கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ஜடாயு


காங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற ஜனதா தளம்” கட்சியை அனேகமாக மண்ணைக் கவ்வ வைத்ததோடு, அரசியல் ஸ்திரத்தன்மை, மாநில முன்னேற்றம், தேசிய அளிவிலான பிரசினைகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களித்த கர்நாடக மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த நேரம், ஊடகங்கள் மண்டையைக் குடைந்து கொண்டு பா.ஜ.க வெற்றிக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தன. எடியூரப்பாவை முதல்வராக முன்னிறுத்தியதன் மூலம் அப்பட்டமான லிங்காயத் ஜாதி அடையாளத்தைக் காட்டி பாஜக அரசியல் செய்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் புலம்பினார்கள். “இதற்காகத் தான் நாங்கள் முதல்வர் யார் என்றே அறிவிக்கவில்லை!” என்று கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன கர்நாடக காங்கிரசின் தலைவர் ஒருவர் கூறியது கலகலப்பான காமெடி. “ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும், அவர் ஏதாவது ஒரு ஜாதிக் காரராக இருந்துதானே ஆகவேண்டும்? என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?” என்ற நிருபரின் கேள்விக்கு அவர்கள் வழிந்த அசடைப் பார்க்க வேண்டுமே!

தேர்தல் பிரசாரத்தில் ஆரம்ப முதலே பாஜக ஒரு தெளிவான, உறுதியான வானவில் சமூக ஆதரவை விழைந்தது என்பது தான் சரியாக இருக்கும். எடியூரப்பா, மாநிலத் தலைவர் சதானந்த கௌடா, பெங்களூர் நகர எம்.பி அனந்தகுமார் இந்த மூவரின் படங்கள் பிரதானமாகவும், மேலிருந்து அத்வானி, வாஜ்பாய் ஆசி வழங்குவது போலும் பாஜக வெளியிட்ட அனைத்து விளம்பரங்களும் நகரம், கிராமம், உழவர்கள், தொழில்முனைவோர், முக்கியமான சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித் துவம் செய்தன. மாறாக, காங்கிரஸ் விளம்பரங்களிலேயே அந்தக் கட்சியின் குழப்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. விளம்பரம் செய்வது எந்தக் குழு என்பதைப் பொறுத்து அதில் இந்திரா காந்தி, ராஜீவ், மல்லிகார்ஜுன் கர்கே, ஜாபர் ஷெரீப், ராகுல், எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, தரம்சிங், பிரகாஷ், வீரப்ப மொய்லி என்று 12 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்!

மத்திய கர்நாடகம், கடற்கரை மாவட்டங்கள், பெங்களூர், வடக்கு கர்நாடகம், ஆந்திராவை ஒட்டிய பெல்லாரி பகுதிகள் இவை அனைத்திலும் கணிசமான வாக்கு விகிதத்தையும் பெற்று, இடங்களையும் வென்றதன் மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றியுள்ளது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தேவகவுடாவின் கோட்டையான மைசூர் பிரதேசத்தில் மட்டுமே பாஜகவுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இது ஒரு பிரதேச போக்கு மட்டுமே தவிர, தேவகவுடாவின் சமூகத்தினரான ஒக்கலிகர்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பது கண்கூடு. வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களில் 17 பேர் இந்த சமூகத்தினர் (ஜனதாதளத்தில் 15 பேர்). 9 பிராமண பாஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் (கர்நாடக மக்கள்தொகையில் 7% பிராமணர்கள்). வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் பாஜகவில் இல்லாததால் தான் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்த பாஜக தலைமை, ஆட்சி அமைக்கும் நேரத்தில் ஒரு முஸ்லீம் அமைச்சர் அரசில் கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது. இத்துடன், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 36 ரிசர்வ் தொகுதிகளில் 22ஐயும், பழங்குடியினர் ரிசர்வ் தொகுதிகளில் கணிசமான இடங்களையும் பா.ஜ.க, கைப்பற்றையுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. பிரணய்ராயின் என்.டி.டிவி போன்ற சில தொலைக் காட்சிகள் சாதிதான் தேர்தலில் மிக முக்கியமான காரணி என்று “அறிவியல் பூர்வமான” ஒற்றைப் படைக் கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்லி வருவதனால், இது ஒரு பிரம்மாண்டமான விஷயமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில், பிரதிநிதித்துவம் என்ற அளவில் மட்டுமே இதன் தாக்கத்தைப் பார்க்கவேண்டும். இதோடு கூட, ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது அப்போதைய சூழலும், தேவைகளும், பிரசினைகளும் தான்.

இந்த தேர்தலின் முக்கிய பிரசினைகளாக இருந்தவைகள் என்னென்ன?

