நினைவுகளின் தடத்தில் – (30)

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

வெங்கட் சாமிநாதன்


பாட்டியிடம் என்னைப் போல சாப்பிட வந்தவர் வேறு யாரும் இல்லை. காசு கொடுத்து பாட்டியிடம் சாப்பிட வந்தது நான் ஒருத்தன் தான், அதுவும் என்னுடன் தான் இந்த ஏற்பாட்டையே பாட்டி ஆரம்பித்தாள் என்றும் தோன்றிற்று. இந்த பாட்டியை அப்பா எப்படி கண்டு பிடித்தார் என்பதும் எனக்கு ஒரு ஆச்சரியம். அதுவும் பாட்டியின் சாப்பாட்டுக் கடையில் முதல் வாடிக்கை, ஒரே வாடிக்கை நானாக இருக்கும் போது, எப்படி இதெல்லாம் தொடங்கியது, அது எப்படி உடையாளூரில் இருக்கும் அப்பாவின் காதுக்கு எட்டி அவர் என்னை இங்கு கொண்டு சேர்த்தார் என்பதும் ஒரு புதிர் தான். அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு குடும்பம் கபிஸ்தலத்திலிருந்து வந்த குடும்பம். கணவன் கும்பகோணத்தில் வேலை பார்ப்பதால், மனைவி மற்றும் ஒரு குழந்தையோடு வந்து தங்கியிருக்கும் சின்ன குடும்பம். அவர்கள் தான் சொல்லியிருக்கவேண்டும். இருந்தாலும், நான் அங்கிருந்த இரண்டு வருஷ காலத்தில் அவர்கள் என்னிடம் எந்த அன்னியோன்னியத்துடனும் பழகியது பேசியது கிடையாது. பாட்டியின் பையன் தான் என்னிடம் சினேகம் கொண்டாடினான். எனக்கு இரண்டு வயது மூத்தவன். பாட்டி அவனைப் படிக்க வைப்பதற்காகவே கும்பகோணத்தில் இந்த வீட்டில் தங்கினாள். இல்லையெனில் அவளுக்கு கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கேயே இருந்து கொண்டு, இந்த வீட்டு வாடகையின் உபரி வருமானத்தோடு காலம் தள்ளக்கூடும். ஆனால் அந்த பையன் படிப்பதில் சிரத்தையுள்ளவனாகத் தெரியவில்லை. அவன் படித்துப் பார்த்ததில்லை நான். ஆனால் என்னிடம் பிரியமாக இருந்தான். நான் இளையவன், என்னைப் பாதுகாத்து தனித்து வந்திருக்கும் எனக்கு சௌகரியங்கள் செய்து கொடுப்பது மூத்தவனான அவனது கடமை என்று நினைத்திருக்கலாம். அவ்வப்போது எனக்காக பாட்டியிடம் அவன் சிபாரிசு செய்வான். பாட்டிக்கு அது சங்கடமாகவே இருக்கும். பாட்டியும் வேடிக்கையான பாட்டி. “இது என்ன ரசம், இல்லை, சாம்பார் பாட்டி?” என்று நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பது என்ன என்பது தெரியாமல் கேட்டு விடுவேன். “அதுவாடா, இப்ப புளியைக் கரைச்சு வச்சேனே அந்த ரசம் தான்?” என்பாள். புரிந்து விட்டது போல் பாவனையில் அதற்குப் பின் நான் மௌனமாகிவிடுவேன். இது இரண்டு மூன்று தடவை நடந்துவிட்டதும், பின்னர் நான் பாட்டியிடம் என் அந்த மாதிரி சந்தேகங்களக் கேட்பதில்லை. ஒரு தடவை நான் சனி ஞாயிறு ஊருக்குப் போயிருந்த போது அம்மாவிடம் இதைச் சொன்னேன். அம்மா முதலில் சிரித்தாள். பின்னால் என்ன தோணித்தோ என்னவோ, “இன்னம் கொஞ்ச நாள் பொறுத்துக்கோப்பா, சனி ஞாயிறு வர்ரையோல்யோ, அப்போ உனக்கு நாக்கு ருசியா நான் சமைச்சுப் போடறேன் போ.” என்று வருத்தத்துடன் சொன்னாள். பாட்டி சொன்னது வேடிக்கையாக இருந்ததைச் சொல்லப் போய், நான் அங்கு சாப்பிடக் கஷ்டப்படுவதாக அம்மாவுக்குத் தோன்றிவிட்டது, என்னமோ நினைத்தது என்னமோ நடந்துவிட்டது. “அதுக்கில்லேம்மா, பாட்டி சொல்றது வேடிக்கையா இருந்தது, அதைச் சொன்னேன்” என்று அம்மாவைச் சமாதானப் படுத்தினேன்.

