Last kilo Byte – 10

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கே ஆர் மணி


கோப்பு – 1 :
ரகுவரன் இறந்துபோனார்.

எழுத உட்கார்ந்தபோது தம்பி சொன்னான். “ஏண்டா உனக்கு வேறே வேலையே இல்லையாடா.. எவன் செத்தாலும் எங்கடா எழுதறதுன்னு காத்திட்டிருக்கியாடா. இதெல்லாம் போடறதுக்கு ஒரு திண்ணைவேற..” எனது எழுத்துபலூனில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறியது. நிறைய நினைத்திருந்தேன். எழுத. எல்லாம் மறந்தும் போயிற்று. அதிகமாக பேசப்பட்டு மிகப்பெரியதாய்
எதிர்பார்க்கப்பட்டு, கொஞ்சமாய் பங்களிப்பு செய்தவர் என்பதைத்தவிர வேறெதுவும் நினைக்கதோன்றவில்லை. ஆளுமை ஓளிவட்டம் மிகப்பெரிய வலை. அதனுள்ளே சிக்கி அழிந்துபோனவர்கள் பலர். என்னைப்பொறுத்தவரையில் ரகுவரனுக்கு கண்டிப்பாய் அந்த லிஸ்டில் இடமுண்டு. அவரை திரையுலகம் பெரிதாய் பயன்படுத்தவில்லை என்று வழக்கமான பாட்டு. கொஞ்சம் ஓழுக்கமும், வாழ்க்கையின் மீது கட்டுப்பாடும் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமோ என்று ஏங்கவைக்கிற தனிநபர் ஆளுமை. சத்தியசாயியின் பக்தராகிவிட்டார், ரோகினியினுடான திருமணம் என்கிற செய்திகளெல்லாம் சரியான வாழ்க்கை பாதையை கண்டடைந்துவிட்டார் என்று சந்தோசப்பட்ட வேளையில் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. திரையுலக விக்ரமாதித்தன்கள் எந்த வேதாளத்திற்காகவும் ரொம்ப மெனக்கெடுவதில்லை. அவர்களுக்கு வழியெல்லாம் வேதாளம்தான். பாவம் வேதாளம்தான் கேள்விகளை கேட்டுக்கொண்டு பதிலையும் நோக்கி தேடவேண்டும். ரகுவரன் தன்னையே தொலைத்துகொண்ட ஆளுமை. ஹ¥ம்.
Atleast his soul rest in peace.. அதுவும் சந்தேகம்தான்.

கோப்பு – 2 :
அமீர்கானின் தாரே சமீன்.

நிறைய பேசியாயிற்று. நிறைய பேர் எழுதியாயிற்று. என் ஐந்து வயது பையன் அதை இரண்டுமுறை பார்த்தான். பார்த்ததிற்கு பின் அவனுக்கு படம் வரைதல் அதிகமாய் பிடித்துப்போனது. அதீத கவனமில்லாமல் வரைகிற படத்தில் இப்போது எக்கச்சக்க கவனம் செலுத்துகிறான், ஏதோ அமீர்கான் கடைசியில் வந்து அவனை பாராட்டுவார் என்று எண்ணுகிறானோ என்னவோ. அவனது குண்டு டீச்சர் பாசத்தால் அதிகமான ஸ்டார்களை போடுகிறாள். அதற்காகவாவது அவர்களை தனியாக பாராட்டவேண்டும் என்று சொன்னால் என் மீது சந்தேகக் கணைகள் வருகின்றன. நான் என்ன மிஞ்சிப்போனால், எப்படி இந்த பாலக்காட்டுகாரர்களுக்கு மட்டும் வெண்ணெயால் செய்தது போல தேகமும், பிரதமன் போல குரலுமிருக்கிறது என்று எல்லா அழகான பெண்களிடம் கேட்கும் கேள்வியைத்தான் கேட்கப்போகிறேன். எனக்கென்னமோ ஸீரங்கத்துப்பெண்களைவிட பாலக்காட்டு பெண்களுக்குத்தான் ஓட்டு. நீண்டநாள் குடும்பச்சவாரிகளுக்கு ஏற்ற குதிரைகள் என்று எழுதினால் பெண்ணிய பிரச்சனைகள தலைதூக்கலாம் என்பதால் எழுதாமல் விட்டுவிடுகிறேன்.

Back to அமீர். இடைவேளைக்கு பின் வந்து, வெற்றியடைகிற கதாநாயகன் அரிது, அரிது அதுவும் இந்தி, தமிழ் சினிமாவில் மிகவுமே அரிது. பேனர்களிலும், விளம்பர ஊடகங்களிலும் அமீர்கான் படத்தில் வந்த பையனுக்குத்தான் முதலிடம் கொடுத்தாரே தவிர
அவருக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுருக்கமாக இது கதையும் அந்த சிறுவன் சார்ந்த படமும் என்கிறதான எண்ணமுமே படர முயற்சித்தார்.

