யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7

This entry is part of 46 in the series 20080529_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாதவிச்ச வாய்க்குத் தண்ணீர் கேட்டு வந்தவர்களுக்கு விருந்தும் வச்சு ஆனைமேல அம்பாரி நடத்தின கதையா எல்லாம் நடந்திருக்கிறது. மைக் செட் போட்டு, மேளதாளமும், சரவெடியும் மாத்திரந்தான் ஏற்பாடு செய்யலை, மற்றபடி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உரியவகையில் கொண்டாடி இருக்கிறார்கள். இடம்: பாரீஸ் மாநகரம் 20வது arrondissement, சென்னை அகராதிப்படி பாரீஸ் மாநகராட்சியின் இருபதாவது வட்டம், பிரான்சுவாஸ் டொல்ட்டோ என்றொரு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த இருபத்து நான்கு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அதாவது 26-5-2008 அன்று கான் நகரத்தில் நடந்து முடிந்த திரைப்படவிழாவில் கலந்துகொண்டு திரும்பியிருந்தார்கள். ஆனானப்பட்ட திரையுலக ஜாம்பவான்களெல்லாம் விழா மாளிகை வாசலில் விரித்திருக்கும் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கான வரம் கிடைக்காதா என்று தவமிருக்க, திரைப்படத் தேர்வுகுழுவினர் இவர்களுக்கு கம்பளத்தில் நடக்க வாய்ப்பினை அளித்ததோடு, கைகளில் இவர்கள் நடித்திருந்த அல்ல வாழ்ந்திருந்த திரைப்படத்திற்காக உலகின் மிக அரிய திரைப்பட விருதெனக் கருதப்படும் 2008க்கான ‘தங்கக் கீற்றினை’க்(Palm d’Or) கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். கடந்த ஞாயிறன்று (பிரான்சு) கான் நகரத்தில் நடந்து முடிந்த 61வது திரைப்படவிழாவில், அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான சான்ப் பென் தலைமையில் கூடிய தேர்வுக் குழு பிரெஞ்சுத் திரைப்படமான ‘Entre les murs’ (நான்கு சுவர்களுக்குள்)என்ற பிரெஞ்சுத் திரைப்படத்திற்குக் கான் திரையுலக பிரதான விருதான ‘தங்கக் கீற்றினை’ அறிவித்தது. 1987க்குப் பிறகு உயரிய இப்படவிருதினைப்பெற பிரெஞ்சு படவுலகம் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. கான் திரைப்பட விருதுகள் அசலான பிரம்மாக்களுக்கு வழங்கப்படுவது. சுண்டல்போல வரிசையில் நிற்கிறவர்களுக்கெல்லாம் வாரி வழங்கப்படும் பிலிம்பேர் அவார்டோ, கலைமாமணி பட்டயமோ அல்ல.

பிரான்சுவா பேகொடோ (Francois Begaudeau) மேலே சொல்லப்பட்ட பிரான்சுவாஸ் டொல்ட்டோ உயர்நிலைப்பள்ளியின் பிரெஞ்சு மொழி ஆசிரியர். கல்வி வட்டாரத்தில், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகள் வரவேற்பைப் பெற்றிருந்தன. நாவல் ஒன்று எழுதவேண்டுமென்று நினைத்தார். எதை எழுதலாமென யோசித்தபோது உத்திகள், மொழி, வாசகர், பதிப்பாளர் என்கிற எழுத்தாளனைப் பயமுறுத்தும் சங்கதிகள் பற்றிய கவலைகளை ஒதுக்கினார். தனது வகுப்பறையென்ற நான்கு சுவர்களுக்குள் நடப்பதை வெளியுலகோடு பகிர்ந்து கொள்ள நினைத்தவர், பாசாங்கற்ற மொழி, நடிக்காத மனிதர்கள், மிகைபடுத்தாதக் காட்சிகளென்ற செயல் திட்டங்களுடன் தனக்கும் தனது மாணவர்களுக்குமான உறவின் நெகிழ்வை, நெருடலை, சச்சரவுகளை, சமாதானங்களை, முரண்களை, இனிய தருணங்களை அழகாய் என்பதைவிட அசலாய் வெளிப்படுத்தியிருந்த அந்நூலுக்குப் பெயர் ‘Entre les murs’. சொல்லபட்டிருப்பது அவரது அவரது வாழ்க்கையென்றாலும், நம்முடைய வாழ்க்கை என்பதுபோலத்தான் வாசிக்கின்ற நாம் உணருகிறோம். ஓர் எழுத்தாளன் வெற்றி எண்ணிக்கைச் சார்ந்தது அல்ல, அவன் எழுத்து சார்ந்தது என்பதற்கு பிரான்சுவா பெகொடோ மற்றொரு உதாரணம். வகுப்பறை, ஆசிரியர், நிறத்தால் இனத்தால் வேறுபட்ட மாணவர்கள், அவர்கள் பெற்றொர்களென முற்றிலும் மாறுபட்ட உலகம். இந்தியாவின் அத்தனை மாநில மாணவர்களும் சேர்ந்து படிக்கிற சென்னை மாநகராட்சி பள்ளியொன்றின் வகுப்பறை என்று ஒரு சௌகரியத்துக்காக நீங்கள் வைத்துக்கொள்ளலாம். முதல் நாளன்று பள்ளி தொடங்குவதற்கு நேரமிருக்க, காப்பி குடிக்கலாமென நினைத்து காப்பிப்பாருக்குள் நுழைவதும், நேரம் விரயமாக அவசரகதியில் காப்பியை கையிலெடுத்து கொதிக்கக் கொதிக்க விழுங்குவது, சன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தியபடி மாணவர்களைக் கண்காணிப்பது; போதிய மதிப்பெண்களில்லை என்பதற்காக இரண்டாவது வருடமும் மாணவன் ஒருவனை அதே வகுப்பில் நிறுத்திவைக்க, பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு எடுத்த முடிவை அறிந்த தாய் நிலைகுலைந்து போவதென அசலான வாழ்க்கையை நாவலில் பதிவு செய்திருப்பதைப்போலவே திரைப்படத்திலும் அதனை வெளிப்படுத்தியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.