உண்மையில் அப்போது எனக்கு அது ஒன்றும் கஷ்டமாகத் தெரியவில்லை. மூன்று வேளை சாப்பாடும், இரண்டு வேளை காபியும் மத்தியானம் நாலு மணிக்கு ஏதும் கொரிக்கவும் கிடைத்துக்கொண்டிருந்தது போய், இப்போது காலையில் ஒரு காபி, பின் இரண்டு வேளை சாப்பாடு என்று ஆகிவிட்டது. இருப்பினும் அது என்னை ஏதும் கஷ்டப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. அது பற்றிய சிந்தனைகள் எனக்கு அப்போது இருந்ததில்லை. மதுரையில் மூன்று மாதங்கள் தனிக் கட்டையாக இருந்து பெற்ற புது அனுபவம், இங்கு கும்பகோணத்தில் புதுப்பிக்க இருந்தது. வீடு மகாமகக் குளத்தைப் பார்த்து மேற்குக் கரையில் இருந்தது. மகா மகக் குளம் மிகப் பெரிய குளம். அதன் நாலா பக்கமும் சுர்றியிருந்த நாட்டு ஓடு போட்ட வீடுகள். ஒரே ஒரு வீடு தான் மாடி வீடு. சத்திரம் என்று சொல்லப்பட்டது. அங்கு ஒரு முறை ராஜமாணிக்கதிற்கு பாராட்டு விழா நடந்தது. நிறைய சங்கீத வித்வான்கள் வந்திருந்தார்கள். மறுநாள் பரி¨க்ஷ என்பதையும் மறந்து இரவு நெடு நேரம் அங்கு கழித்தேன். அது பற்றி நான் வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன். திண்ணையில் உட்கார்ந்து கொண்டால் எதிரே பிரம்மாண்டமான மகா மகக் குளம், அதைச் சுற்றி நான்கு கரைகளிலும் வீடுகள். சில வருஷங்களுக்கு முன் மகா மகம் நடந்த போது பத்திரிகைகளில் வெளியாகிருந்த புகைப்படத்திலிருந்து என் மனதில் பதிவாகியிருக்கும் 1948-49 காட்சி, அறுபது வருட பழைய காட்சி அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. அப்படி மாறாது காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்துவிட்டது ஒரு அழகாகத் தான் இருந்தது. அது மனதில் பதிக்கும் கிளர்ச்சிகளும் சந்தோஷம் தருவதாகத் தான் இருக்கிறது. சமீபத்தில் உடையாளூர் சென்றிருந்த கதிரவன் என்ற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படங்கள், இன்றைய உடையாளூர் தெருக்களைப் பதிவு செய்துள்ளது. 48-49 வருட உடையாளூர் தான் அவை. காலத்தின் கதியில் உறைந்துவிட்டவை. மின் விளக்குக் கம்பங்கள் அன்று இருக்கவில்லை. மற்றபடி இன்றும் அவை கண்களுக்குப் பார்க்க வசீகரமாகத்தான் இருக்கின்றன. பொற்காலம் இது அரசியல் தலைமைகள் சொல்கின்றன. இன்றைய சென்னை மாநகரத் தெருக்களைப் போல் அல்லாது உடையாளூர் கிராமத்தின் தெருக்கள் சுத்தமானவை. அரசும் அதன் நிர்வாகமும் தலையிடாத இடம் எதுவும் சுத்தமாகத்தான் இருக்கும் போலும்.

வீட்டை விட்டு கீழே தெருவுக்குள் கால் வைத்து இடது பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால், தெரு முனையில் ஒரு பூங்கா இருக்கும். அங்கு ஒரு வானொலி மாலை வேளைகளில் ஒலி பரப்பிக்கொண்டிருக்கும். அது எனக்கு நிலக்கோட்டைப் பூங்காவில் கழித்த மாலைகளின் நீட்சி என்று சொல்ல வேண்டும். அதல்லாது வீட்டைவிடு இறங்கி வலப்புறம் கொஞ்ச தூரம் நடந்தால், வலப்புரம் கிளை விடும் ஒரு சந்தில் ஒரு வாசகசாலை தென் படும். அதை திராவிட கழகத்தினர் நடத்தினர் என்று நினைக்கிறேன். அங்கு விடுதலை, திராவிட நாடு, போர்வாள் போன்ற கட்சிப் பிரசாரப் பத்திரிகைகளுக்கிடையில் சில சமயம் சுதேசமித்திரன், தினமணி கூட கிடக்கும். அங்கு என் மாலைப் பொழுதுகள் போகும். விடுதலையில் சென்னை அரசாங்கத்தின் ஒவ்வொரு இலாகாவிலும் பணிபுரியும் பார்ப்பன அதிகாரிகள், அலுவலகர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று அவ்வப்போது வெளிவரும். குத்தூசி என்று ஒருவரின் கட்டுரைகள் வெளிவரும். சுவாரஸ்யமாக இருக்கும்.

அந்நாட்களில் கும்பகோணத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருந்த ஒரு பேச்சாளர், விபூதி வீரமுத்து சுவாமிகள் என்பவர். இளம் வயதுக்காரர். இடுப்பில் ஒரு காவி வேட்டியும், தோளில் ஒரு காவித் துண்டுமாகத் தான் எப்போதும் காணப்படுவார். நானிருந்த வீட்டுக்குக் கொஞ்ச தூரத்தில் இருந்த கடலங்குடித் தெருமுனையில் தான் அவர் பேசும் கூட்டங்கள் நடக்கும். திராவிட கழகத்தலைவர்களையும் அவர்கள் பேச்சுக்களையும் மிகக் காரசாரமாகத் தாக்கிப் பேசுவார். திராவிடக் கழகத் தலைவர்கள் பேசும் பாணியிலேயே அந்தத் தரத்திலேயே தான் இருக்கும் அவர் திராவிடக் கழகக் கண்டனப் பேச்சும். அதே பாணியில் தரத்தில் பதிலளித்தால் அதை எப்படி தாங்கிக் கொள்வார்கள்? அவர்கள் பேசினால் அந்த பாணி ரசிக்கும். அதே பாணியில் பதில் அளித்தாலோ, கலகம் தான். விபூதி வீரமுத்து சுவாமிகள் பேசும் கூட்டம் என்றால் அங்கு கலகம் என்பது நிச்சயம் இருக்கும். ஒரு முறை ‘கருப்புக்கு மறுப்பு’ என்று தலைப்பிட்டு அவரது புத்தகம் பத்திரிகைக் கடைகளில் தொங்கியது. நான் படித்ததில்லை. அதை அடுத்து வெகு சீக்கிரம் ‘மறுப்புக்கு செருப்பு” என்று ஒரு புத்தகம் கடைகளை வந்தடைந்தது. நான் கும்பகோணத்தில் இருந்து படித்துக் கொண்டிருந்த 1948-49 க்குப் பிறகு அவர் பெயரை நான் கேட்டதில்லை. என்ன ஆனோரோ, எங்கு சென்று மறைந்தாரோ தெரியாது. அந்நாட்களில் அங்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கியவர் அவர்.

காந்தி பார்க்கும் கூட அப்படி ஒன்றும் தூரமில்லை. அங்கு ஆரவாரமும் கலகலப்பும் இன்னும் கூட கிடைக்கும். கும்பகோணத்தின் இதயம் போன்றது அது. நிறைய அரசியல் கூட்டங்கள் நடைபெறும் அங்கு. பெரும்பாலும் திராவிட கழகக் கூட்டங்கள் தான். பெரியார், அண்ணா பேச்சுக்களை நான் கேட்டது அங்கு தான். அந்நாட்களில் அவை எனக்கு மிக பிடித்தமாக இருந்தன. முக்கியமாக அண்ணாவின் பேச்சுக்கள். அவர் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் கூடும். பெரியாரின் பேச்சுக்களும் ஒரு விதத்தில் சுவாரஸ்யமானவை தான். கொச்சைப் பேச்சு. எதைப் பற்றியும் கவலைப்படாத துணிவு. ஹிந்தி எதிர்ப்பு வெற்றிகரமாக முடிந்ததற்கான வெற்றிவிழாக் கூட்டம் ஒன்று. கடைசியில் பேசியது பெரியார். அவர் கையில் அரசு பத்திரிகை ஒன்று. இன்றைய தம்ழரசு பத்திரிகையின் அந்நாளைய முன்னோடிக்கு என்ன பெயர் என்பது இப்போது என் நினைவில் இல்லை. பத்திரிகையை விரித்து ஒரு பக்கத்தைக் கூட்டத்திற்குக் காட்டி, “இதை நான் சொல்லலை. இந்த அரசாங்கம் தான் சொல்லுது. இதோ பாருங்க, நம்ம கல்வி மந்திரி. படம் போட்டிருக்கா! உங்களுக்கெல்லாம் தெரியும். அவினாசி லிங்கம் செட்டியார். தொட்டன் கூட சொல்வான், இது அவினாசி லிங்கம் செட்டியார் தான்னு…..” என்று அவர் பேச்சு தொடர்ந்தது. பெரியார் என்ன பேசினாலும், எப்படி பேசினாலும் திராவிட கழகத்தவர் மன்னித்துவிடுவார்கள். ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் இன்று வேறு யாராவது யாரையாவது இப்படி ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசினால், பேசினவரை உள்ளே தள்ளணும்னு ஒருத்தர் மனதிலும் ஒரு எண்ணம் தோன்றிவிட்டால், பேசியவர் கம்பிதான் எண்ணவேண்டி வரும்.

அந்த இரண்டு வருடங்களில் குமப கோணத்தில், காங்கிரஸ் காரர்களோ, கம்யூனிஸ்டுகளோ கூட்டம் கூட்டி பேசி நான் கேட்டதில்லை. அவர்கள் இருந்த இடம் தெரியவில்லை. எல்லாம் மதுரையோடு போயிற்று. இங்கு, கும்பகோணத்தில் திராவிட கழகத்தவர் பிரசாரப் புயல் தான் அடிக்கடி கடுமையாக வீசிக்கொண்டு இருந்தது.

ரொம்ப வருஷங்கள் கழித்து, நான் ஒரு முறை எழுபதுகளில் தில்லியிலிருந்து விடுமுறைக்கு கும்ப கோணம் வந்த போது, டவுன் ஹைஸ்கூல் காம்பௌண்டுக்குள் உள்ள மைதானத்தில் தில்லி பல்கலைக் கழக பேராசிரிய தம்பதிகள் சாலை, சாலினி இளந்திரையனார் இருவரும் அங்கு மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் தில்லியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அங்கேயே ஒரு பாளையங்கோட்டையை உருவாக்கி, அதனுள் தில்லிக் காற்று அவர்களைப் பாதிக்காது, பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். விடுமுறை மாதங்களில் அவர்கள் தெற்கே சொற்பொழிவு ஆற்றுவதற்கென்றே சுற்றுப் பயணம் திட்டமிட்டு மேற்கொள்வார்கள். அறிவியல் இயக்கம் என்றோ என்னவோ அச்சிட்ட ஒரு லெட்டர் பேடில் தமிழ் நாட்டில் பலருக்கும் சுற்றறிக்கை அனுப்புவார்கள். தாம் வரும் தேதியைக் குறிப்பிட்டு அவர்கள் சொற்பொழிவைக் கேட்க விரும்புவோர், அவர்களுக்குத் தங்க இடம், அவர்களுக்கு விருப்பமான எந்தெந்த வேளையில் என்ன உணவு, கார் வசதி எல்லாம் ஏற்பாடு செய்து முன்னதாகவே அறிவித்தால் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் அறிவியக்க சுற்றுப் பயணத்தில் அந்த ஊரையும் சேர்த்துத் திட்டமிட இயலும் என்று சொல்லியிருப்பார்கள். நானும் என் தம்பியும் அந்த வழியாகப் போகும் போது டவுன் ஹைஸ்கூல் வாசலில் இருந்த அறிவிப்பையும், பேச்சுக் குரலையும் கூடியிருந்த கூட்டத்தையும் பார்த்து, “இவங்க எங்க ஊர் ஆளுங்கப்பா” என்று சொல்லி உள்ளே நுழைந்தோம். சாலினி இளந்திரையனார் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். “நான் இப்போதெல்லாம் யாருடைய கவிதையும் படிப்பதில்லை. அவசியமில்லை என்றுதான். பாரதி தாசனுக்குப் பிற்கு தமிழ் நாட்டின் மிகச் சிறந்த கவிஞர் சாலை இளந்திரையனாரை கணவராகப் பெற்று அவருடனேயே எந்நேரமும் வாழ்கின்ற எனக்கு, வேறு எந்த கவிஞரையும் தேடிப்போய் படிக்கும் அவசியமென்ன?” என்று அவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. “அவர் இங்கே இருக்கிறாரா? எங்கே?” என்று தம்பி கேட்டான். “அதோ நடு நாயகமாக மேடையில் உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் சாலை இளந்திரையன். அடையாளத்துக்கு பக்கத்து நாற்காலி காலியா யிருக்கே. அதில் சாலினி உட்கார்ந்திருந்ததால் இப்போ அது காலியாயிருக்கு” என்றேன். இத்தம்பதியனர் தம் அருமை பெருமைகள் பற்றி அவர்கள் சொல்லிக்கொள்வது எனக்கு தில்லியிலேயே நன்கு தெரியும் என்றாலும், அதை அவர்கள்இங்கு தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகமாகவே உறுதிபடச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கோ என்னவோ என்று நினைத்துக் கொண்டேன்.

வெங்கட் சாமிநாதன்/31.10.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்