யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8

This entry is part of 39 in the series 20080605_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


“ச்சே வெட்கக்கேடு”, என்று எரிச்சலுடன் வெளிப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, முகத்திலுங்கூட எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான எலிஸபெத் பதாந்த்தேர் கோபத்தைப் புரிந்து கொள்ளமுடிந்தது. “எல்லாத்தையும் இடிச்சு தரைமட்டமாக்கியாச்சு, பெண்ணுரிமை இன்றைக்குக் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது, இதற்கு மேலே என்ன நடக்கணும்”, என்று. எதிர்க்கட்சியான இடதுசாரி சோஷலிஸ்டுகள் சத்தம் போடுகிறார்கள். “நமது நடைமுறைச் சட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதால், இம்முடிவினை ஏற்கவே முடியாது”, என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரி கட்சியின் தலைவர் பத்ரிக் தேவெஜ்ஜான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது கட்சியோ, வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராகத் தங்கள் சட்ட அமைச்சர் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறது. பிரச்சினை: திருமண ஒப்பந்ததத்தில் இட்டக் கையொப்பத்தின் மை உலர்வதற்கு முன்பே, ஒரு புதுமணத் தம்பதியரின் கோரிக்கையை ஏற்று பிரான்சு நாட்டின் வடபகுதி நகரமான லீல்(Lille) நீதிமன்றம், அவர்களது திருமணம் செல்லாது என்று அறிவித்திருக்கிறது.

இத்தனை ரகளைக்கும் காரணம், ஒரு பொய். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம், என்று சொல்வதுண்டு. புரை தீர்ந்த நன்மை பயக்குமென்று, பிரான்சுலே இளம்பெண்ணொருத்தி அவள் திருமணத்துக்காக சொன்னதென்னவோ ஒரு பொய்தான், நடந்து முடிந்த கல்யாணமும் இல்லைண்ணு ஆயுப்போச்சு. ஊருல உலகத்துலே நடக்காததா? யாரும் சொல்லாததா? அப்படியே தெரிய வந்தாலும், பிரான்சுலே இருக்கிறோம், இதைப்போய் பெரிசுபண்ணிக்கிட்டு, என்று சொல்லி நாளைக்குப் புருஷனைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம். கடைசியில், இப்படி ஒரே அடியாக அறுத்துவிடுமென்று அவள் நினைத்திருக்கவில்லை. நடந்தது இதுதான்: “நான் க்ளீண் ஸ்லேட், தப்பு தண்டா எதுவும் பண்ணலையென” தனது கன்னித்தன்மைக் குறித்து திருமனத்திற்கு முன்னே மணப்பெண், பிள்ளையாண்டானிடம் சொல்லியிருந்தாள். திருமணமும் நல்லபடியா முடிஞ்சுது, அதற்கான நேரமும் வந்தது. மாப்பிள்ளை களப கஸ்த்தூரி பூசி, தாம்பூலம் தரித்துப் பள்ளியறைக்கு முஸ்தீபாக வந்தவர், கொஞ்சூண்டு சமர்த்து, கண்டுபிடிச்சுட்டார். தாம் தூமென்று குதிக்கவில்லை, ஆனாலும் தீர்மானித்தவர்போல, இங்கே பாரும் பிள்ளாய்! இனி எனக்கும் உனக்கும் சரிப்படாது, சுமுகமா டூ விட்டுக்குவோம், என்ன சொல்ற, என்று கேட்டிருக்கிறார். பெண்ணுக்கும் மனசாட்சி உறுத்தியிருக்கிறது, தங்கள் சித்தம் அடியேன் பாக்கியம் என்றிருக்கிறாள். இருவருமாகக் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களும், ஆமாண்டியம்மா பிள்ளையாண்டான் சொல்றதிலே தப்பே இல்லை, நம்ம சிவில் சட்டம் 180 வது பிரிவு அப்படித்தான் சொல்லுது, திருமணத்திற்கு முன்னே ஆணோ பெண்ணோ இருபாலரில் ஒருவர், மற்றவருக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மணம் செய்திருந்தால், அத் திருமணம் சட்டபடி செல்லாது”, என்று அறிவித்துவிட ஆளுக்கொரு திசைக்காய் சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷத்துடன் பிரிந்ததாகத்தான் செய்தி.

