அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)

This entry is part of 30 in the series 20090219_Issue

ராஜேஷ் ஜெயராமன்


இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?,
The Language Problem of Tamilnadu and its Logical Solution

இவ்விரண்டு நூல்களும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் உருவான இயக்கங்களுக்கு அரணாக எழுதப்பட்டனவாகும். இவற்றில் சிறந்த மொழியியல், வரலாற்று அரசியல் கருத்துகள் உள்ளன. தமிழ்ப் பாதுகாப்பிற்கான கேடயங்களாக இந்நூல்கள் உள்ளன.

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் வையாபுரிப் பிள்ளை தலைமையில் அமைந்த குழு உருவாக்கிய சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியில் பாவாணர் கண்ட பல்வேறு குறைபாடுகளை விளக்குவது இந்நூல். குறிப்பாக இவ்வகராதியில் தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கு தவறாக வடமொழி வேர்கள் தரப்படுவது மிகப் பெரிய சீர்கேடு. வரம்பு இகந்து சமஸ்கிருதம் உருது, தெலுங்கு போன்ற மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை சேர்த்து தமிழை ஒரு கலவை மொழியாக இவ்வகராதி காட்டுவது இன்னொரு சீர்கேடு. மேலும் தமிழ்நாட்டில் பாமர மக்களிடம் வழங்கும் ஏராளமான தூய தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தொகுக்காமல் விட்டுவிட்டதையும் பாவாணர் கண்டித்துள்ளார். ( இக்கண்டனத்தின் விளைவாக பின்னர் 1974-81இல் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியை தொகுக்கும் பணியில் பாவாணர் ஈடுபடுத்தப்பட்டார்.)

செந்தமிழ்க்காஞ்சி, இசைத்தமிழ்க் கலம்பகம்
இவ்விரண்டும் பாவாணருடைய இனிய பா நூல்களாகும். செந்தமிழ்க் காஞ்சி நூலில் இசையரங்கு இன்னிசைக் கோவை, சிறுவர் பாடல் திரட்டு, கிறித்தவக் கீர்த்தனம் ஆகியவை அடங்கியுள்ளன. நடுவண் அரசு தமிழ்நாட்டில் புகுத்திய இந்தி மொழியை விரட்டும் பாட்டுப் படைக்கலனாக செந்தமிழ்க் காஞ்சி எழுதப்பட்டது. தமிழுணர்ச்சி ஊட்டுகின்ற தீஞ்சுவைத் தெள்ளமுதம் இசையரங்கு இன்னிசைக் கோவை.

சிறார்களின் இயல்பறிந்து பாடப்பெற்ற செந்தமிழ்ப் பாத்திரட்டு ‘சிறுவர் பாடல் திரட்டு’ பாவாணர் படைத்த மொழியாய்வுச் சார்பில்லாத ஒரே சமய இலக்கியம் ‘கிறித்தவக் கீர்த்தனம்’. தமிழினம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது தமிழிசை. தமிழன் தன் தொன்மையையும், முன்மையையும் உணர்ந்து முன்னேறிச் செல்வதற்காக எழுதப்பட்ட நூலே ‘இசைத்தமிழ் கலம்பகம்’

திருக்குறள் தமிழ் மரபுரை(1,2,3,4)
கி.மு.முதல் நூற்றாண்டில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனினும், பரிமேலழகர் காலச்சூழலுக்கு ஏற்ப அவர் உரை பலவிடங்களிலும் வடமொழி/ ஆரியச் சார்பாக உள்ளது என்பதை மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். தமிழறிஞர் பலர் 20ஆம் நூற்றாண்டில் பரிமேலழகர் உரையின் ஆரியச் சார்பை ஒதுக்கி புத்துரைகள் எழுதினர்.அவ்வாறு தமிழ் மரபுக்கு ஏற்ப சிறந்த ஓர் உரையை 1970இல் தேவநேயப் பாவாணர் வெளியிட்டார். தமிழியல் புலங்கள் அனைத்திலும், மொழியியல், இலக்கணம், சங்க இலக்கியம், பழந்தமிழ் வரலாறு போன்றவற்றிலும் ஆழங்கால் பட்ட மூதறிஞர் பாவாணர் எழுதிய தமிழ் மரபுரையே இத்தகைய புத்துரைகள் அனைத்திலும் தலைச சிறந்ததாகும். பரிமேலழகர் உரையில் கண்ட ஆரியச் சார்பு வழுக்களைக் களைந்துள்ளார். எனினும் அன்னார் உரையின் நயங்களை ஏற்றுப் போற்றியுள்ளார். பாவாணர் உரை இன்றுள்ள திருக்குறள் உரைகளுள் தலை சிறந்ததாகும். மொழியியல் அறிஞர் என்ற முறையில் திருக்குறள் சொற்கள் பலவற்றை வடமொழி அல்லது பாலி மொழியிலிருந்து கடன் பெற்றதாக கூறிய கூற்றுக்களை மறுத்து அச்சொற்கள் தமிழே என்று நிறுவியுள்ளார்.

தமிழ் வரலாறு (1,2)
தமிழ் மொழியின் வரலாற்றை தருவதற்கான தலைசிறந்த அதிகாரி பாவாணர் அன்றி வேறு யார்? ஞால முதல்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ். இதனை விளக்கும்.மொழியியல் கூறுகள் பலவற்றையும் தமிழே கொண்டுள்ளது என்பதை இந்நூலில் பாவாணர் நிறுவுகிறார். உலகிலுள்ள பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் புகுந்துள்ள இலக்கண/மொழியியல்/ஒலியனியல் கூறுகளுக்கான அடிப்படையை தமிழில் தான் காணவியலும் என்பதை இந்நூல் விரிவாக நிறுவுகிறது. ‘தொல் திராவிடம்’ என்று வண்ணனை மொழிநூலார் கற்பனை செய்துள்ளது ‘தொல் தமிழ் ’தவிர வேறொன்றுமில்லை என்பதையும் இது நிறுவுகிறது. ஞால முதன்மொழி ஆய்வில் தலைப்பட்டுள்ளோருக்கு புத்தொளி காட்டவல்லது இந்நூலே.

தமிழர் வரலாறு (1,2)
திராவிடர்கள் ( அதாவது திராவிட/தமிழிய மொழி பேசுநர்) கி.மு. மூவாயிரத்தை ஒட்டி மைய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிய வந்தேறிகள் என்ற அபத்தமான கருத்தையே இன்றும் பெரும்பாலான இந்திய வரலாற்றறிஞர் கொண்டுள்ளனர். இதனை மறுத்து, தமிழர் தென்னாட்டின் ( ஏன் இந்திய நாட்டின்) தொல்குடிகள் என்பதையும் தமிழிய மொழி பேசுநருள் சிலர்தாம் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு வெகு முன்னரே தென்னிந்தியாவில் இருந்து வடஇந்தியாவிற்கும், மைய கிழக்கு நாடுகளுக்கும், மைய ஆசியாவிற்கும் பிற பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றனர் என்பதை மொழியியல் அடிப்படையிலும் பிற பல்துறை சான்றுகள் அடிப்படையிலும் இந்நூல் நிறுவுகிறது. ஏற்கனவே இக்கருத்தை கொண்டிருந்த ஹால், ஹீராஸ், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், பி.டி.சீனிவாச அய்யங்கார் முதலிய அறிஞர்கள் வழியில் சென்று மேலும் பல வலுவான சான்றுகள் அடிப்படையில் தமிழரின் உண்மை வரலாற்றை இந்நூலில் பாவாணர் நிறுவுகிறார்.

தமிழ் இலக்கிய வரலாறு (1,2)
தமிழிலக்கிய வரலாறு எழுதினோர் பலர். அவர்களுள் வையாபுரியாரும் அவர் வழியினரும் சங்க இலக்கியங்களையே கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று மகிழ்வர்; தமிழிலக்கியங்கள் பலவற்றுக்கும் (தொல்காப்பியம், திருக்குறள் உட்பட) ‘வடமொழி மூலங்களை’ க் காட்டுவர். அத்தகையோரை மறுத்து தமிழ் இலக்கிய வரலாற்றைச் சிறந்த முறையில் பாவாணர் எழுதியுள்ளார். தமது 60 பக்க முன்னுரையில் தமிழின் தொன்மை வரலாற்றையும், எவ்வாறு வடதமிழ் திராவிடமாக மாறியது என்பதையும், அதுவே பின்னர் ஆரியமாக மாறியது என்பதையும் விளக்கியுள்ளார். நூலின் கடைசி நூறு பக்கங்களில் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் மொழி, இலக்கிய வரலாற்றை 1973 முடிய தந்துள்ளார். வருங்காலத்தில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் பாதுகாத்து வளர்ப்பதற்கான வழிமுறைகளையும் தந்துள்ளார்.

வடமொழி வரலாறு ( 1,2 )
வடமொழியாகிய சமற்கிருதம், அதன் முன்வடிவமாகிய வேதமொழி ஆகியவற்றின் உண்மையான வரலாற்றை ‘வரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) அடிப்படையில் தரும் தமிழ் நூல் இது ஒன்றே. வடமொழி / வேதமொழியின் தாயாகிய இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரிடமிருந்து ஏறத்தாழ கி.மு. 5000-இல் பிரிந்த இந்தோ ஐரோப்பிய மொழியின் கீழைக் கிளையாகிய இந்தோ ஆரிய (ஈரானியன்/வேதமொழி) மொழி பேசுநர் கி.மு.1500 இல் இந்தியாவிற்குள் நுழைந்தனர். மிகப் பழைய வேதமாக ரிக்கு வேதத்திலேயே திராவிடச் சொற்கள் பல இருக்கின்றன என்பதும் திராவிட மொழியியல்/ஒலியினயியல் கூறுகள் உள்ளன என்பதும் கால்டுவெல், பரோ, எமனோ போன்ற சமற்கிருத அறிஞர்களும் ஏற்றதாகும். ஆயினும் கால்டுவெல்லுக்குப் பின் வந்த மேனாட்டு அறிஞர்கள் ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடையவர் அல்லர். பாவாணரோ தமிழ் மொழியியலை ஆழங்கண்டவர்; வடமொழி போன்ற மொழிகள் சார்ந்த மொழியியலையும் நன்கறிந்தவர். இந்தப் பின்புலத்தில் பாவாணர் வடமொழியானது தமிழ்/திராவிட மொழிகளின் அடிப்படையில் வளர்ந்த மொழியே என்பதை இந்நூலில் நிறுவுகிறார். வடமொழிச் சொற்களில் ஐந்தில் இரண்டு பகுதி தமிழ் சொற்கள் அல்லது தமிழ் வேர்களைக் கொண்டவை என்பது அவர் கருத்து. எனவே இலத்தீன், கிரேக்கம், கெல்திக், செருமானிய மொழிகளில் உள்ளனவாக பாவாணர் இந்நூலில் காட்டும் தமிழ்ச் சொற்களும் மொழியியல் கூறுகளும் வரலாற்று மொழியியல் அறிஞருக்கு பயன் தருவதாகும்.

முதற்றாய்மொழி ( 1,2 )
தமிழில் உள்ள அடிப்படை வேர்ச்சொற்கள் அனைத்தும் முன்மைச் சுட்டு ஆகிய ஊ – உ விலிருந்து தான் தோன்றின என்பது பாவாணரின் சொல்லாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையாகும். உ – உல்; பின்னர் ‘உல் ’ லிருந்து குல், சுல்,துல்,நுல், புல் , முல் என்றவாறு அடிப்படை வேர்ச்சொற்கள் தோன்றின. இந்த அடிப்படைச் வேர்ச்சொற்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முன்மை, நெருங்கல், தொடுதல், வளைதல், துளைத்தல், குத்தல் முதலிய பல்வேறு பொருள் புடை பெயர்ச்சிகளில் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் உருவாகியதை இந்நூல் விளக்குகிறது.சேய்மைச் சுட்டான ஆ – அ மற்றும் அண்மைச் சுட்டான ஈ-இ ஆகியவற்றில் இருந்தும் பல இரண்டாவது கட்ட வேர்ச்சொற்கள் உருவாயின எனினும், உகரச் சுட்டில் இருந்து உருவான சொற்களே முதற்றாய் மொழியாகிய தமிழில் பெரும்பாண்மையானவை.

ஒப்பியன் மொழிநூல் ( 1,2)
தமது மொழியியற் சிந்தனைகளை ஏறத்தாழ முழுமையாக விளக்கி பாவாணர் வரைந்த முதல் பெருநூல் இதுவேயாம். 1940 இல் வெளிவந்தது. அதற்கு முன் 1930 லிருந்தே இந்நூலுக்கு அடிப்படையான மொழியியற் சிந்தனைகளை இதழ்களில் கட்டுரைகளாக எழுதி வந்த போதிலும் விரிவான நூலாக வந்தது இதுவே. மாந்தன் முதன்மொழிக்கு மிக நெருங்கியதாக இருந்திருக்கக் கூடிய திராவிட (தமிழிய) மொழிக் குடும்பத்திற்கும், இந்தோ ஐரோப்பியம், துரானியம் (சிதியன்/உரால்-அல்தாய்க்) ஆகிய மொழிக் குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு கழி பழங்காலத்திலேயே இருந்திருக்கலாம் என்பதை கால்டுவெல் 1856 இலேயே கோடிட்டுக் காட்டியிருந்தார். இவ்வழியில் பாவாணர் ஆழமாக மேல் சென்று இந்நூலை உருவாக்கினார். கடந்த 70 ஆண்டுகளில் தமிழ் மொழியியல், தமிழியல் துறைகளில் தமிழ் சார்ந்த மெய்ம்மைகளை நிலை நாட்டவும், வடமொழி/இந்தோ ஆரிய சார்பாக பரப்பப்பட்டு வந்த போலிக் கோட்பாடுகளை மறுக்கவும் ஆதார நூலாக இது அமைந்தது. பின் காலத்தில் பாவாணர் தனித் தனியாக எழுதிய முதற்றாய்மொழி, சுட்டுவிளக்கம், திரவிடத்தாய், தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு போன்றவையெல்லாம் இந்த மூல நூலில் ஏற்கனவே சுருக்கமாக தெரிவிக்கப்பட்ட நுண்மான் நுழைபுலம் மிக்க கருத்துக்களின் விரிவாக்கங்கள் தாம். வரலாற்று மொழியியல் அறிஞர்களுக்கு இன்றியமையாதது.

வேர்ச்சொற் கட்டுரைகள் ( 1,2,3,4)
ஞால முதன்மொழி ஆய்வு, நாஸ்திராதிக்/யுரேசியாடிக் (Nostratic/Eurasiatic) ஆய்வு ஆகிய ‘வரலாற்று மொழியியல்’ சார்ந்த ஆய்வாளர்களுக்கு இன்றியமையாதவை. இக்கட்டுரைகள் 1964 திசம்பரிலிருந்து 1977 ஆகத்து முடிய பாவாணர் எழுதி வெளியிட்டவையாகும். இக்கட்டுரைகள் மொத்தம் 54 வேர்ச்சொற்கள் பற்றியவை. அவை அம், இல், இள்,உ,உய், உள், (3 பொருள்கள்), உல், ஊது, ஏல், எல், ஓ. கல், குல் (6 பொருள்கள்) சுல் (5 பொருள்கள்) துல் (4 பொருள்கள்) நுல் (6 பொருள்கள்), புல் (6 பொருள்கள்); முல் (6 பொருள்கள்) வல் , வா, விள் (3 பொருள்கள்) . இந்த அடிப்படை வேர்ச்சொற்களும் அவற்றிலிருந்து இரண்டாம் நிலை மூன்றாம் நிலை என்றவாறு உருவான பல்வேறு வேர்ச்சொற்களும் தமிழில் மட்டுமின்றி பிற தமிழிய மொழிகளிலும், வடமொழி உள்ளிட்ட இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும், வேறு மொழிக் குடும்பங்களிலும் புகுந்துள்ள விவரங்களையும் ஆங்காங்கு பாவாணர் விளக்கியுள்ளார்.

==============================================

ஒரு பின் குறிப்பு:
தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பேத்திக்கு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் மறுத்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் எல்லா நூல்களையும் அரசு நாட்டுமையாக்கி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தேவநேயப் பாவாணரின் மூத்த மகன் செல்வராசு. இவரது மகள் எஸ்தர் (40). இவருக்கும் மோசஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி திண்டுக்கல் அருகே கன்னிவாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் கடந்த 2006இல் ஒரு பெண் குழந்தையும், அதற்கு அடுத்த ஆண்டில் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது எஸ்தரின் குடும்பம் வறுமையான சூழ்நிலையில் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கக் கோரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ், இரு பெண் குழந்தைகளின் தாயின் வயது 35க்குள் இருக்க வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி எஸ்தருக்கு உதவித் தொகை வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடு்த்து தனது குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு கருணையுடன் உதவி செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலவர் வாசுகியிடம் மனு கொடுத்து விட்டு நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கிறார் தமிழறிஞரின் பேத்தி.

==============================================
இந்தக் கட்டுரைக்கு உதவிய சில வலைத்தளங்கள்:
http://www.geocities.com/Athens/1594/pavanar.htm
http://www.viruba.com/atotalbooks.aspx?id=384
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_23.html
==============================================

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com

****

jrajesh@hotmail.com

Series Navigation

ராஜேஷ் ஜெயராமன்