சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

மலர் மன்னன்


“முற்போக்காளர்’ என்கிற முகச் சாயம் பூசிக்கொண்டுள்ள சில தரப்பினர் டாக்டர் அம்பேத்கரை அவர் ஏதோ ஹிந்து சமயத்திற்கும் ஹிந்து சமூகத்திற்கும் பரம விரோதி என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதனை எவரும் வலுவாக மறுக்காமல் அலட்சியமாக விட்டுவைத்ததால் அந்த மாயத் தோற்றமே அம்பேத்கரின் உண்மையான வடிவம் என்கிற எண்ணம் முழு விவரங்கள் அறியாதோரிடையே வேரூன்றிவிட்டிருக்கிறது. நான் பங்கேற்றுப் பேசுகின்ற கூட்டங்களில் அம்பேத்கர் தொடர்பான சில தகவல்களைக் கூறுகிற பொழுது, “நிஜமாகவா, நிஜமாகவா’ என்று வியப்புடன் கேட்கிறவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.

எங்கும் உள்ளதுதான்

எல்லாச் சமூகங்களையும் போலவே ஹிந்து சமூகத்திலும் புகுத்தப்பட்டுவிட்ட சில கொடிய பழக்கங்களையும், எவ்வித ஆதாரமும் இல்லாத போதிலும் மிகவும் சாமர்த்தியமாக அவற்றுக்குச் சமயத்தின் அங்கீகாரம் இருப்பதுபோன்ற புனைவு தோற்றுவிக்கப்பட்டதையும் மிக மிகக் கடுமையாகக் கண்டித்தவர் அம்பேத்கர் என்பதுதான் உண்மையேயன்றி, மேலும் நல்லெண்ணம் காரணமாகவே அத்தகைய கடும் விமர்சனங்களை அவர் மேர்கொள்ள நேர்ந்ததேயன்றி, ஹிந்து சமயத்தின் மீதோ ஹிந்து சமூகத்தின் மீதோ அவருக்கு துவேஷம் சிறிதளவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சுவாமி ராமானுஜர், சுவாமி தயானந்த சரஸ்வதி, வடலூர் வள்ளலார் சுவாமி ராமலிங்கர், நாஞ்சில் நாட்டு சுவாமி அய்யா வைகுந்தர், சுவாமி விவேகானந்தர், சுவாமி நாராயண குரு, சுவாமி அமிர்தானந்தமயி அம்மா எனக் காலந்தோறும் பல பெரியோர்கள் ஹிந்து சமூகத்தில் சேரும் கசடுகளைத் தூர் வாருவதற்காகத் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனெனில் ஹிந்து சமயமும், ஹிந்து சமூகமும் மிகமிகத் தொன்மை வாய்ந்தவை. இதன் காரணமாகவே கால மாற்றங்களின் பாதிப்புகளால் அவ்வப்போது சிதிலமடையக் கூடியவை. அவ்வாறான சிதைவுகளைச் சீர் செய்யும் பொருட்டே இத்தகைய பெரியோர்கள் தோன்றி சீரமைப்புப் பணியை மேற்கொள்கிறார்கள். புத்தரும் அவ்வாறான சீர்திருத்தம் காண வந்த பெரியவரே.
சரியையும் கிரியையுமே முக்கியம், போகிற பாதையே அடைய வேண்டிய இலக்கு என்றாகிவிட்ட ஒரு கால கட்டத்தில் பயணத்திற்கு மட்டுமே பாதை, அதுவே முடிந்த முடிவல்ல என்று புரிய வைப்பதற்காக வந்தவர் புத்தர். கால்நடைகளின் அழிவு மனித இனத்திற்கே அழிவாக முடியும் என்கிற விஞ்ஞான உண்மையைப் புலப் படுத்தியவர் புத்தர். இதுவும் வேத கால ஒழுங்குதான். கர்ம காண்டம் முக்கியமல்ல, ஞான காண்டமே அதனிலும் முக்கியம் என்கிற வேத வியாக்கியானத்தைத் தான் புத்தர் நினைவூட்டினார்.

