சொல்ல வேண்டிய சில… 1

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

லதா ராமகிருஷ்ணன்



தாய்மொழியின் மீதான பற்று கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. தாய்மொழி குறித்த அன்பையும், மதிப்பையும் வளரும் சமுதாயத்தினரிடம் வளர்க்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால், யார் வளர்ப்பது? எப்படி வளர்ப்பது? என்பது குறித்து ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில், தாய்மொழிப் பற்று என்பதையே மற்றவர்கள் மீது, குறிப்பாக எளியவர்கள் மீது, அதிகாரம் செலுத்தும் வாய்ப்பாகப் பயன்படுத்தி வருபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அத்தனை நாட்கள் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்த பெற்றோர்கள் வைத்த பெயரை மாற்றி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக் கொள்வதன் மூலம் தான் இளைஞர்கள் தங்களுடைய தமிழ்ப் பற்றை நிரூபிக்க வேண்டுமென்று அறவுரைப்பவர்கள் அந்த இளைய தலைமுறையினர் தங்களுடைய பெற்றோரை அவமதிக்கலாகாது என்பதை எண்ணிப் பார்க்கலாகாதா?

இன்று கணினி யுகம். ஆங்கில எழுத்துக்கள் ஒரே தரமாக்கப்பட்டு பார்வையற்றவர்கள் இணையதளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்துவிட முடிகிறது. ஆனால், இன்றளவும் தமிழ் எழுத்துக்கள் பலதரப்பட்டவையாகவே இருந்து வருகின்றன. கணினி நிலையங்களில் தமிழ் எழுத்துக்களைப் பெறவே இயலாத நிலை. ‘களவும் கற்று மற’ என்பது தமிழ்ப் பழமொழி. எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்வதில் பாதகமொன்றுமில்லை. அதனால் ஒருவருக்குத் தன்னுடைய தாய்மொழியின் அருமை தெரியாது போய் விடும் என்பதாகாது.

தவிர, நம் தாய்மொழிப் பற்றை வளர்த்தல் என்பது இன்னொரு மொழியை தூற்றுவதன் மூலம் தான் சாத்தியமாகுமா என்ன? கென்ய மொழி எழுத்தாளர் கூகி வான் தியான்கோ பிறநாட்டவரை அடிமைகொள்ளும் அரசுகள் தங்கள் மொழியின் மேலாண்மை குறித்து மூளைச்சலவை செய்வதன் மூலமும் மக்களை அடிமைப்படுத்துவது குறித்து அகல்விரிவாக எழுதியுள்ளார் ( அ.மங்கை மொழிபெயர்த்த அவருடைய நூல் ‘காலனீய ஓர்மையகற்றல்) ஆனால், அவருடைய ஆய்வலசல் பார்வையில் பிறமொழி குறித்த காழ்ப்போ, இளக்காரமோ இருக்காது. மாறாக, மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.45 மணிக்கு ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீளும் தமிழ்ப்பண்ணை என்ற நிகழ்ச்சியை நடத்தும் தமிழறிஞர் திரு.மா.நன்னன் அவர்களுக்கு தமிழில் பிறமொழிக்கலப்பு குறித்து கோபாவேசத்துடன் பேசும் போதெல்லாம் சமஸ்கிருத மொழியை செத்த மொழி செத்த மொழி என்று நான்கைந்து முறையாவது கூறினால் தான் திருப்தி. கடவுள் இல்லையென்று அழுத்தம்திருத்தமாகக் கூறுபவர்கள் கூட (அதிலும் குறிப்பாக சில கடவுள்கள்!) செத்து விட்ட மனிதர்களை அன்போடும், மதிப்போடும் நினைவுகூர்வதில்லையா என்ன? தொல்காப்பியத்திலேயே வடமொழிச்சொல் கலந்திருக்கிறது என்று குறிப்பிடுபவர் ஆரியர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் இந்த வடமொழி வார்த்தைகளைக் கலந்து தமிழின் மாண்பையழித்து விட்டதாக அத்தனை வன்மத்தோடு திரும்பத் திரும்பக் கரித்துக் கொட்ட வேண்டிய தேவையென்ன? ஒரு மொழி உயிர்ப்போடு இருக்கும் போது அதில் பிறமொழிக் கலப்பு இயல்பு தான் என்பது உலகெங்கும், வரலாற்றுரீதியாக நிரூபணமாகியுள்ள ஒன்று. திருவள்ளுவர் பெண்களைப் பற்றி எழுதியுள்ளவை பிற்போக்குத்தனமானவை என்று மொத்த திருக்குறளையுமே மறுதலித்து விடுவோமா? அப்படிச் செய்வது எத்தனை அபத்தமான விஷயம். அதேபோல் சமஸ்கிருத மொழியில் எத்தனை வளமான எழுத்தாக்கங்கள் படைக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் தமிழகத்தை ஆதிக்கம் செய்த இனத்தின் மொழியென்பதால் அது பழிக்கப்பட வேண்டியதே என்றால் தமிழகத்தை ஆதிக்கம் செய்த, தமிழக வளத்தை சூறையாடிய மற்ற இனங்களும் மதங்களும் இல்லையா? அல்லது, தமிழ் மன்னர்களே கூட தங்களுடைய சக தமிழர்களை, ஏழை-எளியவர்களை சமமாக நடத்தினார்களா என்ன? வர்க்கபேதமும், சுரண்டலும் எங்கு தான் இல்லை? நிறவெறியும், இனவெறியும் எங்கெங்கிலும்.

வர்க்கபேதமும், சுரண்டலும், இனவெறியும், நிறவெறியும் ஒருபோதும் நியாயப்படுத்தப்படலாகாது. ஆனால், அவற்றின் உண்மையான காரணங்களை அலசியாராய்வதை விட்டு எல்லாவற்றிற்கும் இந்துமதத்தையும், சமஸ்கிருதத்தையும், பார்ப்பனர்களையும் குறைகூறிக் கொண்டே இருப்பது பிரச்னையை திசைதிருப்பும் முயற்சி தான்.

முன்பொருமுறை காந்தர்வமணம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘வடநாட்டுக் கலாச்சாரத்தில் தான் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணைப் புணரலாம்’ என்று ஒரு செய்யுளில் வருகிறது. அது உண்மை தானா என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நம் தமிழ்க் கலாச்சாரத்தில் அப்படி கிடையாது என்று முகத்தில் ஒரு அருவருப்பு பாவத்தைத் தாங்கிக் கொண்டு கூறினார் திரு.நன்னன். மகா, உற்சவம் போன்ற வார்த்தைகளெல்லாம் வடசொற்கள் தானே, தமிழில் இயல்பாகப் புழங்கி வரவில்லையா? என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிப்பதை விட ‘பொய் விலாசத்தில் எழுதியிருக்கிறார்’ , ‘தனது அடையாளத்தைக் காட்டத் துணிவில்லாத கோழை’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி அந்தக் கேள்விகளை ‘தட்டுக்கெட்டவைகளாகப் புரிய வைக்கப் பார்த்தார். தொடர்ந்து ‘உங்க சொற்களையெல்லாம் ஏன் எங்க மொழியிலே கொண்டு வரீங்க? வேணும்னா உங்க வீட்டு பூணூல் மாதிரி சடங்குகளில் உபயோகித்துக் கொள்ளுங்கள். இங்கே ஏன் கொண்டு வருகிறீர்கள்?” என்று முகத்தை அத்தனை சுளித்துக் கொண்டு கேட்டார். இந்த மாதிரி எதிர்க்கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை” என்ற பொது அறிவிப்பையும் தந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற தமிழ்ப்பண்ணை நிகழ்ச்சியில் “அன்னம் என்ற வார்த்தை மேம்பட்டதாகவும், சோறு என்ற வார்த்தை கீழ்மக்களுடையதாகவும் தமிழை நிலையிறக்கம் செய்தவர்களை நினைத்தால், ‘இவங்க தமிழுக்கு செய்திருக்கிற நாசத்தை நினைத்தால் புதைகுழியிலே இருக்கிறவர்களையெல்லாம் திரும்ப வெளியே எடுத்து சாகடிக்கணும்ங்கற அளவுக்கு ஆத்திரம் வருது” என்ற பொருள்பட முகமெல்லாம் துடிக்கக் கூறியவர் ” இப்பத் தான் நிலைமை மாறி வருதே, இன்னமும் அதையே ஏன் பேசறீங்கன்னு சிலர் கேட்கிறார்கள். ஆனால், அந்தப் பரம்பரை இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்துக்கிட்டுத் தான் இருக்கு. எரியற நெருப்பைப் பாதி அணைச்சிட்டு மீதியை நாளைக்கு அணைச்சால் போச்சு என்று விட்டுவிட முடியுமா என்ன? முழுவதுமா அணைத்துவிட வேண்டும்”, என்றார். இது வன்முறையைத் தூண்டும் பேச்சல்லவா? இன்றைய சமூக அவலங்களுக்கெல்லாம் காரணம் ‘அந்த’ பரம்பரை தான் என்று திரு.நன்னன் உண்மையாகவே நம்புகிறாரா? ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” என்பதற்கேற்ப தமிழகத்தில் பாதுகாப்பாகப் பழிக்க முடிந்தது பார்ப்பன இனத்தை மட்டும் தானே!

அதே மக்கள் தொலைக்காட்சியில் திரு.நன்னனின் நிகழ்ச்சிக்குப் பிறகு வந்த ஒரு நிகழ்ச்சியில் திரு.வி.கே.டி பாலன் கடந்த 28 வருடங்களாக ஊதுபத்தி விற்றுப் பிழைக்கும் வசந்தி என்பவரைப் (என்னை எல்லாரும் வசந்தி மாமி என்று தான் கூப்பிடுவார்கள்” என்று யதார்த்தமாகக் கூறினார் அந்த ஏழைப் பெண்மணி) பேட்டி கண்டார். தனது பிழைப்புக்குத் தேவையான சிலபல ஆங்கிலச் சொற்களை இயல்பாக உதிர்த்த அந்தப் பெண்மணிக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய் வருமானம் கிடைத்தால் அதிகம் என்பது பேட்டியின் வழி கிடைத்த தகவல். அவருக்கும் தமிழ் தான் சோறு போடுகிறது. அவரிடமிருந்து தமிழை அந்நியப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது.

