குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்

This entry is part of 33 in the series 20080724_Issue

முனைவர் இரா.காமராசுகவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தனது இடையறாத எழுத்துக்களால் அறியப்படுபவர். எங்களின் நெருங்கிய தோழமை உறவு.கவிஞர்,கதையாளர். இயக்கச் செயற்பாட்டாளர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வாசிப்பதற்கு சாத்தியமுள்ள திண்ணை,வார்ப்பு இணையதள இதழ்களில் எழுதுபவர் எனப் பன்முக ஆளுமை.

தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் மேலெழும்பித் தொழிற்படும் மாற்றுக்களையும் மற்றவைகளையும் குறித்த அக்கறையைப் படைப்பில், ஆய்வில் நிகழ்த்தி வருபவர். ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பெண்ணிய அடையாளக் கருத்தியல்களை தமிழ்ச் சூழலில் முன்னெடுப்பவர்.

ஜனகனமன,என்சிறகுகள் வான்வெளியில்,பூட்டிய அறை,மைலாஞ்சி,ஆகிய கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. பல்கலைக் கழக பாடதிட்டத்திலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் முஸ்லிம் கலாச்சாரச் சூழலில் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்திய மைலாஞ்சி கவிதைகள் மலையாளம்,இந்தி,ஆங்கிலம் மொழிகளில் பதிவாகி உள்ளன. மைலாஞ்சி விவாதங்களை உள்ளடக்கிய சின்ன சின்ன புறாக்களும் சில துப்பாக்கிகளும் என்றதொரு குறுநூலும் வெளிவந்தது.

புதுக்கவிதையில் நவீனப் போக்குகள், இஸ்லாமியப் பெண்ணியம், அரபுமார்க்சியம் நூல்களும் இவரது பிற படைப்புகள். இவை தமிழுக்கு புதிதான எழுத்து வெளிகளை அறிமுகப்படுத்தின.

ஒட்டுமொத்த மானுட விடுதலைக்கும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கும் சிறுபான்மையினரின் உணர்வுகளுக்குமாக தனது எழுத்தை,சிந்தனையை,செயல்தளத்தை அர்ப்பணித்த கவிஞர் ரசூலுக்கு ஒர் ஆய்வுக் கட்டுரை எழுதியதற்காக மதவிலக்கம் ஊர்விலக்கம் ஆகிய இரு தண்டனைகள் அளிக்கப்பட்டன.

அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் ஓராண்டு காலமாக தண்டனைக்குள்ளாகி,வாழ்வுரிமை மறுக்கப்பட்டு பெருந்துயரத்தை சுமந்து நிற்கிறது.நாகரீக சமூக அமைப்பில் ஏற்றுக் கொள்ள இயலாத இந்த தண்டனை நடைமுறை கண்டிக்கத்தக்கது. உடன் கைவிடப்பட வேண்டியது. அறிவுசார்ந்த படைப்பொன்றின் பொருட்டு நண்பர் ரசூலும் அவரது குடும்ப உறவுகளும் அனுபவித்துவரும் இன்னல்கள் தமிழ் – இந்தியப் படைப்பு வரலாற்றில் புதுமையானது. இதற்கு முன்னர் நிகழாதது.

கவிஞர் ரசூல் மற்றும் அவர் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான கருத்துப்பதிவு ஆவணமாக காபிர்பத்வா ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்ற தொகுப்பு மார்ச் 2008ல் வெலிவந்தது. அதில் இடம் பெற்றிருந்த மனித உரிமைக்கு எதிரான ஊர்விலக்கத்திற்கும் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்ட கட்டுரை தொடர்பான விவாதங்களுக்கும் எந்த பதிலும் முஸ்லிம் ஊடகங்களில் பதிவாகவில்லை. இந்த மெளனம் ஒரு தப்பித்தலாகவே தோன்றுகிறது.

இச்சூழலில் 12 – 7 – 2007 அன்று ஊர்விலக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நாளில் மன்னார்குடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் கவிஞர் தோன்றி சாட்சியமாகும் வேளையில்

குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் எனும் அவரின் இஸ்லாம் குறித்த புதிய கட்டுரை தொகுப்பு வெளிவருகிறது. இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.கவிஞர் ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்ட அந்த கறுப்புநாளை எழுத்துரிமை நாளாக அடையாளப்படுத்துகிறோம்.

பகவத்கீதை,பைபிள் உள்ளிட்ட சமயப்பிரதிகள் பல்வித வாசிப்புகளைக் கண்டடைந்துள்ளன. தோன்றிய காலத்தில் மறுமலர்ச்சி இயக்கமாக மலர்ந்த இஸ்லாம் குறித்த மீள்வாசிப்பை இன்று உலக அளவிலும் இந்தியவியல் சூழலிலும் அறிஞர்கள் பலர் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாளராக தனது ஆய்வுகளின் மூலம் நமது ரசூல் அவர்களும் வெளிப்படுத்துகிறார். தண்டனைகளால் எழுத்துக்களை தடை செய்யமுடியாது என்பதை நிரூபணம் செய்யும் இந்நூல் ரசூலின் அயராத தீவிர எழுத்து இயக்கத்திற்கு சாட்சி பகர்கிறது. (முன்னுரை)

நூல் அறிமுகம்

நூலின் பெயர் : குரானிய மொழியாடல்கள்
மீள்வாசிப்பின் தருணம்
(திறனாய்வுக் கட்டுரைகள்)

ஆசிரியர் : ஹெச்.ஜி.ரசூல்

பக்கங்கள் : 92

விலை : ரூ.50/

வெளியீடு : கீற்று,1- 48எ
அழகியமண்டபம்,முளகுமூடு- 619167
நூலைப் பெற:21/105 ஞானியார்வீதி
தக்கலை- 629175,குமரி
தமிழ்நாடு,இந்தியா
அலைபேசி: 9443172681

பொருளடக்கம் :

0 குரான்

0 மெளனங்களை பேச வைத்த தப்சீர்

0 குரானிய தத்துவவியலும் சூபித்துவமும்

0 பீர்முகமது வலியுல்லாவின் குரானிய உரையாடல்

0 மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்

0 இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்

0 விளிம்பு நிலை எழுத்தின் புனைவு அரசியல்

0 அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்

0 தாராளமய –ஷரிஅத

0 முக்கானத்துன் – முஸ்லிம் அரவாணிகள்


Series Navigation