காங்கிரஸ் வெற்றியடைந்தால் அதில் சோனியா, ராகுல் மற்றும் “முதல் குடும்பத்தின்” பங்களிப்பையும், தோல்விகளுக்கெல்லாம் அமானுஷ்யமான காரணங்களையும் காண்பதை ஒரு கலையாகவும், பாரம்பரியமாகவும் ஆக்கிக் கொண்டுள்ள காங்கிரஸ், இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரசினைகளை மட்டும் வைத்து மக்கள் வாக்களித்தார்கள், தேசிய அளவிலான எந்த பிரசினையும் விவாதிக்கப் படவேயில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய வாக்காளர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்ற ஆயுதத்தை பிரயோகிப்பதில் அவர்கள் சாதுர்யமானவர்களாகி வருகிறார்கள் என்பதை பல சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்து வருகின்றன. பல விஷயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில், அடித்தட்டிலிருந்து வந்த, எளிமையானவராகவும், உழைப்பாளியாகவும் அறியப் பட்ட எடியூரப்பாவின் உறுதியான தலைமையை முன்வைத்தது மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உத்திரவாதம் கூறியது : இந்த இரண்டும் பா.ஜ.க வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். பல முன்னேறும் மாநிலங்களில் இரு கட்சி ஜனநாயகம் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், மூன்று கட்சிகளால் விளையும் குழப்பங்களை மக்கள் ஊகித்து ஜனதா தளத்தை ஓரங்கட்டினார்கள் என்றும் சொல்லலாம். மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப் படுத்தத் தவறியது, ஜிகாதி தீவிரவாதத்தை ஒடுக்காமல் மறைமுக ஆதரவு அளித்து வருவது உள்ளிட்ட தேசிய அளவிலான பிரசினைகளும் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் நிகழ்ந்த மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில், அந்த நிகழ்வுக்கும், அப்சல் குருவை இன்னும் தூக்கிலாமலிருப்பதற்கும், வட கர்நாடகம், ஹூப்ளி பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டி பா.ஜ.க செய்த தேசப் பாதுகாப்பு பற்றிய பிரசாரம் பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தீவிரவாதத்தை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று அழாதகுறையாக காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருந்தது தான் மிச்சம். பா.ஜக. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், இதற்கு முழுப் பொறுப்பாளி மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று அடித்துச் சொல்லப் பட்ட பிரசாரத்தைக் கூட எதிர்கொள்ளத் திராணியற்றுப் போய் இருந்தது காங்கிரஸ் தரப்பு.

இந்துத்துவம்..

ஆகக் கூடி, இந்தத் தேர்தலில் “பா.ஜக இந்துத்துவம் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் இந்த வெற்றிக்கும் இந்துத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்கிற அதிசய “உண்மையை”யும் செக்யுலர் ஊடகங்கள் மறக்காமல் சொல்லிவருகின்றன. ஆனால், இத்தகைய செய்திகளின் தலைப்புகள் என்னவோ “Saffron Surge” “Karnataka goes saffron” என்று இருக்கின்றன!

1980களில் ஹெக்டே அரசுக்கு சிறிய கட்சியாக ஆதரவு அளித்த பா.ஜக., 90களில் ராமஜன்ம பூமி இயக்கத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் பெருவளர்ச்சி கண்டு, இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு பெரிய சாதனை. அமரர் யாதவராவ் ஜோஷி, அமரர் ஹெச்.வி. சேஷாத்ரி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் அயராத உழைப்பால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து இயக்கங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளில் வேரோடி இருந்ததும், பொதுப் பணிகள், சமூக சேவை, இந்து சமூக ஒருங்கிணைப்பு இவற்றில் ஈடுபட்டிருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இது பற்றிக் கேட்டபோது, பாஜகவின் அருண் ஜெட்லி, “தெளிவாகவே, பாஜ.க ஒரு கருத்துச் சார்புடைய கட்சி. கொள்கைச் சார்புடைய தொண்டர்களைக் கொண்ட கட்சி. மக்களுக்கு இது நன்றாகவே தெரியும், அதைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை” (We are an idelogical party, and clearly a cadre based party. People know that very well, no need to keep repeating that). என்று கூறினார். எனவே இந்தத் தேர்தல் வெற்றியை, இந்துத்துவம் என்கிற சமூக, அரசியல் சித்தாந்தம் கர்நாடக மக்களால் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்பதற்கான குறியீடாகக் கொள்வதில் தவறேதும் இல்லை.
தமிழர்கள், தமிழகம்…

ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்படுத்திய ஒகேனக்கல் பிரசினை தேர்தலின் போது தலைகாட்டாமல் அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாடு காத்தது சந்தர்ப்பவாத அரசியலின் ஒரு யுக்தி என்றாலும், ஆரோக்கியமான முன்னுதாரணம். காவிரி பிரசினையில் வெளிப்படையான தமிழர் எதிர்ப்பு நிலைப் பாட்டை எடுத்து வரும் வட்டள் நாகராஜை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைத்ததன் மூலம், மொழிவெறி அரசியலைத் தெளிவாகவே நிராகரித்திருக்கும் கன்னட மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரத்தில் எடியூரப்பாவையும், ஏன் பா.ஜ.கவையுவே தமிழக எதிரிகள் என்ற கணக்கில் சித்தரித்து பீதியைக் கிளப்பிய பொறுப்பற்ற பல தமிழ் ஊடகங்கள் கண்டனத்திற்குரியவை. கடும் இந்துத்துவ வெறுப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற சட்டகத்தில் அடித்த எதிர்மறை மனப்பான்மைகளை மூட்டி கட்டி வைத்து விட்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நட்புறவைக் குலைக்கும் படி அவைகள் கருத்துக்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது.

கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இரண்டு : கோலார், சாமராஜ் நகர் பகுதி, பெங்களூர் நகரின் பல பகுதிகள். இதில் முதலில் குறிப்பிட்ட தொகுதிகள் உள்ள பிரதேசம் முழுவதுமே ஜனதாதளம், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர், அது ஒரு அலை. ஆனால் பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், ஜெயநகர், சி.வி.ராமன் நகர், பெங்களூர் தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிவாகை சூடியதில் கணிசமான அளவு பெங்களூர் தமிழர்களின் வாக்குகள் இருந்தேயாக வேண்டும் என்பது கண்கூடு.

தேர்தல் வெற்றிக்குப் பின் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் எடியூரப்பா ஒகேனக்கல் பிரசினையில் தனது தரப்பைத் தெளிவாகவே கூறியிருக்கிறார் –
“.. ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.
தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி… எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.”

அரசியல் சட்ட அடிப்படையிலும், காவிரி நடுவர்மன்ற முடிவுகளின் படியும், தமிழக அரசின் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஆட்சேபிக்க முடியாது என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ஒரு மாநில முதல்வர் என்ற அளவில் எடியூரப்பா முதிர்ச்சியுடனும், தேசிய உணர்வுடனும் பேசியிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் உறுதியான பிடிப்பு வைத்திருக்கும் அவரது நிலைப்பாடு நம்பிக்கையளிக்கிறது. தமிழக முதல்வர் தானைத் தலைவர் ஒருமுறை கூட அண்டை மாநில மக்களைப் பற்றி இவ்வளவு அன்போடு ஏதாவது கூறி, நான் படித்ததாக ஞாபகம் இல்லை.

இன்று கர்நாடகம்? நாளை பாரதம்?

இந்தத் தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் தேசிய அரசியலில் ஏற்கனவே புயலைக் கிளப்பத் தொடங்கி விட்டன. ஏழு பெரிய மாநிலங்களில் பாஜக அரசுகள் உள்ள நிலையில், காங்கிரசை விடப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக அடைந்திருக்கிறது. இடதுசாரிகளின் இழுபறி ஆதரவுடனும், பெயரளவில் அதிகாரம் செலுத்தும் ஒரு பிரதமருடனும் ஓடிக் கொண்டிருக்கும் சோனியாவின் சமையலறை கேபினெட் மத்திய அரசு, மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரசினைகள் ஒவ்வொன்றையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும், காங்கிரஸ் கட்சி தனது வீழ்ச்சி மற்றும் தோல்விக்கான காரணங்களை சிறிதும் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. விநாச காலே விபரீத புத்தி:?

கர்நாடகம் தென்னகத்தில் பா.ஜகவின் வரவைக் கட்டியம் கூறும் நுழைவாயில் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறுகின்றனர். தமிழகம், கேரளம், ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களிலும் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற நடவடிக்கைகள், இந்துமதம் மீது துவேஷம் வளர்க்காத அரசியல், முன்னேற்றம் விழையும் திட்டங்கள் ஆகிய கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கிறது. இதனை செயல்திறனோடு ஒருங்கிணைக்கக் கூடிய அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் இந்த மாநிலங்களில் பா.ஜ.க உருவாக்க வேண்டும்.

கர்நாடக வெற்றியில் இருந்து, பா.ஜ.கவும் சரி, காங்கிரசும் சரி, கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.


jataayu.b@gmail.com
http://jataayu.blogspot.com/

Series Navigation

ஜடாயு

ஜடாயு