கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

ஹெச்.ஜி.ரசூல்



காஷ்மீர் மூதாதையர் குல குறியீட்டுச் சொல்லாகிய மண்டோ, சதாத் ஹஸன் மண்டோவாக ஓர் உருதுமொழி கதைச் சொல்லியை நமக்கு அறிமுகம் செய்கிறது. இழப்புகளால் நிரப்பப்பட்ட வாழ்க்கையைக் குடித்து தனது நாற்பத்து மூன்று வயது முடிவதற்குள் தொலைத்தும், ஆன்மாவின் பேரழகை எழுத்துப் பரப்பெங்கும் பரவவிட்டு உயிர்ப்பித்தும் இருக்கிற ஓர் இலக்கியப் பேரலை, மண்டோவின் எளிமையும் ஈர்ப்பும் நம்நெஞ்சை வெகு சீக்கிரத்தில் நிலைகொள்ளாமல் அலைபாய விடுகிறது.

மொத்தம் 22 சிறுகதைத் தொகுப்புகளில் இருநூற்றம்பதுக்கும் மேற்பட்ட கதைகள், மூன்று திறனாய்வு கட்டுரைத் தொகுப்புகள் ஐந்து வானொலி நாடகப்பிரதித் தொகுப்புகள், ஒரு நாவல், இரண்டு தனிநபர் ஆளுமை தொகுப்புகள், உரையாடல் சொற்சித்திரங்கள், மொழிபெயர்ப்புகள் என மண்டோவினது எழுத்தின் பரிமாணங்கள் பன்முகத்-தன்மையாய் விரிகின்றன. (இருளின் மீது நடமாட்டம் கொள்ளும் ஒரு விளக்கின் பலவண்ணக் கதிர்கள்.)

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் வன்முறைத்துயரங்கள் வகுப்புவாதக்கலவரங்களில் நிகழ்த்திய பெண்ணுடல் அழிப்பு, கட்டமைக்கப்பட்ட அதிகாரங்களின் மீதான கலகங்கள் என வெளிப்-பட்ட மாண்டோ, மையங்களுக்கு எதிரான ஒரு விளிம்பு நிலை வாழ்வுக்கான அத்தாட்சி. உலக இலக்கிய வகைமையில் ஒன்றான கடித இலக்கியம் மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு வடிவமாகும்.

கிபி 612_580 காலத்து கிரேக்க பெண் கவிஞர் ஸாப்போ தனது காதலன் அனெக்டோரியாவிற்கு எழுதியது, ரோம எழுத்தாளர் பிளினி தனது மனைவி கால்புர்னியாவிற்கு முதல் நூற்றாண்டில் எழுதியது, ஹெலோஸி என்ற பிரெஞ்சு கன்னியாஸ்திரி தத்துவவாதியும், ரகசிய திருமணமும் செய்துகொண்ட காதலனுமான பீட்டர் அபிலார்டு எழுதியவை என உலகப் புகழ் பெற்றக் கடிதங்கள் கடித இலக்கியத்தின் அழியா மதிப்பீடுகளை முன் வைக்கின்றன.

அழியா காதலுக்கு உணர்வுகளை வார்த்தளித்த இசைமேதை பீத்தோவானின் கடிதம், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்த அனுபவங்களை பதிவு, தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக ஏற்பட்ட உணர்வலைகளை பதிவு செய்த தாஸ்தாவேஸ்கியின் கடிதம், என இருபதாம் நூற்றாண்டுச் சூழலிலும் எழுதப்பட்ட வரலாற்றுக் கடிதங்கள் வாசகனின் அபூர்வ கவனிப்பிற்கு உரித்தானவையாகும். மிக்கலே லாவ்ரிக் தனது உலகின் புகழ்-பெற்ற கடி-தங்கள்: புராதன கிரேக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை என்ற திறனாய்-வில் இக்கடிதங்-கள் பற்றி குறிப்-பிடுகிறார்.

