பெண்ணெனும் இரண்டாமினம்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


(பெண்ணினத்தின் விவிலியம் என்று சொல்லப் படுகிற ‘Le Deuxieme Sexe’ முதல் பகுதி 1949ம் ஆண்டு வெளிவந்தது. அன்று தொடங்கி இன்றுவரை, இந்நூல் பெண்கள் உலகத்தில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும், மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்திகொண்டிருக்கிறது, மனிதகுலத்தின் வளர்ச்சியும், சமூக மாறுபாடுகளும், நூலின் இலக்கிய மதீப்பீட்டினை எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. இருத்தலியல்(Existentialism )தந்தையான சார்த்ருவின் நெருங்கிய தோழி- Notre- dame de Sartre என்ற பட்டப்பெயருண்டு, பாரதியின் மொழியில் சொல்லவேண்டுமென்றால் சார்த்துருவின் பராசக்தி.

பெண்விடுதலைக்குக்கு குரல் கொடுத்த, பிரெஞ்சு இலக்கிய உலகின் பேராசிரியையான சிமொன் தெ பொவாவுக்கு நூறுவயது. 1908ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந்தேதி பிறந்தவர். அவரது நூற்றாண்டுவிழாவை பிரெஞ்சு இலக்கிய உலகம் பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறநேரத்தில் பெண்ணெனும் இரண்டாமினத்தில் அவர் எழுதிய முன்னுரையை நண்பர்களுக்கு வழங்குகிறேன். இக்கட்டுரையில் ‘இப்பொழுது’ இன்றைக்கு’ என்று வாசிக்கிறபோது நண்பர்கள் இந்நூல் வெளிவந்த 1949ம் ஆண்டை நினைவில் கொள்வது அவசியம், தவிர இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெண்கள் நிலைமை மனதில்வைத்து எழுதியதென்றாலும், இந்தியச் சூழலில் பெரிதாக மாற்றம் நிகழாத நிலையில், படைப்பு காலத்தோடு அதிகம் முரண்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.)

வெகு நாட்களாகவே, ‘பெண்களைக்’ குறித்து புத்தமொன்று எழுதநினைத்து, தயங்கினேன். முதலாவதாக, ‘பெண்கள்’ என்ற தலைப்பு பலரையும் முகஞ்சுளிக்கக் வைக்கிறது, குறிப்பாக நமது பெண்களை. பெண்ணியக்கத்தின் சண்டைகளை எழுத குடங்குடமாய் மையைக் கொட்டிஅலுத்து, இனி வேண்டாமென்று ஒதுங்கியபோதிலும், நம்மை விடமாட்டேனென்கிறது. கடந்தநூற்றாண்டு முழுக்க ஏதேதோ நிறைய விவாதித்தாயிற்று, எனினும் பிரச்சினைகள் சரியாக அடையாளபடுத்தப்பட்டிருக்குமாவென்றால், இல்லையென்றுதான் சொல்லவேண்டும். சிலர்கேட்பதுபோல பெண்களுக்குப் பிரச்சினையென்று ஒன்றிருக்கிறதா? ஆமென்றால், என்ன பிரச்சினை? பிரச்சினைக்குப் போவதற்கு முன்னால், “பெண்கள்’ என்கிற இனமொன்று இருக்கிறதென்கிற உணர்வாவது இருக்கிறதா? பாரம்பரிய பெண்ணியல் அடையாளங்களும் அவற்றுடைய விசுவாசிகளை நம்பியிருக்க அவர்களது முணுமுணுப்பும் காதில் விழுகிறது: “சோவியத் ரஷ்யாவிலும் பெண்கள், பெண்களாகத்தானிருக்கிறார்கள்”, என்கிறார்கள். ஓரளவு விடய ஞானமுள்ளவர்கள், சில வேளைகளில், முந்தையக்கூட்டமே அலுப்புடன்: பெண்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவருகிறார்களென்றும், சொல்லப்போனால், ‘பெண்களென்று சொல்லிக்கொள்ளும்வகையில் யாருமில்லை’யெனவும் சொல்லிவருகிறார்கள். பெண்கள் இருப்பே கேள்விக்குறியதாகியிருக்கிறது, விரும்பியோ விரும்பாமலோ பெண்களிருப்பை அங்கீகரிப்பதாகவே வைத்துக்கொண்டாலும், பெண்கள் தங்களைச் சமுதாயத்தில் எங்கே நிறுத்தவிரும்புகிறார்கள்? அல்லது சமுதாயம் அவர்களை எங்கே நிறுத்தவிரும்புகிறது? என்பதற்கான பதில்கள் நமக்குத் தெரியவேண்டும். “பெண்கள் எங்கே?” எனச் சமீபத்தில், சஞ்சிகையொன்று தனது இதழில் கேட்டிருந்தது, ‘பெண்கள் எங்கேயென’ கேட்பதிருக்கட்டும், முதலில் ‘பெண்’ என்பவள் யார்? என்ற கேள்விக்கு, ‘Tota mulier in utero’ அதாவது அவளொரு கருப்பை அல்லது சூற்பையென பதில் வருகிறது. எனினும், இவர்கள் தீர்மானித்திருந்த பெண்களின் கருப்பைத் தகுதியை மறந்தவர்களாக, சில பெண்களைப் பார்த்து, ‘இவர்களெல்லாம் பெண்களா? எனக் கேட்கிறார்கள். மானுடமென்பது, பெண்ணினமும் சேர்ந்ததுதானென்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை; இன்றைக்கும், கடந்தகாலங்களைபோலவே, மனிதரெண்ணிக்கையில் ஏறத்தாழ சமபாதியாக பெண்ணினமிருக்கிறது. இந்த நிலையில், ‘பெண்மைக்கு(Feminite) ஆபத்தெனச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நம்மிடத்தில், “பெண்களாய் இருங்கள், பெண்களாய் நடந்துகொள்ளுங்கள், பெண்களாய் மாறப்பாருங்கள்”, என வற்புறுத்துகிறார்கள். ஆக பெண்ணாய்ப் பிறந்தவர்களனைவரும் ‘பெண்ணாக வாழமுடியுமென்கிற சாத்தியமில்லையென்றாகிறது, சமூகத்தில் அவள் தனது ‘பெண்மை’யை நிரூபிக்கவென்று, பயமுறுத்தும் யதார்த்தமொன்றிருக்கிறது, அதனை நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்குண்டு. கருப்பையில் உற்பத்தியாகிற சினைமுட்டைகளாலோ, பிளாட்டோவுடைய சிந்தனைகளில் ஒன்றாக முடங்கிக்கிடந்தோ, சலசலக்கும்பாவடைக் கட்டிக்கொண்டு பூமியில் அவதாரமெடுத்தோ- ஏதோவொரு வழிமுறையால் அதை நீருபிக்கலாம். சில பெண்கள் அவ்வுண்மையைப் புரிந்துகொண்டு மிகுந்த பிரயாசையுடன் அதைச் செயல்படுத்தவும் செய்கிறார்கள், ஆனால் இதுநாள்வரை, இதுதான் வழிமுறையென்று திட்டவட்டமாக எவரும் அறிவிக்கவில்லை. ஒரு சிலர் ‘பெண்மை’ என்பதை தெளிவேதுமற்ற ஆரூட சொற்களில் விளக்க முற்படுகிறார்கள், புனித தோமையார் காலத்தில் ‘பெண்மை’ போதை பொருளாகக் கருதப்பட்ட வேடிக்கையுமுண்டு.

இன்றைக்கு, கருதுகோள்கள் தங்கள் செல்வாக்கினை இழந்திருக்கின்றன. பெண்களுக்கு மாத்திரமல்ல, யூதர்கள், நீக்ரோ இனத்தவருக்குங்கூட, பண்புகள் என்றென்றும் நிரந்தமானவை அல்ல என்பதில் உயிரியலும், சமூகவியலும் ஒத்துபோயின. சூழல்களே ஓரினத்தின் பண்புகளைத் தீர்மானிப்பதாக அறிவியல் திடமாக நம்பியது. எதிர்காலத்தில் ‘பெண்மை’யென்ற சொல் இருப்பதற்றதெனில், கடந்தகாலத்திலும் அது இருப்பற்றதாகவே இருந்திருக்கவேண்டும். அப்படியெனில் ‘பெண்’ என்ற சொல்லுக்கு இதுதான் நேரிடைபொருள் என்றுசுட்டமுடியாது? இதைத்தான் பகுத்தறிவுவாதமும்( le rationalisme), பொய்யிருப்புவாதமும்(le nominalism), அறிவொளி இயக்கங்களும்(La philosophie des lumieres) உறுதிபடுத்துகின்றன:அவர்களுக்குப் மனிதரினத்தில் ‘பெண்’ணும் ஒன்று அவ்வளவுதான், அதற்குமேல் பொருள்கொள்ள அச்சொல்லில் ஒன்றுமில்லையென்பது அவர்களது தீர்மானம். அநேக அமெரிக்க பெண்களுக்கு வழக்கமான பெண்கள் வரிசையில் தங்களை நிறுத்திக்கொள்ள விருப்பமில்லை. எந்தப் பெண்ணாகிலும் தன்னைப் மீண்டும் பழமையில் வைத்துப் பார்க்கவிரும்பினால், அந்த