அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

பாஸ்கர்


அண்ணா காலமான பிப்ருவரி மூன்றாம் தேதி 1969ம் வருடம் தமிழகம் முழுவதும் வரலாறு கண்டிராத துயரத்தில் மூழ்கியது. காலை 7:15 மணிக்கு ஒலி பரப்பான தேசியச் செய்திகளில் “செய்திகள் வாசிப்பது விஜயம்” என்று சோகமான குரலில் அண்ணாவின் மறைவைப் பற்றியும், தலைவர்கள் அஞ்சலி பற்றியும் தட்டினால் பேசும் வானொலியில் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. கட்சி, ஜாதி, மதம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து பிரிவினரும் வருந்தும் அளவிற்கு காந்த சக்தி
பெற்ற அரசியல் தலைவராக சாதாரணமான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவால் எப்படி வளர முடிந்தது. வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

1937 ம ஆண்டு ராஜாஜி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர், அண்ணாவை காங்கிரசில் சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நினைத்தார். ஆனால் முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணா பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, ஜஸ்டிஸ் கட்சியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தது தெரிய வந்தது. அவருடைய பேச்சு மற்றும் எழுத்துத் திறமையால் மிக குறுகிய காலத்தில் திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக முன்னேறினார். “திராவிட நாடு” என்ற பத்திரிக்கையை 1942ம் ஆண்டு தொடங்கினார். சமூக அக்கறையுள்ள கதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள் எழுதினார். சமூக நீதி மற்றும் ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதில் பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தது. மிக சாதுர்யமாக எந்தவிதமான அடிப்படைக் கொள்கைகள் பொருட்டு இல்லாமல், பெரியார் எழுவது வயதில் திருமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம்(தி.மு.க) என்ற கட்சியை தொடங்கி அதன் பொதுச் செயலாளர் ஆனார். அவருடன் தி.க வில் இருந்து பெரிய பட்டாளமே அவருடன் வெளியேறியது. தேர்தலில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியாக தி.மு.க வை அண்ணா முன்னிறுத்தியதால், பலவிதமான சமாதானங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகியது. “அரசியல் என்பது முடிந்தவற்றைச் செயல் படுத்தும் ஒரு கலை” என்று அண்ணா நன்கு அறிந்து இருந்தார்.

வட இந்தியாவில் இருந்ததைப் போல் இல்லாமல் பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாதோர் என்ற இரண்டு பிரிவினைகள் தான் தென் இந்திய சமுதாயத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த பிரிவினை 19ம் நூற்றாண்டில் தான் வளரத் தொடங்கியது. பிராமணர் அல்லாதவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு இல்லாததும், சூத்திரர்கள் என்ற அடையாளமும் அவர்களைப் புண்படுத்தியதின் விளைவு ஜஸ்டிஸ் கட்சி உருவாக காரணமானது. அதில் இருந்து உருவான திராவிட கழகத்தின் முக்கியக் கொள்கைகளான பிராமண எதிர்ப்பு, கடவுள் இல்லை என்ற பிரச்சாரம், பிராமணர் இல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி, ஹிந்தி எதிர்ப்பு முதலானவைகள் பிரதானமானவை.

பிராமண எதிர்ப்பை மட்டும் முன்னிறுத்தி அரசியல் கட்சியாக வளர முடியாது என்று உணர்ந்த அண்ணா, தி. க கொள்கைகளைக் கொண்டு தொடங்கப் பட்ட தி.மு.க. வில் பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாக தமிழர் என்ற அடையாளத்தின் மூலமாக எல்லா தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்தார். தமிழர்கள் என்ற குடையின் கீழ் பிராமணர்கள் மற்றும் முஸ்லீம்களை அணைத்துக் கொண்டார். ஜாதி மற்றும் மதம் என்ற மக்கள் மத்தியில் இருந்த பிரிவினையை தற்காலிகமாக மறைத்து வைக்க தமிழர்கள் என்ற அடையாளம் உதவியது. தமிழர்கள் இலக்கியமாக சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் முன்னிறுத்தப் பட்டது. சங்க காலத்தில் நிலவிய தமிழர்களின் உயர்ந்த நிலையைப் பற்றி பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. 300௦௦க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் நடத்தப் பட்டன. பெரும்பாலான இலக்கிய கூட்டங்கள் நடத்தப் பட்டு, சங்க இலக்கியம், திருக்குறள் பற்றி விரிவாக பேசப் பட்டது. இந்த இலக்கியங்கள் உலகப் புகழ் பெற்றதற்கு தி. மு.கவின் இந்த நிலைப்பாடு தான் காரணம். சினிமா என்ற ஊடகத்தை அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.யார். தி.மு.க வின் கொள்கைகளைப் பரப்ப சிறந்த முறையில் பயன் படுத்தினார்கள். மின்சார மயமாக்குதல் என்ற காங்கிரசின் திட்டம் இந்த தி.மு.க வின் கொள்கை பாமரனை துரிதமாக சென்றடைய உதவியது. துண்டு பிரசுரங்கள், அடுக்கு மொழி மேடைப் பேச்சுக்கள் என்று அண்ணாவின் எண்ணங்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. “தமிழர்கள் தன் மானத்தை மீட்பது” என்ற கோஷம் மக்களை மிகவும் கவர்ந்தது.

பிராமணர்களை எதிர்க்கவில்லை “பிராமணியத்தையே” எதிர்ப்பதாக கூறினார். கடவுள் எதிர்ப்பு என்பது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற அறைகூவலில் திசை மாறியது. பல நூற்றாண்டுகளாக கடவுள் நம்பிக்கையில் ஊறிய சமூகத்தில், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற முழக்கம் அண்ணாவின் மக்களுடனான நெருக்கத்தை அதிகப் படுத்தியது. “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என்ற தனி நாடு என்ற கோரிக்கை 1963ம் ஆண்டு நடந்த தி.மு.க மாநாட்டில் கைவிடப் பட்டது. இதை “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற சிந்தாந்தத்தின் மூலமாக மாநிலத்திற்கு அதிக அதிகாரம் பெறும் முயற்சியாக அண்ணா மாற்றினார். காங்கிரஸ் எதிர்ப்பு, தி.மு.க வின் கொள்கை பரப்புதலுக்கு இடையே கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து வந்தார். இங்கு 1952ம ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக இடங்கள் பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மே தினம், பொருளாதார சமநிலை முதலியவற்றை பெற்று பொங்கல் திருநாள் தான் தமிழர்களுக்கு மே தினம் என்றும், சமதர்ம பூங்கா என்பதே லட்சியம் என்றும் அழகாக மாற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதால் கம்யூனிஸ்டுகள் வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டார். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதை சரியான முறையில் கையாளாத காங்கிரஸ் அரசு, பண வீக்கம், தி.மு.க வின் இடைவிடாத பிரச்சாரம், கம்யூனிஸ்டுகள் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனான கூட்டு, தி.மு.க விற்கு 1967ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று தந்தது.

பெரியார் அண்ணாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் “கூத்தாடிகள்” என்று கடுமையாக எதிர்த்து வந்தாலும், அண்ணா தி.மு.க பெற்ற வெற்றியை அவருக்கு சமர்பிப்பதாக கூறியதோடு மட்டுமிலாமல், அவரிடம் திருச்சிக்கு சென்று ஆசிர்வாதமும் வாங்கி வந்தார். மேலும் பக்தவத்சலம் மற்றும் காமராஜரையும் சென்று பார்த்தது தமிழ் நாட்டு அரசியல் நாகரீகத்தின் உச்ச கட்ட நிகழ்ச்சி என்றால் மிகையாகது. “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்ற அண்ணாவின் சொல் எதிர் முகாமில் இருப்பவர்களையும் மதிக்கும் பண்பை வெளிப் படுத்துவதாக உள்ளது. தமிழ்நாட்டில் சமூக மாற்றத்திற்கு வித்திட்டு ஓரளவுக்கு அதிகார பங்கீட்டை அமல்படுத்தவும் அண்ணாவின் அரசியல் வெற்றி வழி வகுத்தது.69 சதவிகித இட ஒதுக்கீடு அமல் படுத்தியது திராவிட இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல். ஆனால் அதிகாரப் பரவல் முழுவதும் எல்லா சமூகத்தினரையும் சென்றடையவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. பாட்டாளி மக்கள் கட்சி என்று வன்னியர்களும், ஆதிதிராவிடர்களுக்கென தனி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு ஜாதி சங்கங்கள் உருவாகிருப்பதே இதற்கு பிரதானமான சாட்சி. சமூக மாற்றத்திற்கு உதவிய அண்ணாவின் அரசியல் வெற்றி, பொருளாதார மாற்றத்திற்கு பெரிதும் உதவவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெரிய அளவிலான பொருளாதாரதக் கொள்கை அதனை அமல் படுத்தும் நீண்ட காலத் திட்டம் எதுவும் அண்ணாவால் தி.மு.க வில் முன்வைக்கப் படாததே காரணம் என்று தோன்றுகிறது.. தமிழை செம்மொழி அளவுக்கு உயர்த்தியது திராவிட இயக்கத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியது என்றால் மிகையாகாது. அதே நேரத்தில் கவரத்தக்க மேடைப் பேச்சுகளாலும், அண்ணாவால் ஊக்குவிக்கப் பட்டு அவரது தம்பிகளால் தொடங்கப்பட்ட பல்வேறு பத்திரிக்கைகள், இலக்கிய இதழ்கள் மற்றும் இலக்கிய கூட்டங்கள் மக்களைப் பெரிதும் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் பொழுது போக்கும் அம்சமாகவும் அமைந்தது.

அண்ணாவின் எதிர்பாராத மறைவு, அதற்குப் பிறகு தி.மு.கா வில் ஏற்பட்ட பதவிச் சண்டை, பேராசை எண்ணங்கள் தம்பிகளின் பத்திரிக்கை மற்றும் இலக்கிய முயற்சிகளில் இருந்த ஈடுபாட்டை திசை திருப்பியது. ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆட்சியாளர்களும் சினிமா பிண்ணணியில் இருந்து வந்ததால், அதற்கான முக்கியத்துவம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முதன்மை இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது. தொலைக் காட்சிகளின் வரவு அதனை மேலும் அதிகரித்தது. சினிமா என்ற பொழுது போக்கு அம்சமாக இருக்க வேண்டிய ஒன்று, தமிழ் சமூகத்தின் முக்கிய அம்சமாக மாறியது தமிழனின் தலை எழுத்து என்பதை விட வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை. அண்ணாவால் பெருமையாக மொழியப்பட்ட “கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு” அவரது தமிபிகளால்(தங்கைகளும் தான்) பதவி ஆசை, ஊழல், பேராசை, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று இன்று மாற்றப்பட்ட இழி நிலையை நினைக்கும் போது, மனதிற்கு மிகவும் வேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது. அண்ணாவால் கனவு காணப்பட்ட தமிழர்களின் சமூக பொருளாதார சமன்நிலை அடைய முயற்சிப்பது, இளைய சமூகத்திடம் தமிழின் முக்கியத்துவம் மற்றும் பண்பாடு பற்றி எடுத்துரைப்பது என்ற சூளுரை அவரது நூற்றாண்டில் நாம் அவருக்கு அளிக்கும் சிறந்த பரிசாகவும், அஞ்சலியாகவும் இருக்கும்.

Series Navigation

பாஸ்கர்

பாஸ்கர்