இடம் விளங்காத பாடல்

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

அ.முத்துலிங்கம்


வழக்கம்போல காலையில் எழும்பி கணினியை திறந்து பார்த்தேன். வந்திருந்த மின்னஞ்சல்களில் இரண்டு புதியவை. இரண்டுமே இலங்கையிலிருந்து முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வந்தவைதான். முதலாவது கடிதத்ததில் ஒரு பகுதி இப்படியிருந்தது:
‘இங்கே இப்பொழுது தமிழ் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது.’
அடுத்ததும் இலங்கையிலிருந்து அனுப்பியதுதான் ஆனால் எந்தப் பகுதியிலிருந்து என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.
‘இரண்டு யானைகள் பொருதினால் புல்லுக்கு சேதம். இரண்டு ஆறுகள் மோதினால் மரத்துக்கு சேதம். நான் என் முதுகு சுமக்கக்கூடிய பாரத்தை சுமந்தபடி அலைந்துகொண்டு இருக்கிறேன். இந்தச் சுமையில் நிச்சயமாக தமிழ் புத்தகங்களும், பத்திரிகைகளும் இல்லை. அடுத்த இணைய தொடர்பு எப்போது, எங்கே கிடைக்கும் என்பதும் எனக்கு தெரியாது. ஆகவே நீங்கள் சமீபத்தில் எழுதி பிரசுரமான ஏதாவதொரு கதையை எனக்கு மின்னஞ்சலில் தயைசெய்து அனுப்பிவைத்தால் நான் படித்துவிட்டு உடனேயே அழித்துவிடுவேன்.’
நான் படித்த புறநானூற்றுப் பாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு அவன் வரவைப் பார்த்திருக்கும் மனைவி சொல்வதான பாடல்:
குதிரை வரவில்லை, குதிரை வரவில்லை
எல்லாக் குதிரைகளும் வந்தனவே.
என் புதல்வனை தந்தவருடைய குதிரை மட்டும்
இன்னும் வரவில்லையே.
இரண்டு ஆறுகள் சந்திக்கும் இடத்தில்
சிக்குண்ட மரம்போல
அந்தக் குதிரையும் மறைந்ததுவோ.

டொன்குவிசோட் நாவலில் டொன்குவிசோட்டும் அவனுடைய ஏவலாளான சஞ்சோ பான்ஸாவும் சாகசங்கள் செய்வதற்கென்று புறப்பட்டுப் போய் போரில் காயம் பட்டு, தோற்று களைத்து விழுந்து தங்கள் கிராமத்துக்கு நெடுநாட்களுக்கு பிறகு திரும்புவார்கள். சஞ்சோ புறப்படும்போது டப்பிள் என்ற கிழட்டுக் கழுதை மேலே போயிருந்தான். சஞ்சோவின் மனைவி வெளியே ஓடி வந்து முதலில் விசாரித்தது கழுதை சேமமாக வந்துவிட்டதா என்பதுதான். அதுபோலவே இந்தப் புறநானூற்றுப் பெண்ணும் குதிரை எங்கே தொலைந்துபோனது என்று வருந்துகிறாள். அவள் வேதனை குதிரையில் வீற்று வரும் கணவனைக் காணவில்லை என்பதுதான். ஆனால் பாடலில் அவள் குதிரையைத்தான் தேடுவாள்.
இரண்டு ஆறுகளில் சிக்குண்ட மரம் போல என்று முகம் தெரியாத மின்னஞ்சல் நண்பர் வர்ணித்தது பொருத்தமாக இருந்தது. இந்த கடிதங்களும் சொல்லி வைத்ததுபோல ஒரே நாளில் வந்ததுதான் ஆச்சரியம். தன் நாட்டில் சுதந்திரமாக சொந்த மொழியான தமிழை படிப்பதில்கூட இடையூறு என்பது எவ்வளவு துயரமானது. அடுத்து என்ன சட்டம் கொண்டுவருவார்கள். ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் மஞ்சள் நட்சத்திரம் அணிந்துமட்டுமே வெளியே போகலாம். அதுபோல புதிதாக சிந்தித்து வேறு ஒரு சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. அப்பொழுதும் எங்களை உலகம் திரும்பி பாராது.
நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் வீட்டில் ஐயாவோ அம்மாவோ வாழை இலையில் சாப்பிடும் சமயங்களில் சாப்பிட்டு முடிந்த பிறகு வாழை இலையை கூரையில் செருகி வைப்பார்கள். எதற்காக அப்படி செருகுகிறார்கள் என்று நான் கேட்பதுண்டு. ‘அப்படித்தான்’ என்று பதில் வரும். பிறகுதான் நான் உண்மையை அறிந்தேன். போர்த்துக்கீயர்கள் யாழ்ப்பாணத்தை 1619 ஆண்டு தொடக்கம் 1658 வரை ஆண்டார்கள். அதற்கு பிறகு டச்சுக்காரர்கள் பிடித்துக்கொண்டார்கள். போர்த்துக்கீயர் காலம் கொடூரமான காலம். வாள் முனையில் அவர்கள் இழைத்த அநீதிகள் எண்ணிலடங்கா. வாழை இலையில் சாப்பிட்டு அந்த இலையை வாசலில் எறிந்து போர்த்துக்கீய பட்டாளக்காரன் ஒருவன் அதைக் கண்ணுற்றால் வந்தது ஆபத்து. வீட்டுக்காரர்கள் கிறிஸ்துவர்களாக மாறவில்லை என்பது அவனுக்கு தெரிந்துவிடும். ஒரே வாள் வீச்சில் தலையை துண்டித்துவிடுவான். அந்தப் பயத்தில் வாழை இலையை கூரையில் செருகி வைப்பார்கள். அந்தப் பழக்கமே மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. ஆனால் என்னுடைய ஐயாவுக்கோ அம்மாவுக்கோ அது தெரிந்திருக்கவில்லை.
வாழை இலையை ஒளிப்பதும், புத்தகத்தை ஒளிப்பதும் ஒன்றுதான். ஆட்சியாளர்களில்தான் மாற்றம். அடிமைப் படுத்தப்பட்டவர்கள் மாறவில்லை.

பதிற்றுப்பத்துவை முழுவதுமாக படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக இருந்தது. ரொறொன்ரோவில் நான் இருந்த இடத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் ஒரு தமிழ் நூலகம் உண்டு. அங்கே 17000 நூல்கள் இருப்பதாக நூலகர் கூறினார். பதிற்றுப்பத்து இருக்கிறதா என்று கேட்டேன். அவருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. என்னுடைய ஒரு கையை தன் இரு கைகளுக்குள்ளும் அடக்கியபடி, ‘இருக்கிறது, ஆனால் வீட்டுக்கு எடுத்துப்போக முடியாது. அது அரிதான நூல் ஆகையால் இங்கேயே படிக்கவேண்டும்’ என்றார்.
ஒருநாள் காலை நூலகம் திறந்தவுடன் நான் போய்ச் சேர்ந்தேன். அந்த வருடத்தின் அதிநீளமான பகலைக் கொண்ட யூன் மாதத்து வியாழக்கிழமை அது. பதிற்றுப்பத்து நூலை நூலகரிடம் பெற்று மேசைக்கு எடுத்துச் சென்றேன். பதிற்றுப் பத்து என்பது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. பத்துப் புலவர்கள், பத்து சேரமன்னர்கள் மீது பாடிய பத்துப் பத்து பாடல்கள். எல்லாமாக 100 பாடல்கள். இதில் முதல் பத்து கிடைக்கவில்லை. கடைசி பத்தும் கிடைக்கவில்லை. கிடைத்தது எண்பது பாடல்கள்தான்.
நூலகத்தில் எனக்கு தரப்பட்ட கைப்பிடியில்லாத நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து புத்தகத்தை பிரித்தேன். ஐம்பது வருடங்களாக அந்தப் புத்தகத்தை வேறு ஒருவரும் தொடவில்லை என்பது தெரிந்தது. மெதுவாகத் திறந்து பாடல்களைப் படித்து அன்று முழுக்க குறிப்பெடுத்தேன். படித்து முடிந்த பிறகு புத்தகத்தின் கடைசி ஒற்றையை திருப்பினால் அங்கே ‘இடம் விளங்காத பாட்டு’ என்று ஒரு பாடல் அச்சிடப்பட்டிருந்தது. அதைப் படித்த நான் பிரமித்துப் போனேன். பாடலுடன் காணப்பட்ட விளக்கவுரையில் அதுவும் பதிற்றுப்பத்து பாடல்தான், ஆனால் அதைப் பற்றிய கூடுதல் விபரங்கள் அகப்படவில்லையென்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பாடலோ அபூர்வமான அழகோடு அமைந்திருந்தது. சேரனுடைய வலிமையையும், ஊக்கத்தையும் புகழ்ந்து பாடும் இப்பாடல் ‘வந்தனன் பெரும’ என்று ஆரம்பிக்கிறது. அதில் எனக்குப் பிடித்த வரிகள் ‘மாரியென்னாய், பனியென மடியாய், பகை வெம்மையின் அசையா வூக்கலை’ என்பதுதான். அரசனுடைய ஆற்றலையும் விடாமுயற்சியையும் சொல்லும்போது புலவர் ‘மழை என்று பார்க்கமாட்டாய், பனியென்று தயங்கமாட்டாய், பகைவர் காட்டும் எதிர்ப்பிலும் தடைபடாத ஊக்கம் கொண்டவன் நீ” என்று புகழ்வார். இந்தப் பாடல் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பெற்றது. ஆனால் வியப்பென்னவென்றால் கி.மு 400 களில் கிரேக்க வரலாற்று பிதாமகர் ஹெரொடோரஸ் ஓரிடத்தில் இதேபோல எழுதிவைத்திருக்கிறார். அதை மக்கோலே என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் காலப் பகுதியில் கிரேக்கர்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையில் போர் அடிக்கடி மூண்டது. அந்தப் போர்களை வரலாற்றில் பதிவு செய்த ஹெரொடோரஸ், பாரசீக தூதுவர்களைப் பற்றி இப்படி புகழ்வார். ‘பனியோ, மழையோ, வெட்பமோ, இருளோ அவர்கள் தம் கடமையை துரிதமாக செய்துமுடிக்க எதுவுமே தடையாக இருப்பதில்லை.’
கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரொடோரஸ் எழுதிய அதே வரிகளை 600 வருடங்களுக்கு பின்னால் வந்து சேரனைப் பாடிய புலவரும் உபயோகித்ததுதான் ஆச்சரியம். ஆனால் புலவர் யார், அந்த அரசன் பெயர் என்ன, எந்த சந்தர்ப்பத்தில் கடைசி ஒற்றையில் காணப்பட்ட அந்தப் பாடல் பாடப்பெற்றது என்ற விவரங்கள் ஒருவருக்குமே தெரியவில்லை. ‘இடம் விளங்காத பாடல்’ என்ற தலைப்பிலேயே அது இன்றைக்கும் அறியப்படுகிறது.
என் மேசையில் நான் எப்பொழுதும் பார்க்கக்கூடியவிதமாக இந்தப் பாடலை எழுதி வைத்திருக்கிறேன். மேசையில் சேர்ந்திருக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் சேரமன்னனுக்கு மாத்திரமல்ல, பாரசீக தூதுவர்களுக்கு மாத்திரமல்ல, உலகம் முழுக்க இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. பனியோ மழையோ இரவோ பகலோ எதிரிகள் தரும் இடைஞ்சல்களையும் சட்டை செய்யாமல் அவர்கள் ஒரு வாழ்க்கையை அமைக்க கடுமையாக பாடுபடுகிறார்கள்.
நூலகத்தில் உட்கார்ந்து பதிற்றுப்பத்து படித்து குறிப்பெடுத்த நாளுக்கு அடுத்த நாள் நான் பொஸ்டனுக்கு போய்விட்டேன். பல வாரங்கள் கழித்து ரொறொன்ரோ நகருக்கு திரும்பி வந்த சமயம் மறுபடியும் ஒரு நாள் தமிழ் நூலகத்துக்கு போனேன். அது பூட்டிக் கிடந்தது. 17000 புத்தகங்கள் கொண்ட கட்டிடம் இப்பொழுது வெறுமையாகக் காட்சியளித்தது. சுவரிலே ஒரு அறிவிப்பு கறுப்பு எழுத்தில் எழுதி ஒட்டியிருந்தது. ‘இங்கே கார்களை நிறுத்தவேண்டாம்.’ ஒருவர் சிகரெட் புகைத்தபடி வெளியே நின்றார். எதற்காக நூலகம் பூட்டியிருக்கிறது என்று அவரிடம் விசாரித்தேன். சிகரெட்டின் நெருப்பு நுனியை என் முகத்துக்கு நீட்டி ‘அதிகார ஆணை’ என்று சொன்னார். நிரந்திரமாகவா என்று கேட்டேன். ‘இல்லை, தற்காலிகமாகத்தான்.’

கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் தாண்டிவிட்டது. மாலைதீவு, பாபிடொஸ், பெலிஸ், ரொங்கா, வணுவாட்டு, அரூபா போன்ற 56 தேசங்களின் ஜனத்தொகையிலும் பார்க்க கனடாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் ஒரு தனி நாட்டுக்குச் சமம். கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவ தளபதி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்’ என்று பேசியிருக்கிறார். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து 60 வருடங்களாக உரிமைகளுக்கு போராடிய ஒரு சிறுபான்மையினரை பொருட்படுத்தாமல் அவர் இப்படி சொல்கிறார். உலகமே அதைக் கேட்கிறது. ஒரு சிறு அதிர்வு அலைகூட இல்லை.
பதிற்றுப்பத்து கடைசி ஒற்றை பாடல்போல இடம் விளங்காத ஓர் இனமாக நாம் மாறிவிட்டோமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. சொந்த நாட்டு நூலகத்தில் 97,000 புத்தகங்களை எரிக்கிறார்கள். வந்த நாட்டில் 17,000 புத்தகங்களை படிக்கவிடாமல் பூட்டுகிறார்கள். அங்கே தீ, இங்கே பூட்டு. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான வில்லியம் சரோயன் சொன்னது இந்தச் சமயத்தில் ஞாபகத்துக்கு வருகிறது:
மனிதன் எங்களை விடுகிறானில்லை.
கடவுள் எங்களை விடுகிறாரில்லை.


Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்