எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

நேச குமார்


திண்ணைப் பக்கம் வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எங்கள் வீட்டிலும் ஒரு திண்ணை இருந்தது – அது வேறு திண்ணை. தாத்தா சிங்கப்பூருக்கு போய் சிமிண்டு வாங்கிவந்து கட்டிய திண்ணை. வழவழவென்று கரும்பச்சைக் கலரில் இருக்கும். மாலை ஆகிவிட்டால் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வைப்பார்கள் ஆத்தா(தந்தை வழிப்பாட்டி). மெதுவாக அது எரிந்து கடைசியாக ஒரு மணத்தை (அது எனக்கு நறுமணமாக இப்போது தோன்றுகிறது) கசியவிட்டு மாடத்தின் மேலே கோடெழுப்பி அவிந்து போகும். இந்தக் கடைசி கட்டத்தில் வீட்டில் சமையலை முடித்துவிட்டு அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாம் வந்து திண்ணையில் அமர்ந்து அரையிருளில் கதைகளை அசைப்போடுவார்கள். கடை கட்டி வீட்டுக்கு வரும் ஆண்கள் வரும் வரை அவர்களின் திண்ணைப் பேச்சு தொடரும்.

ஆண்களுக்கும் திண்ணைதான். ஆனால் அது பெரும்பாலும் பகலில். எங்கள் தெருவில் ஒரே ஒருவீட்டில் மட்டும்தான் ஆண் இரவில் திண்ணையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பக்கத்துவீட்டு மணிகண்டப்பிள்ளை திண்ணையில் வைக்கப்போருக்கு நடுவே அமர்ந்து எதிர்வீட்டுக்கு யார் யார் வந்து போகிறார்கள் என்று நடுராத்திரி வரை பார்த்துக்கொண்டிருப்பார். எதிர்வீட்டில் அந்தக்காலத்தில் எங்கள் ஊரிலேயே அழகான பெண்ணொருத்தி இருந்தார். அவருக்கு மிகவும் தைரியமும், சில செலக்டிவான ஆண்களுடன் நட்பும் இருந்தது. மணிகண்டப்பிள்ளைக்கு ஏனோ எதிர்வீட்டுக்கு யாரார் வருகிறார்கள் என்று பார்ப்பதில் மிகவும் ஆர்வம். தைரியமாக வெளிச்சத்தில் அமர்ந்து பார்க்கவும் அவருக்கு தைரியமிருந்ததில்லை. இரவு உணவு வரை தெருவில் விளையாடும் எங்களுக்கு ‘ஒளிஞ்சாம்புடிச்சு’ விளையாட்டின் முக்கியக் கேந்திரங்களுள் ஒன்றாக அவர் வீட்டு ‘வக்கப்போரும்’ (வைக்கோல் அடுக்கு) இருந்ததால், அடிக்கடி இந்த திருட்டுத்தனத்தை புரியாவிட்டாலும் பார்த்து எங்களுக்குள்ளேயே புரிந்தது போன்று சிரித்துக் கொள்வோம். ஒரு விதத்தில் இன்று இண்டர்நெட் போர்னோகிராபியைப் போன்றதொரு கிக்கை அது அப்போது அவருக்குத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

