அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)

This entry is part of 30 in the series 20090219_Issue

ராஜேஷ் ஜெயராமன்


அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர்

ராஜேஷ் ஜெயராமன்

(2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை)

* 23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட பெருந்திறம் கொண்டவர்.

* மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர்

* மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையைக் கற்றுத் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்தவர்.

* வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.

* “தமிழ் திராவிடத்திற்குத் தாய், ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழி-தமிழ்,முதல் மாந்தனும் தமிழன்; தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம்” எனவாகியவைகளை மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.

* உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.

* 50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், நெல்லை மாவட்டத்தில் சங்கரநயினார் கோவில் என்ற கிராமத்தில் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 7ஆம் நாள் ஞானமுத்து -பரிபூரணம் தம்பதிகளுக்கு பத்தாவது பிள்ளையாக பிறந்தார். 5 வயது நிறைவுறும் போது தாயும் தந்தையும் இயற்கை எய்தினர். அதன் பின் தனது மூத்த தமக்கை ஆதரவில் ‘ஆம்பூர்’ என்ற கிராமத்தில் வளர்ந்தார். அங்கேயே ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். அதன் பின் ”யங்” என்ற விடையூழியர் ஒருவரின் ஆதரவில் படிப்பைத் தொடர்ந்தார். 1919ஆம் ஆண்டு சீயோன் மலை உயர்நிலைப் பள்ளியில் தன் 19ஆம் வயதில் ஒரு தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். தம் கல்விக்காகப் பட்ட கடனை அடைக்கவே அச்சிறு வயதில் தொழில் மேற்கொண்டார். ஆசிரியர் பணியைச் செய்துகொண்டே சென்னை பல்கலைக் கழகத்தில் மொழி ஆய்வியல் துறையில் BA, BOL,MA,MOL போன்ற பட்டங்களைப் பெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் தேர்வில் முதல் மாணாக்கராய்த் தேறினார்.

தேவநேயர் பாடல்கள் இயற்றுவதிலும் மீட்டுவதிலும் வல்லவர். இவரின் ‘தமிழ் இசைக் கலம்பகம்’ என்ற நூலே இவரின் இசைப் புலமைக்குச் சான்றாகும். ஆகவேதான் அறிஞர்கள் இவரை ‘பாவாணர்’ என்று அழைத்தனர். நேசமணி என்ற அம்மையாரை துணைவியாகக் கொண்டார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். குடும்பத்தின் மீதும் அதிக அன்பு பூண்டிருந்தார். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தேவநேயப் பாவாணர் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, பிரெஞ்சு, ஜெர்மன்,லத்தின், ஸ்பெயின், ஹிப்புரு, ரஷ்யா, கிரேக்கம், அரபு, மெண்டரின்,கெண்டனீஸ், ஜப்பான், உருது, துளு, சமஸ்கிருதம், இந்தி, மலாய் போன்ற மொழிகளில் புலமையும், இன்னும் இந்திய பூர்வகுடிகள் பேசுகின்ற பல மொழிகளில் பேசும் ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். நீலகிரி மலைச்சாரலில் வாழும் ‘தோடர்’ என்ற இனத்தவர் பேசும் மொழியையும் அப்பகுதிக்குச் சென்று அவர் கற்று வந்தார். இம்மொழிகளை எல்லாம் அவர் கற்றதற்குக் காரணம் தாம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது பட்டங்களையும் புகழையும் அடைய வேண்டும் என்ற எண்ணமோ அல்ல. தமிழ் மொழியை இம்மொழிகளோடு ஒப்பு நோக்கிடவும் மற்றும் தமிழ் மொழி எவ்வாறு இம்மொழிகளை வளர்ச்சியடையச் செய்திருக்கிறது அல்லது அம்மொழிகள் வளர உதவியிருக்கிறது என்பதை உலக அரங்கில் எடுத்துரைக்கவும் வேண்டியே அவர் முனைந்து இந்த மொழிகளை எல்லாம் கற்றார்.