நினைப்பிலிருந்து அவள் விடுபடுவது அவசியமென்று போதிக்கிறார்கள். ‘Modern woman-The Last Sex, என்ற நூலில் உறுத்தும் சில விடயங்களுண்டு, “பெண்ணைப் பெண்ணாக அடையாளபடுத்தப்படும் புத்தகங்களில் வருகிற பெண்ணாக இருக்க என்னால் முடியாது…மாறாக நாம் ஆணோ பெண்ணோ யாராகயிருந்தாலும் மனிதர்களாகக் கருதப்படவேண்டும்,” என்கிறார் டொரொத்தி பார்க்கர்(Dorothy Parker). ஆனால் பொய்யிருப்புவாதமென்பதும் ஓர் முடிவானதரவு அல்ல என்பதால், ஆணாதிக்கவாதிகளால் ‘பெண்கள்’ ஒருபோதும் ஆண்களாக முடியாதெனச் சுலபமாகச் சொல்லமுடிகிறது. ஆண்களைப்போலவே பெண்களும் மனிதரினத்தின் ஓரங்கமென மேம்போக்காய் சொல்வதில் எந்தப்பொருளுமில்லை. உண்மையில் மானுடவியலில் ஆணோ, பெண்ணோ கூட்டமல்ல, தனியொருவன் அல்லது தனியொருத்தி. காலங்காலமாய் தொடரும் பெண்ணின் பிற்போக்குத்தனத்தையும், கறுப்பர்மற்றும், யூதர்களின் அடையாளத்தையும் மறுப்பதென்பது நிகழ்காலத்தில் இவர்கள் மூவரின் இருப்பையும் மறுப்பதாகாது, அன்றியும் இம்மறுப்பு, சம்பந்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவாததோடு, உண்மையைக் கண்டு ஒளியும் தன்மையது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரபல பெண் எழுத்தாளரொருவர், பெண்ணெழுத்தாளர்கள் வரிசையில், தனது புகைப்படமும் இடம்பெறுவதை விரும்பாத நிலையின், தனது கணவர் செல்வாக்கினைக்கொண்டு ஆண்கள் வரிசையில் பிரசுரிக்க வைத்தார். தங்களை ஆணென்று சொல்லிக்கொள்ளும் பெண்கள், தங்களை ஆண்களுக்கு நிகராகவும், அதே மரியாதையுடனும் எதிர்பார்ப்பதுதான் விந்தை. இளம் ட்ராஸ்கிஸ்ட்(Trotskyste)1 பெண்ணொருத்தி, சந்தடியான மாநாடொன்றில், கையை மடக்கிக்கொண்டு, விவாதித்தது நினைவுக்கு வருகிறது, இத்தனைக்கும் அவள் பலவீனமானவளென்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. பெண்ணின் பலவீனத்தை மறுக்கும் அதே தருணத்தில் ஓர் ஆண் தொண்டனுக்கு நிகராகக் தன்னை அவள் கற்பிதம் செய்துகொண்டிருந்தாள். பெரும்பாலான அமெரிக்கப் பெண்களின் எதிர்நடவடிக்கைக்களுக்கு அடிப்படைக் காரணம், ‘பெண்மை’ கருத்தியல் ஏற்படுத்திய மனவுளைச்சல். ஆக மனித சமுதாயம் உடை, உடல், முகம், புன்னகை, மகிழ்ச்சி, ஆர்வம், தொழிலென ஒவ்வொன்றிலும் இரண்டுபட்டு நிற்பதை அறிவதற்கு நாம் ஒரு கண்ணைமாத்திரம் திறந்து வைத்துக்கொண்டு நடந்தால்கூட போதுமானது. எதிர்காலத்தில் இவ்வேற்றுமைகள் அற்றுவிடுமென்கிற நிலையில், இவைகளை சற்று மிகையானவை என நம்மால் சித்தரிக்க முடியும். ஆனாலும் இன்றைய தேதியில் இவைகள் நிதர்ஸனமான உண்மைகள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆக ‘பால்’ அடிப்படையிலான செயல்பாடுகளால் ‘ஒரு பெண்ணை’ தீர்மானிக்க முடியாதநிலை. அவ்வாறே ‘பாரம்பரியப் பெண்ணுக்குறிய’ இலக்கனந்தான் என்னவென்பதிலும் நமக்கு உடன்பாடில்லை, அதற்காக நம்மை பெண்ணென்று பிறர் அழைப்பதை கூடாதென்றா சொல்ல முடியும், குறைந்தபட்ஷம் தற்காலிகமாவது (வேறுவழி, பூமியில் பெண்களென்கிற ஒருவகைப்பாடிருக்கிறதே) ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சரி,பெண்ணென்பவள் யார் என்ற கேள்விக்கு, நமது பதிலென்ன?

