ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்!!

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

பாலா



கவின்கேர் நிறுவனமும், எபிலிட்டி (ability foundation) ஃபவுண்டேஷனும் இணைந்து நடத்திய எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா சென்ற 14ஆம் தேதி மாலை சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தினுள் அமைந்திருக்கும் வெங்கட சுப்பாராவ் ஹாலில் நடை பெற்றது. இவ்விருதுகள் கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப் பட்டு வருகின்றன. இந்தியாவெங்கும் தேடப் பட்டு, நியமிக்கப் பட்டு, தேர்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் சாதனையாளர்களுக்கு வழங்கப் படும் விருது. இதன் முக்கிய அம்சம், இச் சாதனையாளர்கள் மாற்றுத் திறனாளர்கள் (differently abled) என்பதே.

Ability Foundation நிறுவனம் ஜெயஸ்ரீ ரவீந்திரன் என்பவரால் நடத்தப் படுகிறது. இவரும் ஒரு மாற்றுத் திறனாளர் என்பதே இதன் சிறப்பு. இந் நிறுவனத்துக்கு துவக்க காலத்தில் இருந்து பொருளுதவி உதவி செய்து வருபவர் கவின்கேரின் நிறுவனர் திரு. ரங்க நாதன். தான் தொழில் துவங்கிய காலகட்டத்தில் ஜெயஸ்ரீ ரவீந்திரனின் வீட்டில் குடியிருந்தார் அவர். ஜெயஸ்ரீயின் திறனைக் கண்டு மிக வியந்த அவர், பின் ஜெயஸ்ரீயின் எபிலிட்டி நிறுவனம் துவங்க உதவிகள் செய்தார். இதன் செயல்பாடுகளுக்காக, தனது நிறுவனத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் மிகப் பெரும் தொகையைச் செலவு செய்து எபிலிட்டியின் செயல் பாடுகளுக்கு உற்ற துணையாயிருக்கிறார். எபிலிட்டி நிறுவனம் மாற்றுத் திறனாளர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானவை இரண்டு.

Employability fair: மாற்றுத் திறனாளர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித் தரும் வேலை வாய்ப்பு சந்திப்பு நிகழ்ச்சி. மாற்றுத்திறன் கொண்டவர்களை ஒரு குறிப்பிட்ட நாளில் ஓரிடத்தில் வரச் செய்த்து, நல்ல பொது, தனியார் நிறுவனங்களையும் அதே நாளில் வரச் செய்து, நேர்முகத் தேர்வுகளை நடத்தச் செய்கிறார்கள். இதன் மூலம், வேலை தேடி ஒவ்வொரு நிறுவனமாக அலையும் தொல்லைகளில் இருந்து மாற்றுத்திறன் கொண்டவர்கள் விடு படுகிறார்கள். இந்நிகழ்வு, மாற்றுத்திறன் கொண்டவர்கள் ஒன்று படவும், அவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.

ability awards: இந்தியாவெங்கும் மாற்றுத் திறன் சாதனையாளர்களைக் கண்டெடுத்து, அவர்கள் சாதனைகளை ஊக்குவிக்கும் முகமாக, பொது விழா நடத்தி, அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறார்கள். சென்ற முறை இவ்விழா டெல்லியில் நடந்தது. இம்முறை சென்னையில்.

மோகினி கிரி, அல்லா ராக்கா ரஹ்மான், நடிகை ரேவதி, ஜெயஸ்ரீ ரவீந்திரன், ஹிந்து முரளி, மொழி பட இயக்குநர் இராதா மோகன், கவின்கேர் நிறுவனர் இரங்கநாதன் முதலியோர் கொண்ட குழு இந்தியாவெங்கிலும் இருந்து வந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தது. தகுதியான திறனாளர்களை அவர்கள் ஊரிலேயே சென்று, ஒளிப்படம் எடுத்து வந்து, அவற்றிலிருந்து சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். Pre BAFTA டின்னரைப் புறக்கணித்து விட்டு, இந்த விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வுக்கு வந்திருந்த ரஹ்மானின் இந்தக் கனிவான முகம் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