லொரான் காந்த்தே (Laurent Cantet) என்ற பிரெஞ்சு இயக்குனர் 2006 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் பிரான்சுவா பேகொடோவைச் சந்தித்து ‘Entre les murs’ (நான்கு சுவர்களுக்குள்) நாவலைத் தாம் திரைப்படமாக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இயக்குனருக்கு நாவலில் வருகிற வகுப்பறை சம்பவங்களுக்கே முக்கியத்துவம்கொடுத்து அழுத்தமாக சொல்லப்படவேண்டுமென்ற அவா. தனது உள்ளக்கிடக்கிடக்கையையும் ஒளிக்கவில்லை, தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் படப்படிப்புக்கான கல்வித் ஸ்தாபதனத்தை தேர்வு செய்வதில் இருவருக்கும் அபிப்ராய பேதம். நாவலில் இடம் பெற்ற பள்ளியிலிருந்து மாற்றலாகி பிரான்சுவா பேகொடோ இப்போது அங்கிருந்து சற்று தூரத்திலிருந்த வேறொரு அரசுப் பள்ளியில் பணிபுரிய தொடங்கியிருந்தார். பழைய பள்ளிக்கு மீண்டும் திரும்பி படபிடிப்பு நடத்துவதை ஏனோ அவர் விரும்பவில்லை. புதிய பள்ளியின் தலைமை ஆசிரியரை விசாரிக்க, நாவலில் இடம்பெறுகிற பள்ளியின் தர வரிசையிலேயே அப்பள்ளியும் அமைந்திருப்பதோடு, பிற காரணிகளும் பழைய பள்ளிக்கு ஒப்பவே இருந்தன: பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கர்கள், ஏழ்மை நிலை, கல்வியறிவில் பின்னடைவு..இப்படி. ஆக நாவலில் வருகிற பள்ளிக்கு, இப்புதிய பள்ளியும் கச்சிதமாகப் பொருந்தியது. நாவலாசிரியரான பிரான்சுவா பேகொடோவையே கதையில் வருகிற பள்ளி ஆசிரியராக இயக்குனர் நடிக்கவைத்தார், ஆகப் படத்தின் ஹீரோ அவர்தான். படத்தின் நாயகி வகுப்பறை. பிற நடிகர் நடிகைகள் பள்ளி மாணவர்கள். இவர்கள் தொழில்முறை நடிகர்களல்லர் என்பது ஒரு பக்கம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இன, நிற அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பது மற்றொரு பக்கம். ஆக பேகொடோ தனது நாவலில் குறிப்பிட்டுள்ள உண்மை அனுபவங்களை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தும் வகையிலேயே திரைப்படமும் எடுக்கப்பட்டது.

