்கு நேர்மையானதல்ல என்று தெரிந்
திரு ந்தும் அதற்கு வாரி வாரி வழங்கும் வள்ளலாக இருந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் அமெரிக்காவுக்கு உள்ளது. இன்று ஈராக்கிலும் ஆப்கனிலும் உள்ள அரசுகளுங்கூட அமெரிக்காவுக்கு இணக்கமானவையே அல்லவா?

தமது சமயத்தை நிறுவுவதற்காகத்தான் வன்முறை பயங்கரச் செயல்களில் ஈடுபடுவதாக ஜிஹாதி பயங்கரவாதிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பவர்களை அல்லாஹோ அக்பர் என்று முழக்கமிடுமாறு வற்புறுத்துகிறார்கள். தாம் ஐந்து வேளையும் தொழுகை செய்யும் போது பிணைக் கைதிகளும் மேற்கு திசை நோக்கி மண்டியிட்டு, நெற்றி பூமியில்பட வணங்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் கட்டளையிடுகிறார்கள். இந்நிலையில் முஸ்லிம் உலகிற்கு நற்செய்தி வழங்கிய ஒபாமா, சர்வ தேச இஸ்லாமியத் தலைமை குருமார்கள் ஒன்றுபட்டுக் கூட்டாகச் சேர்ந்து இஸ்லாமின் பெயரால் பயங்கர வாதச் செயலில் இறங்கு
பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று ஒரு ஃபத்வா வெளியிடுமாறும் வேண்டியிருக்கலாம். இன்னும் சிறிது துணிச்சலாக, பிற சமூகங்களில் சமயத்தின் பெயரால் விடுக்கப் பட்ட காலத்திற் கொவ்வாத கட்டளைகள் மனப்பூர்வமாகக் கைவிடப்பட்டு விட்டது போல முஸ்லிம் உலகமும் தனது காலத்திற்கொவ்வாத கோட்பாடுகளைக் கை கழுவிவிட்டால் சர்வ தேசிய நீரோட்டத்துடன் அது எளிதாகக் கலப்பது சாத்தியப்படும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். முஸ்லிம் உலகம் தொடர்ந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டே இருந்தால், நாளாவட்டத்தில் உலகமானது முஸ்லிம் உலகம், முஸ்லிம் அல்லாத உலகம் என்று இரண்டுபட்டுப் போகும் என்றும் அவர் கூறியிருக்கலாம்.

இஸ்லாம் ஹிந்துஸ்தானத்திற்குள் வந்தபோது, ஹிந்து சமயத்தின் அசகாய ஆன்மிக சக்தியின் பயனாக அது மிகவும் மென்மையடையலாயிற்று. அதன் அடையாளத்தைத்தான் இன்று ஹிந்துஸ்தானம் முழுவதும் தர்காக்களும், அங்கெல்லாம் வழிபாடுகளும் திருவிழாக்களுமாகக் காண முடிகிறது. ஹிந்துஸ்தானத்து மொழிகள் அனைத்திலுமே இஸ்லாமியப் பாடல்கள் இனிமையாக ஒலிப்பதையும் கேட்க முடிகிறது. தர்கா வழிபாடும் இசையும் இஸ்லாமில் மறுக்கப் பட்டுள்ள போதிலும்! மற்ற தேசங்கøளைப் போலன்றி ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாமின் அனுபவம் அதற்கு ஹிந்து சமயத்துடன் ஏற்பட்ட பரிச்சயம் காரணமாகப் புரட்சிகரமான மாற்றத்தைச் சிறுகச் சிறுக அடைவதாக இருந்தது. ஆனால் துரதிருஷ்ட வசமாக வரலாற்றின் போக்கு பலவாறு திசைமாறிப் போனதால் அது தடைபட்டுப் போனது. 1857 முதல் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதிய வீர சாவர்கர்ஜி, ஹிந்துமுஸ்லிம் நிரந்தர ஒற்றுமை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அப்போது கை நழுவிப் போனதாக வருந்தியதன் அடிப்படையும் ஹிந்து சமய ஆளுமையினால் இஸ்லாம் மென்மையடையத் தொடங்கியது சுணங்கிப் போனதுதான். இந்த வரலாற்று உண்மைகள் ஒபாமாவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாமின் சமரசம் செய்து கொள்ள விரும்பாத பிடிவாதப் போக்கு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனை கவனத்தில்கொண்டு, மாற்றம் காண விரும்பாத தனது பிடிவாதத்தை உலக நன்மை கருதிக் கைவிடுமாறு முஸ்லிம் உலகை அவர் கேட்டுக் கொண்டிருந்திருப்பாரேயானால் முஸ்லிம் அல்லாத மொத்த உலகமும் உற்சாகத்துடன் தலையசைத்திருக்கும்.
+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்