தம்பதியர் இருவரும் இஸ்லாமியர். கடந்த 2006ம் ஆண்டு கோடைகாலத்தில் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் திருமணம் முடிந்த கையோடு, அவர்களுக்கிடையே பிணக்கு வந்திருக்கிறது. தேன் நிலவின்போது இருவருக்குமான முதல் இரவில், தனது நம்பிக்கைக்கு மாறாகவும், இளம்பெண் அளித்திருந்த உத்தரவாதத்துக்கு மாறாகாவும், திருமணத்திற்கு முன்பே அவள் கன்னித்தன்மையை இழந்திருப்பதை, மாப்பிள்ளை அறிந்திருக்கிறார். மறுநாளே நடந்த திருமணத்தைச் செல்லாதென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார். நீதிமன்றத்தில் இளம்பெண், தான் பொய் சொன்னது உண்மை, எனவே திருமணத்தைச் செல்லாது என்று அறிவிப்பதில் தனக்குப் பூரண உடன்பாடு உள்ளதுபோல நடந்துகொண்டிருக்கிறாள். நீதிமன்றமும், ஒரு பொய்யான நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இத்திருமணம் நடந்துள்ளது. இளம்பெண், தான் திருமணமாகாதவள், கன்னித் தன்மையை இழக்காதவள் என்ற சொற்களே, சம்பந்தப்பட்ட பெண்ணை மணப்பதென்ற ஆணின் முடிவுக்குக் காரணம், பிரெஞ்சு திருமணச் சட்டம் பிரிவு எண் 180ன் படி(திருமணத்திற்கு முன்னே ஆணோ பெண்ணோ இருபாலரில் ஒருவர், மற்றவருக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மணம் செய்துகொள்ளுதல் கூடாது) இத்திருமணம் செல்லாதென்று அறிவித்தது. திருமணம், இருவரின் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமையவேண்டும்., நடந்த திருமணத்திற்கோ பொய்யே அஸ்திவாரமாக அமைந்துவிட்டதென்று வழக்குத் தொடுத்திருக்கிற கணவனின் முறையீட்டில் நியாயமிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது, தவிர குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் வேறென்ன வேண்டும் என்கிறார்கள்; பெண், ஆணின் நம்பிக்கைக்குக் கேடு விளைவித்ததின் அடிப்படையிலேயே திருமணம் ரத்து செய்யபட்டிருக்கிறதேயன்றி, அவள் திருமணத்தின்போது கன்னித்தன்மையுடன் இருந்தாளா இல்லையா என்பதின் அடிப்படையிலல்ல என்று தீர்ப்பில் தெளிவாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “திருமணத்தை செல்லாதென்று அறிவிப்பதிமூலம், அதற்கு(திருமணத்திற்கு)ப்பின் சம்பந்தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தொடர்ச்சியாக நேர்ந்த எல்லா கசப்பான அத்தியாயங்களும் இல்லையென்றாகின்றன, அதாவது மொத்தத்தில் இவர்களிருவருக்கும் திருமணமே நடக்கவில்லை என்பது தீர்ப்பு தரும் உண்மை. விவாகரத்து என்றால், திருமணத்திற்குப் பின் நடந்த அசம்பாவிதங்களைக் கணக்கில்கொள்ளவேண்டும்: திருமணத்தையே மறுக்கிறபோது விவாகரத்து என்ற வழக்குக்கான முகாந்திரமே இல்லை.யென”, விவாகரத்துகோரி வழக்கு தொடுத்திருக்கலாமே, ஏன் திருமணத்தைச் செல்லாதென்று அறிவிக்க வழக்குத் தொடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு தம்பதியருடைய வழக்குரைஞர்கள்கள் தந்த பதில்.