தன் வீட்டில் இருந்த ஏழு நிலைப் பேழைகளிலும் உலகில் வழக்கில் இருக்கும் பல பெரிய மொழிகளின் அகர முதலிகளையும், பேரகாதிகளையும் வாங்கி வைத்து தமது மொழி ஆய்வுக்குப் பயன்படுத்தி இருக்கிறார். மொழி ஆய்வில் நுண்மாண் நுழைபுலம் மிக்கரவாய்த் திகழ்ந்ததால் அறிஞர்கள் அவரை ‘மொழி ஞாயிறு’  என்றும் அழைத்தனர். இவர் பல்துறைகளில் ஆய்வுகளைத் செய்திருந்தாலும் அவை யாவிலும் வேர்ச்சொல் ஆய்வே முதன்மையானதாகும். தமிழ் மொழியின் ஆணி வேர்ச் சொல் என்ன என்பதைக் காணவே இவ்வாய்வினை அவர் மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார். மொழி என்பது தகவல் தொடர்புச் சாதனம் என்று சொல்லப்படுவதை மொழியாளர்கள் மறுக்கவே செய்வார்கள். பண்பாடுகளின் உருவகமாகத்தான் மொழிகள் உள்ளன. மொழிகளை ஆராய்ந்தாலே முழு உலக வரலாற்றையே கண்டு கொள்ளலாம்.

பாவாணர் தம் மொழியறிவால் மாந்தன் தோன்றிய இடம் கடல் கொண்ட லெமுரியா எனப்படும் குமரிக்கண்டமே என்றும் உலகின் முதல் மொழி ஆதித் தமிழே என்றும் தக்க சான்றுகளுடன் பல ஆராய்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பரிதிமாற் கலைஞர் ஒருமுறை ‘பெரும்பாலான வடமொழி இலக்கியங்களின் மூலம் தமிழே’ என்றும் ‘அவற்றிலிருந்து மொழிமாற்றம் செய்தபின் தமிழ் இலக்கியங்கள் பண்டைய காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டது’ என்ற பற்றியத்தையும் பிடித்துக் கொண்ட தேவநேயர் தம் தமிழாராய்சியை அதன் அடிப்படையிலேயே துவங்கினார். இந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு பாவாணர் பல ஆராய்சி நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் அவர் எழுதிய வடமொழி வரலாறு 1 & 2 மற்றும் தமிழ்மொழி வரலாறு 1 & 2 ஆகிய நூல்கள் பல உண்மைகளைக் காட்டுகிறது. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட காலங்கள் தொல்காப்பியத்துக்கும் முந்தியது. ஏறத்தாழ தொல்காப்பியருக்கும் முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பியருக்கு ஆசிரியர் அல்ல என்றும் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார். மொழியை, பண்பாட்டை ஆராய்வதற்கு தொல்காப்பியத்தை சான்றாகக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி சொல் அகராதியல்ல என்றார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் வடமொழிக்கு எழுத்தோ, இலக்கணமோ இருந்தது இல்லை என்றும் அப்படி ஒருவேளை எழுத்து இருந்தால் வடமொழியில் இருந்து தோன்றியதாக சொல்லப்பட்ட தமிழுக்கு அதைவிட குறைந்த அளவுக்கு எழுத்துக்கள் இருப்பதற்கான கூறுகளே இல்லை. மேலும் தமிழ் இலக்கணம் வடமொழிக்கு பிந்தியதாக இருந்திருந்தால் எழுதும் சொற்றொடர் முறைகள் தலைகீழாக இருப்பதற்கான கூறுகளே இல்லை என்று நிறுவினார்.