இக்கேள்வி எழுப்பிய மறுகணமே முதற்கட்டமாக ஒருபதிலை என்னால் அனுமானிக்க முடிகிறது. ஒருவேளை கேள்வியைக் கேட்பது நானென்கிற உண்மை தரும் முக்கியத்துவமாகவிருக்கலாம். மனிதரினத்தில் இப்படியொரு குழப்பமான நிலையில்வைத்து ‘ஆணினத்தைப்’ பற்றிய நூலொன்றினை எழுத ஓர் ஆணுக்குச் சாத்தியமில்லை(2). மாறாக, என்னைப்பற்றியே ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால்கூட ‘நானொரு பெண்’ என்றே தொடங்கவேண்டியிருக்கிறது, பிறகு அதனடிப்படையிலேயே மற்ற உண்மைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். ஓர் ஆண், பாலின அடிப்படையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாதபோதும், அவனொரு ஆணென்பது சொல்லாமலே விளங்கும். பிறப்பு இறப்பு பதிவேடுகளிலும், இதர அடையாள அட்டைகளிலும் ‘ஆண் பெண்’ என எழுதுவதுகூட ஒரு வகைச் சம்பிரதாய வகைப்பாடு, அவ்வளவுதான். இருபாலருக்குமான பந்தத்தை மின்சாரத்தின் இருதுருவங்களோடு ஒப்பிடவியலாது: நேர்மின் விளைவுக்கும்(Positive), நொதுமலுக்கும்(Neutral) இணையாக ‘மனிதன்’ என்ற சொல்லை – அது ‘ஆண்’ இனத்தின் அடையாளமாகயிருப்பினும் – மானுடவர்க்கத்தின் ஏகப்பிரதிநிதியாக நடத்துகிறோம். மாறாக ‘பெண்’ என்ற சொல் எதிர்மின் விளைவு(Negative) தகுதியைமட்டுமே பெற்று, அதன் புரிதல் வரம்பும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பொருளற்ற விவாதங்களுக்கிடையே ஆணொருவன் ‘உன்னால் அப்படியான முடிவுக்குத்தான் வரமுடியும், காரணம் நீயொரு பெண்’ எனச் சொல்வதைக் கேட்டு எங்களுக்கும் அலுத்துவிட்டது. பதிலுக்குப் பெண்ணாக இருப்பதால், எங்கள் தரப்பை நியாயப்படுத்த, பெண் அடையாளத்தை வலிந்து ஒதுக்கிவிட்டு:’அப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் எனது தரப்பில் உண்மை இருக்கிறது’ என நாங்கள் சொல்லவேண்டுமேத் தவிர மறந்துங்கூட, ‘ நீ அப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறாய், காரணம் ஆணென்பதால்தானே, என்று ஓர் ஆணிடம் கேட்டுவிடக்கூடாது. ஏனெனில் ‘ஆண் அடையாளம்’ பிரத்தியேகமான பண்புக்குக் காரணமாகாது, ஆணாக இருப்பதாலேயே அவனது சொல்லும் செயலும் சரியானது. பெண்ணாக இருப்பதாலேயே அவளது முடிவுகள் தவறானவை இருக்கும். பெறப்படும் நீதி, ஆணென்பவன் கடந்தகாலங்களைப்போலவே உயர்ந்தவன், பரிபூரணன். ஆனால் பெண்ணின் நிலைமை வேறு, அவளது உடைமைகளான பெண்குறியும் கருப்பையும் அவளைச் சிறுமைப்படுத்தி சிறைவைக்கும் அடையாளம். இதுதவிர பெண்ணொருத்தியின் சிந்தனை, சுரப்பிகள் வயப்பட்டதென்கிற விமர்சனம் வேறு. ஆணுக்கு தனது உடற்கூறியலும் சுரப்பிகள் சார்ந்ததென்பதும், அவனிடத்திலிருக்கும் விந்தகங்களும்(Testicules) சுரப்பிகளாக செயல்படுகின்றன என்பதும் சௌகரியமாக மறந்து போகிறது. சிக்கலற்ற தன்மைகொண்டதாக, உலகோடு நேரிடைத்தொடர்புகொண்டதாக தனது உடலைக் கருதுகிற ஆண், பெண்ணுடலை ஓரு தடையாக, சிறையாக அவளை முடக்கிப்போடவென்றே அமைந்த அசாதரணமாகக் கருதுகிறான்.. ‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது’, சொன்னவர் அரிஸ்டாடில்; ‘குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கபட்டிருப்பதாகக் கருதவேண்டுமென்றும், அவர் கூறுகிறார். அடுத்து, புனித தோமையார் அவர் பங்கிற்கு,’பெண் என்பவள், ‘குறைபாடுடைய ஓர் ஆண்’, அவள் படைப்பே ஓர் விபத்து, எதிர்பாராதது’ என்கிறார். மனிதரினத் தோற்ற வரலாற்றின்படி ஏவாள், இழுத்து உருவாக்கப்பட்டவள். போஸ்வெ(Bossuet) சொற்களில் எழுதுவதெனில்,’ ஆதாமுடைய ‘அதிகப்படியான எலும்புகளிலொன்றினால்’ படைக்கப்பட்டவள்.

ஆக மானுடம் என்பது ஆணுக்கானது, ஆணை விலக்கிவிட்டு பெண்ணில்லையென்பதும், அவள் பிறர்சார்ந்தே இயங்கப்பிறந்தவளென்றும் சொல்கிறார்கள். மிஷெலெ(Michelt), “பெண்ணானவள், பிறர் சார்ந்து இயங்குபவள்”, என எழுதுகிறார். பெண்டா(Benda) தன்னுடைய Rapport d.Urielல், ஆணின்றி பெண்ணில்லை என்கிறபோது, ஓர் ஆணுடலின் தனித்துவம் விளங்கும்…பெண்ணை ஒதுக்கிவிட்டு, தன்னை வழிநடத்திக்கொள்ள ஓர் ஆணால் முடியுமெனவும்’, மிக அழுத்தமாக வலியுறுத்துகிறார். அவள் ஆணால் தீர்மானிக்கப்பட்ட பொருள், அதாவது அவனது புணர்ச்சிக்கென்றே படைக்கப்பட்ட பாலினம்(The sex), அதுவன்றி வேறு உபயோகம் அதற்குண்டென்று அவன் நம்புபதில்லை. ஒரு பெண்ணை அறிய பெண்போதாது, ஆண்வேண்டும். அவளது இருப்பும், முரண்களும் ஆண்வழி அறியப்படவேண்டியது. அவள் துணைப்பொருள், ஒதுக்கப்படக்கூடியவள், ஆண் பிரதானம், தவிர்க்கமுடியாதவன். அவன், கர்த்தா, ஏக நாயகன், பெண்-வேண்டியவளல்ல-‘வேற்றினம்’-மற்றமை(the Other).