வர்த்தக ரீதியாக வெற்றியும், கதைக்கான முக்கியத்துவம் அதிகமாகவும், கதைநாயகனுக்கான அதி முக்கியத்துவம் குறைவாகவும்
இந்தி சினிமா வரும்காலத்தில் மாறினால் அந்த மாற்ற வரைபடத்தின் ஒரு உந்து சக்தியாக, திருப்புமுனையாக அமீர்கானிருப்பார்
என்பது உள்ளங்கை நெல்லிக்காய். படத்தில் ஒரு காட்சி. அமீர்கான் குழந்தையின் அப்பாவிடம் சொல்லுவார்.

” பழைய காலத்தில ஒரு செடி அழியணும்னா.. அதை வெட்டறதுக்கு பதிலா எல்லாரும் சேந்து நிண்ணு அதை கெட்டவார்த்தையால
திட்டுவாங்க.. திட்டிட்டேயிருப்பாங்க.. கொஞ்சகாலத்தில அது தானவே கருகிப்போயிரும்.. குழந்தையும் அப்படி சொல்லிட்டேயிருந்தா
போதும் .. அதுவும் பட்டுப்போயிரும்..” [ அவரது அச்சு அசலான வசனமல்ல ]

சமுதாயம் கூட அப்படித்தான். எல்லாரும் சேர்ந்து ஒரு இனத்தையையோ, ஆளுமையையோ திட்டிக்கொண்டேயிருக்கிறோம். எல்லோரும் எல்லாரையும் திட்டிக்கொண்டிருப்பதால் நமது எல்லா நிலங்களிலும் பயிர்கள் பட்டுப்போகின்றன.

கோப்பு – 3 :
மிருகவதை தவறு, சரி, மனிதவதை ?

ஜல்லிக்கட்டு மிருகவதை என்று ஓரே பேச்சு. நல்லதாய் போச்சு. ஓரளவு பகுத்தறிவு பெறுகிறது ஜனங்கள் மெல்ல மெல்ல.
தமிழர் வீரம், கண்ணகி சிலை என்று அதிக நாள் கூத்தடிக்கமுடியாது. செல்லப்பாவின் வாடிவாசல் படிக்கும்போது ஜல்லிக்கட்டு
பிரச்சனை ஞாபகம் வந்தது. செல்லப்பாவின் நடை.. அப்பா.. வத்தலக்குண்டு என்பதால் அந்த மதுரை நடை அப்படியே.. வெறும்
நடை மட்டுமல்ல.. ஒரு பாத்திரம் யோசிக்கும்போது கூட ஒரு மதுரை கிழம், இளம் அந்த வார்த்தைகளால்தான் யோசிக்கும்.
வீரத்திற்கான விழுமியங்கள் மாறுவருகின்றன. இப்படி எல்லாம் மாறும் என்ற நம்பிக்கைபிறக்கிறது. சதா நம்மை, நம் சமுதாயத்தை
கேள்விகளால் துளைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். மற்றவரை, வெறுக்காத நேர்மறை கேள்விக்கணைகளால் தீர்வுகள் நிரம்பிய
கருத்துகளால் மெல்ல மெல்ல பகுத்தறிவு பெறவைக்கலாம்.

ஜல்லிக்கட்டு மிருகவதை சரி. திரைகளில் தங்களை வதைத்து சண்டை செய்யும் ஸ்டண்ட் மாஸ்டர்களும் (அவர்களுக்கு பிடித்தே
செய்தாலும்) அதுவும் ஒருவகை வதைதானே. மற்றவர்களை குசிப்படுத்தவும், வீரம் காக்கவும் செய்யப்படுகிற ஜல்லிக்கட்டு
தடைசெய்யப்படலாமென்கிறபோது ஏன் சண்டைக்காட்சிகள், குறைந்தபட்சம் கேள்விக்குள்ளாக்காவதுபடலாம். மனித உயிர்களுக்கு
வலியும், மரணமும் ஏற்படுத்துகிற பிரமாண்ட காட்சிகளில் கிராபிக் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது சண்டை காட்சியை
காட்டியதுபோலவுமிருக்கும், மனிதர்களின் நேரிடி ஈடுபாடில்லாமலுமிருக்கும். மீசைக்கு பங்கமில்லாமல் கூழையும் குடிக்கலாம்.

கோப்பு – 4 : (மாறுதலுக்காய் ஒரு கவிதை.. கமர்சியல் பிரேக் போல.. கவிதை பிரேக்.)

இக்கணமே,

இந்தக்கணம்
அமைதியாய் அழகாயிருக்கிறது.
சந்தோசமாவுமிருக்கிறது.

போனகணம்
துக்கங்களின் சுமைகளோடு
கணமாயிருந்தது.

ஏன் அது அப்படியிருந்தது,
இது இப்படியிருக்கிறது
என்று புரியவுமில்லை.
புரிய முயற்சித்தலில் பிடிபடவுமில்லை.

அவைகள் கடந்துபோனதா
இல்லை நான் தான்
அவைகளை தாண்டி நகர்ந்துபோனேனா ?