***

இண்டர்நெட் போர்னோகிராபி என்றவுடன் இது நினைவுக்கு வருகிறது. இண்டர்நெட் வந்த புதிதில் எனக்கொரு ஷெல் அக்கவுண்டுதான் இருந்தது. நண்பர்கள் அரசல் புரசலாக படங்கள் தெரிகிற நெட்டைப் பற்றி கிளுகிளுப்புடன் பேசிக்கொள்வார்கள். அப்போதெல்லாம் புளு ஃபிலிம் என்றால், ஊர் கோடியில் இருக்கும் வீடியோ கடை வைத்திருக்கும் நாலாம் வகுப்புடன் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டு ‘பயணம் போய்விட்டு’ வந்து மார்டின் ஷர்ட்டும், மயில் தோகை போட்ட வழவழ லுங்கியும், ஒதுக்கிவிடப்பட்ட அரும்பு மீசையுடன் இருக்கும் எங்களது முன்னால் பள்ளி நண்பனிடம் தான் செல்வோம். இந்த நண்பன் ஒரு முஸ்லீம் என்று சொன்னால், அடுத்து ‘ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே தீவிரவாதப் பழியை’ சுமத்தும் உலக காஃபிர்களில் நானும் ஒருவனாகிவிடுவேன் என்றாலும், இன்று அந்தக் குற்றச்சாட்டை முஷாரஃபிலிருந்து அஷரஃப் வரை முஸ்லீம் நாடுகளின் தலைவர்களே சொல்லிக்கொண்டிருப்பதாலும், எப்படியும் என் மீது இத்தகைய குற்றச்சாட்டு வீசப்படும் என்பதாலும் இங்கே சொல்லிவிட வேண்டியிருக்கிறது.

பலர் நினைப்பது போன்று தனிப்பட்ட வகையில் தனியொரு முஸ்லீம் எவராலும் நான் எந்தக்காலத்திலும் பாதிக்கப்பட்டதில்லை. நான் பழகிய முஸ்லீம் நண்பர்கள் பலரைப் பற்றிய இனிய நினைவுகள் இன்றும் எனக்கு உண்டு. சிறு வயதில் பக்கத்து ஏரியா மசூதியில் போய் தங்கமீன் பிடிப்போம். மதிய உணவுக்குப் பின் siesta துவங்கும் நேரத்தில் தான் எங்களது வேட்டை துவங்கும். மசூதிக்காவலர் முஹமதின் சுன்னாஹ்வைப் பின்பற்றி ஒரு குறுந்தூக்கம் போடும் வேளையில் மின்னலென உள் நுழைந்து ‘உளூ’ செய்வதற்காக வைத்திருக்கும் நீரில், அந்த நீரைச் சுத்தப்படுத்துவதற்காக விட்டிருக்கும் குட்டி மீன்களை சிறுவலையில் பிடித்துக்கொண்டு வந்து வெளியே அடுத்த ரிலேயாக நிறுகும் இன்னொரு நண்பனின் பாட்டில் நீரில் கொட்டிவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பிரிந்து ஓடிவிடுவோம். சில சமயங்களில் இந்த மீன்கள் தாற்காலிகமாக மசூதிக்கு பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் நண்பர்களின் வீடுகளில் இருக்கும். அந்த ஏரியாவில் இருக்கும் முஸ்லீம் ஃபிகர்கள் பற்றிய விபரங்களும் எங்களுக்கு அப்போது அத்துபடி. வளர்ந்தபிறகு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது திடுமென வந்து பர்தாக்குள்ளிருந்து குசலம் விசாரித்து விட்டு குழந்தையுடன் போகும் பெண்கள் கொஞ்சம் திக்கிக்க வைத்ததும் உண்டு . “என்ன மாப்புளே” என்ற நண்பர்களின் குறுஞ்சிரிப்புக்கு, “சேச்சே” என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ஒற்றை வார்த்தையில் அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டாலும், வீடு வந்து தூங்கப்போகும் வரை மனதில் அத்தர் வாசம் வீசிக்கொண்டே இருக்கும்.

