“மறக்கவே மாட்டோம்”

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

மலர்மன்னன்


“யூ.எஸ்.எஸ். நியூ யார்க்.’

அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டிற்கென அண்மையில் உருவாக்கப்பட்ட ஐந்து நவீன ரகப் போர்க் கப்பல்களில் கடைசியாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடல் மீது பவனி வரத் தொடங்கியுள்ளது. இந்தப் போர்க் கப்பலைப் பற்றி இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், அதன் நவீன அம்சங்களையும் சாத்தியக் கூறுகளையும் விவரிப்பதல்ல. அவற்றையெல்லம் மீறி இதற்கொரு தனிச் சிறப்பு உள்ளது. முக்கியமாக அதன் கம்பீரமான முகப்புப் பகுதிக்கு. அந்த முகப்பில் சபதம் செய்வதுபோல மிகச் சுருக்கமானதொரு வாசகம் ஒரு முத்திரை பிரகடனமாகப் பொறிக்கப் பட்டுள்ளது: “மறக்கவே மாட்டோம்.’

எதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கப் போகிறது இந்தப் போர்க் கப்பல்?

2001 செப்டம்பர் 11 அன்று நியூ யார்க்கில் இரட்டை கோரபுங்களாக வானளாவி எழுந்து நின்ற உலக வர்த்தக மைய அடுக்குமாடிக் கட்டிடங்களை அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களையே ஆயுதங்களாகப் பிரயோகித்துத் தகர்த்த இடிபாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட எஃகு உலோகப் பொருள்களை உருக்கி வார்த்த இருபத்து நான்கு டன் எடையுள்ள பாளங்கள் இந்தக் கப்பலின் முகப்பினை உருவாக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

கப்பலின் முகப்பை வார்ப்பதற்காக லூசியானா மானிலத்தின் அமைட் நகரில் உள்ள உலைக் களத்திற்கு இந்த எஃகுக் கூளங்கள் கொண்டு வரப் பட்டபோது, அவை எதிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை முன்னதாகவே அறிந்திருந்ததால் அவற்றை இறக்கி வைத்த தொழிலாளர்கள்கூட மிகுந்த பயபக்தியுடன் அவற்றைக் கையாண்டார்களாம்.

2003 செபடம்பர் 9 அன்று அவற்றை உருக்கி வார்த்தெடுக்கும் பணியை மேற்கொண்ட முரட்டு உடல் வலிமை கொண்ட தொழிலாளிகளும் அதே உணர்வுடன்தான் அவற்றைக் கையாண்டனர். அந்தக் காட்சியை நேரில் பார்த்த அமெரிக்க கடற் படை கேப்டன் கெவின் வென்சிங், “”அங்கிருந்த அனைவருக்குமே அது ஓர் ஆன்மிகத் தூண்டுதலை ஏற்படுத்தும் கணமாக இருந்தது” என்றார்.

உலைக் கள நிர்வாகி ஜூனியர் ஷேவர்ஸ் அந்த எஃகுக் கூளங்களில் கை வைத்தபோது தனது பின்னங் கழுத்து முடிகள் சிலிர்த் தெழுந்தன என்றார். “”எங்கள் அனவருக்குமே அந்த எஃகு விசேஷ அர்த்தம் உள்ளதாகப் பட்டது” என்று அவர் சொன்னார். தொடர்ந்து, “”அவர்கள் நம்மை அடித்துக் கீழே வீழ்த்திவிட்டர்கள். ஆனால் அதற்காக நாம் வீழ்ந்தே கிடக்கப் போவதில்லை. நாம் மீண்டும் எழுந்து நிற்போம்” என்று அவர் உறுதிபடக் கூறினார்.

பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தை காந்திஜி முன்னின்று நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் அதனைக் காண வந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள், அவரது தோற்றத்தில் தென்பட்ட புனிதக் கோலம் கண்டு மெய் சிலிர்த்தவர்களய், அமெரிக்காவுக்கு ஒரு செய்தி தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர். “”உங்கள் பீடத்திலிருந்து பணம் என்கிற சாத்தானை இறக்கி வைத்துவிட்டு அந்த இடத்தில் ஆண்டவனை அமர்த்துங்கள்” என்று அப்போது அவர் செய்தி அளித்தார். அந்த அளவுக்கு அமெரிக்காவுக்கும் அதன் மக்களுக்கும் ஆன்மிக உணர்வைக் காட்டிலும் உலகாயதத்தில் கவனம் கூடுதல். இருந்த போதிலும் அல் கொய்தா பயங்கர வாதிகளின் கோழைத்தனமான திடீர்த் தாக்குதல் அமெரிக்க மக்களிடையே தேசிய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்து, அதுவே ஆன்மிகத் தூண்டுதலாகவும் பரிணமிக்கச் செய்து விட்டது. தேச பக்திதான் தெய்வ பக்தியின் ஊற்றுக் கண் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உலக வர்த்தகக் கேந்திர இரட்டைக் கோபுரக் கட்டிடங்களிலிருந்து பெறப்பட்ட எஃகுக் கூளம், அமெரிக்காவுக்கும் அதன் மக்களுக்கும் வெகு எளிதாக ஆன்மிகச் சிலிர்ப்பைத் தோற்றுவித்து விட்டது. இரட்டைக் கோபுரக் கட்டிடங்கள் மீதான தாக்குதல் கல்லும் இரும்பும் கொண்டு கட்டப்பட்ட வெறும் கட்டிடங்கள் மீதானது அல்ல, அது மனித நேயம் உள்ளிட்ட மானுடத்தின் விழுமியங்கள் அனைத்தின் மீதுமான தாக்குதலே என்கிற புரிந்துணர்வை அந்தச் சம்பவம் அமெரிக்க மக்களுக்கு அளித்துள்ளது.

நமது நாடு இயல்பாகவே ஆன்மிக உணர்வுக்குப் பெயர் பெற்ற நாடு. அமெரிக்காவின் மீதான பயங்கர வாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும் அதைவிடக் கொடிய பயங்கர வாதத் தாக்குதலுக்கு அது தொடர்ந்து இலக்காகிக் கொண்டு வருகிறது. எனினும் அது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறக, ஓர் அன்றாடச் செய்திபோல் முக்கியத்துவம் குன்றிப் போய்விட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் துணிவுடன் கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதோடு, மதக் கலவரம் போல் ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்கிற தேவையற்ற தயக்கத்தினால் அதனைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவதால்தான் மக்களுக்கும் ஏதோ கொலை, கொள்ளை போல அதுவும் ஒரு குற்றச் செயல் என்கிற மனோபாவம் வந்துவிட்டிருக்கிறது.

பயங்கர வாதச் செயல்களை ஒடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பாதிக்குமென்று கருதுமேயானால் அதுவே அந்தச் சமூகத்தின் மீது தமக்குச் சந்தேகம் என ஒப்புக்கொள்வதாகிவிடும் என்று நமது மத்திய, மாநில அரசுகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அண்மையில் ஆமதாபாதில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளைக் கண்டித்து, தில்லியில் முகமதிய அமைப்புகளே ஒரு பேரணியை நடத்தின. அதில் கலந்துகொண்ட ஒரு முகமதியர், மிகுந்த ஆவேசம் அடைந்தவராய், “” பயங்கர வாதச் செயலில் ஈடுபடுகிறவன் எவனக இருந்தாலும் தயை தாட்சண்யமின்றித் தூக்கிலே தொங்க விடுங்கள்” என்று கூறினார். சமய வேறுபாடுகள் மறைந்து, ஹிந்துஸ்தானத்து மக்களின் பொதுக் குரலாய் அது ஒலித்தது.

பயங்கரவதிகளால் மும்பையில் பங்குச் சந்தைக் கட்டிடம் போன்ற கேந்திரப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப் பட்டன. அதன் விளைவாகச் சிதறிய இடிபாடுகளைத் திரட்டி ஒரு சிற்பமோ வேறு ஏதேனும் நினைவுச் சின்னமோ செய்து வைக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றவில்லை. அவ்வாறு ஏதேனும் செய்து வைத்திருந்தாலாவது நம் மக்களுக்கு அது பயங்கரவாதத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்துகொண்டே இருக்கும். சிறிதும் தயக்கமின்றி பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுகளை வற்புறுத்தும் கோபாவேசத்தை அது மக்களிடையே தோற்றுவிக்கும். அதனால்தானோ என்னவோ மக்களைக் கூர் மழுங்கிப் போனவர்களாகவே வைத்திருக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத்தால் குவியும் சேதாரங்களையும் சாதாரணக் குப்பைகளைப் போலவே அள்ளிக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் எறிந்துவிட்டு வருகிறார்கள் போலும்.

உலக வர்த்தகக் கேந்திர அழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட எஃகுக் கூளங்களை உருக்கி முகப்பாக வார்த்துப் பொருத்திய போர்க்கப்பலை பயங்கரவாததிற்கு எதிரான போருக்கெனவே பயன்படுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தாக்குதல் தொடங்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் எழுநூறு வீரர்களும் முன்னூற்று அறுபது மாலுமிகளும் நிரம்பிய இக்கப்பல், பயங்கரவாததிற்கு எதிரான போரில் தனது பங்கைக் கடல் வழியே அளிக்கும்.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்