ஹார்மோன்கள் என்கிறது அறிவியல்
ஆன்மா என்கிறது ஆன்மீகம்
நிகழ்தல் என்கிறது யதார்த்த அறிவியல்.
விதி என்கிறது யதார்த்த ஆன்மீகம்.

எது எப்படியோ, என் பெயரோ
அவைகள் அப்படியே அமைகின்றன.
ஹ¥ம்..
இந்தக்கணத்தில் கேள்வியாய்,
மொக்கை கவிதையாய்.

கோப்பு – 5 : ( ஏன் கவிதை? வந்தது. வேற வழி. பூவோடு சேர்ந்து எனக்கு கொஞ்சமாவது மணம் வரவேண்டாமா.. ?? )

மும்பை கவிஞர்களுக்கு குசலேனின் அவல்:

கவிதைகளின் உருவம் ஏனோ சில நாட்களாய் கவருவதேயில்லை. போரடித்துவிட்ட வடாபாவ்வு போல. சில கவிநண்பர்கள் அந்த எண்ணத்தில் சில சமயம் உளி கொண்டு அடித்துவிடுகிறார்கள். அந்த மாலைப்பொழுது அப்படித்தானிருந்திருக்கமுடியும். ‘மும்பை கவிமலர்கள்’ என்கிற தலைப்பில் துர்காபேசினர்.அழகான பட்டிமன்றபேச்சு. குறைவான விசயங்கள், தெளிவான வெளிப்பாடு. ஒரு ஊர்க் கவிதையின் அறிமுகபேச்சு அப்படிதானிருக்கவேண்டும். ஒரு பெரிய விவாதத்திற்கான விதையை அங்கு எதிர்ப்பார்க்கமுடியாதுதான். தென்மொழி படிக்கசெல்கிற தூயதமிழ் இயக்கம், மரபுக்கவிதையை தாண்டிவராது அதனை அதன் பழைய தாவணிப்புனிதத்தோடு கட்டிக்காக்கிற ஒரு சில தலைகள், ஒரு சில புதுக் கவிஞர்களும் கூட. தமிழின் அத்தனை முகங்களும் கொஞ்சம் தெரிவதாய் நினைத்துக்கொண்டேன். இத்தனையும் தாண்டி கவிதை வளரவேண்டும், பாரளுமன்றம் தாண்டி இந்தியாவின் வளர்ச்சிபோல.
பாவம் கவிதை.

விழா முடிந்து நடக்கிற விவாதங்களில்தான் பதிவுபோல நல்ல விசய அறுவடை. கவிதைகள் வார்த்தை தாண்டி நிகழ்கிறது. அதற்கான களத்தை அதுவே தேடிக்கொள்கிறது. வார்த்தைகள் அதற்கு ஒரு சின்ன படகுதான். அதன்மூலம் அவைகள் கடத்தப்படுகின்றன. மறுபடியும் மறுநிகழ்வு மறுமுனையில் சம்பவிக்கிறது என்கிறார்கள். சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை இட்டு நிரப்ப வாசகனின் மனத்தேர்ச்சியும், முதிர்ச்சியும் முக்கியமென்கிறார்கள். தனது நிகழ்வை வார்த்தைகளால், படிமங்களால், குறியீடுகளால் இட்டு நிரப்பி அதன் மூலம் உணர்வுப்பூர்வ துள்ளலை துளைத்து, அகவெழுச்சி அடைந்து, அதன் மூலம் புறவுலகை தூண்டி – என் தலைக்குமேல பந்து போயிற்று. It is bouncer.

ஆண்மூலம் அரசாளும்.
என் மூலம்
எப்போது வெளியே வரும்.

ஆகா கவிதை.. கவிதை.. கவிஞர்களிடம் பேசினாலே பாருங்கள், கவிதை வருகிறது. சயான் தமிழ் சங்கம் பக்கத்து சாயா தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் மூலமும் கவிதையும் வந்துவிடும் என்று தோன்றிற்று.

கவிஞர்கள் கவிதைத்தூண்டில் கொண்டு காத்திருக்கிறார்கள். அம்மாவிடம், தங்கையிடம், தோழியிடம், வெளியிடம், ரயிலிடம், ஆணிடம், பெண்ணிடம், அவ்விடம், இவ்விடமென நீக்கமற கவிதைக் கருக்கள் நிரம்பியிருப்பதாகவும். தங்களது தூண்டிலுக்காக காத்திருப்பதாகவும் எண்ணுகிறார்கள். [குறி கொண்டு புணர்தலுக்காய் யோனித்தவம் புரிகிறார்கள் என்று எழுதவேண்டுமாம். அப்படி எழுதினால் அதிர்ச்சி அலையும், பின் நவினத்துவ முத்திரையும் விழுமாம்.. எனக்கு பிடிக்காததால் கவிஞர் பட்டத்தை மயிரிழையில் தவறவிட்டேன்.]

நல்ல கவிதைகள் கடைசி நேரகாமம் போல, அதன் கிக், பேரின்பம் கொஞ்சம் மணித்துளிகள்தான், ஒரு கால்லிட்டர் மதுக்கோப்பைபோல் நீட்டியயின்பம் தரவில்லை என்றால், என்ன மட்டமான விமர்சகன், நபும்சகன் என்றெல்லாம் பார்வையால் திட்டுகிறார்கள். Actually What i say, தனித்தமிழ் பெருஞ்சித்தரனார் கோபம் கொள்வார். மரபுக் குஞ்சுகள் மிதித்தால் நீ தாங்க மாட்டாய் என்ற எச்சரிக்கை. வாயை மூடிக்கொள்கிறேன்.

ஜெய காண்டீபன், கலைக்கூத்தன், ஆராவயல் பெரியசாமி என்கிறவர்களின் எழுத்தை நான் படித்ததில்லை. மதியழகன், தமிழ்நேசன், புதியமாதவி, அன்பாதவன் போன்ற பெயர்கள் மும்பைக்கு ரொம்ப சம்பத்தப்பட்ட பெயர்கள். அவர்களின் கவிதை அறிமுகத்தைவிட அவர்களின் கவிதையை விமர்சனம் செய்திருந்தால் ரொம்பவே சந்தோசப்பட்டிருப்பார்கள். அடுத்தகட்டத்தை நோக்கி போகவேண்டிய வயிற்றுக்கடுப்புடன் ரொம்ப நாளகவே அவர்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை சாமரமல்ல. கைகோர்த்து, சுய அரசியலற்ற, காழ்ப்புணர்ச்சியற்ற விமர்சனம். கொஞ்சம் பாராட்டு, நிறைய குட்டு, அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்கிற வினா, இன்னும் செய்தாலென்ன என்கிற முதுகு தள்ளுகிற கேள்விகள், பராவியில்லை ட்ரை பண்ணிப்பாருங்க என்கிறதான் புன்முறுவல் இதுதான் அவர்களை அடுத்த கூட்டுக்கு முட்டித்தள்ளும். ஓரிரு புத்தகங்களை போட்டுவிட்டு அடுத்த மீனுக்காக காத்திருக்கிறவர்கள், முதல் வியாபாரம் வேடிக்கை முடிந்து அடுத்த வியாபாரத்தின் ஐடியாக்களுக்காக காத்திருக்கும் தொழில் முனைவர்கள் போன்றவர்கள். முதல் செயலை விட பெரியதாய், சிறப்பாய், அதிலிருந்து கற்று செய்யவேண்டும் என்கிற சிந்தனை அதற்கான முனைப்புமிருந்தால் அடுத்த வான எல்லைகளுக்கு போக முயற்சிக்கிற ஜனார்த்தனின் சீகலை போல கொஞ்சம் கொஞ்சமாய் உயரலாம். முதலில் கலைஞனுக்கான கலை அவனுக்காக. அப்புறம்தானே மற்றவர்களுக்கு. அவனே வளராத, சந்தோசமடையாது
கூலிக்கு, சில கைத்தட்டலுக்கு மாரடித்தால் அங்கேது வளர்ச்சி.

மதியழகனின் இரண்டாவது தொகுப்பு கையில் வந்தது. முதல் தொகுப்பிலும் சில நல்ல கவிதைகள் வந்தன. இரண்டாவது தொகுப்பில் வளர்ந்ததுபோலத்தான் தெரிகிறது. கவிதைகளை பற்றி எழுதுவது ரொம்பவே அலுப்புத்தருகிறது. விமர்சனப்பார்வையற்ற ஒரு சாதரண வாசகரிடம் கொடுத்து அவருக்கு பிடித்ததை சொல்லச் சொன்னபோது சில அதிசயங்கள் காத்திருந்தன. மேலாண்மை துறையில் இதை சந்தை ஆராய்தல் என்பார்கள். Feed back மெக்கானிசம் என்றும் சொல்லிக்கொள்ளலாம். நாம் சாதரணம் என்கிற கவிதைகள் மற்றவரால் ஆகா, ஓகோ எனக்கூறப்படுதலும், நாம் ஆகா என நினைத்து வெகுசாதாரணமாய் மற்றவர் புரட்டிவிட்டு போகுதலும் கவிதை நிகழ்கிறது, எழுதப்படுகிறது, வாசிக்கப்படுகிறது ஆனாலும் அது வாசிப்பவரிடம் நிகழப்படுகிறது. ஆகா..நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கவிதை என்பது இப்படித்தான் போலும்.கவிஞனின் வேலை அதை வார்த்தைகளால் நிகழ்த்தி காட்டுவதுதான். அதோடு அவன் இறந்துபோகிறான். அதை மறுபடியும் நிகழ்த்துகிற முதிர்ச்சியும், தேவையும் வாசகனுக்கு இருக்கும்பட்சத்திலே அந்த சந்தோச மின்சாரம் பாய்கிறது. ஒரு சில சந்தோச மின் அதிர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன எங்கள் மும்பை கவிமலர்களிடம்.