வெளிநாடு போய் வரும் முஸ்லீம்கள் ஊருக்கு வரும்போது வந்து பார்த்துவிட்டு போவார்கள். சாதாரணமாக கையில் எதாவது ஒரு துணியும், பிஸ்கெட் அல்லது மிட்டாய்கள் அடங்கிய பையும் இருக்கும். ஒரு முறை வெளிநாடு போய்வந்தால், ஊரில் எதாவது ஒரு வெளிநாட்டுப் பொருள் விற்கும் கடையோ , வீடியோ கடையோ, ஆடியோ கேசட் ரெக்கார்டிங் கடையோ வைப்பார்கள். டெக்கெல்லாம் எதோ ஸ்டார்-டெக் ரேஞ்சுக்கு இருந்த காலம் அது. பி.எஃப் என்றால் பயந்து பயந்து போலீஸ் வருமா, பக்கத்துவீட்டுக்கு தெரிந்துவிடுமா என்றெல்லாம் அஞ்சியஞ்சி இந்த அச்சத்தின் விளைவாக அதில் ஏகப்பட்ட கில்ட்-ப்ளெஷர் (குற்றச்சுகம் என்று மொழி பெயர்க்கலாமா?) கிக் கிடைத்து ஒரு படம் பார்தால் பருத்திவீரன் போல தெனாவட்டாய் நடந்து போன காலம் அது.

நம்ம ஊரு சிங்காரிகள் சிங்கப்பூர் போனார்களோ இல்லையோ, சிங்காரர்களுக்கு எல்லாம் சிங்கப்பூர் போவதும் மஞ்சள் மங்கைகளைக் கண்டு சுகம் துய்ப்பதும் அப்போதெல்லாம் பெரிய ஃபேண்டஸியாக இருந்தது (ஃபேண்டஸி = காதல் கற்பனைகள்?). எனது தாத்தா ஒருவர் அப்படி சிங்கப்பூர் சிங்காரி ஒருத்தியை மணந்து அங்கேயே ஒரு குடும்பம் இருந்தது என்பார்கள். கடைசியாக அவர் இருந்தது இன்றைய கம்போடியாவில் என்று நினைக்கிறேன். இறந்தபிறகு ஒரு ருத்திராட்ச மாலையும், பட்டு அங்கவஸ்திரமும், விபூதிப்பொட்டலமும் இந்தியா வந்து சேர்ந்தது என்பார்கள்.