சைவ, வைணவ எதிர்ப்பின் காரணம்

புத்தரின் இந்தப் புத்திமதி பிற்காலத்தில் அழுக்குப் போகக் குளிப்பதே வேண்டாம், ஆசையை வளர்க்கும் என்பதால் உழைத்துப் பிழைக்காமல் கையேந்தித் திரிவதே உத்தமம் என்றெல்லாம் அபத்தமான கொள்கையாகப் போனதால்தான் சைவமும் வைணவமும் அதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டியதாயிற்று. பவுத்தம் ஆயுதப் பயிற்சியே அனாவசியம் என்று கருதுகிற அளவுக்கு சாத்வீக உணர்வைப் பரப்பி அன் னியர் ஆக்கிரமிப்பிற்கு இடமளித்துவிட்டதால் வீர சைவரும் வீர வைணவரும் அதனை அடியோடு களைந்தெறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சமணமும் பவுத்தத்தின் வழி சென்றதால் எதிர்க்கப்பட வேண்டியதாயிற்று.

தமது காலகட்டத்தில் ஹிந்து சமுதாயத்தைச் சீர்திருத்த முற்பட்ட புத்தரைப் போலப் பின்னர் வந்தவர்களில் முக்கியமானவர் ராமானுஜர். தீண்டாமை மட்டுமல்ல, சாதி யமைப்பே
ஹிந்து சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப் படவேண்டும் என்று சாதித்தவர் மகா பெரியவர் சுவாமி ராமானுஜர்.

ராமானுஜர் சொன்ன அதே வாசகங்களைப் பிற்காலத்தில் வலியுறுத்திச் சொன்னவர்தாம் வாராது வந்த மாமணி போல் வந்த விநாயக தாமோதர வீர சாவர்கர் அவர்கள். அவர் சொன்னதை அப்படியே வழி மொழிந்தவர் அம்பேத்கர். இந்த அடிப்படையில் ஹிந்து சமூகத்தைச் சீர்ர்திருத்த வந்தவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர், அம்பேத்கர். மரணமுறுவதற்கு இரண்டே மாதங்கள் இருக்கையில் ஒரு பரிசோதனை முயற்சியாக அவர் பவுத்தம் தழுவியது ஹிந்து விரோதச் செயல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஹிந்து சமூகத்தின் நலனை முன்னிட்டு அவர் அளித்த அதிர்ச்சி வைத்தியம். நமக்காக ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு சிகிச்சையைக் கையாள்வதில்லையா, அவையெல்லாம் நல்லெண்ணம் காரணமாகவேன்றி நம்மை அழித்தொழித்துவிட வேண்டும் என்பதற்காக அல்லவே அல்ல, அல்லவா?

சாவர்கர் விடுதலைக்கு அம்பேத்கரின் உதவி

வீர சாவர்கர் அவர்களின் அபிமானியாகவே இறுதிவரை இருந்தவர் அம்பேதகர். 1948ல் காந்திஜி கொலை வழக்கில் வீர சாவர்கரையும் தந்திரமாகச் சிக்க வைத்தபோது மத்திய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், சாவர்கரை வழக்கிலிருந்து விடுவிக்கச் சரியான சட்ட நுணுக்கங்களைப் பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்பது பலரும் அறியாத, ஏன், நம்பவே முடியாத தகவலாக இருக்கலாம். ஆனால் அது ஆதாரம் உள்ள முற்றிலும் உண்மையான விவரம்தான்! பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களுக்குச் சட்ட நுணுக்கங்களை எடுத்துக் கொடுத்ததோடு அம்பேத்கர் திருப்தியடைந்துவிடவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எப்பாடு பட்டாவது குற்றம் நிரூபணமாகச் செய்து, தண்டனை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்கிறவழக்கமான காவல் துறை சம்பிரதாயத்தைக் கடைப் பிடிக்காமல் நியாயத்திற்கு உட்பட்டு வழக்காடுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர்களையும் எச்சரித்தார், அம்பேத்கர். இதுவும் ஆவணமாகப் பதிவுபெற்றிருக்கிற நிஜம்தான்!