இம்முறை, 200க்கும் மேற்பட்ட நியமனங்களில் இருந்து 4 பேர்களைத் தேர்ந்தெடுத்து, எபிலிட்டி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்தது. இதில் மூவருக்கு ability mastery விருதுகளும், ஒருவருக்கு ability emimence விருதும் வழங்கப் பட்டது. இளம் வயதிலேயே ஒரு ஆபரேஷனால், இடுப்புக்குக் கீழ் சுவாதீனமில்லாமல் போன சாய் ப்ரசாத், மனம் தளராமல், மிக நன்றாகப் படித்து இன்று அமெரிக்காவில் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சிப் வடிவமைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தனது உடல் நிலையை மீறி அவர் parachuteல் இருந்து பறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே போல் cerebral palsy யினால் பாதிக்கப் பட்ட ராஜீவ் ராஜன், தனது எல்லைகளைத் தாண்டி, பள்ளிப் படிப்பை முடித்தார். பள்ளிப் படிப்பு முடித்த cerebral palsyயினால் பாதிக்கப் பட்ட முதல் தமிழர். இன்று வித்யாசாகர் என்னும் நிறுவனத்தில், தன் போன்ற மாற்றுத்திறன் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது பள்ளியில் அனைவருக்கும் ஒரு ஆதர்ச மாணவர் என்று அவர் பள்ளியின் ஆசிரியர் சொல்கிறார். தனது உடலின் இயக்கங்கள் மீது கண்ட்ரோல் இல்லாத போதும், முன்னோக்கிச் சென்று சாதனை நிகழ்த்துவதென்பது அசாதாரணமான விஷயம். 15 வருடங்களுக்கு முன்பு சுதா சந்திரன் என்னும் பெண்ணின் கதை ஒரு சினிமாவாக வந்தது. அதே போல், ஒரு விபத்தில் தன் கால்களை இழந்த நித்யானந்த தாஸ், சுதா சந்திரனை முன் மாதிரியாகக் கொண்டு, மீண்டும் நடனம் கற்றுக் கொண்டு இன்று மற்றவர்களுக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராகத் தொழில் செய்கிறார். “கால்களை இழந்த பின்ன என்ன செய்வது – பேசாமல் ஏதாவது கடை கண்ணி வைத்துப் பிழைத்துக் கொள் என்று சொன்னேன். ஆனால் நான் சொன்னதைக் கேட்காமல், பிடிவாதமாக நடனம் கற்றுக் கொண்டு அவன் நிகழ்த்திய சாதனை எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது” என்கிறார் அவர் குரு. இவர்கள் மூவருக்கும் ability mastery விருதுகளும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் பரிசும் வழங்கப் பட்டது.

காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் தன் உடலில் குண்டுகள் பாய்ந்து, உடல் செயலிழந்து சக்கர நாற்காலியில் தள்ளப் பட்டார் ஜாவேட் அஹ்மத் தக். இளம் வயதில் திடீரெனத் தம் உடல் நலிவுற்று, தனது ஒவ்வொரு தேவைக்கும் இன்னொருவரைச் சார்ந்திருக்கும் நிலை எந்த ஒரு மனிதனையும் சோர்வுறச் செய்யும். ஆனால், இவர், அனந்த் நாக் என்னும் ஊரில் இருந்து கொண்டு, தன் போல் மாற்றுத் திறன் மக்களுக்கு ஒரு நிறுவனம் துவங்கி, அவர்களுக்கு உதவிகளும், வாழ்க்கையை எதிர்கொள்ள தொழில் பயிற்சியும் அளித்து வருகிறார். ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படவும், மாற்றுத் திறன் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் பாடுபட்டு வருகிறார். இவர், தனது உடல் பிரச்சினைகளிலிருந்து தன்னை மீட்டது மட்டுமின்றி, தன் போன்றோர் நலனுக்காக ஒரு நிறுவனத்தையும் துவக்கி நடத்தி வருவது மிகப் பெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும். எனவே இச்சாதனையைக் கருத்தில் கொண்டு ability award for eminence விருதும், ரூபாய் இரண்டு லட்சம் பரிசும் வழங்கப் பட்டது. விருதை ஏற்று இவர் நிகழ்த்திய உரை அனைவரின் பாராட்டையும் பெற்றது.