***

இப்படி வெளிநாட்டுக்கு போகிறவர்கள் அங்கே ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்வது அந்தக்காலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்திருக்கக் கூடும். கப்பல் பயணத்தில் பெண்களை ஏற்றிப்போவதை அப்போது பெரும் கவுரவக் குறைச்சலாக நினைத்திருக்கக் கூடும். இந்தக் காரணத்தினாலேயே இங்கு வந்த அரபியர்கள் இங்கிருக்கும் பெண்களை மணப்பதும் பழக்கமாக இருந்திருக்கக் கூடும். என்னிடம் நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, ” ஏன் வட இந்தியாவில் இருப்பது போன்ற ஜாதிகள் இங்கிருக்கும் முஸ்லீம்களிடம் இல்லை” என்று. தமிழ் நாட்டில் வட இந்திய (தக்னி – deccani) முஸ்லீம்களிடம் வட இந்தியாவில் முஸ்லீம்களிடையே இருப்பது போன்ற ஜாதிகள் உண்டு. ஆனால் தமிழ் முஸ்லீம்களில் பெரும்பாலும் குதிரை வியாபாரிகளான அரபிகளின் ஜாதியும் , மரக்கலம் ஓட்டிய அரபிகளின் ஜாதியும், மதம் பரப்ப வந்த அரபிகளின் ஜாதியுமே உண்டு. இந்த அரபிகள் எல்லாம் தமக்கென தாற்காலிக துணையை இங்கே தேடிக்கொண்டதும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், வட இந்தியாவில் பெரும்பாலும் படையெடுப்புகளின் போது மதம் மாறிய இந்துக்களின் ஜாதிகள் அவர்களுடன் ஒட்டிக் கொண்டன. அதனாலேயே இன்னும் ராஜபுத்திர முஸ்லீம்கள், நாவித முஸ்லீம்கள், தலித் முஸ்லீம்கள் என நானாவித ஜாதிகளும் இருக்கின்றன. இருபத்தி ஒன்பது தலித் முஸ்லீம் ஜாதிகள் இருக்கின்றன என்கிறது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மோர்ச்சா (All India Backward Muslim Morcha). இதன் தலைவரான எஜாஸ் அலி, பீகாரின் முஸ்லீம்களின் தொன்னூறு சதவிகிதம் தலித் முஸ்லீம்கள் என்கிறார். இந்த தலித் முஸ்லீம்கள் அனைவருமே இங்கிருந்து மதம் மாறிய முஸ்லீம்கள் தான். உயர்ஜாதியினரான அஷ்ரஃப் முஸ்லீம்கள் எல்லாம் தம்மை பாரசீக, மொகலாய, அரபு ஜாதிகளின் வழிவந்தவர்களாக சொல்லிக் கொள்கிறார்கள்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. இஸ்லாத்தில் ஜாதிகள் இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. இஸ்லாம் பிறந்த சவுதியிலேயே இன்னும் ஜாதிகள் இருக்கின்றன. உயர் சாதி அரபிப்பெண்ணை தாழ்ந்த சாதி முஸ்லீம் மணப்பது ஷரீயத்துக்கு முரணானதாக, கடவுளுக்கு பிடிக்காததாக கருதப்படுகிறது. சாதி என்பதை ‘ட்ரைப்’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதால் பல சமயம் அது சாதி என்பதை நாம் கவனிக்காமலேயே இருந்துவிடுகிறோம் அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் ஜாதி முறையை விட கடுமையான ஜாதிக்கட்டுப்பாடுகள் அரபுகளிடையே உண்டு. இங்கிருக்கும் பெரும்பாலான ஜாதிகளின் பூர்வீகம் என்று பார்த்தால் சில நூறு வருடங்கள் தான் இருக்கும். ஆம், அதனால்தான் அரசு மரபு எங்களுக்குத்தான் சொந்தம் என்று ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறோம். உண்மையில் பார்தால் மலையத்துவ பாண்டியனும், விஜயாலய சோழனும் தலித்துகளாகக் கூட இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அரச அதிகாரம் கைமாறும் போது உயர் ஜாதிகள் தாழ்ந்த சாதிகளாக்கப்படுவது இந்தியாவெங்கும் சகஜமான ஒன்றாக இருந்திருக்கின்றது. விவேகானந்தரின் கயஸ்த் சாதியை தாழ்ந்த-சூத்திர சாதி என்று அன்று இகழ்ந்தபோது அவர் தனது ஜாதி ஒரு காலத்தில் க்ஷத்திரியர்களாக இருந்திருந்ததை, இன்றும் சித்திரகுப்தனை க்ஷத்திரிய வம்சம் என்று அழைப்பதை சுட்டிக்காட்டியிருப்பார். இலங்கையிலும் கோவிகாமா முன்பு சூத்திர ஜாதி என்றும், அது கரையர்களிடமிருந்து(குரு வம்ச வழி வந்தவர்களாக தம்மை கருதிக்கொள்பவர்கள்) அதிகாரத்தை அபகரித்துக் கொண்டது என்றும் வாதிடுபவர்கள் உண்டு. தாரக்கி, ஈழ வெள்ளாளர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முக்குலத்தோர் என்பார். எனக்குக் கூட இலங்கையின் பண்டைய சரித்திர ஆவணங்களில் காணப்படும் ‘வேளக்காரர்கள்’ குறித்து சில கருத்துக்கள் உண்டு. இவர்கள் ‘வேலைக்காரர்கள்’ அல்ல, இது ‘ள’ – ஆனால் பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும்போது Servent Corps, Mercenaries என்றெல்லாம் சர்வ சாதாரணமாக ள- வை, ல-வாகப் புரிந்து கொண்டு எழுதிவிடுகிறார்கள். அரசர்களின் அந்தரங்க பாதுகாவலர்களாகவும் உயர்தர போர்வீரர்களாகவும் இருந்த இவர்கள் அரசனைக் காப்பாற்ற முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கமும் இருந்தது என்கிறார்கள். இது பின்னாளில் அகம்படியாக, ஒரு ஜாதியாக மாறிவிட்டது (அஹம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்ப் பெயர் வேளம்).

