யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கோபால் ராஜாராம்


(அக்டோபர் உயிர்மை இதழில் என்னையும், திண்ணையையும் அவ்தூறு செய்து யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் அடிக்குறிப்பாக யமுனாவின் கட்டுரைக்கான எதிர்வினை வலைப் பக்கங்களில் பிரசுரமாகும் என்று உயிர்மை ஆசிரியர் தெரிவித்திருந்தார். உடனே அந்த அவதூறுக்கு நான் அனுப்பிய பதில் இது. அவதூறினை அச்சிலும், பதிலை வலைப் பக்கங்களிலும் வெளியிடுவேன் என்ற நிலைபாடு சரியல்ல என்று நான் உயிர்மை ஆசிரியருக்கு எழுதினேன். வலைப் பக்கங்களில் தான் பிரசுரிக்க இயலும் என்று தெரிவித்திருந்தார். மூன்று மாதங்களாக நான் பிரசுரத்திற்காகக் காத்திருக்கிறேன்.)

அன்புள்ள ஆசிரியருக்கு,
70களில் கம்யுனிஸ்டுகளை விமர்சனம் செய்தால், உடனே சி ஐ ஏ ஏஜண்ட், பிற்போக்குவாதி, முதலாளித்துவ அடிவருடி என்று முத்திரை குத்துவது வழக்கம். அது வளர்ச்சி பெற்று இப்போது மதவாதிகளைத் தூண்டுமாறு இஸ்லாமிய விரோதி என்ற குற்றச்சாட்டாக பரிணமித்துள்ளது. வளர்ச்சி தான்.

திண்ணை வேறு. வார்த்தை வேறு. நானும், துகாராமும் மட்டுமே திண்ணைக்குப் பொறுப்பு. வார்த்தையில்,நான் வெறுமே ஆலோசனைக் குழுவில் மட்டுமே இருக்கிறேன். தமிழைப் படித்துப் புரிந்து கொள்பவர்களுக்கு இதில் குழப்பம் வர வாய்ப்பில்லை.

திண்ணை சிறுபத்திரிகை என்று சொல்லிக்கொண்டதில்லை. எந்தச் சிறு பத்திரிகையில் சமையல் குறிப்புகளும், அருமையான அறிவியல் கட்டுரைகளும், நகைச்சுவைக் கட்டுரைகளும் வெளியாகின?

சிறுபத்திரிகைகளில் இதுதான் வரலாம், இது வரக்கூடாது என்று கமிசார்த்தனம் பண்ணும் பொறுப்பை யார் யமுனாவிற்குக் கொடுத்தார்கள்? தஸ்லீமைவை வெளியேற்று, எம் எஃப் ஹுசைன் வரையக் கூடாது என்ற குரல்களின் எதிரொலி யமுனா என்ற ஸ்டாலினிஸ்டிடம் கிடைப்பதில் என்ன ஆச்சரியம்? யமுனாவின் குரலுக்கும் திண்ணையில் இடம் உண்டு. அப்படி இடம் கொடுப்பதால் நான் ஸ்டாலினிஸ்ட் ஆகிவிட மாட்டேன்.

புனைபெயரில் ஏன் எழுதுகிறார்கள் என்பது அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. இவர்களில் பலரும் இணையத்தில் திண்ணை தவிரவும் பல தளங்களில் எழுதி வருபவர்கள் தான். அவர்களுக்கே எழுதிக் கேட்கலாம். புனைபெயரில் எழுதுவது ஏன் என்பதற்கு எந்த சமூகவியல் ஆய்வும் தேவையில்லை. உயிருக்குப் பயந்துபோகுமாறு அவர்களை அச்சுறுத்தும் யமுனா போன்ற சக்திகளைத் தான் நாம் இனம் காண வேண்டும்.

மலர்மன்னனையும் அரவிந்தன் நீலகண்டனையும் வெளியிட்டதால் நான் ஹிந்துத்வ வாதி ஆகி விடுவேன் என்றால், அதற்கு முன்பே நான் இஸ்லாமிய பயங்கரவாதியாய் ஆகியிருக்கவேண்டும். ஏனென்றால் செப்டம்பர் 11-ல் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டபோது ஒசாமாவின் அறிக்கையை மொழியாக்கம் செய்து வெளியிட்டதும் திண்ணை தான். ஒரு நிகழ்விற்குப் பின்னால் உள்ள கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சி அது. ஒசாமாவின் அறிக்கையை பிரசுரித்ததற்கு என்னை இஸ்லாமிய தீவிரவாதி என்று குற்றம் சாட்டாத யமுனா, என்னை ஹிந்துத்வா என்று குற்றம் சாட்டுவதின் பின்னுள்ள உளவியல் கண்டுகொள்ளப்படவேண்டும். குஜராத் கலவரங்களின் போது உடனடியாக வன்முறை பற்றி வெளியிடப்பட்ட முக்கிய கட்டுரையில், நீதித் துறை போன்றே காவல் துறையும் அரசியல் தலையீடு இல்லாமல் பணிபுரிய நேர்ந்தால் தான், அரசு தன்னுடைய நலனுக்குக் காவல் துறையைப் பணியவைக்க முடியாது என்று கடுமையாகவே எழுதப்பட்டது. இந்தக் கட்டுரையை தீம்தரிகிட ஏட்டிலும் ஞாநி விரும்பி மறு பிரசுரம் செய்தார்..

