ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்

This entry is part of 39 in the series 20080306_Issue

ஸ்ரீனிநமது பொருளாதார,உலகமயமாக்க கொள்கைகளினால்
நாடு சுபிட்ச ஒளி வட்டத்திற்குள் வந்து விட்டது என்கிற சரக்கை அடுத்தடுத்து வந்த ஆளும் கட்சிகள் எல்லாமே கூவிக் கூவி பிரசாரம் செய்கின்றன.வீட்டு விலை உயர்ந்து வானம் தாண்டினாலும் நாளொரு வண்ணமாக வளரும் வாங்குவோர் கூட்டம்,புதிது புதிதாக தினந்தோறும் சந்தையில் நுழைக்கப்படும் வாகன ரகங்கள்,பக்க வாத்யமாக “உங்க லெவலுக்கு இதெல்லாம் கண்டிப்பா வேணுங்க”என்று மயக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஜமுக்காளத்தில் வடி கட்டாத பம்மாத்து விளம்பரங்கள். காசை அள்ளி வீசி செலவு செய்ய தயாரான ஜனத்திரள்.நாம் காணும் இவை அனைத்தும் உயர் மற்றும் உயர்-மத்திய வர்க்க நகரவாசிகளை குறிக்கிறது,குறி வைக்கிறது.இந்தியாவின் பெரு நகரங்களில் வாழும் இவர்களின் ஜனத் தொகை எத்தனை விழுக்காடு? இந்த நகரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தேசீய முன்னேறத்தை பிரதிபலிக்கின்றன என்கிற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது.

சாப்ட்வேர் ஏற்றுமதி,கட்டுமானத் துறை,20,000 புள்ளிகளை தாண்டிக் குதித்த சென்செக்ஸ் என்று நமது சமூகப் பொருளாதார மாற்றத்தால் விளைந்த வளர்ச்சியின் அடையாள ஈஸ்ட்மென் கலர் சித்திரங்கள்.இது ஒரு சிறு பக்கம்.மறு பக்கத்தில்,அது பெரிய பக்கம், இதே இந்தியாவில் மானில வாரியாக விவசாயிகளின் தற்கொலைகள் தினப்படி தொடர்கிறது.பட்டியலில் இப்போது நெசவாளர்களும் சேர்ந்து விட்டனர்.

அதாவது அரசு கூறும் பொருளாதார வளர்ச்சி,அதன் பலன்கள் நகரவாசிகளை,அதிலும் ஒரு குறிப்பிட்ட மிகச் சிறிய சத விகிதத்தினரை மட்டுமே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதுதான் வருத்தமான நிஜம்.அரசே குறிப்பிடும் சராசரி நகர வாழ் இந்தியனின் மாத வருவாயில் இந்த பம்மாத்து விளம்பரங்களில் காட்டப்படும் ஜட்டிகளில் ஒரு நாலு ஜட்டி வாங்கலாம். கிராமங்களில் அதற்கும் வக்கில்லாத மாத வருவாய்.தினமும் கிராமங்களிலிருந்து இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம்.உண்மையான இந்தியா
நமது கிராமங்களில்தான் இருக்கிறது எனச் சொன்னவர்
கூட இன்றைய நிலையில் நகரத்துக்கு இடம் பெயர்ந்து இருப்பார் என்பது வேதனையான யதார்த்தம்.இடம் பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் நகரத்தில் வேலையும்,கூலியும் கிடைப்பதில்லை.பிளை ஒவர்களின் அடியில் குடித்தனம் நடத்த,நகரத் தெருக்களில் பிச்சை எடுக்கிறார்கள்.

ஊடகங்களில் காட்டப்படும் இந்தியாவிற்கும், உண்மையான இந்தியாவிற்கும் அறுபதுக்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கின்றன.அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் கூட சம்பந்தம் என்ன என்று சொல்லி விடலாம்,ஆனால் gdp உயர்ந்தது,inflation குறைந்தது என்ற கூவல்களுக்கும் நடை முறை விலைவாசிக்கும் என்ன சம்பந்தம் என்பது விளங்காத சிதம்பர(?!) ரகசியம்!

மெகா மால்களும்,மல்டிபெளெக்ஸ¤ம்,சென்செக்ஸ¤ம்,கோடிகளுக்கு ஏலம் போகும் கிரிக்கெட் வீரர்களும் நாடு முன்னேறிக் கொண்டிருப்பதன் அடையாளம் என்றால்
சமூகத்தில் அதிகமாகிக் கொண்டு வரும் பொருளாதார துருவ வித்தியாசங்கள் எந்த முன்னேற்றதிற்கு அடையாளம்?
புரியவில்லை!

அஞ்சலி:தமிழ் எழுத்து நடையில் trend setter என்றால் அது திரு.சுஜாதாவைத்தான் குறிக்கும்.இன்று எழுதும்,எழுத நினைக்கும் பலருக்கும் அவர் நடையின் பாதிப்பு உண்டு என்றால் மிகையாகாது. அவர் அரங்கன் அடி சேர்ந்தாலும் அவர் எழுத்து பல்லாண்டு பல்லாண்டு வாழும்.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation