கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!

This entry is part of 54 in the series 20080110_Issue

வாஸந்திசமீப காலமாகத் தொலைக்காட்சி சானல்களில் அதிர்ச்சியும் வேதனையும் ஊட்டும் அந்த பிம்பங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்து தூதர்களை அனுப்புகிறது. இந்திய அரசு வாளாயிருக்கும் மர்மம் புரியவில்லை என்று மனித உரிமையில் அக்கறைக் கொண்டவர்கள் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அசாதாரணமான காட்சிகள் அவை. ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று ஜபித்தபடி செங்காவி உடை அணிந்த அந்த எளிய புத்த பிட்சுக்கள் திருவோடை ஏந்தி பிட்சை எடுப்பார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மயன்மார் [பர்மா] நகர வீதிகளில் பர்மிய ராணுவ அரசுக்கு எதிராகப் போர்கொடி தூக்கிவருகிறார்கள். பல துறவிகள் நீங்கள் இடும் பிச்சை எங்களுக்குத் தேவை இல்லை என்பதுபோல பிச்சை ஏந்தும் பாத்திரத்தைக் கவிழ்த்துக் கொண்டு செல்கிறார்கள். மயன்மாரை 18 ஆண்டுகளாக ஆண்டு வரும் ராணுவ அரசு சமீபத்தில் எரிவாயு விலையை ஏற்றியதும் பொறுத்தது போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சாமன்ய மக்களின் போராட்டத்தை புத்த துறவிகள் முன்னெடுத்துச் சென்றது அரசு எதிர் பாராத ஒன்று.
அதிர்ச்சியளிப்பதும்கூட.
மயன்மார் தீவிர பௌத்த நம்பிக்கை கொண்ட நாடு. மிலிடரி ஆட்சியாளர்களிடமிருந்தும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் புத்த பிக்குகள் பிச்சை ஏற்க மறுப்பது முன்னவர்களை மதத்திலிருந்து, பர்மிய கலாச்சார ஆதார வேர்களிலிருந்து விலக்குவதுபோல. பிக்குகளின் இந்த ஒரு செயலே மயன்மாரில் வெடித்த போராட்டத்தின் தீவிரத்தின் அடையாளம் என்று மயன்மார் சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
மயன்மார் நாட்டில் ராணுவ வீரர்கள் இருக்கும் அளவுக்கு பிக்குகளும் இருக்கிறார்களாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர்களாகவும் இருப்பார்கள். ராணுவத்தில் சேருவதற்கும் புத்த விகாரத்தில் சேருவதற்கும் குடும்பத்தின் ஏழ்மை நிலையே காரணமாக இருக்கக்கூடும். சமீபத்தில் நான் கம்போடியாவில் ஒரு கோவிலில் மிக இளம் வயது புத்த பிக்குவை சந்தித்த போது அத்தகைய எண்ணம் ஏற்பட்டது. அந்த பிக்கு என்னை வெகு ஆர்வத்துடன் என்னைப் பற்றின விவரங்கள் கேட்டார். என் காமிராவை ஆர்வத்துடன் பார்த்தார். அவருடன் கூடப்பிறந்தவர் நிறைய என்றார். அப்பா ஏழை விவசாயி. புத்த பிக்கு ஆன பிறகே தம்மால் கல்வி கற்க முடிவதாகச் சொன்னார். சாப்பாட்டுக்கும் கவலை இல்லை. மயன் மாரிலும் அத்தகைய உந்துதலே இருக்கவேண்டும். ஆனால் கம்போடியாவைப் போல் இல்லாமல் பர்மிய புத்த துறவிகளின் செல்வாக்கு மிக அதிகமானது. மிலிடிரி மக்களை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி புரிந்தாலும் துறவிகளிடம்தான் தார்மீக அதிகாரம் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மிக சாமான்ய வீரனுக்கும் மிக சக்தி வாய்ந்த ஜெனரலுக்கும் துறவிகளின் ஆன்மீக அங்கீகாரம் தேவைப்படுகிறது. பௌத்த மதத்தின் பெயராலேயே ஆட்சி செய்வதாக ராணுவ அரசு சொல்லிக்கொள்கிறது.
பிக்குகள் பிச்சை எடுப்பது ஒரு சடங்கு. பாமரனையும் ஆன்மீகத்தையும் – சாமான்ய புத்தனையும் பிக்குவையும் பிணைப்பது. ‘நீ அளிக்கும் பிச்சை வேண்டாம்’ என்று மறுப்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பிணைப்பைத் துண்டிப்பதற்கு சமானம் என்கிறார் ஒரு மயன்மார் நிபுணர். ஆனால் அந்த ஆன்மீக பந்தத்தின் இடத்தில் ஒரு புதிய பந்தத்தை பிக்குகள் சாமான்ய மக்களுடன் ஏற்படுத்திக்கொண்டுவிட்டது தான் புதுமை. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்துடன் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதிலிருந்து ராணுவ அரசின் அராஜகம் சர்வ தேச பார்வைக்கு வந்திருக்கிறது. பிக்குக்களிடையே ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு எனக்கு ஒரே காரணம்தான் புலப்படுகிறது. அவர்களெல்லோரும் இளைஞர்கள். இளைய தலைமுறையின் ஆதங்கங்களைப் புரிந்து கொண்டவர்கள். ஏழ்மை என்றா நிர்பந்தத்தால் ஆடையை மாற்றிக்கொண்டவர்கள். தலையை மழித்துக்கொண்டவர்கள். புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்வதனால் லௌகீக உலகத்தில் நடக்கும் அராஜகங்களைப் பொறுப்பது தர்மமமாகாது என்று உணர்பவர்கள்.
ஆகையால் சென்ற மாதம் முழுவதும் மயன்மாரின் இரு மிக சக்திவாய்ந்த அமைப்புகள் – பிக்குகளும் ராணுவமும் -எதிர் எதிராக போர் தொடுத்தன. இரு புறமும் தலா 400,000 பேர் இருந்ததாகச் செய்திகள் வருகின்றன. இரண்டு அணியும் இளைஞர் அணி என்பது வேடிக்கை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரும் புதிருமாக இருந்திருக்கக் கூடும். மக்கள் மற்றும் ஆன்மீகத் துறை இரண்டும் எதிர்க்கையில் ராணுவ அரசு வன்முறைத் தாக்குதலில் இறங்கிற்று.
பர்மிய பிக்குகள் இதற்கு முன்பும் போராட்டம் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக. அதற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகால ராணுவ எதேச்சாதிகாரத்தை எதிர்த்து. ஆனால் வெகு காலத்துக்கு பிக்குகள் அரசியல் போராட்டங்களில் பங்கு கொள்ளாமல்தான் இருந்தார்கள். உண்மையில் 1988தில் நடந்த மாபெரும் மாணவர் எதிர்ப்பின்போது அவர்கள் பங்கு பெறவில்லை என்பதோடு அதற்குப் பின் வந்த தற்போதைய ராணுவ யண்டா[junta] பிக்குகளின் ஆதரவுடன் இருந்து வந்தது. பர்மாவில் ஆட்சியைப் பிடிக்கும் எல்லா ராணுவக் குழுவும் புத்த மதத்தோடு தம்மை ஐக்கியப் படுத்திக்கொள்ளத் தீவிர முயற்சி எடுக்கின்றன. கோவில்களைக்கட்டுவதிலும், மடங்களுக்கு பொருளாதார உதவி செய்வதிலும் கோவில் சடங்குகள் விழாக்களை ஆடம்பரமாகச் செய்வதிலும் தீவிரம் காட்டிவருகின்றன. அதனாலேயே பௌத்த அமைப்புகள் எல்லா அராஜகத்தையும் கண்டும் காணாமல் இருந்ததாகத் தோன்றுகிறது.
ஆனால் இத்தனை செய்தும் முழுமையான அதிகாரம் , அதாவது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் தமது வசம் இல்லை என்பது ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தெரியும். பலாத்காரத்தினாலேயே தங்களது செயல்களை நிறைவேற்றிவருகிறார்கள். நூற்றுக்கணக்கான போராளிகளையும் அரசியல் தலைவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.ஜனநாயக ஆதரவாளரும் நோபல் சமாதான விருது பெற்ற
தீரப் பெண்மணியுமான ஆங் ஸான் ஸ¥ ஸீ யைப் பனிரெண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் சிறை வைத்திருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வராத நிலையிலும் ஸான் ஸ¥ ஸீயிக்கு இருக்கும் இளைஞர்களின் மங்காத ஆதரவு அதிசயமானது. மக்களின் ஜனநாயக தாகத்தின் எடுத்துக்காட்டு அது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ராணுவ யண்டாவின் அடக்குமுறையால் அவர்களது எதிர்ப்பு இது நாள் வரையில் எந்த பலனையும் தரவில்லை. இப்பொழுது ஆன்மீகத் துறை எதிர்ப்பில் சேர்ந்து கொண்டது பெரிய திருப்பம் என்று சொல்லவேண்டும்.
இப்பவும் பிக்குகளும் மக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கு இருபுறமும் உள்ள இளம் உள்ளங்கள் சேர்ந்ததே காரணம். பல ரகசிய சந்திப்புகளும் ஒத்த கருத்துகளும் சங்கமித்ததன் பரிமாணமாக வெடித்தது இந்த மிகத் துணிச்சலான போராட்டம். மூத்த வயதினர் பங்கு பெறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். பல வருஷங்களாக ராணுவ ஆட்சியாளர்கள் மூத்த புத்த பிக்குகளுக்கு உயர் பதவிகளையும் அந்தஸ்தையும் தந்து கைக்குள் போட்டு வந்திருக்கிறார்கள்- இது இளைய தலைமுறை பிக்குகளைக் கோபப் படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளாமல்.
அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ராணுவம் பௌத்த மடங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. பிக்குகள் மயன்மார் வீதிகளிலிருந்து மறைந்தார்கள். இந்தப் போராட்டத்தில் இருநூறு பேர் இறந்ததாகவும் 6000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. ஆனால் அரசோ பத்து பேர் இறந்ததாகச் சொல்கிறது. கலவரத்தை பற்றின செய்தியும் டிவி படச் சுருள்களும் பரவுகையில் உலகம் கவலைக் கொண்டது. ஐ.நா தூதுவர் இப்ராஹிம் கம்பாரி பர்மிய தலைவர்களுடன் பேசச் சென்றார். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது , சகஜ நிலை திரும்பிவிட்டது என்றார் மயன்மார் வெளிஉறவு அமைச்சர். நாங்களும் பொறுமையாகத் தான் இருந்தோம் , கலகக் காரர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போகவே ராணுவம் துப்பாக்கிச் சூடு செய்யவேண்டி வந்தது என்றார். அந்தக் கலவரத்துக்குப்பின் இருப்பது வெளிநாட்டு சக்திகள் என்றார்.

மயன்மாரில் 18 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் குரல் அமுக்கப் பட்டு வருவதும் ராணுவத்தின் அராஜகம் நடப்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்தியா அதைக் கண்டும் காணாமல் இருக்கிறது. அதற்கு வியாபாரக் காரணம் முக்கியமானது. இரண்டாவது சீனாவின் செல்வாக்கு மயன்மாரில் அதிகரித்து வருவது. மயன்மாரில் மூக்கை நுழைக்கப் போக ஏற்கனவே அதிக சுமுக மில்லாத இந்திய சீன உறவு மோசமாகக் கூடும் என்று தயக்கம். அதனாலேயே அமெரிக்கா மயன்மாருக்கு எதிராக விதித்துள்ள வியாபாரத் தடைகளை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. நடந்த சம்பவங்களை விசாரிக்க விசாரணைக் கமிஷனை நியமிக்கும்படிமட்டும் மயன்மார் அரசுக்குச் சொல்லியிருக்கிறது !
இப்போது மயன்மாரின் கொந்தளித்த வீதிகள் அமைதி காக்கின்றன. ராணுவ பாதுகாப்புடன். ஆனால் இது நீரு பூத்த நெருப்பு என்பது எல்லாருக்கும் தெரியும்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation