“கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

மலர்மன்னன்



1962 ஃபிப்ரவரி 24 ஆம் நாள் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற தினம். செங்கற்பட்டு மக்களவைத் தொகுதிக்கும் அன்றுதான் வாக்குப் பதிவு.
சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் நம் அண்ணா என்பது தெரிந்த செய்திதான். மக்களவைத் தொகுதிக்கு சுயேற்சையாகவும் தி.மு.க.வின் ஆதரவைப் பெற்றும் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டவர், புகழ் பெற்ற ஆர்க்காடு இரட்டையர்களில் ஒருவரன ஏ. ராமசாமி முதலியாரின் புதல்வர் டாக்டர் ஏ.ஆர். கிருஷ்ணசாமி.

மேடை போட்டும் ஊர்வலம் சென்றும் வெளிப்படையாகப் பிரசாரம் செய்வதற்கான அனுமதி ஃபிப்ரவரி 22 ஆம் நாள் இரவு 12 மணியோடு காலாவதியாகிவிடும். ஆகையால் அன்றைய இறுதிப் பிரசாரக் கூட்டத்திற்கு மக்களின் கவனமும் செய்தியாளர்களின் ஆர்வமும் கூடுதலாக இருந்தன. அதிலும் குறிப்பாக ஒரு கூட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. காரணம், அந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களான அண்ணாவையும் கிருஷ்ணசாமியையும் ஆதரித்துப் பேச வெகு பிரபலமான இருவர் வந்திருந்தனர். ஒருவர் ஏ. ராமசாமி முதலியார். அவர் பேசியது ஒரு பெரிய விஷயமில்லை. நீதிக் கட்சிக் காலத்திலிருந்தே அண்ணாவை அறிந்திருந்தவரான அவர், தமது நிலத்தில் விளைந்த பயிரை சிலாகித்துப் பேசுவதிலோ, அதே போலத் தம் மைந்தனுக்கு வாக்களிக்குமாறு கோருவதிலோ என்ன வியப்பிருக்க முடியும்? ஆனால் குறிப்பாக அண்ணாவை ஆதரித்துப் பேச அந்த மேடைக்கு வந்திருந்த இன்னொரு பெரியவர், மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள்தாம். அதன் காரணமாகவே அந்தக் கூட்டத்தில் மக்கள் திரள் மிக மிக அதிகமாக இருந்தது.

வழக்கத்திற்கு விரோதமாக அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார்கள். எப்போதும் கூட்டங்களில் பேசக் கால தாமதமாகவே வரும் அண்ணா வழக்கத்திற்கு விரோதமாக விரைவாகவும் மேடைக்கு வந்து விட்டார்கள்.

(கூட்டங்களுக்கு எப்போதும் தாமதமாக வருவதற்கு என்ன காராணம் என்பதை ஒருமுறை அண்ணாவே தனிமையில் சொன்னதுண்டு. எப்போதுமே இரண்டு மூன்று கூட்டங்களில் பேச வேண்டியிருக்கும் அண்ணா, ஒவ்வொரு கூட்டத்திலும் இறுதிப் பேச்சாளராகத்தான் இருக்க வேண்டியதாகும். ஏனெனில் அவர் பேசிவிட்டால் அப்புறம் கூட்டம் கலைந்துவிடும். பெரும்பாலும் கூட்டம் வருவதே அண்ணா பேசுவதைக் கேட்க வேண்டும் என்பதாற்காகத்தானே. இன்னொரு காரணம், அண்ணா முன்னதாக வந்துவிட்டால் வேறு எவரும் பேச இயலாது. எவராவது பேச முற்பட்டால் அவரைக் கூட்டத்தினர் கரங்களைத் தட்டியே உட்கார வைத்துவிடுவார்கள். அண்ணாதான் பேச வேண்டும் என்று குரல் எழுப்பத் தொடங்கி விடுவார்கள். பேச எத்தனிப்பவர் மனம் புண்பட்டுப் போவார். ஒருவர் மனம் புண்படத் தாம் காரணமாக இருப்பதை அண்ணா விரும்பியதில்லை. அனைவருக்கும் பேசுகின்ற வாய்ப்புக் கிட்டி, அவர்களும் மேடைப் பேச்சில் தேர்ச்சி வேண்டும் என்பதிலும் அவருக்கு அக்கறை அதிகம். இக்காரணங்களை அண்ணாவே ஒருமுறை தனிமையில் பலருடனும் பேசுகையில் தெரிவித்திருக்கிறார்கள்.)

அண்ணாவின் பேச்சு காஞ்சிபுரம் கூட்டத்தில் வெகு அற்புதமாக அமைந்தது. முக்கியமாக ராஜாஜி அவர்கள் மேடையிலே அமர்ந்திருக்க, அவர் முன்னிலையில் பேசும் வாய்ப்பை ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாம் பெற்றதில் அவருக்குப் பெருமிதம் மிகுந்திருப்பது அவரது முகத்திலேயே புலப் பட்டது.

அதற்கு முன் ராஜாஜி முன்னிலையில் அண்ணா பேசியது 1937 இல், அவர் இருபத்தெட்டு வயது இளைஞராகவும் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமராகவும் இருந்தபோதுதான் (அண்ணாவின் மறைவுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய ராஜாஜி அவர்கள், “நான் பிரிக்கப்படாத சென்னை ராஜதானியின் பிரதமராக இருக்கையில், திரு. அண்ணாதுரை கடவுளையும் மதத்தையும் மறுக்கும் சாமர்த்தியமுள்ள ஒரு சிறு பேச்சாளராக இருந்தார்’ என்று தமது பேச்சைத் தொடங்கினார்கள். உண்மையில் அண்ணா ஒரு சிறு பேச்சாளராக அப்போது தமது பொது வாழ்க்கையைத் தொடங்கியிருந்த போதிலும், கவனத்திற்குரிய பேச்சாளராகவே இருந்திருக்கிறார். அதனால்தான் ராஜாஜி அவர்களால் அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அண்ணா அவர்களை கடவுளையும் மதத்தையும் மறுக்கும் சாமர்த்தியமுள்ள சிறு பேச்சாளாராக ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது).

1937 இல் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளராக மேடையேறி அறிமுகமாகிவிட்டிருந்த அண்ணா அவர்கள், சென்னை எஸ்பிளனேடு கட்டிடத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்பவராக இருந்தார். அக்கூட்டங்களுக்குச் சிறந்த நகைச்சுவை நாடக ஆசிரியரும் வழாக்கறிஞருமான வி.சி. கோபால ரத்தினம் உள்ளிட்ட சென்னைப் பிரமுகர்கள் பலரும் வருவதுண்டு (வி.சி.கோபாலரத்தினம் எழுதிய “சுல்தான்பேட்டை சப் மாஜிஸ்டிரேட்’ என்கிற அருமையான நாடகத்தைப் படித்தவர்களால் அதை மறக்கவே முடியாது!). அப்படி வருபவர்களில் மிக முக்கியமானவர் ராஜாஜி அவர்கள். ராஜாஜி சென்னை மாகாணப் பிரதமரான பிறகு ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்க வருமாறு ஒய்.எம். சி. ஏ. அமைப்பளார்களால் கேட்டுக் கொள்ளப்பட்டார். அழைப்பை ஏற்று ராஜாஜி தலைமை வகித்த கூட்டத்தில் இளைஞர் அண்ணா பேசினார்கள். அதனை ஞாபகம் வைத்துக் கொண்டுதான் ராஜாஜி தமது நினைவைப் பகிர்ந்துகொண்டார்.