“புத்தருக்கு இணையான பெருமகன் சாவர்கர்’

மஹாராஷ்டிரத்தி லுள்ள ரத்தின கிரியில் ஊர் எல்லையைத் தாண்டிச் செல்லக் கூடாது என்கிற நிபந்தனையுடன் ஊர்க் காவலில் சாவர்கர் வைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்தே அவருடைய அபிமானியாக இருந்து வந்தவர்தான், அம்பேத்கர். அவர் நடத்தி வந்த “ஜனதா’ என்ற இதழ் 1933 ஏப்ரல் மாதம் வெளியிட்ட தனது சிறப்பிதழில் சாவர்கரை புத்தருக்கு இணையான பெருமகன் என வர்ணித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் இனியும் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைச் சகித்துக்கொண்டிருக்கலாகாது என சாவர்கர் கூறிய அறிவுரையைக் குறிப்பிட்டு, அவரைப் புகழ்ந்து கொண்டாடியது.

ரத்தினகிரியில் சாவர்கர் ஊர்க் காலில் வைக்கப்பட்டிருந்த கால கட்டத்தில், அங்குள்ள பள்ளியில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் ஆசிரியராக நியமிக்கப் பட்டார். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மேல் சாதியினரில் பலர் எச்சரிக்கை செய்து அந்த நியமனத்தை ரத்துசெய்யக் கோரினர். இதனை சாவர்கர் வன்மையாகக் கண்டித்து, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆசிரியராகப் பணியாற்றினால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்கிற அளவுக்கு சாதி வெறி பிடித்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் இருக்குமிடத்திற்குப் பள்ளிக் கூடமே தேவையில்லை என்று சாவர்கர் எழுதினார். அரசின் கல்வித் துறைக்கும் அவர் தமது கருத்தை வலியுறுத்தி, தாழ்த்தப்பட்டவருக்கே ஆசிரியர் நியமனம் கிடைக்கச் செய்தார். இச்சம்பவத்தை அம்பேத்கர் தமது ஜனதா இதழில் விரிவாக விவரித்து, சாவர்கரைக் கொண்டாடினார்.

அதே கால கட்டத்தில்தான் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான அறப் போராட்டம் ஒன்றைத் தொடங்க நேர்ந்தது. அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்து அம்பேத்கருக்குக் கடிதம் எழுதிய சாவர்கர், “நான் மட்டும் இப்படியொரு ஊர்க் காவல் கைதியாக இல்லாமல் சுதந்திர புருஷனாக இருக்கும் பட்சத்தில், உங்கள் போராட்டத்தில் பங்கேற்று முதல் கைதியாகச் சிறை செல்லும் வாய்ப்பினைப் பெற்றிருப்பேன்’ என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சாவர்கர் தமக்கு எழுதிய கடிதத்தைத் தமது ‘ஜனதா’ இதழில் வெளியிட்ட அம்பேத்கர், ” தீண்டாமைக் கொடுமையை மட்டுமின்றி, சாதி என்கிற கட்டமைப்பையே ஹிந்து சமுதாயத்திலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற கருத்துள்ள சிலருள் தாங்களும் ஒருவர் என்பதை அறிய, அளப்பரிய ஆனந்தம் அடைகிறேன்’ என்று சாவர்கர்ஜிக்கு பதில் எழுதினார்.

சாவர்கரை மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் பாடுபட்ட ஆரிய சமாஜத் துறவி சுவாமி சிரத்தானந்தரையும் அம்பேத்கர் புகழ்ந்து பேசவும் எழுதவும் தவறவில்லை. ஹிந்து மஹா சபையில் இணைந்திருந்த சுவாமி சிரத்தானந்தர், பிற சமயங்களைத் தழுவிவிட்டிருந்தவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாகவே முகமதிய வெறியன் ஒருவனால் அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையை ஏதோ தெரியாமல் நடந்துவிட்ட பிழை என்று காந்திஜி சமாதானம் சொன்னபோது, அதனை வன்மையாகக் கண்டிக்கவும் அம்பேத்கர் தயங்கவில்லை.

ஆரிய, திராவிட அபத்தங்களின் எதிர்ப்பாளர்

ஹிந்து சமயத்தைப் பிளவுபடுத்தினால் ஒரு பெரும் பகுதியினரை மிகவும் எளிதாகக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்துவிடலாம் எனத் திட்டமிட்ட ஐரோப்பிய புத்திசாலிகள், ஆரியதிராவிட சித்தாந்தத்தை உருவாக்கினார்கள். கால்டுவெல் பாதிரியார் இதில் முன்னின்றார். ஹிந்து சமுதாயத்தை இவ்வாறு பிளவுபடுத்துவதன் நோக்கத்தை மிகச் சரியாகவே அடையாளம் கண்டுகொண்டவர், அம்பேத்கர்.