“பாவ்வில் திணிக்கப்பட்ட வடாபோல பிதுங்கி நிற்கிறது தாம்பத்தியம் ” என்கிற தமிழ் நேசனின் வரிகள் வடாபாவ் தின்றவரால் முழுமையாக புரிந்து நேசிக்கப்படலாம். “தலை நரைக்காது போனாலும், இளமை நரைத்துவிட்டதுவே” என்கிற வரிகளில் தேடத்தேட பதுங்கிப்போய அர்த்தங்கள் கண்ணாமூச்சி காட்டும். வார்த்தைகள் வெறும் தடங்களாக மட்டுமின்றி அகவுலக யதார்த்ததின் முனைகளை நெருடுகிறது. காமத்திற்கு பின்னான களைத்துபோன அமைதியில் நரையெடுக்கிற இளமை கொஞ்சம் பயம்தான்
காட்டுகிறது. [இது ஏற்கனவே வந்துவிட்டதுதான் என்கிற சில புலவர்கள்.அதுமை புலமைகாய்ச்சல் என்பார் தமிழ்நேசன்.] எது எப்படியோ பயத்தையும், ஆசையும் ஓழித்துவிட்டால்.. வெங்காயம் யார் சொன்னது.. அவ்வளவு இலகுவாயென்ன.. ?? இதைத்தவிர அந்த நூறு பக்கத்தில் எதுவும் நிற்காதது குறையல்ல. நிறைய விதைகளில் நல்ல விதைதான் தங்கும். நூறு புது நிறுவனங்களில் 3% நிறுவனங்கள்தான் காலம்தாண்டி வர்த்தகத்தில் ஜெயிக்கிறது என்கிறது மேலாண்மை அறிவியல். கவிதைக்கும் அப்படித்தான் போலும். நமது பணி எழுதிக்கொண்டேயிருப்பது, நிற்பதும், ஜெயிப்பதும், காலம் தாண்டி வாழ்வதும் அதனதன் விதி.

மதியழகனின் கவிதைகள்(ஏன் எல்லா கவிதைகளையும்) மூன்று வகையாக பிரித்துக்கொள்வேன்.
அ) தத்துவார்த்த போர்வையால், ஒளியால் ஞானஸ்தானம் பெற்று நாடி நரம்புகள் தூண்டப்பெற்று எனது கவிதையால் தத்துவத்தை, தன்னை கவர்ந்த கொள்கை பாடி மகிழ்வது. அது தேசியமோ, தலித்தயமோ, திராவிடமோ, சுரண்டலோ எதுவோ ஒன்று.
ஆ) காமம், அதீத காமம், அதிர்வு நோக்கிலான காமம், சொல்லாததை சொல்லி புளகாங்கிதம் அடையும் காமம், மரபுடைக்கும்
காமம், எனது எழுத்தும் உணர்வும் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் எதிர்மறை தன்முனைப்பினால் எழும் காமம் –
இவையெல்லாம் சார்ந்த கவிதைகள்
இ) கவிதைகள். அதில் சில பதிவுகள், சில பதிவுகள், கவிதையாகி நிகழ்வுகளாக வாசக மனதில் மறுபடியும் கவிதை எழுதும் திறன் கொண்டவை.

இன்னும் புரியும்படியாக குழப்பிக்கொள்ளவேண்டுமென்றால் கீழ்கண்டவாறு வகைப்படுத்த முயற்சிக்கலாம்.

கவிதை – வார்த்தை – நன்றி தத்துவங்கள்
கவிதை – நிகழ்வு – வார்த்தை – மறுபடி கவிதை
கவிதை – காமம் – வார்த்தை
கவிதை – வார்த்தை – வார்த்தை – காணமல் கடந்து போன வெள்ளைத்தாள்

முதலாய் தத்துவம் :

போன கவிதை தொகுப்பிலில்லாத, தலித்திய கவிதைகளுக்காக நாலு கவிதைகள் ஓதுக்கியிருக்கிறார்.

நாளில் பாதி உழைக்கிறோம்
பங்களா கட்டுவது
அவன்களே

அதே பள்ளிதான்
முதன்மை தேர்ச்சி
அந்தப் பிள்ளைகளே

அத்தனை செலவுகளுக்கும்
ஓரே கடைதான்
பருத்து கொழுப்பது
அவன்களே

அவர்களுடையதைய்ம்
துவைத்து தேய்ப்பது
நாங்கள்தான் ஆனாலும்
வேறுபட்டே தெரிகிறோம்

எதுவும் விளங்காத எங்களுக்கு
இதுவும் விளங்குவதில்லை.

இந்த கடைசிவரிதான் கவிதையின் உச்சமாயிருக்கிறது. கொஞ்சம் மேனக்கெட்டு தனது கவிதைகளையே ஒரு முறை வாசித்திருந்தால் பிடுங்கிகள் என்கிற கவிதையில் கடைசி வரிகளில் அதற்கான கொஞ்சுண்டு பதில் கிடைத்திருக்கலாம்.