தமிழ் எப்படி திராவிட மொழிகளின் தாய்மொழி என்பதை ‘திராவிடத் தாய்’ என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் வடமொழியில் இருந்து பெற்றுக் கொண்டதென எதுவும் இல்லை என்றாலும் அந்தப் போர்வையில் இழந்தது, மறைந்தது, மறைக்கப்பட்டவை மிக்கவையே என்பது அவரின் வாதம். உலக மொழிகட்கெல்லாம் தாயும் தந்தையுமாய் விளங்கும் தமிழ் மொழிக்கு இடுக்கண் வரும்போதெல்லாம் அதன் இன்னல் களைந்திட, அதன் வளர்ச்சிகுத் தடையாய் இருக்கின்ற தளைகளை நீக்கிடவும் பேராற்றல் மிக்க தமிழ் அறிஞர்கள் காலந்தோறும் தோன்றுகின்றனர். அவ்வாறே கடந்த இருபதாம் நூற்றாண்டின் இடைவெளியில் வட மொழியே உலக மொழிகட்கெல்லாம் தாய் என்று கூறியபோது அக்கருத்தை முற்றிலும் மறுத்து ”தமிழ் மொழியே உலக மொழிகட்கெல்லாம் தாய்” என்று தம் வேர்ச்சொல் ஆய்வினை உலக அறிஞர்கள் முன் வைத்தார் பாவாணர்.

பாவாணரின் ஆராய்ச்சியிலிருந்து, வருகின்ற கருத்தாவது, ‘உலகில் உள்ள மொழிகளில், 6 மொழிகள் மற்ற எல்லா மொழிகளும் உருவாகக் காரணமான தாய் மொழிகளாக இருக்கின்றன. இந்த 6 மொழிகளிலே தமிழே மூத்த முதல் மொழியாக விளங்குகின்றது.’ மற்ற ஐந்து மொழிகளூம் தமிழில் உள்ள பல சொற்களைப் பிரதிபலிக்கின்றன. மேலும் உலகிலுள்ள பிற மொழிகளிலும் தமிழில் உள்ள பல சொற்கள் காணப்படுகின்றன. அவர் கோடிட்டுக் காட்டிய சில எடுத்துக்காட்டுகள்: தமிழில் ‘காண்’ என்றால் பார் என்று பொருள். சீன மொழியில் ‘கண்’ என்றால் பார் என்று பொருள். தமிழில் ‘ஆ’ என்றால் மாடு என்று பொருள். எகிப்திய மொழியில் ‘ஆ’ என்றால் மாடு என்று பொருள்.  தமிழில் ‘பொங்கலோ பொங்கல்’ என்கிறார்கள். கொரிய மொழியில் ‘ஹொங்காலோ ஹொங்காலோ’ என்கிறார்கள். தமிழ் மொழி பிறமொழி கலப்பில்லாது தூய மொழியாக செந்தமிழாக உலக அரங்கில் சிறப்பிடம் பெற வேண்டும் என்றால் அதற்கு சரியான, முறையான ‘அகரமுதலி’ இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். தமது அரை நூற்றாண்டு கால மொழி ஆய்வுப் பட்டறிவைக் கொண்டு இதனை செப்பமாகச் செய்து விடலாம் என நம்பினார்.ஆகவே, ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி’ என்னும் பேரகரமுதலி தயாரிக்கும் முயற்சியில் தீவீரமாக முனைந்தார். தமிழக அரசு ஆதரவுடன் பேரகரமுதலி திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று செயற்கருஞ் செயலில் இறங்கினார். தமது வாழ்நாள் பணிகளில் மணிமுடியாய்த் திகழவிருப்பது இத்திட்டமே என்பதால் பேரகரமுதலியை பன்னிரெண்டு மடல்களாக இயற்றத் திட்டமிட்டு முதல் மடலத்தில் ‘அ, ஆ, இ’ என மூன்று் பகுதிகளை மட்டுமே அவரால் நிறைவு செய்ய முடிந்தது.

தேவநேயப் பாவாணர் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், தமிழர் இன வளர்ச்சிக்காவும் செய்த சேவைகள் அளப்பரியன. இவர் தமிழ் மொழியின் ஒப்பற்ற உயர்வை தம் ஆய்வின் முடிவில் தெரிவித்தார்.