அத்வானியை பேட்டி கண்டு வெளியிடும் ஹிந்து ஏடும், வாஜ்பாயியின் தலமையில் ஆண்டுவிழா கொண்டாடிய என் ராமும் கூட ஹிந்துத்வ ஆட்களாய்த் தான் இருக்கவேண்டும். மார்க்ஸிஸ்ட் கட்சி என் ராமை வெளியேற்றிவிட்டதா?

பாசிச எதிர்ப்பினை ஸ்டாலின் குத்தகை எடுத்திருப்பதான ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் யமுனா. மலிவுவிலை சோவியத் பிரசுரங்களைத் தாண்டி படித்திராத கிணற்றுத்தவளைக்கு உலக வரலாற்றுப் பாடம் இது: ஸ்டாலின் முதலில் ஹிட்லருடன் பரஸ்பர தாக்குதலைத் தவிர்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டபோதும் ஹிட்லர் பாசிஸ்டாய்த் தான் இருந்தார். சோவியத் படைகள் தாக்குதலை முறியடிக்க ரஷ்ய தேசிய உணர்வு ஒரு முக்கிய காரணம். அதில்லாமல், தாக்குதலுக்கு ஆளாகாமலேயே, தானாக முன்வந்து ஹிட்லருக்கு எதிரான போரில் பங்காற்றிய அமெரிக்கப் போர்வீரர்களின் அர்ப்பணிப்பையும் யமுனாவின் சிவப்புக் கண்ணாடி காணவில்லை.

இதனை ஒரு சவாலாகவே சொல்கிறேன். இஸ்லாமிய ஏடுகள் தவிர்த்து, சிறு பத்திரிகை, பெரும்பத்திரிகை இவற்றைக் காட்டிலும் மிக அதிகமான இஸ்லாமிய எழுத்தாளர்கள் பங்களித்த தளம் திண்ணை தான். இஸ்லாமிய வரலாறு, வாழ்வியல், பற்றிய பல முக்கிய கட்டுரைகளும் திண்ணையில் தான் அதிக அளவில் வந்தன. நாகூர் ரூமி முதல், ஆபிதீன் வரையில், வஹாபி முதல் ரசூல் வரையில் சுத்ந்திரமாக இஸ்லாமிய எழுத்தாளர்களை வெளியிட்டது திண்ணை தான். முஸ்லிம் சமூகத்தின் உள்ளே அவர்களே நடத்திய தத்துவ விவாதங்களையும் திண்ணை தான் வெளியிட்டது. திண்ணை ஏதும் ரகசிய இயக்கமல்ல. ஒன்பதாண்டு வெளியான திண்ணை ஏடுகளும் வலையில் படிக்கக் கிடைக்கின்றன. வாசகர்கள் படித்துவிட்டு முடிவு எடுக்கட்டும்.

யமுனாவின் கள்ள மௌனம் பற்றியும் பேசலாம். எந்த பாசிசத்தை எதிர்த்து, இஸ்லாமிய நாடான ஆஃப்கானிஸ்தான்மீது செம்படையின் படையெடுப்பு நடந்தது, ஹங்கேரி ஆக்கிரமிப்பு எப்படி புனிதப் போராகிறது என்று யமுனா மௌனம் கலைந்து பேசினால் கேட்க நான் ஆவலாய் உள்ளேன். இஸ்ரேல் பற்றியும் கூடப் பேசலாம். இஸ்ரேல் உருவாக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடு சோவியத் யூனியன். எதிர்த்து வாக்களித்தது இந்தியா. சோவியத் யூனியன் 1955 வரையில் இஸ்ரேலுடன் நல்லுறவு பூண்டு வந்தது என்பது வரலாறு. பாலஸ்தீனப் பிரசினைக்கு எல்லா உலக தளங்களிலும் இந்தியா போராடியுள்ளது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு வருடம் தோறும் இந்தியாவிற்கு எதிராக, பாகிஸ்தானின் தூண்டுதலால், கண்டனம் செய்தபோதும், பாலஸ்தீனத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. அதுவே தான் என் நிலைபாடும்.
அவதூறுகளுக்கு இந்த பதில் போதும். கருத்துப் பரிமாறலுக்கு விரிவான பதில் இணையத்தில் எழுதுவேன்.

நட்புடன்
கோபால் ராஜாராம்

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்