இலங்கைத் தமிழர்கள் விவகாரம் – 1987 திரும்பட்டும்

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

ஜான் பீ. பெனடிக்ட்,


இலங்கைத் தமிழர்கள் விவகாரம் உலகத் தமிழர்களிடையே, குறிப்பாக தாயகத் தமிழர்களிடையே மறு உயிரெடுத்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன், இலங்கையில் துன்புறும் தமிழ் மக்களுக்காக திரு. பழ. நெடுமாறனால் சேகரிக்கப்பட்ட மருந்துப்பொருட்கள், அனுப்ப முடியாமல் போய்விட்டன. அவற்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி, திரு. நெடுமாறனின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முதல்வர் திரு. கருணாநிதியின் உறுதிமொழியும் காற்றில் கரைந்துவிட்டது.

1987 மத்தியில், இலங்கை விமானப் படை, தீவிரவாதிகளை அழிப்பதாகச் சொல்லி தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியது. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். பீதியடைந்த மக்கள், உயிர் பிழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோயில்களில் தஞ்சம் புகுந்தனர். கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனைக் கண்ணுற்ற திரு. ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இலங்கை அரசு அந்தக் கப்பல்களை தங்கள் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது. அடுத்த ஓரிரு நாட்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எங்கள் வயல் கிணற்றில் “போர்” போட்டு, கம்ப்ரசர் வைத்து சேற்றை வெளியேற்றும் வேலை செய்துகொண்டிருந்தோம். அப்போது நான் பள்ளி செல்லும் சிறுவன். எங்கள் தலைக்கு மேல் ஓரிரு விமானங்கள் மணிக்கணக்கில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. எங்களைத்தான் நோட்டமிடுகிறார்களோ என்றுகூட நினைத்தோம். ஒன்றும் புரியவில்லை. கிணற்று வேலை முடிந்து மாலை வீடுதிரும்பி இரவு 7:15 மணிக்கு வானொலியில் செய்தி கேட்ட போதுதான் உண்மை புரிந்தது. அதாவது, இலங்கை அரசால் அனுமதி மறுக்கப்பட்ட கப்பல்களில் இருந்து பொருட்கள் விமானத்தில் ஏற்றப்பட்டு, இந்திய விமானப் படை விமானங்களின் பலத்த பாதுகாப்போடு இலங்கைத் தமிழர்களுக்கு வானிலிருந்து விநியோகிக்கப்பட்டது. முறைப்படி அனுகிய கப்பலை அனுமதிக்க மறுத்த இலங்கை அரசு, அனுமதியின்றி தங்களது வான்வெளிக்குள் நுழைந்த இந்திய விமானப் படை விமானங்களை சீண்டக்கூட முன்வரவில்லை. உலக நடப்புகள் அறிந்திராத சிறுவனாக நான் இருந்தாலும், இந்தச் செய்தி என்னை ஒரு மானமுள்ள தமிழனாக, வீரமுள்ள இந்தியனாக தலை நிமிர்ந்து நிற்க வைத்தது.

இன்று இலங்கையில் தமிழ் மக்கள் மரத்தடியில் உறங்குவதாகவும், பட்டினி கிடப்பதாகவும் உலவும் செய்திகள் உண்மையானால், 1987 திரும்பட்டும். காந்தியின் பெயரால் பெருமைப்பட்டுக் கொள்ளும் எந்தன் இந்திய தேசம், மனிதாபிமான அடிப்படையில் எம் சகோதரர்களின் துயர் துடைக்க சற்றேனும் முன்வரட்டும், இந்த தேர்தல் நேரத்திலாவது!

குறிப்பு: சிறு வயதில் நடந்ததை நினைவுபடுத்தி எழுதியிருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள்

ஜான் பீ. பெனடிக்ட்,
வாசிங்டன் DC

Series Navigation

ஜான் பீ. பெனடிக்ட்,

ஜான் பீ. பெனடிக்ட்,