அதேபோல், மற்றவர்களை ஆங்கிலம் படிக்கலாகாது என்று சொல்லிக் கொண்டே தாம் அதில் கற்றுத் தேர்ந்து தனது ஆங்கில அறிவைக் கொண்டு மற்றவர்களிடம் அதிகாரம் செலுத்தி வருபவர்களையும் நாம் அடையாளங் கண்டு கொள்ள வேண்டியது அவசியம்.

நிறைய எழுதவிருக்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கும், விவாதங்களுக்கும் இடமளிக்கும் சூழலே ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இன்றியமையாத் தேவை. அது நமக்கு எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கிறது என்று தெரியவில்லை. மனதை நெருடும் மூன்று விஷயங்களைக் கோடி காட்டி விட்டு தற்சமயம் நிறுத்திக் கொள்கிறேன்.

1)அங்கவை-சங்கவை எள்ளல் சிவாஜி படத்தில் இடம்பெற்றது குறித்து நிறைய பேர் கண்டனம் தெரிவித்து எழுதியிருந்தார்கள். எள்ளல், இளக்காரம் எல்லாமே கண்டிப்பாகக் கண்டனத்திற்குரியவையே. ஆனால், பதிவுகளில் ஒருவர் ‘தனது பாத்திரப் படைப்பிற்காக அந்த வசனங்களை சாலமன் பாப்பையா அவர்கள் பேசியதால் அவர் மன்னிப்புக் கோரினால் விட்டுவிடலாம். ஆனால், அதை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா” என்று ஒருவித குறிப்புணர்த்தலாய் எடுத்துக்காட்டியிருந்தார். சமீபத்தில் நான் கேட்ட திரைப்பட வசனமொன்று: ” என்னடா பெரிய அழகு அவ… கக்கூஸ்காரி மாதிரி இருக்கா”. ஏனோ தெரியவில்லை, இந்த மாதிரி சகமனித மதிப்பழிக்கும் வசனங்களெல்லாம் பெரிய அளவு எதிர்ப்பலைகளை ஏற்படுத்துவதில்லை.

2) சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான கனிமொழி “மனுவில் பெண்களை இழிவுபடுத்திப் பேசப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட அதற்கு ஒருவர் மறுப்பு தெரிவிக்க மனுவிலிருந்து வரிகளை எடுத்துக்காட்டி தனது கூற்றிற்கு நியாயம் கற்பித்திருந்தார். மொத்த இந்துமதமே தீவினையின் மொத்தக் கருவூலம் என்ற கருத்துடையவர்கள் அதிலிருந்து தனித்தனியே வரிகளை எடுத்து மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லையே என்று தோன்றியது. தவிர, கனிமொழிக்கு சமஸ்க்ருதம் தெரியுமா, அப்படியென்றால் அதை அவர் கற்றுக் கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்தது. மற்ற மதங்களில் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் அவர் பேசியிருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. மனுவை விடுங்கள், எந்த அரசியல் கட்சியில் பெண்களுக்கு சம உரிமையும், முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டிருக்கின்றன?

3) தனது பதினேழு வயதில் விபத்து ஒன்றில் காலை இழந்து போன , அதற்குப் பின் நடிகையான சுதா சந்திரனுக்கு இந்த வருடம் மத்திய அரசு விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது. அவருக்கு கால் போன பின் அவர் மயூரி திரைப்படத்தில் நடித்த போது எழுத்தாளர் பாலகுமாரன் தனது மரக்கால் என்ற தொடர்கதையில் ‘கால் ஊனம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், படத்தில் நடித்தால் ஒரு முறை அனுதாபத்தோடு பார்ப்பார்கள். அதற்குப் பிறகு?” என்றெல்லாம் கதையில் சுதா சந்திரனுக்கு நாலும் தெரிந்தவராய் அறவுரை கூறியிருப்பார் எழுத்தாளர். அதைப் படித்துப் பொறுக்க முடியாமல், ” செய்ய முடியாததைச் செய்து பார்ப்பது மனித இயல்பு தானே. அதற்குள் சுதா சந்திரன் மேல் தீர்ப்பளிக்கும் உரிமையை எழுத்தாளருக்கு யார் அளித்தது?” என்ற ஒரு எதிர்ப்புக் கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எழுதியனுப்பியிருந்தேன். எதிர்பார்த்தது போலவே அது வெளியாகவில்லை. இத்தனை வருடங்களாக நடிகையாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் சுதா சந்திரன்.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்