“உலக முதன்மொழி தமிழ் உலக முதல் மாந்தர் தமிழன்
தமிழ் திராவிட மொழிகளுக்குக் தாய் வட மொழிகளுக்கு மூலம்
தமிழும் தமிழனும் பிறந்தது குமரிக் கண்டத்தில்
குமரிக் கண்டமே உலகின் தோன்றுவாய்”

என்பது அவரது ஆய்வின் முடிவு ஆகும்.

தமிழ் மொழியின் மூலத்தைக் கண்டு பிடித்த இவர் தம் எண்பதாம் வயதில் 1982 -ஆம் ஆண்டு சென்னையில் மறைந்தார்.  “தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உங்களை விட்டுப் பிரிகிறேன்; தமிழை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு” இது அவர் இறுதியாகச் சொன்ன சொற்களாகும்.

தேவநேயப் பாவாணர் 35 -க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஒப்பியன்,தமிழ் வரலாறு, தமிழ் தாய், வடமொழி வரலாறு என்று சில. இதில் திருக்குறள் தமிழ்மரபை என்ற நூல் அவரின் நுண்மான் நுழைபுலத்திற்கு தக்க சான்றாகும்.  பாவாணரின் தமிழ் தொகுப்பு நூல்களைப் தேடிப் பிடித்து படியுங்கள் அதன்பின் பெருமிதப்பின் வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள், பிறகு எவரேனும் தமிழ்பற்றி தாழ்வாகவும், தமிழின் குறையென்று எவரேனும் அறியாமையால் சொன்னாலும் ஒரு ‘ஏளன பார்வையை வீசிவிட்டு பதில் சொல்லாமல்’ அவர்களை கடந்து செல்வீர்கள்.

==============================================
பாவாணரின் சில நூல்கள்:

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்
இன்று இந்தியப் பண்பாடு, இந்திய நாகரிகம் என்று வழங்குவதெல்லாம் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடும், தமிழ நாகரிகமுமே என்பது மனோன்மணியம் சுந்தரனார் ,மறைமலை அடிகள் போன்ற தமிழ் சான்றோர் கருத்தாகும். இன்றைய மேனாட்டு அறிஞர்கள்  டைலர்: {India an Anthropological Perspective, 1973} ;  ஜோபர்க் Andree F. Sjoberg;  {in Comparative Civilizations Review 1990 Vol 23} கருத்தும் அதுவே. இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டைத் தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்கி பாவாணர் வரைந்ததே ‘பண்டைத் தமிழ நாகரிமும் பண்பாடும் ’ ஆகும்.

பழந்தமிழாட்சி
சங்க காலத்தில் இருந்து 17ஆம் நூற்றாண்டு முடிய தமிழகத்தில் இருந்த ஆட்சி முறையை வரலாற்றுச் சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விளக்குவது பழந்தமிழாட்சி ஆகும்.

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
வருங்காலத் தமிழகம் சமுதாயம்,  அரசு, பொருளியல், பண்பாடு போன்ற துறைகளில் திருவள்ளுவர் கண்ட கூட்டுடைமை, பொதுமை, மாந்தநேயம் ஆகிய அடிப்படைகளில் எவ்வாறு அமைய வேண்டும் என்று பாவாணர் கண்ட கனவை மண்ணில் விண் நூலில் காணலாம்.

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுடைய மரபு விளையாட்டுகள் மறையத் தொடங்கிவிட்டன. அவற்றை விளக்கமாகப் பதிவு செய்த அருமையான ஆவணம் தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் ஆகும். இந்நூலில் உள்ள பல செய்திகளை அறிந்தவர் இன்று இலர்.