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், தென்காசிப்பக்கம் இருக்கிற ஒரு குறவர் ஜாதி தன்னை அகம்படியர் என்று அழைத்துக் கொள்கிறது. நிச்சயமாக இது உண்மையாக இருக்கக் கூடும். ஆட்சி அதிகாரம் மாறும்போது ஜாதிகளின் படி நிலைகள் மாறுவதும், அதிகாரப்போட்டியில் தோற்கும் கட்சியை ஆதரிக்கும் ஜாதிக்குழுக்கள் கீழே தள்ளப்படுவதும் இந்தியாவெங்கும் நிகழ்ந்ததை ஆங்காங்கே கிடைக்கும் ஜாதி வரலாறுகள் காட்டுகின்றன. சிவாஜி உருவாக்கிய படை அப்படியே ‘மராட்டா’ என்று ஒரு ஜாதியாக இந்த மூன்று நான்கு நூற்றாண்டுகளிலேயே மாறிவிட்டது என்பார் அவர். ஆனால், அரபிகளிடையே முஹமதின் காலத்தில் இருந்த ஜாதிகள் இன்றும் இருக்கின்றன. தமிழில் இஸ்லாமியர்கள் நூல்களை மொழிபெயர்க்கும்போது கவனமாக இவற்றை ஜாதிகள் என்று குறிப்பிடாமல் கோத்திரங்கள் என்று குறிப்பிடுவர். எனது இஸ்லாமிய நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘ஜாதி என்ற சொல் அங்கே இல்லாதபோது எப்படி குறிப்பிடமுடியும் அய்யா’ என்றார், அப்போது கோத்திரம் சொல் மட்டும் அங்கே வழக்கில் இருந்ததா என்று கேட்க நினைத்து வழக்கமான திம்மித்தனத்தால் வாய்மூடி மவுனமானேன்.

***

இஸ்லாம் விஷயத்தில் இப்படிப் பட்ட பிரச்சாரங்களே தொடர்ந்து, தொன்று தொட்டு இருந்து வருகின்றன. இந்தப் பிரச்சாரத்திற்கு மாறாக யாராவது இஸ்லாமியர் பேசினால் ஃபத்வா கழுத்துக்கு வந்துவிடும். இன்றைய இண்டர்நெட் யுகத்திலேயே இப்படிப் பட்ட வன்முறையுடன் கூடிய தணிக்கை அமலில் இருக்கும்போது கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடத்தப்படும் பிரச்சாரத்தின் பலனை கேட்க வேண்டுமா? சுற்றி பல்லாயிரக்கணக்கானோர் புறங்கையில் தேன் வடிகிறது என்று கூக்கிரலிட்டு நக்கும்போது , நமக்கும் மனம் பேதலித்து தேனின் வாசனை நாசியைத் துளைக்கவும் ஆரம்பித்துவிடும்.

மலர்மன்னன் – வஹ்ஹாபி விவாதத்தை திண்ணையில் பார்க்கும்போது இதுதான் தோன்றுகிறது. மலர்மன்னன் முகமதியர்கள், முகமதிய மதம் என்று சொன்னதற்கு தாண்டிக்குதித்து பங்ரா ஆடியிருக்கிறார் வஹ்ஹாபி – இஸ்லாம் என்பது தொன்றுதொட்டு இருந்துவருவது, முஹமது அதைத் தோற்றுவிக்கவில்லை என்று. மலர்மன்னன் அவர்களும் மிகவும் மென்மையாக வஹ்ஹாபியின் மனதைப் புண்படச் செய்ததைப் பற்றிய கவலையோடு , முகமதின் பெயரால் அவர்களை அழைப்பது மகிழ்சியளிக்கக் கூடும் என்று தமது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இஸ்லாம் என்ற மதத்தின் அனைத்து தூண்களுமே முஹமது ஊன்றியதுதான். ஐவேளைத் தொழுகை வேண்டாம் ஒரு வேளை தொழுகை போதும் என்று முஸ்லீம்களிடையே ஒரு குழு சொன்னால், அது இஸ்லாம் என்று இஸ்லாமிய சமூகம் ஒப்புக்கொள்ளுமா? கொள்ளாது, இப்படிப்பட்ட ஒரு கருத்தை சொன்னதால் செக்கானூர் மவுல்வியை கேரளாவில் கொன்றுவிட்டார்கள் – இஸ்லாமிய மதத்திலிருந்து இஸ்லாமியர்களை தனியே பிரிப்பதாக குற்றம் சாட்டி(அவர் மூன்றுவேளைத் தொழுகை போதும் என்று சொன்னதாகக் கேள்வி). இந்த ஐவேளைத் தொழுகையை முஹமது மெக்காவுக்கு மேல் ஏழு வானங்களுக்கு அப்பால் இருக்கும் அல்லாஹ்விடமிருந்து பெற்று தமது அடியார்களுக்கு புராக்-பயணத்தின் போது பெற்றுத் தந்ததாகத்தான் இஸ்லாம் சொல்கிறது. அதே போல, நம்பிக்கையற்றவர்களை பயங்கரத்தின் மூலம் நம்பிக்கையாளர்களாக ஆக்குவதும் இஸ்லாத்தின் அங்கம் என்று தனக்கு விசேஷ அதிகாரம் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியதும் முஹமதுவே. மதம் மாறாதவர்களின் மீது புனிதப்போர் தொடுத்து அவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொள்வது (கனீமா ) மதத்தின் அங்கமாக தமது காலத்தில் ஆகுகிறது என்று சொன்னதும் முஹமதுவே. இப்படி முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு மதம் என்ற பெயரில் இரத்த ஆறை ஓடவிடும், பாலியல் வன்முறையை மதத்தின் அங்கமாகக் கொண்ட் ஒரு கோட்பாடு முஹமதின் காலத்திலிருந்தே துவங்குகிறது என்பதை இஸ்லாமே சொல்கிறது. இப்படியிருக்கையில், முஹமது கொண்டுவந்ததெல்லாம் இஸ்லாத்தில் மாற்றங்கள் அல்ல, அதெல்லாம் ஏற்கெனவே இருந்தது என்றால், முஹமது இது குறித்து சொன்னதெல்லாம்(அதாவது தான் கடவுளிடம் பேசி பெற்றுக்கொண்ட சலுகைகள்/அங்கீகரிக்கப்பட்ட மதக்காரியங்கள்) பொய் என்று ஆகிறது. அல்லது இப்படிப்பட்டவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்றால், இப்போது இத்தகைய மாற்றங்களைச் செய்யும் அஹமதியாக்கள் (இவர்கள் ஜிகாது என்பது வன்முறைப்போர் அல்ல, அது தூதர் மிர்ஸா குலாம் அஹமதின் காலத்தில் இறைவனால் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள்), மயிலை தூதர் என்று கருதும் யாசிதிக்கள், அலியே உண்மையான தூதர் என்று கருதும் ஷியாக்களில் ஒரு பிரிவினர் எல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபி ஒப்புக்கொள்ள வேண்டும்(ஆனால் சரித்திரத்தைப் பார்த்தால் வஹ்ஹாபிக்கள் ஷியாக்களின் மீதே பெரும் வன்முறையைப் பிரயோகித்தார்கள் – கற்பினிப்பெண்களின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து அந்த நிலையிலேயே ஷியா பெண்களை சாக விடுவது வஹ்ஹாபிகளின் பாணியாக இருந்தது. பார்க்க கீழே தரப்பட்டுள்ள குறிப்பு)

அதாவது, முஹமது இவற்றைக் கொண்டுவரும் முன்பு இப்படிப்பட்ட ஒன்று இஸ்லாத்தில்(?) இல்லவே இல்லை. அப்படியென்றால், ஒன்று – முஹமது இஸ்லாத்தை அழித்து ஒரு புதிய மதத்தை நிர்மானித்தார் அல்லது அதற்கு முன்பு இருந்தது இஸ்லாம் இல்லை. இந்த இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்? அல்லது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பது சிலைகளை வணங்காத ஏக இறைவழிபாடு மட்டுமே அதன் படி இந்துக்களில் பலரும், பஹாய்களும், அஹமதியாக்களும், ஷியாக்களும் இஸ்லாமியர்களே. இவர்கள் மக்காவுக்கு போய் ஹஜருல் அஸ்வத்தை தொட்டு முத்தமிடலாம் (ஏனைய முஸ்லீம்கள் செய்வது போன்று) என்றாகிறது. சுருங்கச் சொன்னால் இஸ்லாம் என்பது ஒரு சரித்திர புருஷரைச் சுற்றி சுழல்வதை நிறுத்திவிட்டு, என்றைக்குமான சில கொள்கைகளை மட்டுமே பின்பற்றுவது. அக்கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் எவராயிருந்தாலும் அவர்களை முஸ்லீம்கள் என்று ஏனைய முஸ்லீம்கள் (குறிப்பாக வஹ்ஹாபி அவர்கள் கொண்ட கொள்கையின் தாயகத்தார்) ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாகிறது. இப்படி ஏற்றுக்கொண்டால், இஸ்லாம் உண்மையிலேயே அமைதியின் மார்க்கமாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், இப்படிப்பட்ட தர்க்க சிந்தனைகளெல்லாம் சுய சிந்தனையுள்ளவர்களுக்குத்தான். ஒரு நூலில் உலக ரகசியம் முழுவதும் பொதிந்திருக்கிறது, ஒரு மத்திய கால அரபிக்கு உலகம் முடிகிறவரைக்கும் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் கடவுள் சொன்னார், அவர் நடந்துகொண்டது எல்லாம் மதமாகிறது என்று நம்புகிற நம்பிக்கையாளர் கூட்டத்திற்கல்ல!

ஜெயமோகன் சொல்கிறபடி நம்பிக்கையாளர்களிடம் ஒரு புன்னகையோடு வாய் மூடி நகர்ந்துவிட வேண்டும் – முடிந்தால். ஆனால், நாடெங்கும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புகளும், இந்தியாவை ஆயிரம் வெட்டுகள் மூலம் குலைக்கும் (Bleeding India with thousand cuts through Jihad) முயற்சிகளும், நம்பிக்கையாளர்களிடம் வாய்விட்டு நாலு கேள்வி கேட்க வைக்கிறது, பழைய இனிய நினைவுகளையும் மீறி. என்ன செய்வது?

நேச குமார்

http://nesamudan.blogspot.com

nesakumar@gmail.com


குறிப்பு – வஹ்ஹாபிகளின் இந்த செயல்களை விரிவாக இங்கே காணலாம்:

“As they set Karbala’s mosques and academies ablaze, the Wahhabi invaders showed no mercy for the despised Shiites. According to a contemporary account, some four thousand of Karbala’s citizens perished. The Bedouin invaders had a particular predilection for disemboweling pregnant women and leaving their fetuses atop bleeding corpses. Four thousand camels were reprtedly needed to carry the plunder back into the barren badlands of the Nejd”

Page 14, ‘The Siege of Mecca : The Forgotten Uprising’, Author: Yaroslav Trofimov, Published by Penguin Group (2007).

Series Navigation

நேச குமார்

நேச குமார்