இத் தீர்ப்புக்கெதிராக கட்சிபேதமின்றி பிரான்சில் பலரும் ஆவேசப்படுகிறார்கள் என்பது வெளிப்படை.. நாட்டின் ஜனாதிபதி நிக்கோலா சர்க்கோஸிக்கு நெருக்கமான, ஆளும் கட்சியின் செய்தியாளர், மக்களின் அடிப்படை உரிமையை இத்தீர்ப்பு பாதிப்பதால் மேல் முறையீடு செய்வது அவசியமென்று கூறியிருக்கிறார். அரசாங்கத் தரப்பில், தீர்ப்புக்கு எதிராக முதற்குரல் கொடுத்தவர் மகளிர் நலம் மற்றும் மகளிர் உரிமைக்கான இணை அமைச்சர் வலேரா லேத்தார், தீர்ப்பைக்கேட்டு தான் கொதித்துப் போனதாகத் தெரிவித்தார், எதற்காக உங்களுக்கு இவ்வளவு கோபம் என பத்திரிகையாளர்கள் கேட்க, ” பின்னே, இப்படியொரு வழக்கும் அதற்கொரு மோசமான தீர்ப்பும் நான் அறிந்து இந்த மண்ணிலில்லை. செய்தி அறிந்ததிலிருந்து, இக்கட்டான இந்த நிலைமைக்கு நம்மை சிக்கவைத்தது எதுவென்று நாள் முழுக்க யோசிக்க வேண்டியிருந்தது. நம்முடைய குடிமுறைச் சட்டம்(Civil Code) தவறாக புரிதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நமது குடியரசின் தார்மீகமான மதிப்பீடுகளை உயர்த்தும் வகையிலேயே சட்டங்கள் இயற்றப்பட்டு அதனைச் செயல்படுத்தியும் வருகிறோம். இக்குடியுரிமைச் சட்டத்தில் ஒரு பெண்ணின் கன்னித்தன்மையும் சேர்ந்துகொண்டது எப்படியென்பதுதான் எனக்குள்ள கேள்வி. சரி ஒர் ஆணிடம் திருமணத்திற்கு முன் இப்படியான கேள்வியுண்டா, அவன் உத்தமனென்றால் அதை நிரூபிப்பது எப்படி. ஆக ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம். ஒரு பக்கம் ஆணுக்கு நிகர் பெண்னென்று சொல்லி எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம், இன்னொரு பக்கம் சட்டத்தை மதிப்பதாகச் சொல்லிகொண்டு, பெண்களின் உரிமைகளுக்குக் கொள்ளிவைக்கிறோம், உரிமை என்பது பெண்சம்பந்தபட்டது அல்ல, ஓர் உயிர் சம்பந்தப்பட்டது, உடல்சம்பந்தப்பட்டது, மனம் சம்பந்தப்பட்டது, நமது அரசியல் சட்டத்தில் சிமோன் வெய் (பெண்ணியல்வாதி, பல முறை அமைச்சராக இருந்தவர்) கூறியதைப் போல மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்., சீற்றத்துடன் வார்த்தைகள் வருகின்றன. பெண்ணியல்வாதிகள், இனவாதத்திற்கு எதிரானவர்கள், வலதுசாரிகள் இடதுசாரிகளென ஒருத்தர் பாக்கியில்லாமல் கண்டனக் குரலெழுப்பியிருந்தார்கள், ஒரே ஒருவரைத் தவிர. அவர் பிரான்சு நாட்டின் சட்ட அமைச்சரும் இஸ்லாமியருமான ரஷீதா தத்தி என்ற பெண்மணி., அவர் “நடந்தத் திருமணத்தை ரத்து செய்ததன் மூலம் நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது, இனி அவர்கள் மறுமணம் செய்துகொள்வதில் தடையேதுமில்லை, குறிப்பாக சம்பந்தப்பட்ட இளம் பெண்ணிற்கும் அவளுடைய திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதில் விருப்பம் இருந்திருக்கிறது, அப்படியில்லையெனில் இவ்வழக்கில் இவ்வளவு ஆர்வம் காட்டியிருக்கமாட்டாள்”, என்றார். ஆனால் அவர் சார்ந்த அமைச்சரவை சகாக்களும், பிரதமரும், ஜனாதிபதியும் கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தடாலடியாக இப்போது, கன்னித் தன்மை பிரச்சினை அடிப்படையில் லீல் நகர நீதிமன்றம் எடுத்த முடிவு நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பிரச்சினை, வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரது பிரச்சினை அல்ல, நாட்டின் பிரச்சினை, எனவே மேல்முறையீடு செய்வதென்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரெஞ்சு மக்கள் பலரும், இத் தீர்ப்பிற்கு எதிராக ஏதேனும் செய்தாக வேண்டுமென்பதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகள், பெண்ணுரிமையாளர்கள், அரசியல்வாதிகள் சட்ட வல்லுனர்கள் பலருக்கும் இப்புதிய தீர்ப்பு முன்னுவமைத் தீர்ப்பாக(Jurisprudense) மாறிவிடுமோ என்று பயம், அதன் விளைவாக நாளைக்கு நாட்டில் பல திருமணங்கள் சட்டப்படி செல்லாமற்போவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டென்பது அவர்கள் வாதம். எதிர்காலத்தில் அதிலும் மேற்கத்திய சூழலில் இதைப்போன்று என்ணற்ற வழக்குகள் வருவதற்கு வாய்ப்புண்டென்றும், திருமண பந்தத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று கருதுகிறார்கள். வழக்கிற்குப் பின்னே திருமனத்திற்கு முன்பாக, இழந்த கன்னித்தன்மையை மறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கிற பிரான்சு நாட்டு இஸ்லாமியப் பெண்களின் எண்ணிக்கை, தீர்ப்பிற்குப் பின்னே திடீரென்று கணிசமாக உயர்ந்திருப்பதாகப் பிரெஞ்சு தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடைய (இஸ்லாமிய) மத நம்பிக்கையினைக் கணக்கில் கொள்ளவில்லை என்பது தெளிவு, பிரெஞ்சு குடிமுறைச் சட்டத்தின் பிரிவு எண் 180 ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் நீதித்துறையின் முக்கிய பொறுப்பினை வகிக்கும் ஒருவர் எப்பொழுது நீதிமன்றம், வழக்குத் தொடுப்பவரின் நம்பிக்கை சார்ந்த கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு பிரச்சினையை அனுமதித்ததோ, அப்பொழுதே அது மதச்சார்பின்மையின்று விலகிப்போனதாகத்தான் கொள்ள வேண்டுமென்கிறார். Ni Putes ni Soumises (Neither Prostitues nor Submissives) என்ற அமைப்பு நாடு தவறான திசையில் பயணிக்க இருப்பதைத்தான், இத்தீர்ப்பு தரும் எச்சரிக்கை என்கிறது. ·பதெலா அமாரா, நகராட்சித்துறை அமைச்சர், இவருமொரு இஸ்லாமிய பெண்மணி, லீல் நகர நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு Fatwa என்றதோடு, இத்தீர்ப்பினைக் கேட்க, ஆ·ப்கானிஸ்தானில் இருப்பதைப்போல உணர்வு, அங்குதான் காந்தகாரில் தலிபான்கள் இப்படியெல்லாம் தீர்ப்பினை வழங்கக் கேள்விப்பட்டிருக்கிறேனெனக் கடுமையாகவே விமர்சித்திருக்கிறார்.