பிடுங்கிகள்

ஊர்ந்து செல்லும் நிலையிலும்
ஓயவில்லை தாய்வழிப்பாட்டி
சுடுதண்ணீருக்கு சள்ளி பொறுக்குகிறாள்

குறைகூலி என்றாலும் வெளியிலும்
வேலை செய்கிறாள் அப்பாத்தா

சமைத்தலும் துவைத்தலும் முடிந்து
தையல் பணிக்கு இடையில்
முறுக்கும் விற்கிறாள் அம்மா

ஐம்பதாயிரம் ரொக்கமும்
இன்னும் பத்து பவுனும் சேர்க்க
ஞாயிறுகளில் பணி செய்கிறாள் அக்கா

பள்ளிக்கு பின் ஓய்வுகளில்
அப்பளம் உருட்டுவதும்
பீடி சுற்றுவதுமாய் தங்கை

ஓயாமல் சம்பாதிக்கும் இவர்களிடம்
கோட்டருக்கென வாங்குகிறான் அண்ணன்
பீருக்கென பிடுங்கிக் கொள்கிறான் தம்பி
கட்சிக்கென உருவுகிறார் அப்பா
சுருட்டுக்கென சுருட்டுகிறார் தாத்தா..

மதி மும்பையில் படித்து வளர்ந்த ஒரு மாடர்ன் தமிழ் இளைஞன். அவரையும் எது ஒரு நாலு கவிதையாவது தலித் கவிதை எழுது என்று தள்ளுகிறது. ‘ சூடாய் ஒரு தோசை, சக்கரை தூக்கலாய் ஒரு காப்பி’ என்று ஹோட்டலில் சப்ளை மாஸ்டர் போல கூவுவதற்கான அவசியம் என்ன. அதிலும் எந்த புதுமையின்றி. அதற்கான பதில் தத்துவங்கள்/ கொள்கைகள் நம்மீது படரும்போது நம்மையறியாமல் நமக்கு சில நிறக் கண்ணாடிகளை கொடுத்துவிடுகிறது. அது மாலையா, சிலுவையா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த சிலுவையை தொலைப்பது உத்தமம் என்கிறது, கலைஞனின் மனம் பற்ற ஆராய்ந்த நிகழ்வுகள். விருப்பு வெறுப்பற்ற மானுடக்காதல் மட்டுமே அந்தக்கலை யின் தொடக்கமாகவும், இறுதியாகவும் இருக்கவேண்டும்.

தத்துவசிலுவையின் சுமை வாக்குமூலங்கள் என்ற கவிதை தொடர்ச்சியிலும் வெளிப்படுகிறது. மும்பையில் வெடித்த குண்டுகள் ஏழு அதனால் ஏழு கவிதை குண்டுகள். தீவிரவாதியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட குண்டுகள். இந்துத்துவாதிகள் அதை மிகைப்படுத்தினார்கள் என்பதில் கொஞ்சம் உண்மையிருந்தாலும் எந்த சாதாரண மக்களையும் அது பயமுறுத்தியது. எல்லாவற்றிற்கும் தீர்வு ரொம்ப சிம்பிள்..சுரண்டல் அதிகாரத்திற்கு எதிராக, பச்சை முட்கள் என்று பேசிய பால்தாக்கரேவின் இந்துத்துவாவிற்கு எதிராக, மலம்தின்ன வைத்தவனுக்கு எதிராக குண்டு வை.. கவிஞனின் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற கவிக்கோபமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று யாராவது தர்க்கிக்கலாம். கவிஞன்னா சும்மாவா.. அவன் வித்தியாசமாக யோசனை பண்ணனும்ல.. தீவிரவாதத்திற்காக மானிடநேயத்தோடு இவரது கவிதை கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறது என்று கொள்வோம். வாழ்த்துக்கள், அதே மானிட நேயத்தோடு வர்த்தக கட்டிடம் தகர்த்ததிற்காக பின்லேடனுக்காகவும் கூடிய விரைவில் கவிதாஞ்சலி செலுத்தி உலக கவிஞனாக வாழ்த்துக்கள்.

ஒரு கடைக்குப்போகிறார். அதெல்லாம் நீ வாங்க மாட்டே எனக்கடைகாரர் ஒதுக்குகிறார். ஆகா, ‘எனக்கென ஒதுக்கப்பட்டவைகள் மட்டமானவைகள் மட்டுமே என்று ” கவிஞனின் ஞானதோயத்தை அற்புதமான தலித்திய கவிதை என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்ளமுடியும். நமது உடையை வைத்து கடைப்பணியாளர் ஓரளவுக்கு கணிப்புள்ளாக்கி அதற்கே பொருளை காட்டுவது வியாபாரத்தலங்களின் வாடிக்கைதான். அது ஒரு மோசமான வியாபாரமுறை என்றே கணிக்கப்படவேண்டும். அதையும் ஒரு சாதிய ஒதுக்கிடாக பார்ப்பது அதுவும் ஒரு மும்பையை சார்ந்த இளைஞன் பார்ப்பது, தன்னை சார்ந்த தத்துவக்குழு தன் மூளையை தன்னை மீறி ஆக்கிரமிக்க அநுமதித்தேயில்லாமல் வேறென்னவாகயிருக்கமுடியும்.