தமிழர் திருமணம்
அகநானூற்றுப் பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் பண்டைத் தமிழர் திருமணச் சடங்குகள் தெளிவாக தரப்படுகின்றன. அவற்றை தமிழர் திருமணம் நூலில் பாவாணர் விளக்குகிறார். இடைக்காலத்தில்தான் ஆரியச் சார்பான சடங்குகள் தமிழரிடம் நுழைந்தன. அவற்றை நீக்கி தமிழ் மரபுப்படி திருமணச் சடங்குகளை நடத்துவது எப்படி என்பதை பாவாணர் விளக்குகிறார்.  (இந்நூலில் ‘தமிழர் சரித்திர சுருக்கம்’, ‘தமிழன் எப்படிக் கெட்டான்?’ என்னும் பாவாணருடைய சிறுநூல்கள் இரண்டும் இணைத்து அச்சிடப்பட்டுள்ளன.)

பாவாணர் நோக்கில் பெருமக்கள்
பாவாணர் வாழ்நாள் முழுவதும்  தமிழ் மொழி, நாகரிகம் பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும் வளர்க்கவும் பாடுபட்டார். எனவே அத்துறையில் உழைத்த அவர்காலத்து தமிழறிஞர்கள் பலரையும் பாராட்டி அவ்வப்பொழுது இதழ்கள் முதலியவற்றில் பாராட்டுரைகள் தந்துள்ளார். அவற்றின் தொகுப்பே பாவாணர் நோக்கில் பெருமக்கள் என்பதாகும். மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், குன்றக்குடி அடிகளார், வ.சுப்பையா, பெருஞ்சித்திரனார் முதலிய சான்றோர்களைப் பற்றிய பாவாணர் பாராட்டை இந்நூலில் காணலாம்.
 
தமிழர் மதம்
தமிழ் மொழியே ஞால முதன்மொழி என்பது பாவாணர் கொள்கை. தமிழர் சமயம் உலகிலுள்ள சமயங்கள் அனைத்திலும் தொன்மை வாய்ந்தது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்  உருவானது என்பதை இந்நூலில் பாவாணர் நிறுவுகிறார். இன்றைய இந்து சமயத்தின் தலைமைக் கடவுளர்களாக உள்ள சிவனும், விட்ணுவும் தமிழர் கடவுளரான சேயோன், மாயோன் ஆகியோரிலிருந்து உருப்பெற்றவர்களே என்பதை பாவாணர் விளக்குகிறார். இன்றைய இந்து சமயம் எனப்படுவது அடிப்படையில் தமிழர் சமயமே என்பார் அவர். தனது History of the World (1992) நூலில்  ஜே.எம். ராபர்ட்ஸ்  ‘இன்று உலகிலுள்ள அனைத்து சமயங்களிலும் மிகுந்த தொன்மை வாய்ந்தது சிவன் வழிபாடேயாகலாம்’ என்று கூறுவது பாவாணர் கருத்தை அறன் செய்வதாகும். சிந்துவெளி நாகரிகம் பற்றிய தமது நூலில் சர் ஜான் மார்ஷலும் இவ்வாறே கூறியுள்ளார். (பாவாணர் நூல் எதுவாயினும் அதில் மொழியியல் ஆய்வும் இருக்கும் என்பதற்கு இந்நூலில் உள்ள எடுத்துக்காட்டு: தா (Dha) என்னும் ஒரு சொல்லே  இந்தோ ஆரிய மொழிகள் தமிழில் இருந்து ஏராளமான அடிப்படைச்  சொற்களை கடன் பெற்றுள்ளன என்பதற்குச் சான்றாகும் என்று இந்நூலில் கூறுகிறார்.
 
திரவிடத்தாய்
ஒப்பியன் மொழிநூல் பற்றிய விளக்கத்தில் கண்டது போல திரவிடத்தாய், சுட்டுவிளக்கம் ஆகிய இரண்டும் அந்நூலின் இணைப்புகளாகவே கருதத்தக்கவை. தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகியவை தத்தம் சொற்றொகுதி, இலக்கணம், மொழியியல் கூறுகள் ஆகியவற்றில் தமிழிலிருந்துதான்  அவை உருவாயின என்பதைக்காட்டுவதாக உள்ளன . இதுபற்றிய நூல்  திரவிடத்தாய்.

 
சுட்டுவிளக்கம்
இந்த நூலில் முச்சுட்டுகளின் புடைப்பெயர்ச்சியால் தமிழில் எவ்வாறு பல்லாயிரக் கணக்கான சொற்கள் உருவாகியுள்ளன என்பதை பாவாணர் விளக்குகிறார்.

வண்ணனை மொழிநூலின் வழுவியல்
மேனாட்டு மொழியியல் அறிஞர்களின் வண்ணனை மொழி நூலின் கோட்பாடுகள் பல வழுவானவை என்பதை அக்காலத்திலே மதுகையுடன் நிறுவியவர் பாவாணர். மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் அவற்றை இன்றுதான் ஏற்கின்றனர். எ.கா: ஆர்.எம்.டபிள்யூ.டிக்சன் தமது The Rise and fall of Languages 1997 இல் பாவாணர் அன்றே சொன்ன பின்வரும் கருத்துகளை ஏற்றுள்ளார்:

1. எல்லா மொழிகளிலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் நிகழ்ந்தவாறே (கிரிம்ஸ் விதி) ஒலியன் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று வரையறுப்பது தவறு.

2. க்ளாட்டோ கிரனாலஜி, லெக்சிகோ ஸ்டாடிக்ஸ்  (Glottochronology, Lexicostatistics) போன்ற கோட்பாடுகள் மொழிகளின் தொன்மையை ஆய்வு செய்ய உதவுவன அல்ல.

3. ஞாலமுதன்மொழி ஒரே தடவை ஒரே இடத்தில் தோன்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். (ஹாரி ஹைஜர், மாரிசு சுவாதசு, மெரிட்ரூலன், வாக்லாவ் பிலாசக், ஜான் பெங்ட்சன், தால்கோபால்ஸ்கி, செவரோஸ்கின் ஆகியோர் கருத்தும் இதுவே.) எனவே வண்ணனை மொழிநூலின் வழுவியல் மொழியியல் அறிஞர்களுக்கு இன்றியமையாதது ஆகும். 

The Primary Classical Language of the world
பாவாணர் மொழியியல் கருத்துகள் அனைத்தையும் ஆங்கிலப்படுத்தி ஒரு சேர அவரே தந்த அருமையான நூல் The Primary Classical Language of the world என்பதாகும். அது 1966இல் வெளிவந்தது. தமிழிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு சென்றுள்ளனவாக பாவாணர் இந்நூலில் குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான சொற்களை பற்றிய பாவாணர் முடிவுகள் ஏற்கத்தக்கன என்று The Journal of Indo European Studies Vol.28; 2000 இதழில் அமெரிக்க மொழியியல் அறிஞர் ஸ்டெபான் லெவிட் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைத் தமிழ்
தமது முதிர்ந்த பருவத்தில் 1977-80இல் பாவாணர் 24 அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு இந்தோ ஐரோப்பிய மொழிகள் உட்பட உலகின் பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் பரவியுள்ளன என்பதை நிறுவி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார். அவற்றை தொகுத்து தமிழ்மண் பதிப்பகம் ‘தலைமைத் தமிழ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. (அக்கட்டுரைகளின் ஆங்கில ஆக்கம் Nostratics – the light from Tamil according  to Devayan என்ற பெயரில் பி.இராமநாதன் அவர்களால் 2004இல் வெளிவந்துள்ளது.) அந்த 24 வேர்ச்சொற்கள் உம்பர்,உருளை, உய், அரத்தம், கல்லுதல், காந்துதல், காலம், கும்மல், அந்தி, எல்லா, களித்தல், மகன், மன், உருத்தல், புகா, பள்ளி. பாதம், புரி, பெறு, பகு, பேசு, திரும்பு, பூனைப்பெயர்கள்,சுல் அடிப்படையில் அமைந்த நெருப்பின் பெயர்கள் ஆகியவையாம்.

Series Navigation