மாவோவை மறத்தலும் இலமே.

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

நரேந்திரன்


கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் சீனா கண்ட முன்னேற்றம் அளப்பறியது. தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சி என்பது உலகம் இதுவரை காணாத ஒன்று. அது குறித்து ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக சேர்மன் மாவோவின் அருமை, பெருமைகள் குறித்தான சில எண்ணங்கள் இங்கே. நாம் காணும் இன்றைய சீனா மாவோவின் கம்யூனிசக் கொள்கைகளால் உருவான ஒன்றல்ல. அவருக்குப் பின் வந்த டெங்-ஸியோபிங்(Deng Xiaoping )கின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாக உருவான ஒன்று. சர்வாதிகார மனோபாவமும், முரட்டுப் பிடிவாதமும் கொண்ட மாவோவின் காலத்தில் சீனர்கள் அடைந்த துயரம் மிகக் கொடுமையானது. நான் அறிந்தவரை, இன்றைய சீனர்கள் மாவோ குறித்துப் பேசுவதைத் தவிர்ப்பவர்கள். அதனை ஒரு கொடுங்கனவாய் நினைப்பவர்கள்.
1949-ஆம் வருடம், சீனாவை நெடுங்காலம் ஆண்ட Qing Dynasty-யின் கடைசி அரசனான சிறுவன் Puyi-யைப் பிடித்தவுடன் பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருந்த சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்தது. மாஓ-ஸெடாங் (Mao Zedong) – மாவோ – சீனர்களின் தனிப் பெரும் தலைவராக உருவெடுத்தார். 1958-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒருநாள் திடீரென சீனா உலகின் ஒரு வல்லரசாக வேண்டும் என முடிவெடுத்தார் மாவோ. சாதாரண வல்லரசாக அல்ல. உலகின் மிகப் பெரும் வல்லரசாக. மாவோ சாதாரணத் தலைவரல்லரே. எனவே அவரது அபிலாஷைகளும் மிகப் பெரியவையாக இருந்ததில் ஆச்சரியமில்லை.
தனது கனவை நனவாக்க, “The Great Leap Forward” என இன்று உலகம் அறியும் “மிகப் பெரும் பொருளாதாரத் முன்னேற்றத்” திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மாவோ. அதனடிப்படையில், நிலக் கட்டுப்பாட்டுக் கமிட்டிகள் – Earth Control Committee – அமைக்கப்பட்டன. விவசாய நிலங்களை அரசுடமையாக்குவது என்பது அதன் முக்கிய நோக்கம். அந்நாட்களில் சீனாவின் பெரும்பான்மையான விவசாய நிலம் அதன் சிறு விவசாயிகளிடம் இருந்தது. நீண்ட காலமாக நடந்த உள்நாட்டுப் போரும், பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த ஏழ்மையும், வறுமையும் அவர்களைச் சூழ்ந்திருந்தன. இருப்பினும் சீனர்கள் உலகை ஆளவேண்டும் என்று விரும்பினார் மாவோ. அந்த இலட்சியத்தை அடைய அவருக்குத் தேவையானது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே என்பதில் உறுதியாய் இருந்தார் அவர். அந்த ஓரிரு ஆண்டுகளில் சீனாவின் உற்பத்தியைப் பெருக்கி உலகின் வல்லரசாக மாற்றுவது என்ற நம்பிக்கையுடனிருந்தார் மாவோ. அதன் ஒரு பகுதியாக, சிறு விவசாயப் பண்ணைகள் நிரம்பிய சீனாவை, தொழிற்சாலைகள் நிரம்பிய நாடாக மாற்றும் ஒரு முயற்சியே Great Leap Forward என்பது. பழம்பெரும் புத்தக் கோவில்களும், பகோடாக்களும் சூழ்ந்திருந்த தனது பெய்ஜிங்கின் Forbidden City வாசஸ்தலத்திலிருந்து மாவோ பகன்றது யாதெனில், “எதிர்வரும் காலங்களில் நான் திரும்பும் திசைகளில் ஆலைகளின் புகை போக்கிகள் மட்டுமே காணப்பட வேண்டும்” என்பதாம்.

அங்ஙனமே ஆகியது. சீனாவின் நகரங்களைச் சுற்றியிருந்த, மங்கோலியப் படையெடுப்புகளையும், தாக்குதல்களையும் தாங்கி நின்ற சுற்றுச் சுவர்கள் இடிக்கப்பட்டு, அங்கே இரும்பு ஆலைகள் நிறுவப்பட்டன. பழமை வாய்ந்த பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டு அதன் சாம்பலின் மீது புதிய மின்நிலையங்கள் அமைக்கப்பட்டன. சீனக் கலாச்சாரம் 5000 ஆண்டுகள் பழமையான ஒன்று. எனவே, சீனர்களில் சிலர் தங்களின் கலாச்சாரச் சின்னங்களை அழிப்பதை எதிர்த்தார்கள். மாவோ எதிர்த்தவர்களைப் பிடித்து, இம்மாதிரியான கட்டிடங்கள் இடிக்கும் குழுக்களில் கட்டாயப்பணி செய்ய அனுப்பி வைத்தார். அதே நேரம், கிராமப்புறங்களில் இருந்த விவசாய நிலங்களை மாவோ அரசுடமையாக்கியதில் ஏறக்குறைய அரை-பில்லியன் விவசாயிகள் தங்களின் நிலங்களை இழந்தார்கள்.

சரியான திட்டமிடல் எதுவுமின்றி மிகப்பெரும் நீராதாரத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட அணை ஒன்று 1975-ஆம் வருடம் இடிந்ததில் ஏறக்குறைய 2,50,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள். கிராமங்களை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு, கம்யூன்கள் எனும் பொதுக் குடியிருப்ப்புகளில் தங்க வைக்கப்பட்டார்கள். கிராமத்தினரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக அவர்களுக்கு எண்கள் வழங்கப்பட்டன. பெயர்களை விடவும் எண்கள் எளிதானவை பாருங்கள்! விவசாய உபகரணங்களும், சமையல் பாத்திரங்களும் புதிதாகத் துவங்கப்பட்ட இரும்பு ஆலைகளுக்கு அணுப்பி வைக்கப்பட்டு உருக்கப்பட்டன. சீனாவின் இரும்பு உற்பத்தி ஒரே ஆண்டில் இரு மடங்காகப் பெருகியது எனப் பெருமிதம் கொண்டார் மாவோ.

அடுத்தபடியாக உணவு தானிய உற்பத்தியில் அவரது கவனம் திரும்பியது. உலகின் வல்லரசுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் தானியங்களை ஏற்றுமதி செய்கின்றன. எனவே சீனாவும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீனாவிலிருக்கும் அத்தனை சிட்டுக் குருவிகளையும் கொல்ல வேண்டும் என்ற முக்கிய உத்தரவும் இடப்பட்டது. காரணம், சிட்டுக் குருவிகள் தானியங்களைத் தின்பவை. அதனால் உற்பத்தி குறைய வாய்ப்புண்டு. எனவே அவை கொல்லப்பட வேண்டும் என்பது மாவோவின் கட்டளை. ஆனால் அச்சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் மனிதகுலம் இதுவரை காணாத உணவுப் பஞ்சத்தை சீனாவிற்குக் கொண்டுவரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

சிட்டுக் குருவிகள் இல்லாமையால் வெட்டுக் கிளிகளும், பூச்சிகளும் பெருகி விளைச்சலைத் தின்று தீர்த்தன. தொடர்ந்த மூன்றாண்டுகளில் மொத்த சீனாவும் பஞ்சத்திலும், பட்டினியிலும் பரிதவித்தது. இதன் காரணமாக ஏறக்குறைய 30 மில்லியன் சீனர்கள் உண்ண உணவின்றி இறந்து போனார்கள். அது குறித்து மாவோ கவலையேதும் கொள்ளவில்லை. மாறாக, “மரணங்களால் பலனுண்டு; இறந்தவர்கள் நிலத்திற்கு நல்ல உரமாவார்கள்” என்றார் அவர். சீனர்கள் ஒருபுறம் பட்டினியால் இறந்து கொண்டிருக்க, தொடர்ந்து உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார் மாவோ என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

இருப்பினும், யாரும் மாவோவை எதிர்த்துப் பேசத் துணியவில்லை. விவசாயிகளும், வேளாண்மை விற்பனர்க்ளும் தன் மீது எரிச்சலில் இருப்பதை மாவோ உணர்ந்தே இருந்தார். 1956-ஆம் வருடம், அரசின் திட்டங்களைப் பிடிக்காதவர்கள் அது குறித்து விமர்சிக்கலாம் என்று அறிவித்தார் மாவோ. அதற்கு “நூறு மலர்களின் செயல்முறை” (Hundred Flowers Campaign) என்று பெயரும் வைத்தார். எதிர்க் கருத்து கொண்டவர்கள் அஞ்சாமல் விமர்சனம் செய்யலாம் என்று ஊக்குவித்தார் மாவோ. அது ஒரு பொறி என்று அறியாமல் அவரை விமர்சித்தவர்கள், அடையாளம் காணப்பட்டு, குறி வைக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, மாவோ தனது “தூய்மைப்படுத்துதலை” (periodic purging) ஆரம்பித்தார். “ஹ¤னான் மகாணத்தில் மட்டும் 100,000 பேர் அடையாளம் காணப்பட்டு, 10,000 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,000 பேர்கள் கொல்லப்பட்டனர்” என்று அறிவித்தார் மாவோ. அதுபோலவே மற்ற மாகாணங்களிலும் “களையெடுப்பு” நடந்து முடிந்தது.

தனது பதவியை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, 1950-ஆம் வருடம் மட்டும் ஏறக்குறைய 8,00,000 சீனர்களைக் கொன்று குவித்தார் மாவோ. இறுதியில் மாவோவை எதிர்த்துப் பேச ஒருவரும் துணியவில்லை. அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முதல்பகுதியிலும் தனது எதிரிகளை ஒழிக்கும் எண்ணத்துடன் “கலாச்சாரப் புரட்சி” (Cultural Revolution) எனும் மாபெரும் பைத்தியக்காரத்தனம் மாவோவினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவோவிற்குப் பின் சீனாவை ஆண்ட டெங்-ஸியோபிங் கூட அதிலிருந்து தப்பவில்லை. பீஜிங்கிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்த ஒரு ட்ராக்டர் தொழிற்சாலையில் வேலை செய்ய அனுப்பி வைக்கப்பட்டார் டெங்.

மாவோவின் கலாச்சாரப் புரட்சி “நான்கு பழமை”களுக்கு (Four Olds) எதிரானது – பழைய வழக்கங்கள் (Old Customs), பழைய கருத்துகள் (Old Ideas), பழைய பழக்கங்கள் (Old Habits) மற்றும் பழைய கலாச்சாரம் (Old Culture) – என்பவையே அவை. மூலைச் சலவை செய்யப்பட்ட, செம்படையினர் என்று அழைக்கப்பட்ட (Red Guards) பதின்பருவ சிறுவர்களும், இளைஞர்களும் கட்டவிழ்த்து விடப்பட்டார்கள். “Be violent” என்றார் மாவோ அவர்களிடம். போலிஸ்காரர்களும், இராணுவத்தினரும் அவர்களைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அச்சிறுவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும், வலதுசாரிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும் அவர்களால் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அதனைத் தடுப்பதற்குப் பதிலாக, “பீகிங்கில் போதுமான வன்முறை இல்லை” என்றார் மாவோ. குறிப்பறிந்து தொடர்ந்த வன்முறையில் ஏறக்குறைய 2000 பேர்கள் பெய்ஜிங்கில் மட்டும் கொல்லப்பட்டனர். பள்ளிகளிலிலிருந்து செம்படையினருக்கு விலக்களித்த மாவோ, அவர்கள் சீனாவின் எந்தவொரு இடத்திற்கும் யாதொரு தடையுமில்லாமல் சென்று வருவதற்கான அனுமதியையும் வழங்கினார். அவர்களைக் கண்டு சீனா முழுமையும் நடுங்கியது. உச்ச கட்டமாக, குவான்ஸி மாகாணத்தில் செம்படையினர் அவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியரைக் கொன்றதுடன், பள்ளி உணவகத்தில் வைத்து அவரது உடலைத் தின்றனர் செம்படைச் சிறுவர்கள்.

“பழைய கலாச்சாரத்தை உடைத்தெறி” என்றார் மாவோ செம்படையினரிடம். சீனாவின் அரும் பெரும் பொக்கிஷங்களாக, 5000 வருடங்கள் தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அற்புதமான ஓவியங்களும், புத்தகங்களும் எரியூட்டப்பட்டன. இசைக்கருவிகளுடன் பிடிபடுகிற எவரும் கொடுமைப்படுத்தப்பட்டு இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கரக்காண வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்பங்களும், கட்டிடங்களும் நொறுக்கப்பட்டன. சீனா அதுவரை கண்டிராத பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. 1976-ஆம் வருடம் நிகழ்ந்த மாவோவின் மரணம் வரை இக்கொடுமை தொடர்ந்தது.

மாவோவின் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய 70 மில்லியன் சீனர்கள் மரணமடைந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டுப் படுகொலைகள் செய்தவர்களான அடால்·ப் ஹிட்லருக்கும், ஜோச·ப் ஸ்டாலினுக்கும் இணையாக ஒப்பிடப் படக்கூடியவர் மாவோ மட்டுமே. இன்றைய சீனம் மாவோவை மறக்க நினைப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்