கூட்டம் முடிந்தபின் அண்ணாவைப் பற்றி டி. செங்கல்வராயனிடம் விசாரித்தார், ராஜாஜி. அந்த இளைஞரைக் காங்கிரசில் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்றார். அது சாத்தியமில்லை. அவர் ஈ.வே.ரா.வின் வலையில் விழுந்தாயிற்று என்று சொன்னார், செங்கல்வராயன். அவரும் அண்ணாவும் நண்பர்கள். ஒருமுறை பெத்து நாயக்கன்பேட்டை தொகுதியில் மாநகராட்சி மன்றத் தேர்தலில் இருவரும் ஒருவரை யொருவர் எதிர்த்துப் போட்டியிட்டார்கள். வாக்காளர்களைச் சந்தித்து வாக்குக் கோருவதற்காகத் தெருத் தெருவாகச் செல்லும்போது அவர்கள் சிலசமயம் சந்தித்துக் கொள்ள நேரிடும். அப்போது முகமன் கூறிக் கொண்டு அவரவர் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்வார்களாம்! ஒரு காலத்தில் தமிழகத்தின் அரசியல் அந்த அளவுக்கு நாகரிகமாகத்தான் இருந்தது (அந்தத் தேர்தலில் அண்ணா வெற்றி பெறவில்லை ).

அண்ணாவுக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவு 1958 லேயே மலரத் தொடங்கிவிட்டது. பிரபல வழக்கறிஞர் வி.பி. ராமன் தி. மு. கழகத்தில் சேர்ந்ததன் பயனாக அப்படியொரு திருப்பம் நிகழ்ந்தது.

சென்னை ராயப் பேட்டையில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை முனையில் லாயிட்ஸ் சாலையில் இன்றும் பழமைக்குரிய கம்பீரத்துடன் விளங்குகிறது, சுற்றுச் சுவருடன் கூடிய ஒரு விசாலமான வீடு. அதன் சொந்தக்காரர் ஏ.வி. ராமன். சேலம் நகாராட்சியில் தலைமைப் பொறியாளராக இருந்தவர். ஏ.வி. ராமன் தாம் வசித்த வீட்டிற்கு அடுத்த வீட்டையும் சொந்தமாகப் பெற்றிருந்தார். வீட்டு சொந்தக்காரர்கள் பலரும் எம்.ஜி. ஆர், எம்.ஜி. சக்கரபாணி சகோதரர்களுக்கு அவர்கள் சினிமாக்காரகள் என்பதால் வாடகைக்குவிடத் தயங்கிய நேரத்தில், அவர்களுக்குத் தமது வீட்டைச் சிறிதும் தயக்கமின்றி வாடகைக்கு விட்டவர், ஏ.வி. ராமன். பிறகு எம்.ஜி.ஆரின் பண்பான நடத்தை கண்டு அந்த வீட்டை அவருக்கு விற்றுவிடவும் முன் வந்தவர். “எங்களிடம் போதிய பணம் இல்லையே’ என்று எம்.ஜி.ஆர். தயங்கியபோது, உங்களால் முடிகிற போதெல்லாம் சிறுகச் சிறுகக் கொடுத்துத் தீர்த்தால் போதும் என்று சொல்லிவிட்டார், ஏ.வி. ராமன். ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அவர். அந்த ஏ.வி.ராமனின் மகன்தான் வி.பி.ராமன்.

வி.பி. ராமன் எடுத்தச் முயற்சியால்தான் முதல் முதலில் ராஜாஜி, அண்ணா சந்திப்பு நிகழ்ந்தது. ஏ.வி. ராமனைக் காண வரும் சாக்கில் ராஜாஜியும் வி.பி. ராமனைக் காணவரும் சாக்கில் அண்ணாவும், லாயிட்ஸ் சாலையில் இருந்த ஏ.வி. ராமன் வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள். இருவருமாக இணைந்து காங்கிரசை வீழ்த்தும் வியூகம் வகுப்பதற்கான முதல்படியில் அப்போதுதான் ஏறினார்கள்.

ராஜாஜி அண்ணா சந்திப்பு வெளியில் கசியாமல் இருக்குமா? செய்தியாளர்கள் அண்ணாவை மொய்த்துக் கொண்டு இருவருக்குமிடையிலான பேச்சு பற்றிக் கேட்டார்கள். அண்ணா விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. “சரி, அவர் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா அல்லது நீங்கள் சொன்னதை அவர் கேட்டுக் கொண்டாரா என்பதையாவது சொல்லுங்கள்’ என்று செய்தியாளர்கள் வற்புறுத்தினார்கள். குறும்புக்காரரான எம் அண்ணா, “நான் சொல்வதைக் கேட்கும் விதமாகத்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். அதனால் நான் சொன்னதைத்தான் ராஜாஜி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும்’ என்று சொன்னார்கள். ராஜாஜி அவர்களுக்கு ஒரு காது சரியாகக் கேட்காது. அதேபோல அண்ணாவுக்கும் ஒரு காது சரியாகக் கேட்காது!

காஞ்சிபுரம் தொகுதியில் இறுதி நாள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜாஜியின் முன்னிலையில் பேசிய அண்ணா, “ராஜ கோபாலாச்சாரியாரும் நானும் சேர்ந்திருப்பதைக் கூடா நட்பு என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களேதான் முன்பு “அறிவாளியான இந்த அண்ணாத்துரை ராஜாஜியிடமல்லவா இருக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். இப்பொழுது நாங்கள் ஒன்றாகச் சேர்ந்திருப்பதைக் கண்டதும், இது கூடா நட்பு என்கிறார்கள். உண்மையில் இது தேடாமலே அமைந்த நட்பு. காங்கிரசை வீழ்த்தும் பணியில் நாங்கள் ஒரு சாலையில் சென்றுகொண்டிருகையில் வேறு ஒரு சாலை வழியாக அதே நோக்கத்துடன் ராஜாஜி அவர்கள் வந்தார்கள். ஒரு கட்டத்தில் இரு சாலைகளும் இணைந்து, அந்தச் சந்திப்பில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். ஆகையால் இது கூடா நட்பு அல்ல, தேடா நட்பு. தேடாமலேயே கிடைத்த நட்பு. இதை நட்பு என்று கூடச் சொல்லமாட்டேன். ஏனென்றால் இன்னதைச் செய் என்று சொல்கிற வயதில் அவரும், அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்கிற வயதில் நானும் இருக்கிறோம். இது தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக ஏற்பட்ட உறவு அல்ல. இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடக்க வேண்டும், நீண்ட நேரம் நடக்க வேண்டும்’ என்று அண்ணா சொல்லி வருகையில் ராஜாஜி குறுக்கிட்டு, “நல்ல தமிழில் பேசுகிற கூட்டமாகவும் இருக்க வேண்டும்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லவும், அண்ணாவும் மற்றவர்களும் சிரித்துக் கொண்டார்கள். அண்ணாவின் தமிழ்ப் பேச்சு மிகவும் சிறப்பாக அமைவதைப் பாராட்டும் முகமாகத்தான் ராஜாஜி அவர்கள் அப்படி மறைமுகமாகக் கூறினார்கள்.

ராஜாஜி காங்கிரசை மிக மிகக் கடுமையாகத் தாக்கி வருவதால் என்ன இப்படிப் போட்டுத் தாக்குகிறாரே என்று காங்கிரஸ்கார்கள் வருத்தப்படுவதாகக் கூறிய எம் அண்ணா, அதை விளக்குவதற்காக ஒரு வேட்டியின் கதை சொல்லி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள்.

” சிலருக்கு ஒரு சுபாவம். கட்டும் போது நல்ல வெளுப்பான சலவை வேட்டியாகத்தான் எடுத்துக் கட்டுவார்கள். அது கால் பக்கம் அழுக்காகும்போது அது மேல்பக்கம் வருமாறு கால் பக்கத்தை இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அதுவும் அழுக்கானால் கட்டிய வேட்டியின் உள்பக்கம் வெளியே தெரியும்படி திருப்பிக் கட்டிக் கொள்வார்கள். உனக்கு எப்படி இது தெரியும் என்று கேட்டீர்களானால் எனக்கே அது பழக்கம். எனக்கு எப்படிப் பழக்கம் என்றால் என் குருநாதன் அருள் பெரியார் ராமசாமிக்கு அது பழக்கம்’ என்று அண்ணா சொன்னார்கள்.

“இப்படி அழுக்கான வேட்டியை வெளுக்கப் போட்டு, ஆற்றோரத்தில் வெளுப்பவர் அதை ஓங்கி ஓங்கி அடிக்கும் போது “அப்பா அது ஆறே முக்கால் ரூபாய்க்கு வாங்கிய வேட்டி. அதை இப்படிப் போட்டு அடிக்கிறாயே என்று சொல்வோமானால் அதற்கு அவர் என்ன சொல்வார்? “நீ செய்துவைத்திருக்கிற அழுக்குக்கு வெள்ளாவியில்தான் வைக்க வேண்டும். அடித்துத் தோய்க்காமல் என்ன செய்வது’ என்பார். அதைப்போலத்தான் எல்லாப் பக்கங்களிலும் அழுக்கேறிப் போன காங்கிரசை ராஜாஜி இந்த அடி அடிக்கிறார்’ என்று அண்ணா விளக்கினார்கள்.

இறுதியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் ஒரு உண்மையை அண்ணா சொன்னார்கள்:

“ராஜாஜி அவர்களே, நான் ஒரு தலைவருக்கு என் உழைப்பையெல்லாம் கொடுத்தேன். அவரிடம் என் உள்ளத்தையெல்லாம் பறி கொடுத்தேன். அவருக்கு உண்மையான தொண்டனாக இருந்தேன். ஆனால் அவரிடமிருந்து கிடைக்காத வாழ்த்தை, அவரிடமிருந்து வராத நல்லெண்ணத்தை நான் காலமெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த உங்களிடமிருந்து பெறுகிறேன். இதுதான் உலகின் மிகப் பெரிய விசித்திரம்’ என்றார் அண்ணா.

“ராஜாஜி அவர்களே, இவனுக்கு கீதை கூடத் தெரியுமா என்று எண்ணாதீர்கள். இன்றைக்கு நிஷ்காம கர்மமாகப் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமையைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். என்னோடு இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? போயும் போயும் அண்ணாத்துரையின் பக்கத்தில் உட்கர்ந்திருக்கிறாரே என்கிற ஏச்சுத்தான் கிடைக்கிறது’ என்று அண்ணா சொன்னார்கள்.

ராஜாஜிஅண்ணா உறவு 1967 தேர்தலில் உச்ச கட்டத்தை எய்தியது. தேர்தலுக்குப்பின் தி.மு.க. அரசு அமைத்த பிறகு, அரசின் ஏதோவொரு செயலை ராஜாஜி விரும்பாத நிலை ஏற்பட்டபோது, நிருபர்கள் அதுபற்றிக் குறிப்பிட்டு, அவரது கட்சிக்குள்ள தி.மு.க.வுடனான உறவு பற்றிக் கேட்டார்கள். அப்போது “தேனிலவு முடிந்துவிட்டது’ என்று ராஜாஜி சொன்னார்கள்.

நிருபர்கள் அண்ணாவைச் சந்தித்த பொழுது, “ராஜாஜி என்ன இப்படிச் சொல்கிறாரே’ என்று கேட்டார்கள். அண்ணாவுக்கா பதில் சொல்லத் தெரியாது?

“ஆமாம், தேனிலவு முடிந்த பிறகு குடும்பம் நடத்தத் தொடங்குவதுதானே வழக்கம். அவ்வாறில்லாமல் தொடர்ந்து தேனிலவிலேயேவா இருப்பார்கள்?’ என்று அண்ணா தமது வழக்கமான குறும்புப் புன்னகையுடன் திருப்பிக் கேட்டபோது செய்தியாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

அண்ணா அவர்கள் சொன்ன பதிலை பத்திரிகையில் படித்த ராஜாஜியும் அண்ணாவின் புத்தி சாதுரியத்தைப் பாராட்டிச் சிரித்தார்களாம்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்