எனக்கு இந்துத்தத்துவ விசாராங்கள், காவியம், கலாச்சாராம், பழமை மீது அபார பக்தியும், நம்பிக்கையும் உண்டு. அதற்காக நான் சூலத்தை ஏந்தி எல்லாயிடங்களிலும் திரியவேண்டிய நிர்பந்தத்தை யாராலும் என்மீது திணிக்கமுடியாது. என்னையறியாமல் என் மூளை இவர்கள் சலவை செய்ய அனுமதிக்கமாட்டேன். இந்து மதத்திற்கு நான் ஒரு நுகர்வோன். அதன் பிடிக்காத பொருட்களை நான் வாங்குவதில்லை. நுகர்வதில்லை. அதை கொஞ்சம் தூரத்தில்தான். கைதொடும் தூரத்தில்தான் வைத்திருக்கிறேன். சுயநலமான எனது தேடலில் மூலம்தான் பொதுநலத்திற்கான பங்குவருமென்றென்கிறேன். அப்படியில்லாத பட்சத்தில் கவிஞனாகயில்லாமல் குறிப்பிட்ட தேவைக்கான சமூகப்போராளியாக மாறிவிடுவதே உத்தமாகிறது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் போன்று – சரியோ தவறோ ஏதோவொரு தத்துவத்தோடு குடித்தனம் நடத்தலாம். ஒரு படைப்பாளி தன்னையே ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு எந்த தத்துவங்களோடும் ரொம்பகாலம் தங்கிவிடமுடியாது.

ஒரு கலைஞனுக்கு, கவிஞனுக்கு முன்னுள்ளே பெரும் சவாலே இதுதான். தனது comfort zone, தனக்கான கொள்கைபீடத்தை அவனால் எப்படி தொடர்ந்து துறக்கமுடிகிறது, அதையே விமர்சனப்படுத்தமுடிகிறது, அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அதனால் வளர்ந்து கொள்ளமுடிகிறது, அதன் மூலம் புதிய ஓளிக்கீற்றுகளை எழுத்துக்களில் பாய்ச்சமுடிகிறது.. ஹ¥ம். எழுத, நினைக்க நன்னாத்தானிருக்கிறது. நிறையவே கடினம்தான்.

அடுத்ததாய் காமம், எகிறிய காதல் சார்ந்த கவிதை. முதல் தொகுதியில் அது விரவிக் கிடந்தது. பிரமாதப்படுத்துகிற யதார்த்தம், வித்தியாச பார்வை – என எனக்கு மிகவும் இந்தக்கவிதைகள் பிடித்துப் போகின்றன. முதலில் அதிர்ச்சி அலைகள் மெதுவாய் எழுந்தாலும், அதைத்தாண்டியும் எங்கோ ஒரு முள், மெல்லியதாய் வெட்க ரோசா காத்துக்கிடக்கிறது. “புழுக்கம், அன்பில் செய்த பொறி, அறைவாழ்க்கை, புள்ளிகளால் நிறைந்த கோடு – கிட்டத்தட்ட அத்வத நிலைக்கு கொண்டுபோகிற தத்துவ விசாரங்கள். அதே கவிஞர்தான். சில கவிதைகளில் பரமபதத்தின் தொடக்கத்தில், சில கவிதைகளில் பரமபதத்தின் கடைசி கட்டங்களில். மோசமான கவிதைகள் பாம்புகளாயும், சிலவை நல்ல ஏணிகளாவும்.

“இருவிணை, துளி விசம், நேரம் சரியில்லை, சாலைகள், பொறிப்பேச்சு, சிந்தனையின் நிறம், வேட்கை, நினைவுப்பந்துகள் ” தேவையற்ற கவிதைகள் இவைகள். வெறும் பதிவுகளாய், வார்த்தைகளாய், கவிஞனின் விளக்கமின்றி விழ்ந்துபோகின்ற விந்துகளாய் குறை மரணம் எய்திதாய் எனக்குப்பட்டவை. என்ன சொல்ல கவிதையாய் சொல்ல வந்து வார்த்தையாய் உதிர்ந்துவிட்ட குறைப்பிரசவங்கள்

சில கவிதை பிரமாண்டங்களும் உண்டு. கிருஸ்ணனின் வாயில் உலகமே தெரிந்ததுபோல. தேவகிக்கு உண்டான அதிர்ச்சி நமக்கும் உண்டாகலாம். ஏனெனில் தேவகி ஒரு குழந்தையில் வாயிலிருந்து உலகத்தை எதிர்ப்பார்த்திருக்கமாட்டாள். தேவகியும் அந்த உலகத்தில் தெரிந்ததால் அவளால் அதை அதிர்ச்சியோடு உணரமுடிந்தது. கவிதை – நிகழ்வு – வார்த்தை தாண்டி கவிதை. இந்தக்கவிதைகள் எழுதப்படுகிறது. படிக்கப்படுகிறது. மறுபடியும் உணரப்படும்போது அது நமக்குள் நிகழ்கிறது. ஆதலின், இந்தக் கவிதைகள் – வார்த்தை தாண்டி அவை கவிதையாய் வாழ்ந்தே விடுகிறது. உதாரணம்..முருகண்ணேன்.

எனது பெரியப்பா வந்தார். நகர நாகரீகத்திற்கு கொஞ்சமும் பொருந்தாது. செருப்பு போடாமல் எப்படி பெரிய மால்களுக்கு போகிறது. வேட்டியோடு. அவரது மூக்குப்பொடி பயமுறுத்துகிறது. திங்கும் சாப்பாடும், முறையும் பயமுறுத்துகிறது. கோழிக்கிளறல் யானையின் கவளம் பார்த்து பயப்படல். அவர் எப்போது போவார் என்கிற ஆவலான எதிர்ப்பார்ப்பு. ஆனால் அவர் போனபின்னும் சில நாள் தங்கிவிடுகிற அவரின் வெற்றிடம். “வாப்பேன்.. ” ” தா.. ளி என்னலே சாப்பிடறே..” “கிரகம் சரியில்லடா கோந்தே… குருக்கு விளக்கு
போடேண்டா.. ” “தாயுமானவர் பாட்டு கேட்டியாடே.. பெரியம்மாவுக்கு இதுன்னா உயிர்..” “மயிராலா பிடுங்கினான் உன் மாமன்..” அவரின் குரலால் நிறைந்த அறைகள். வெள்ளந்தியான வேடிக்கை மனிதர்கள்.. என் சுயரூபம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் எண்ணம் எனக்கே வலியை கொடுக்கும். இது தாராவியிலும், தானேயிலும், போர்விலியிலும், போஸ்டனிலும் காலம் காலமாய்
நடந்து கொண்டேயிருக்கலாம். இது கவிதை..

முருகண்ணேன்.

எப்பம்மா ஊருக்குப்
போவான்?
எப்பப் பார்த்தாலும்
தொணதொணன்னுகிட்டு
பன்னி பனஞ்சோறு
திண்ணாப்புல திங்குறான்
டீவிச் சானல
மாத்தத் தெரியல
ஒரு ஆளுகீளு வந்தா
நாகரீகமாக நடந்துகிறானா
சட்டையக் கழத்திட்டு
ஊரு பூராம் சுத்திவர்றான்
கால விரிச்சு
வாயப்பொளந்து
குரட்ட விட்டபடி
தூங்கிறான்.
யம்மோ, யக்கா
தாய்யின்னு கூப்பிட்டுகிட்டு
அவனப்பார்த்தலே
பத்திக்கிட்டு வருது

இப்பொழுது எல்லாரும்
புலப்புகிறோம்
ச்சே, முருகண்ணேன்
ஊருக்கு போனதுக்கப்புறம்
வீடே வெறிசோடிக் கிடக்குல..

கவிதை முடிந்த பின், நமக்குள் அந்தக்கவிதை ஆரம்பிக்கிறது. எனக்குள் பெரியப்பா வந்தார். உங்களுக்குள் யாராவது வரலாம். அவர்களை உங்களை கலைத்து போடலாம். இப்படித்தான் எல்லா கவிதையும் இருக்கவேண்டும் என்று சொல்ல நான் யார். ஆனாலும் இது கவிதை மச்சி.. கவிதை.. பெருமாளின் பிரசாதம் வாங்கிய ஆழ்வார்போல கூரை ஏறிக் குவினால்தான் என்ன.. யூரேகா..
நல்ல வேலை நான் குளித்து கொண்டிருக்கும்போது படிக்கவில்லை. என் வீட்டில் பெரிய தொட்டியுமில்லை. ஆனாலும் நல்ல கவிதை, கதையோ அம்மணமாய் ஓடச் செய்கிற சந்தோச ஆவலை தூண்டத்தான் செய்கிறது .” நிர்வாணம் பேசஸம்.. ”

இன்னும் நிறைய எழுதலாம். குறையாய். ஆனாலும் முருகண்ணனும், பிடுங்கிகளும், அண்டு, குண்டு மதராசிகளும் என் எப்போதும் குற்றம் சொல்லும் வாயை மெளனமாய் மூடிவிடுகிறார்கள். என்ன சொல்ல, மதிக்கு ? தத்துவ சட்டை கிழித்து, முகமுடி களைந்து, கொஞ்சம் கவிதை எழுதினாலும், நிகழ்வான, நிறைவான கவிதை – அந்த நிகழ்வு – மறுபடி கவிதையை வாசகனின் மனதில் – அதுவே நிகழ்வதுபோல எழுதுங்கள் என்று சொல்லலாம். அதைவிட கவிஞனுக்கு வேறென்ன வேண்டும்.

இதுதான் கவியறிவு ஏழை குசேலனின் அவல், எல்லா மும்பை கவிஞர்களுக்கும்.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி