திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

கோபால் ராஜாராம்



மீரா பாய் கவிதைகள்

மீராபாய் பஜன் இந்திய பக்தி இலக்கியத்தில் ஓர் இணையற்ற இடம் வகிக்கிறது. மீராபாய், ஆண்டாள் அக்கம்மா தேவி மூவரும் இந்து பக்தி வழிபாட்டில் தோய்ந்து இசக்கும், மொழிக்கும் மகுடம் சூட்டியவர்கள். ஆனால் இவர்கள் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்பாளர்களுக்கு உள்ள பிரசினை பெயர்களையும், வாழ்த்துவதற்காக வரித்துள்ள விளிப்புகளையும் எப்படி மொழிபெயர்ப்புச் செய்வது என்பது தான். கிரிதர் என்றால் இந்தியாவில் எங்கும் கிருஷ்ண புராணத்தில் மலையை உயர்த்தி மக்களைக் காத்த சம்பவம் மனதில் தோய்ந்த வண்ணமாய் எழும். ஆனால் வேற்றுக் கலாசாரங்களில் கிரிதர் என்று சொன்னால் இந்த எதிரொலிகள் கிடைக்க வாய்ப்பில்லை.

இந்திய மொழிகளின் காப்பிய மொழிபெயர்ப்பில் இது ஒரு பெரிய சிக்கல். இப்படிப் பட்ட மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் சர்வ சாதாரணம். “அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” தமிழ்நாட்டில் தோன்றிய போது, நியூ யார்க் டைம்ஸில் “All India Elder Brother Dravidian Progressive Party” என்று எல்லா மூத்த சகோதரர்களின் கட்சியாய் அதி மு க வை ஆக்கி விட்டிருந்தார்கள். படித்தவர்கள் நிச்சயம் குழம்பியிருப்பார்கள் அல்லது வியந்திருப்பார்கள். என்னடா இது இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் நலன் போல மூத்த சகோதரர்கள் நலனுக்காகப் பாடுபடும் ஒரு கட்சி இருக்கிறதே என்று. மொழிபெயர்ப்பாளரின் பிரசினையை என்னால் உணர முடிகிறது. அகில – சரி, இந்தியா ,-சரி, இது என்ன அண்ணா என்று பக்கத்தில் இருக்கிற தமிழ் தெரிந்த ஒருவரிடம் அர்த்தம் கேட்டிருப்பார். அவரும் Elder Brother என்று சொல்லியிருப்பார். தீர்ந்தது பிரசினை .

ஹனுமான் Monkey God ஆகவும் , விநாயகர் Elephant God ஆகவும் ஆகிவிடுவது வழக்கமான மொழிபெயர்ப்பு. லிங்கத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை.

இஸ்கான் புண்ணியத்தால் கிருஷ்ணன் கரிய நிறக் கடவுள் ஆகாமல் தப்பி விட்டிருக்கிறார்.

மொழிபெயர்ப்பவர்கள் நுண்ணுணர்வு பெற்றவர்களாய் இருந்தால், முதன் முதலில் “கிரிதர்” போன்ற காரணப் பெயர்கள் புழங்கும் போது அப்படியே அதனை இட்டுவிட்டு, அது பற்றிய சிறு விளக்கம் கொடுத்துவிட்டு, பிறகு நூல் முழுக்க “கிரிதர்” என்றே பயன் படுத்தலாம். ஆனால் மொழிபெயர்ப்புகள் என்று இறங்கிவிட்டால் எல்லாவற்றையும் மொழிபெயர்த்தே தீர்வேன் என்று ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் ராபர்ட் ப்ளை மிகவும் புகழ்பெற்ற கவிஞர். அவர் மேற்பார்வை பார்த்த மொழியாக்கத்திற்கே இந்த கதி.

*************


பெயர்கள் அடையாளங்கள் : முகமதியரா முஸ்லீம்களா?

ஒரு சமூகக் குழு எப்படி பெயரிட்டு, எப்படி இனங்காணப் படுகின்றது என்பது , அந்தச் சமூக குழுவின் வரலாற்றையும் மற்றும் அந்த இனக்குழு மற்ற இனக்குழுக்களால் எப்படி அடையாளம் காணப்படுகின்றது என்பதற்கான வரலாற்றையும் பொருத்த விஷயம். முஸ்லிம்கள் முகமதியர்கள் என்று அழைக்கப் பட்டதிற்கு ஐரோப்பிய வரலாற்றில் காரணங்கள் உண்டு. ஒரு புதிய மதத்தை அதற்கு வெளியே இருப்பவர்கள் அதன் தலைவர் அல்லது வழிகாட்டியை முன்னிறுத்தி அழைப்பது புதிய விஷயம் அல்ல. உலகம் பூராவும் அதுவே நடைமுறை.பௌத்தம் இன்றும் கூட அதனை ஸ்தாபிப்பவர்களின் பெயரால் தான் அறியப் படுகிறது. கிருஸ்துவம் யாரை முன்னிறுத்துகிறதோ அவர் பெயரால் தான் அழைக்கப் படுகிறது. 1965 வரையில் கூட ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி முகம்மதியர் என்ற வார்த்தையை பிரயோகம் செய்து வந்திருக்கிறது.

ஆனால் முஸ்லிம்கள் சமீப காலத்தில் இந்தப் பெயரைத் தவிர்த்து , முஸ்லிம்கள் என்றே அறியப் படவிரும்புகிறார்கள். எனில் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைப்பதே சரியாகும். ஒவ்வோர் இனக்குழுவும் தம்முடைய அடையாளத்தையும் , பெயரையும் தாமே தேர்ந்து கொண்டபின்பு, அந்தப் பெயரை அவர்களுக்கு வ்ழங்குவதே முறையாகும்.

பழங்காலத்தில் ஏதும் அவப் பெயராய் அறியப் படாத ஒன்று காலப் போக்கில் மாறுதல் பெறலாம். இன்று கறுப்பின மக்கள் பழைய சொல்லான “நீக்ரோ” என்ற பெயரில் அறியப் பட விரும்புவதில்லை. அதன் கொச்சை வடிவமான “நிக்கர்” சொல்லும் வெறுத்து ஒதுக்கப் படுகிறது. ஆனால் அவர்கள் தமக்குள் மிக அன்னியோன்னியமான நிலையில் இந்தச் சொற்களைப் புழங்குகிறார்கள். ஆனால் வெளியார் இந்தச் சொல்லை பாவிப்பதை அவமானகரமானதாய் உணர்கிறார்கள். இத்தனைக்கும், நீக்ரோ என்ற சொல், கறுப்பு என்ற பொருளில் ஸ்பானிஷ் மொழியில் இன்னமும் புழங்கித் தான் வருகிறது.

தமிழ்நாட்டிலும் பெருமைக்குரிய “பள்ளர்” இன மக்கள் தம்மை , “தேவேந்திர குல வேளாளர்”, “மள்ளர்” என்ற பெயரால் அறியப் படவிரும்புகிறார்கள். எனில் அதை விமர்சிக்க வெளியாருக்கு உரிமை இல்லை.

அதே போல் பார்ப்பனர் என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் புழங்கி வந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் அந்தச் சொல்லின் மீது களிம்பேறி கிட்டத்தட்ட வசைச் சொல்லாக மாறிவிட்ட சூழ்நிலையில் அவர்களை பிராமணர் என்று அழைப்பதே முறையாகும். தம்மை முகமதியர் என்று அழைக்கக் கூடாது என்று சொல்கிற முஸ்லீம்களில் சிலரே பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வெட்கப் படுவதில்லை. (பிராமணர் அல்லாத இந்து மக்களிடம் பிராமணர்கள் மீது உள்ள விமர்சனம், விவாதத்திற்கு உரியதென்றாலும் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனல் சில கிருஸ்துவ, முஸ்லிம் அமைப்புகளில் ஊடாடியிருக்கும் பிராமணப் பகைமை எனக்குப் புரியாத புதிர்.) இணையற்ற இந்து மாகாவியமான “மகா பாரதத்தில்” தன்னைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே போல் பிறரை நாம் பாவிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது. அந்தத் தங்க விதியை நாம் மறந்து தான் போகிறோம்.

இனியேனும் அவரவர் தம்முடைய அடையாளங்களாய் முன்வைக்கும் பெயர்களில் அவர்களை அழைப்பது தான் நியாயமானதாய் இருக்கும்.

******

Sudden removal

சடன் ரிமூவலின் மொழி முக்கியத்துவம் பெற்று எப்படி புரிந்து கொள்வது என்று விவாதங்கள் நடைபெறுவது சிரிப்புக்குக் கொஞ்சமும் , சிந்தனைக்கு நிறையவும் இடம் அளிக்கிறது. ஒரு தொலைக் காட்சி பேச்சாளர் என்ற முறையில் தெளிவாக அவர் எண்ணத்தை காரண் தாபர் முன்வைத்திருக்க வேண்டும். பதவி நீக்கம் என்றால் என்ன காரணத்தால் எந்த சட்ட அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் என்று தெளிவு படுத்தியிருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் முறையற்ற வார்த்தைப் பிரயோகம் மிக ஆபத்தானது. அதனால் காரன் தாபரின் மீதான விமர்சனங்களுக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆனால் மகாத்மா காந்தியின் Sudden Removal-க்கு நியாயம் கற்பித்து எழுதிய மலர் மன்னன் காரண் தாபர் மீது கோபப் படுவதுதான் கொஞ்சம் இடிக்கிறது. காந்தி உயிர் பிழைத்திருந்தால் மலர் மன்னனைக் கூடவும் அதிக வலுவுடன் கோட்சே என்ற சகோதரரின் பக்க நியாயத்தை விளக்கியிருப்பார் என்பது வேறு விஷயம்.


Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்