இந்த வரிசை-யில் மண்டோ-வின் கடிதங்களும் தனித்துவம் பெறு-கின்றன. அங்கிள்சாமுக்கு மண்டோவின் கடிதங்கள் என்ற மொழிபெயர்ப்புநூல் மண்டோவின் எழுத்துக்களில் தோய்ந்து தேர்ச்சிபெற்ற ராமாநுஜத்தால் தமிழ்படுத்தப்பட்டிருக்கிறது. மண்டோவின் கதையுலகைத் தாண்டியதொரு படைப்புலகம், ஆதிக்க திமிர்களை பகடி செய்யும் கடித இலக்கியமாகவும் உருமாறுகிறது.

‘அங்கிள்சாம்’ முத்திரை அமெரிக்க அரசாங்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு. 1812ல் அங்கிள்சாமை வடிவமைத்து நியூயார்க்கைச் சார்ந்த வில்சன் ஆப் டிராய் பெரடிரிக் அகஸ்தஸ் பிட்பேடி 1816ல் அங்கிள்சாம் குறியீட்டை தனது த அட்வென்சர்ஸ்ஆப் அங்கிள்சாம் இன் சர்ச் ஆப்டர் ஹிஸ்ட்ஹானர் இலக்கியப் படைப்பில் பயன்படுத்து-கிறார். மண்டோவும் அமெரிக்க அரசாங்கத்தை நோக்கிய குறியீடாக அங்கிள்சாமை முன்நிறுத்தி தனது புனைவை உருவாக்குகிறார்.

மண்டோவின் கடிதங்களில் நேர்கோடற்ற எழுத்துமுறை உருவாகி வந்துள்ளது. பல்துறை அறிவுகள் ஊடாடும் பிரதியாகி அழித்தெழுதப்பட்ட ஞாபகங்களினூடே பயணம் செய்யும் இந்த எழுத்து யதார்த்தத்திற்கும், புனைவிற்குமான இடைவெளியை குறைத்திருக்கிறது. குறுங்கதைகளாகவும், நாவலாகவும், கவிதைப் படிமங்களாகவும் வாசிப்பதற்கான சாத்தியங்-களைக் கொண்டுள்ள இக்கடிதங்கள் கடிதம்போல-வும், புனைவு போலவும், தனது வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன.

1951 டிசம்பர் 16ல் எழுதப்பட்ட முதல் கடிதம், பாகிஸ்தான் லாகூரில் மண்டோவின் இறப்பு ஜனவரி 18, 1955ல் நிகழ்வதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாக 1954 ஏப்ரல் 26ல் எழுதப்பட்ட அவரது இறுதியான ஒன்பதாவது கடிதம் என இதில் ஒன்பது கடிதங்கள் இடம் பெறுகின்றன.

தன் மீதான சிறிதும் அக்கறையற்ற மண்டோ தன் சமகாலத்தின் மீது தீரான அக்கறையைக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் அவமானங்களும் பாதிப்புகளும், உண்மைக்கு மாறானவற்றையும் காண்கிறாரோ அதன் மீதான தனது எதிர்வினையை பதிவு செய்கிறார். ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டப் பண்பை மண்டோவின் எழுத்து சாத்தியமாகியுள்ளது.

பிரிவினைக்கு உள்ளான பின் தான் பெயர்ந்து சென்ற பாகிஸ்தான் மண்ணையும், அதே சமயம் தன் பூர்வீக இந்திய மண்ணையும்

“என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார்
என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார்
எனக்குப் பிறந்த முதல் குழந்தையும்
அந்த துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்’’

என மண்டோவால் பேசவும் முடிகிறது. இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோசமாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பவும் முடிகிறது.

மண்டோ பல நிலைகளில் இறகுகள் துண்டிக்கப்-பட்ட பறவையாக மாற்றப்பட்டிருக்கிறார். எனவே-தான் இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவைகளுக்காக குரல் எழுப்பவும் செய்கிறார்.

புதிதாக உருவான தன்நாடு ஏழ்மையான நாடாக இருப்பதையும், கலிபோர்னியாவில் இறந்துபோன மனிதர்களை மட்டுமல்ல பணம் செலவழித்தால் வாலை இழந்த நாய்க்குட்டிகளுக்கு கூட புதிய வாலை பொருத்தி அழகுபடுத்திக் கல்லறையில் புதைப்-பதற்கு தயாராக இருக்கும் வியாபார நிறுவனங்-களையும் பகடி செய்கிறார். இது குறித்து ஈவ்லின் வாக் எழுதிய புத்தகத்தை விவரிக்கிறார். ஒரு மனிதன் மரணத்திற்கு பிறகும் அவமானப்படுவது குறித்த அச்சமும் அந்த மனஓட்டத்தினை வெளிப்படுத்தும் உருதுக்கவிஞன் மிர்சாகாலிபின் வரிகளையும் கூட மண்டோ சொல்லத் தவறவில்லை. முதல் கடிதத்தை எழுதி முடித்துவிட்டு காசில்லாததால் தபாலில் இதனை அனுப்ப முடியவில்லையென்ற மண்டோ-வின் குறிப்பு ஒரு படைப்பாளியின் வாழ்தலை உணர்த்திச் செல்கிறது.

மண்டோ தன் கடிதங்களில் கையாளும் பகடி மொழி அதிகாரங்களைக் கலைத்துப்போடும் குணாம்சத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுத வியாபார யுத்தவெறி அரசியலை, ராணுவ ஆக்கிரமிப்புகளை அம்பலப்படுத்துவதிலும் இது வெளிப்பட்டுள்ளது.

ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது அழகிய பெண்களின் கால்களை பாத்திங்பியூட்டி திரைப்படத்தில் எப்படி அங்கிள் ஒன்று திரட்டினீர்கள் என கேட்டுவிட்டு, இதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதை தடுத்துவிடுங்கள் என்பதோடு எங்களுடைய மனைவி-மார்களின் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்களெல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை என மறைமுகமாக முஸ்லிம் பெண்களின் ஆடை விதிகள் குறித்து பெருமைப்பட்டும் கொள்கிறார். எனினும் அமெரிக்க மயமாகும் வணிக கலாசாரத்-துக்கு எதிரான குரலாகவே இது வெளிப்பட்டுள்ளது.

என் வயிறு அமெரிக்க கோதுமைக்கு பழகி-விட்டது என்பதிலிருந்து உதட்டுச் சாயம் பூசும் உயர்வர்க்கப் பெண்கள் முகத்திரையைவிட்டு வெளிவருதல், பொதுவிடங்களில் நடனம், முத்தம் கொடுக்கும் கலை, இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு யுத்தத்தை ஏன் தொடங்கக் கூடாது என கேள்வி கேட்டல், ராணுவம், அரசியல், பொருளாதாரம், வணிகம், கலாசாரம் அனைத்திலும் பாகிஸ்தானின் அமெரிக்கமயமாகும் அரசியலுக்கு எதிராக எழுத்துக் கிளர்ச்சி செய்கிறார். அங்கிள்சாமை முன்னிறுத்தி மண்டோவின் பகடி செய்யும் எழுத்துக்கள் வரலாற்றை இன்றைய சூழலிலிருந்து புரிந்து கொள்ளவும் மீள்வாசிப்பு செய்யவும் ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.

மண்டோ தனது அடையாளத்தை அடிக்கடி கலைத்துப் போடுகிறார். எதிலும் சிக்கிக் கொள்ளா-மல் தப்பித்து ஓடுபவராக தோன்றினாலும் இவரது விமர்சனக் கடிதங்கள் அமெரிக்க எதிர்ப்பு அரசியலை முன் வைக்கும் அதே சமயத்தில் அதன் மீதும் கம்யூனிசம் அதிகார தோற்றம் கொள்ளும்போது இஸ்லாமிய பழமைவாத கருத்தாங்கங்கள் மீதும் அதிகமும் எதிர்வினைகளையே புரிகின்றன.