சருமத்தின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரிய திராவிட இன வேறுபாடு செய்யும் விசித்திரக் கோட்பாட்டை அவர் எள்ளி நகையாடினார்.

“”ஹிந்துஸ்தானத்தின் மீது ஆரியப் படையெடுப்பு என்பதெல்லாம் வக்கிரமான ஆய்வின் கண்டுபிடிப்பேயன்றி, ஆதாரங்களின் வலுவான அடிப்படையில் தெரிய வந்த உண்மையல்ல. சரும நிறத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மானிடவியலாளர் செய்யும் பாகுபாடுகள் அபத்தமானவை” என்று எழுதினார், அம்பேத்கர். அதனிலும் பார்க்க, “” பார்ப்பனர்கள் ஆரியர் என்றால் தாழ்த்தப்பட்டோரும் ஆரியரே; பார்ப்பனர் திராவிடர் என்றால் தாழ்த்தப்பட்டோரும் திராவிடர்தாம்” என்று தெளிவாகச் சொன்னார், அம்பேத்கர்.
ஐரோப்பியக் கண் கொண்டு எதையும் பார்க்க மட்டுமே கற்றுக் கொண்டிருக்க்கிற நேருவுக்கு நம்மைப்பற்றி என்ன தெரியும்? என்றும் எள்ளி நகையாடினார் அம்பேத்கர். ஏனெனில் நேருவும் ஐரோப்பிய உள்நோக்க போலி ஆய்வாளர்களின் சித்தாந்தத்தில் ஊறிப் போனவராய் ஆரியதிராவிட மயக்கத்தில் கிடந்தவர்தாம்!

முற்போக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு ஹிந்து சமுதாயத்தைப் பிளவுபடுத்த முயற்சி செய்கிறவர்கள் அம்பேத்கரை எப்படி வர்ணித்தாலும், சரியான பார்வையில் அவரைக் காண வேண்டிய தருணம் இது.

இடையன் சொன்னதைக் கேட்பானேன்?

ஹிந்துஸ்தானத்தின் நலன் கருதியும், ஹிந்து சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும் அம்பேத்கர் எழுதியும் பேசியும் வந்த ஆவணங்கள் அழிந்துவிடவில்லை. கீதாசாரியன் எடுத்துரைத்த வர்ணாசிரம தர்மத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளக்கம் அளித்தவர், அம்பேத்கர். வர்ணம் என்பது சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப ஒரு நபரிடமே தோற்றங்
கொள்ளும் குண வியல்புகளே என்று அவர் சொன்னார். தகப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என அது சொல்லவில்லை என்றார். சிரசு, புஜம், வயிறு, கால்கள் என்பனவெல்லாம் படிமங்கள் என அவர் அறிந்திருந்தார்.

பழமைவாதிகள் வர்ணங்களை மேல்சாதி கீழ் சாதி என்கிற கண்ணோட்டத்துடன் பார்த்து கீதைக்கு அர்த்தம் சொன்னபோது, “” அப்படியா? அப்படியானால் அதைச் சொன்னவன் ஓர் இடையனே அல்லவா? மேல் சாதியினரான நீங்கள் அதையேன் கேட்கிறீர்கள்?” என்று கேட்டு, அவர்களின் வாயை அடைத்தவர் அம்பேத்கர். இந்த விஷயத்தில் அம்பேத்கரின் விமர்சனப் பார்வையிலிருந்து காந்திஜியும் தப்பவில்லை. “ஒரு பழமையாளராகத்தான் காந்தி கீதைக்குப் பொருள் கூறுகிறார். அவருக்கு ஆழ்ந்து நோக்கும் புதிய நோக்கு இல்லை’ என்று சொன்னவர் அம்பேத்கர்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு அம்பேத்கருக்கு ஹிந்து சமூகத்தின் அப்பட்டமான விரோதியைப் போன்ற ஒரு பொய் வடிவத்தைக் கூசாமல் தோற்றுவிக்கும் “முற்போக்காளர்’ களின் சாதுரியத்தைப் பார்க்கிறபோது மெய்யாகவே பிரமிப்புதான் எழுகிறது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மையாகிவிடும் என்று சொல்வது எவ்வளவு சரியான கணிப்பு!


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்