பிரெஞ்சு நீதிமன்றம் குடிமுறைச் சட்டத்தின் அடிப்படையில் பொய்யின் அஸ்திவாரத்தில் உருவாக்கப்பட்டத் திருமண பந்தம் செல்லாது என்று அறிவித்திருப்பது இங்கே விவாதத்திற்குரியதல்ல. மாறாக பெண்ணுக்கான கன்னித்தன்மையை மாத்திரம் கணக்கில் எடுத்துக்கொண்டவர்கள், சம்பந்தபட்ட ஆணின் ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்தவில்லையே என்பதுதான் பெண்ணியல்வாதிகளுக்குள்ள கோபம் வருத்தம் எல்லாம், அதை அசலான ஆண்களும் ஆதரிக்கிறார்கள். கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டதாகச் சொல்லி செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது கொடும்பாவி கொளுத்துவது போன்ற காமெடிகளை ரசித்த நமக்கு, மேற்கத்தியரின் மனப்பான்மையை ஆதரிப்பதென்றால் சங்கடமாகத்தான் இருக்கும். பண்பாடென்பது இனம் சார்ந்ததல்ல பகுத்தறியும் மனம் சார்ந்தது. கற்பு நிலை என்று சொல்லவந்தார், இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம் என்று சொன்னது வால்ட்டேரோ, ரூஸ்ஸோவோ அல்ல, பாரதி.


nakrish2003@yahoo.fr

Series Navigation