சோவியத் மீதான சமூக ஏகாதிபத்திய விமர்சனம் உறுதிப்படுவதற்கு முன்பாகவே போலந்து, செகோ, மற்றும் கொரியாவில் ருஷியா செய்வதைப்போல் அந்தச் சிவப்பு பேரரசு அரிவாள் சுத்தியோடு இந்தியா-வின் மீது பாய்ந்து விடுமோ என பயங்கொள்ளு-கிறீர்கள், என அவர்தம் எதிர்வினை வெளிப்படுகிறது.

சிலசமயங்களில் எனக்குக்கூட சிவப்பு இறக்கையை என் தொப்பியில் சொருகிக் கொண்டு சிவப்பாகவே மாறிட வேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது. இது மிகவும் அபாயகரமான சிந்தனை இல்லையா என தன் அரசியல் சார்பு இருப்பின் மீதே கேள்வி எழுப்புகிறார்.

இக்குறிப்புகளை முன்வைத்து மண்டோவை ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்திவிட முடியாது. ஏனெனில் மார்க்சியத்தை நடைமுறைப்-படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளையும் அரசு எந்திரமாக அது வடிவம் பெறும்போது உருவாகும் அதிகாரங்களின் மீதான விமர்சனங்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச கட்டு-மானத்திற்கு மாற்றாக இஸ்லாமிய அடிப்படை-வாதத்தை வளர்த்துவிடும் போக்கை கோடிட்டு காட்டுகையில், ருஷ்ய கம்யூனிசத்திற்கு மிகச்சிறந்த எதிர்ப்பு மருந்து எங்களுடைய முல்லாக்கள்தான்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரார்த்தனைப்-பாயும், தஸ்பீன் கூட தேவைப்படலாம். சிறுநீரின் கடைசி சொட்டுக்களை உறிஞ்சிக் கொள்வதற்கு களிமண்கட்டிகளையும், அனுப்பிவையுங்கள், கழுத்தை வெட்டக்கூடிய பிளேடுகளும் கத்தரிக்கோல்களும் இந்தப்பட்டியலில் இருக்க வேண்டும் என அங்கதமாய் எழுதுகிறார்.

இஸ்லாமியத்தின் சில மதிப்பீடுகளை நடைமுறை சார்ந்து விமர்சனப்படுத்தும் போக்கையும் மண்டோவிடம் காணலாம். சவுதி மன்னராட்சியில் ஆடம்பரம், அதிகாரம், மனைவிமார்கள், குறித்த ஆண் மேலாதிக்க மனோபாவம் குறித்து கிண்டல் செய்கிறார். பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி மன்னர் ஷாசவுத் 25 இளவரசர்களுக்கு தந்தை என்பதை சுட்டிக்காட்டும் போதும், ஒவ்வொரு ஆணும் நான்கு மனைவிகள் வரை ஏற்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் நாலு குழந்தைகள் வீதம் 16 குழந்தைகள் எனச் சொல்லிச் செல்கையில் பலதார மணம் அரபுச் சூழலில் பெண்ணின் மீதான எத்தகைய ஒடுக்குதல்களை ஏற்படுத்துகிறது என்பதை நகர்த்திச் செல்கிறார்.

கம்யூனிஸ்டுகளிடம் கொடுப்பதற்கு வெறும் வார்த்தைகள்தான் இருக்கும். பணம் இருக்காது. எனவே நான் காதியானி ஆவேனே தவிர நிச்சயம் கம்யூனிஸ்ட் ஆக மாட்டேன் என்ற மண்டோவின் வாக்கியத்தை வேறொரு தளத்திலும் வைத்து அர்த்தப்-படுத்திப் பார்க்கலாம்.

இஸ்லாத்தின் ஒரு பிரிவினராக தங்களை முன்னிறுத்திக் கொண்ட அகமதியர்கள் எனப்படும் காதியானிகள் முஸ்லிம்களில் சிறுபான்மையினர்.

இன்றைய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இயங்கும் காதியானிகள், ஜிகாத எனும் புனிதப்போருக்கு எதிரான முஸ்லிம்கள். போரின் மீது நம்பிக்கை வைக்காத சமாதானத்தை விரும்புகிற பசிபியர்கள் என்பதான கருத்தாக்கமும் முன் வைக்கப்படுகிறது.

1839களில் பஞ்சாபின் காதியானில் பிறந்த மிர்சாகுலம் அகமது 1857 அகமதியா இயக்கத்தை தோற்றுவித்தார்.

1880_84 காலகட்டத்தில் குலாம் அகமதுவின் சிந்தனைகள் தொகுப்புகளாக வெளிவந்தன. 1885ல் இஸ்லாமிய சீர்திருத்தவாதியாகவும், 1891ல் இறைத்தூதரான மெஹதியாகவும், 1901ல் அல்லாவின் அருள்பெற்ற நபியாகவும் வெளிப்படுத்திக் கொண்டார். 1904ல் இந்து மக்கள் ஒருசாரார் வணங்கும் தெய்வமான கிருஷ்ணனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். நாம் ஒவவொரு வகுப்பினருக்கும் ஒரு தூதரை அனுப்பியருக்கிறேன். குர்ஆனிய கருத்தாக்கத்தின் பிறிதொரு அர்த்தமாக இதை கருதினார்.

1908ல் மிர்சாகுலாம் அகமதுவின் மரணத்திற்கு பிறகு காதியானிகள் பலநிலைகளில் சிறுபான்மையின-ராக ஒடுக்கப்பட்டார்கள். 1974ல் சுல்பிகர் அலி பூட்டோவால் காதியானிகள் இஸ்லாம் அல்லாதவர் என பிரகடனப்படுத்தப்பட்டனர். சவுதி அரேபியா அரசாங்கம், காதியானிகளுக்கு மெக்காவிற்கு செல்ல விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது. தென்ஆப்பிரிக்க நீதிமன்றமும் காதியானிகளை முஸ்லிம் அல்லாதவர் என அறிவித்தது. இத்தகையப் பின்னணியில் மண்டோ தன்னை காதியானியாக ஒரு வேளை மாறுவேன் என்ற குரலை மைய அதிகார இஸ்லாத்திற்கு மாற்றாக ஓர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பிரதிநிதியின் குரலாகி கூட அர்த்தப்படுத்தலாம்.

மேற்குலக கிழக்குலக எழுத்தை ஒப்பீடும் செய்யும் விதத்தில் டாக்டர் ரோஸிசிங் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். வரலாறு, சமூக, கலாசாரச் சூழலில் இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த ஜெர்மானிய கவிஞர் ரைல்க் உருமாற்றம் விசாரணை புனைவிலக்கியம் வழி பேசப்பட்ட பிரான்ஸ் காப்கா மற்றும் சதாத் ஹஸன் மண்டோ படைப்பாளிகளின் படைப்பில் வெளிப்படும் அன்பு, வாழ்வு, மரணம் கருத்தாக்கங்கள் குறியியல் மாதிரிகளாக படைக்கப்-பட்ட விதம் குறித்து ஒப்பீட்டாய்வாக இது முன்வைக்கப்படுகிறது.

உருதுவிலிருந்து காலிப் ஹாசன் வழி ஆங்கிலத்தி-லும் ராமாநுஜத்தின் வழி தமிழிலும் மண்டோவின் படைப்புலகை வாசிப்பது ஒரு மாறுபட்ட அனுபவம். இது தமிழ் இலக்கியப் பரப்பில் மாற்றுமொழி புனைவுகளுக்கான இடத்தை மிக உற்சாகமாக தக்கவைத்துக் கொள்கிறது.
நன்றி
புதிய புத்தகம் பேசுது
மே2009

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்