விழாவில் இறை வணக்கம் பாடினார் அனுராதா ஸ்ரீராம். சாந்தி நிலவ வேண்டும் என்னும் பாடலை மிக அழகாகப் பாடி, நிகழ்ச்சிக்கான சூழலை மிக எளிதாகத் தன் குரலால் உண்டாக்கிச் சென்றார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரேவதியும், பின்னர் ஜெயஸ்ரீயும் இரண்டு முக்கிய விஷயங்களைச் சொன்னார்கள். மாற்றுத் திறன் கொண்டவர்களும் மனிதர்களே – அவர்களை நாம் நமது சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும். அதை விடுத்து அவர்களை சமூக ரீதியாகத் தள்ளி வைத்தல் தவறு. அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல வாழ்க்கையைக் கொண்டாட உதவ வேண்டும். இந்நோக்கில், இம்முறை விழாவில், மாற்றுத் திறனாளர்களும் பங்கு கொண்ட ஃபேஷன் ஷோ நடை பெற்றது. இரண்டு, மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளை சமூகம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க சமுகம் உதவியாய் இருத்தல் வேண்டும்.

ஃபேஷன் ஷோவில் அனுராதா ஸ்ரீராம், நீனா ரெட்டி, அர்மான் இப்ராஹீம், ராஜீவ் மேனன் போன்றோர் மாற்றுத் திறனாளர்களுடன் கலந்து கொண்டது விழாவின் மிக முக்கிய நிகழ்வு. அவர்களிடயே ஒவ்வொரு சாதனையாளரும் வந்து சென்ற போதெல்லாம் அரங்கில் standing ovation. அவர்களின் சாதனை பார்வையாளர்களை நெகிழ்த்தி விடுவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது.

இவர்கள் சாதனைகளைப் பார்த்த பின் இனிமேல் தலைவலி, உடல் வலி என்றெல்லாம் யோசிக்கும் போது வெட்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டார் இராதா மோகன். உண்மை. உடல் நலிவும், அது தோற்றுவிக்கும் தடைகளையும் தாண்டி அவர்கள் செய்யும் சாதனைகளை நோக்கும் போது, சாதாரணமாக நாம் புலம்பும் புலம்பல்கள் நமது மனத்தின் limitation தானே தவிர வேறொன்றுமில்லை. இவ்விழாவில், முன்பு விருதுகள் வாங்கிய அஞ்சலி அகர்வாலும், வீணா மேத்தா வர்மாவும் தில்லியில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். அவர்கள் அவ்வாறு பிரயாணித்து வர ஆகும் சிரமங்களை யோசிக்கும் போது மனம் நெகிழ்ந்து தான் போகிறது.

கவின்கேர் ரங்கநாதன் அவர்களை நான் ஒரு முதலாளியாக மிக நன்கறிவேன். Fiercely competitive. இது போல் நிறைய சாதனையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால், தன் லாபத்தில் ஒரு பெரும் பங்கை இதுபோன்ற நல்ல விஷயங்களுக்குச் செலவு செய்பவர்கள் மிகச் சிலரே. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் கலந்து கொண்டு இவரின் பங்களிப்பைப் பார்க்கும் போதும் மிகப் பெருமிதமாக உணர்கிறேன்.

m_bala_s@hotmail.com

Series Navigation

பாலா

பாலா