இத்திரைப்படம் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை பிரான்சில் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு பதவியேற்ற வலதுசாரி அரசாங்கம், சீர்திருத்தம் என்ற பேரில் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க தீர்மானித்திருக்கிறது. முக்கிய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுவரை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஊர்வலம் போகட்டும், நான் இறங்கிவரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்த பிரான்சின் கல்வி மந்திரி சவியே தர்க்கோஸ், Entre les murs திரைப்படம் ஆசிரியர்களின் கடும் உழைப்பைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அடுத்து இத்திரைப்படம் அரசாங்கத்தின் வெளிநாட்டினர்மீதான புதிய கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்யும்வகையில் அமைந்துள்ளது. படத்தில் நடித்திருக்கும் சில ஆப்ரிக்க மானவர்களின் பெற்றோர்கள் பிரான்சில் வசிப்பதற்கான உரிய உரிமம் இல்லாதவர்கள். தங்களைக் பிரெஞ்சு அரசு நாட்டைவிட்டு வெளியேற்றக்கூடாது என்று போராடிவருபவர்கள், அவர்களது பிள்ளைகளுக்கும் அதுதான் விதி என்ற நிலைமை. இந்நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள், பிள்ளைகளை மனதிற் கொண்டாவது அப்பெற்றோர்களை நாட்டைவிட்டு அனுப்பக்கூடாதென்று, அரசை வற்புறுத்தி வருகிறார்கள், பள்ளி ஆசிரியர்களும் தங்கள் மாணவ்ர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். திரைப்படத்தின் நாவலாசிரியரும் பள்ளி ஆசிரியருமான பிரான்சுவா பேகொடோவும், படத்தின் இயக்குனர் லொரான் காந்த்தேவும், அத்தகைய பரிதாபத்திற்குறிய மாணவர்களைத் தங்கள் படத்தில் நடிக்கவைத்து உலக அரங்கில் பிரெஞ்சு அரசாங்கத்தின் வெளி நாட்டினர் கொள்கையை இன்றைக்கு கண்டனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அரசாங்கம் தற்போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பிரச்சினைகளைத் தார்மீக உணர்வுடன் கவனிக்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இத்தனை இக்கட்டை பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய Entre les murs படத்தின் தயாரிப்பாளர் வேறுயாருமல்ல, அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு தொலைகாட்சி நிறுவனம்.

பெரும்பாலான பிரெஞ்சுத் திரைப்படங்களைப்போன்றே இத் திரைப் படமும் நாவலை அடிப்படையாகக்கொண்டு, அதன் அகப்பாட்டுக்கு உட்பட்டு வரிபிசகாமல் எடுக்கப்பட்டதென்கிறபோதிலும், பிற திரைப்படங்களில் காணக்கிடைக்காத உண்மையின் கனிவான பார்வைக்கு, தேர்வுக் குழுவினர் மனதைப் பறிகொடுத்ததில் ஆச்சரியமேதுமில்லை. கதையில் இடம்பெறும் பள்ளி மாணவர்களே திரைப் படத்திலும் பங்கேற்றனர். வசனமெழுத நட்சத்திர ஓட்டலில் ரூம் போடவில்லை. வகுப்பறையில் இயல்பாய் எதிரொலிக்கும் உரையாடல்களையே திரைப்படத்திற்கும் பயன் படுத்திக்கொண்டனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வகுப்பறையை மைய்யமாகக் கொண்டு சொல்லப்பட்டிருப்பதற்காக ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தவர்கள் இத்திரைப்படத்திற்கு The Class பெயரிட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான போலிவுட், கோலிவுட் பிரம்மாக்கள் சீச்சி இந்தப்பழம் புளிக்குமென கான் திரைப்படவிழாவைக் குறித்துப் புலம்பிக்கொண்டிருக்க, சிங்கப்பூரிலிருந்து தமிழ்க் குறும்படமொன்று My Magic என்ற பெயரில் போட்டியின் தேர்வில் அனுமதிக்கப்பட்டிருந்தது மகிழ்ச்சி தரும் செய்தி. தவிர வழக்கம்போல இவ்வருடமும் தகுதிச் சுற்றுக்கு தேர்வான ஒரு பிரெஞ்சுப் படம் (la Frontiere de l’aube) குறித்து பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர், சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர் பார்க்கவேண்டியர்களைப் பார்த்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, இடம்பெற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு. நம்மூர் பிரம்மாக்கள் இந்தப் பிரெஞ்சுத் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு முயற்சித்துப் பார்க்கலாம்.

கான் திரைப்பட விழா நடக்கும் மாளிகையின் கதவு திறக்குமா எனப் பலர் ஏங்கிக் கொண்டிருக்க, அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி கடந்த பிப்ரவரிமாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டில் 61வது திரைப்பட விழா நடந்த அதே மண்டபத்தில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி என்ற பெண் ஐந்தாவது உலகக் கேரம் போட்டியில் மகளிர் பிரிவில் முதலாவதாக வந்து சாம்பியன் பட்டத்தை வென்ற செய்தி பழங்கதையாகிவிட்டது. எதிர்காலத்தில் இந்த இளவழகியை நடிகையாக பாவித்து கான் பரிசை வென்றுவந்ததாக எழுதக்கூடிய அபாயம் தமிழில் நிறையவேயுண்டு. கான் திரைப்பட விழாவில் இவ் வருடம் ‘தங்கக் கீற்று’ பரிசுபெற்ற திரைப்பட பங்களிப்பாளர்களும் சரி, 2008க்கான மகளிர் கேரம் விளையாட்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்ற இளவழகியும் சரி, சராசரி மனிதர்கள், முன்னது உண்மை, பின்னது உழைப்பு. பல நேரங்களில் சிபாரிசுகள் வெற்றிக்கு உதவுவதில்லை.


nakrish2003@yahoo.fr

Series Navigation