‘வேற்றினம்’ என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல நமது மனசாட்சியைப்போலவே தொன்றுதொட்டு வழக்கிலிருந்துவரும் சொல். பழங்கால மனிதர்களிடையேயும், புராணக் கதைகளிலுங்கூட இருபிரிவுத் தன்மைகள்(Duality) இருந்துவந்திருக்கின்றன: ஒரு தரப்பில், ‘நான்’ அல்லது ‘நாம்’ எதிர்த் தரப்பில் அந்நியர் அல்லது ‘வேற்றினம்’. இம்மாதிரியான பிரிவினைசொற்கள், ஆரம்பத்தில் பாலின அடிப்படையிலோ அல்லது பட்டறிவு உண்மைகளாலோ தீர்மானிக்கப்பட்டதல்ல. முதன்முதலில் கிரானெட்(Granet) தனது ‘சீனச்சிந்தனைகள்’ என்ற நூலிலும், துமேஸில்(Dumezil) ‘இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ரோம்’ என்ற நூலிலும் இதுபற்றி பேசினர். பெண் என்ற தனிமம்(Element)தொடக்கத்தில் ‘வருணா-மித்ரா’, ‘யுரேனஸ்-சேயுஸ், சூரியன்-சந்திரன், இரவு-பகல் போன்ற ஒத்தஇணைகளைக்(Pairs) காட்டிலும், நல்லது-கெட்டது;அதிர்ஷ்டமான-அதிர்ஷ்டமற்ற சகுனங்கள்; வலம்-இடம்; கடவுள்-சாத்தான் போன்ற எதிரிணைகளைகளோடு தொடர்புடையதென்பது வெளிப்படை. மனிதச் சிந்தனையின் அடிப்படை வகைப்பாடாக ‘வேறுவகை’ இருக்கிறது. ஒரு குழு தனது ‘நாம்’ அமைப்பை உருவாக்கிச் செயல்பட தீர்மானிப்பதற்கு முன்பாக, தனக்கு எதிரான ‘மற்றவர்கள்’ குழுவைத் தீர்மானித்துவிடுகிறது. மூன்று பயணிகள் இரயில்பெட்டியொன்றில் ஒன்றாகப்பயணிக்க நேர்ந்தால்போதும், பிற பயணிகள் பார்வையில் ‘மற்றவர்களாகி’ப் போகிறார்கள். ஒரு சிறு நகரத்திற்கு, வெளியூர்மக்கள் அந்நியர்கள், ஐயத்திற்குரியவர்கள்; சொந்த நாட்டில் வசிப்பவர்களுக்கு, தங்கள் நாட்டில் வசிக்கிற பிறநாட்டவர் அந்நியர்கள்; இனவாதிகளுக்கு யூதமக்கள் வேற்றினம்; அமெரிக்க இனவாதிகளுக்கு நீக்ரோ மக்கள் கீழினத்தவர்;காலனி ஆதிக்கவாசிகளுக்கு பூர்வீகக்குடிகள் உள்ளூர்மக்கள்; மேட்டுக்குடியினருக்கு, ஏழைகள் தாழ்ந்தவகுப்பினர்.

‘உயிரின உறவுகளை போட்டி, மாற்றம், முரண், சீரொருமை போன்ற வேற்றுமை கோர்வைகளாக(தெளிவாகவோ அல்லது தெளிவின்றியோ) மனிதபிரயத்தனம் கண்டதற்கான சாட்சிகள் – கற்காலம் தொடங்கி, இன்றக்குக் கலாச்சாரம் பண்பாடென்று வளர்ந்திருக்கும் சூழலிலும் – மனித குலத்தின் பாதையெங்கும் விரவிகிடப்பினும் அவை சமூகத்தின் அடிப்படை உண்மைகளை பிரதிபலிப்பதில்லை’, என்பது பூர்வீககுடிகளின் பல்வேறு அமைப்புகள்குறித்து ஆய்வு மேற்கொண்ட லெவி-ஸ்ட்ரோஸ்(Levi-Strauss) கண்ட முடிவு. நமது மனிதகுலம் மாத்திரம் சேர்ந்துவாழும்(Mitsein) அதாவது நட்பு மற்றும் கூடிவாழ்தல் அடிப்படையிலான குணங்களைக் கொண்டதென்றால், மேற்கண்ட முடிவினை விளங்கிக்கொள்ள அரிதாக இருந்திருக்கும். மாறாக, ஓருணர்வு மற்ற உணர்வுகளை எதிரியாக நடத்துகிறதென்ற ஹெகெல்(Hegel) கூற்றை நினவிற்கொண்டால், லெவி-ஸ்ட்ரோஸ் ஆய்வின் முடிவு நம்மை வியப்பிலாழ்த்தாது; ஒருபொருளின் அல்லது கர்த்தாவின் (Subject) இருப்பு, பிறவற்றை மறுக்கும் அதன் குணத்தால் தீர்மானிக்கப்படுகிறது-அதாவது அப்பொருள் தனது முக்கியத்தை வலியுறுத்த, மற்றமையை(The other), அமுக்கியத்தை(the inessential), கருவியை(The Object) மறுத்து செயல்படுகிறது. அவ்வாறே மற்ற உணர்வுகளும் அதாவது பிற சுய நலங்களும் மேற்குறித்த காரியங்களைத் தங்களுக்காகச் செயல்படுத்த முனைகின்றன. நேற்றுவரை உள்ளூர்க்காரன் என்ற உணர்வோடு வாழ்ந்தவனுக்கு, அடுத்த ஊரின் உள்ளூர்க்காரர்களுக்கு முன்னால் அந்நியப்படுகிறபோது அதிர்ச்சி. உண்மையில் யுத்தம், பண்டிகை, வணிகம், ஒப்பந்தம், போட்டிகள் ஊடாக பழங்குடிகளும், நாடுகளும், பல்வேறுதரப்பினரும் ‘பிறர்’ என்ற சொல்லின் உள்ளடக்கத்தை ஒழித்து தனிமனிதன், மற்றும் குழுக்களிடையே பரஸ்பர உறவின் தேவையை உணரவைக்கின்றனர். ஆனாலிந்த பரஸ்பர உறவுத்தேவைகள் பாலினங்களுக்கிடையில்மாத்திரம் எதனால் தவிர்க்கப்படுகிறது, தவிர இரண்டில் ஒன்று மாத்திரம், தன்னை முழுமுதற்பொருளாகச் சித்தரித்துக்கொள்வதும், தனது பரஸ்பர உறவை தன்னிடம் தொடர்பற்ற ‘மற்றமையாகவும்(the other)’ கருதுவதேன்? இப்படியான ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் ஏன் அணிதிரளக்கூடாது?எந்தவொரு பொருளுமே தன்னை விரும்பியே பொருளற்றதாக முன்னிருத்துவதில்லை. ‘ஒன்றின்’ முக்கியத்துத்துவத்தைச் சொல்ல எந்த ‘மற்றதும்’ தன்னை விரும்பியே ‘மற்றதாகச்’ சித்தரித்து கொள்வதில்லை. அந்த ‘ஒன்றின்’ இடத்தை ‘மற்றது’ அடையமுடியாதபோது, அது ‘அந்நிய’ அடையாளத்துடன், தாழ்வுறுகிறதென்பதும் உண்மை. பெண்களுக்கு எதனாலிந்த தாழ்வு நிலை?

பெண்களைத் தவிர்த்து மற்றவற்றுள், நீண்டகாலத்திற்கு ஓரினம், பிற இனத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கமுடிந்திருக்கிறது. இதற்குச் சாதகமான காரணியென்று முதலில் எண்ணிக்கையைக் குறிப்பிடலாம், அதாவது ஒரு குழுவைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை, மற்ற குழுவினரைக்காட்டிலும் கூடுதலாக இருக்கலாம். விளைவு, பெரும்பான்மையோர் சிறுபான்மையோரை அடக்கி ஆளுகிறார்கள், அவர்களை ஒடுக்கி வைக்கிறார்கள், ஆனால் பெண்ணினம் அமெரிக்க கறுப்பர்களைப் போன்றோ, யூதர்களைப் போன்றோ சிறுபான்மை இனத்தவரல்லவே, நமது பூமியில் ஆண்களும் பெண்களும் எண்ணிக்கையில் சமமாகத்தானே இருக்கிறார்கள். பின்னர் இன்னொரு வகையுண்டு. அங்கே அனைத்து இனத்தவரும் ஒரு காலத்தில் அவரவரர் மண், வாழ்க்கை என சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் அல்லது ஓரினத்தவர், பிற இனத்தவரை அறியாதவராகவே வாழ்ந்தவர்கள், பின்னர், சரித்திர நிகழ்வுகள் அவர்களது வாழ்க்கையை மாற்றி எழுதின. பலவீனமானவர்கள் பலசாலிகளுக்கு அடங்கிப்போக நேர்ந்தது. சிதறி வாழநேர்ந்த யூதர்கள், அமெரிக்காவில் புகுத்தப்பட்ட கொத்தடிமை முறை, காலனி ஆதிக்கமென கடந்தகாலச் சான்றுகள் ஆதாரமாக உள்ளன. ஆனால் இந்த உதாரணங்களில் ஒடுக்கப் பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மதம், கலாச்சாரம், பாரம்பரியமென குறைந்தபட்சம் பழம்பெருமைககள் இருக்கின்றன. இவ் வகையில் பெண்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் பெபெல்(Bebel)3 ஒப்புமைபடுத்தியிருப்பதை நினைவுகூற வேண்டும், அவரது கருத்துப்படி உழைக்கும் வர்க்கமும் பெண்களைப்போலவே எண்ணிக்கையில் மற்றவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களுமல்லர், ஒரு தனிக்குழுவாக இயங்கியதுமில்லை என்கிறார். எனினும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகளின்றியே, இன்றைக்கு ஒரு வர்க்கமாக, ஒரினமாக இவர்களிருவரையும் வரலாறு வகைபடுத்த முடிந்திருக்கிறது. ஆனால் இங்கேயும் ஓர் கேள்வி எழாமில்லை. அதாவது பெண்களும் உழைக்கும் வர்க்கமும் ஒன்றெனச் சொல்லமுடியுமா? உழைக்கும் வர்க்கத்தினுடைய அடையாளம் நிரந்தரமில்லை; மாறாக பெண்வர்க்கம் நிரந்தமானது. அவர்கள் காலகாலமாய் இருந்துவருகிறார்கள். அவர்கள் உடல் பெண்ணென்ற அடையாளத்தைக் கட்டிக் காப்பதற்காக படைக்கபட்டவர்களென்பதும்,. வரலாற்றின் எந்த முனைக்குச் சென்றாலும் ஆணுக்குப் பெண் அடங்கியவளாகவே இருந்தாளென்பதும் உண்மை. எனினும் ஆண் சார்ந்த பெண்ணென்ற இன்றைய நிலைக்கு சரித்திர ஆதாரங்கள், கலாச்சாரவிளைவுகள் என்றெதுவுமில்லாதபோது, வானத்திலிருந்து குதித்துவிட்டதென்றும் அதனைச் சொல்லவியலாதபோது, வேற்றினமென்று நடத்தப்படும் பெண்ணினத்தை ஏன் ஒரு ‘சுயம்பு’வாக ஒர் சுதந்திர இனமாகத்(Absolute) தீர்மானிக்கக்கூடாது. காலத்தால் எழுதப்படும் ஓரினத்தின் தலைவிதியானது, நிரந்தமானதல்ல, அவை மாற்றி எழுதப்பட்டிருப்பதற்கு ஹைத்தி(Haiti) கறுப்பனினமக்களும் பிறரும் சான்றெனசொல்கிறபோது, இயற்கையால் தீர்மானிக்கபட்ட விதிமுறைமுறைகள் மாறுதல்களுக்கு உட்படுவதில்லையென்பதுபோல தோற்றமளித்தாலும், அப்படி அல்லவென்பது சரித்திரம் தரும் உண்மை. பெண் என்பவள் துணைப்பொருளாக இருப்பதும், தன்னால் முதன்மைப்பொருளாக மாறவியலாதென நினைப்பதும், பிறரால் ஊட்டப்பட்டதல்ல, அவளால் தீர்மானிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கம் ‘நாம்’ என்று மார்தட்டி சொல்ல முடிகிறது, கறுப்பின மக்களுல் அதில் உறுதியாய் இருக்கின்றனர். ‘கர்த்தா'(Subjects) இடத்திலிருக்கும் வெள்ளையரும், மேட்டுக்குடியினரும் தேவையெனில் தங்களை, மற்றவர்களாகச்(Others) சித்தரித்துக்கொள்ள தயங்குவதில்லை. ‘பெண்ணியம் சம்பந்தப்பட்ட மாநாடுகள், ஊர்வலங்கள் தவிர்த்து ‘நாம்’ என்ற சொல்லை பெண்கள் உபயோகித்து நீங்கள் கேட்டதுண்டா? ‘பெண்கள்’ என்ற சொல் ஆண்களிடமிருந்து இரவல்பெற்றது, அதனைக்கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிற பெண்கள் ஒருபோதும் தங்களைக் ‘கர்த்தாக்களாக’ வரித்துக்கொள்வதில்லை. உழைக்கும் வர்க்கம், ரஷ்யாவில் புரட்சியைக் கண்டது, கறுப்பினமக்கள் ஹைத்திநாட்டில் வெகுண்டெழுந்தார்கள், இந்தோ-சீனர்கள் இந்தோ-சீனத்திற்காக சண்டையிட்டிருக்கிறார்கள்; ஆனால் பெண்கள் தரப்பில் ஒரு சில சலசலப்புகளைத் தவிர்த்துப் பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. இம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒரணியில் நின்று போராடவேண்டும் என்பதான சிந்தனைகள் நமது பெண்களுக்கிடையே இல்லாததின் விளைவு: இதுவரை பெண்கள ஈட்டியுள்ள சலுகைகள் அனைத்துமே ஆண்களுடைய தயவால் பெறப்பட்டதாகும், அதாவது பெண்கள் யாசகமாகப் பெற்றார்களே அன்றி, உரிமையோடு எடுத்துக்கொண்டவை அல்ல. அவர்களுக்கென்று(பெண்களுக்கென்று) வரலாறில்லை, கடந்தகாலமில்லை, மதமில்லை., உழைக்கும் வர்க்கத்தை பொதுவாக ஒன்றுபடுத்தக்கூடிய, செய்யும் தொழிலில் ஒற்றுமை, அல்லது அது சார்ந்த நலன்கள் போன்ற காரணிகள் இல்லை, அவ்வாறே அமெரிக்க கருப்பர்கள், யூதக்குடிகள், சேன்-தெனி நகரப்பகுதியில் வசிக்கிற ரெனோ மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் ஆகியோருக்கிடையே காணப்படுகிற, நெருக்கமாக ஓரிடத்தில் வசிக்கும் தன்மை பெண்களிடத்தில் இல்லை. அவர்கள், இருப்பிடம்; பணி, பொருளாதார நலன்கள், சில நேரங்களில் தாங்கள் அண்டியிருக்கிற ஆண்களின்(கணவன் அல்லது தந்தை) சமூதாயத் தகுதிக்கேற்ப ஒரு சிலர் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சலுகைகள் பெற்றபோதிலும், ஆண்களில் நிழலில், தங்கள் கூட்டத்தோடு தொடர்பின்றி சிதறுண்டு வாழ்கிறார்கள். மேட்டுக்குடிப் பெண்களின் நட்பும், உறவும் மேட்டுக்குடிப் பெண்களேயன்றி, உழைக்கும் வர்க்க பெண்களல்ல. வெள்ளை இனப்பெண்களுக்கு, கருப்பின பெண்கள் கூடாது. உழைக்கும் வர்க்கம், முதலாளிவர்க்கத்தை, கொல்லத்துணியக்கூடும், தான் மட்டுமே அணுகுண்டின் ரகசியத்தை தெரிந்திருக்கவேண்டும், அதன்மூலம், உலகம் யூதர்மயமாகவோ, கறுப்பர்மயமாகவோ ஆக்கப்படவேண்டுமென ஒரு யூதனோ அல்லது ஒரு கருப்பின வெறியனோ கனவுகான முடியும். ஆனால் அத்தகைய கனவுகள் பெண்களுக்குச் சாத்தியமில்லை, அதாவது பெண்ணினம் ஆணினத்தை அழிப்பதென்று கனவுகூட காணஇயலாது. அடக்குமுறைக்கு எதிராக, பெண்கள் அனைவரையும் ஒரணியில் நிறுத்துவதற்கான, பொதுப்பண்பினை வேறு எதிர்ப்பாளர்களிடமும், நாம் காண இயலாது. ஆண், பெண் பிரிவு உயிரியல் அடிப்படை சார்ந்தது. மனிதவரலாற்றில் எங்கோ எப்போதோ ஏற்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. துணை என்ற சொல் சார்ந்து, தொடக்ககாலந்தொட்டு ஆண் பேதம் இருப்பதும், அதனின்று பெண்ணைத் தனித்துப்பார்க்க இயலாதென்பதும் உண்மை. சதி, பதி என இருவருடைய கூட்டுப்பங்களிப்பின்றி தம்பதி என்ற சொல்லில்லை என்கிறபோது நமது சமூகத்தினை ஆண் பெண் அடிப்படையில் பிரிப்பதென்பது எந்தவகையிலும் ஒருபோதும் நடவாது. ஆக மொத்தத்தில் ஆணின்றி பெண்ணோ பெண்ணின்றி ஆணோ இல்லையென்பது தெளிவாகத் தெரிந்தும், பெண்ணினத்தை மற்றவர்களாக அதாவது மற்றமையாக (the Other) சித்தரிக்கும் மனப்பாங்கு இங்கே எல்லாவற்றிர்க்கும் காரணமாகிறது.

மானுட வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்களிப்பு இருக்கிறது எனவே தனித்துச் செயல்படுவதற்கு இருவருக்குமே சாத்தியக்கூறுகள் உண்டென்று நாம் நம்பக்கூடும். ஓம்·பல்(Omphale) மீது உற்ற மோகத்தில் ஹெர்க்குலீஸ் அவளுக்கு நூற்பதற்கு உதவியபோது, அச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக்கொண்டு அவனை நிரந்தரமாக தனது கட்டுப்பாட்டிற்குள் அவள் வைத்திருந்திருக்கலாம், எப்படி அவள் தவறினாள்? ஜேசன்(Jason) தனது பிள்ளைகள்மீது கொண்டுள்ள பாசத்தினை வைத்து, மெடியா(Medea) அவனை தனது தாசனாக மாற்றியிருக்கலாம், அவ்வாறின்றி அவனைப் பழிவாங்குகிறேனென்று சொந்தப் பிள்ளைகளேயே, அவள் கொல்ல முயன்றது அறிவீனமென்கிற மோசமான பழங்கதையொன்றின் புலம்பலையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆண்கள் உடற்பசிக்குத் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த பெண்கள், சில சமுதாய இலட்சியங்களை அடைவதற்காக, அதைக் கருவியாகப் பயன்படுத்தி ஒன்றுதிரளுவதாக லிசிஸ்ற்றாட்டா(Lysistrata) இன்பவியல் நாடகத்தில் அரிஸ்டோபான்(Aristophanes) என்கிற கிரேக்கக் கவிஞன் எழுதியிருப்பதெல்லாம், கற்பனைக்கு மட்டுமே சாத்தியம். சாபின் பெண்களை(The Sabine Women) ரோமானியர்கள் தங்கள் இனப்பெருக்கதிற்காக கட்டாயமாகத் தூக்கிச்சென்றபோது, அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதைச் சொல்கிற இத்தாலிய பழங்கதை, சம்பந்தப்பட்ட ஆண்கள், அச்சம்பவத்தின்போது சாபின் பெண்களை தோல்பட்டையால் அடித்ததையும் நியாயப்படுத்திப் பேசுகிறது. ஆண்கள் தங்கள் உயிரியல் தேவைகளுக்காக அதாவது தங்கள் உடற் தேவைகளுக்கும், வம்ச விருத்திக்கும் பெண்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பினும், சமுதாய அளவில் பெண்களுக்கு அதனாற் சாதகமான பலன்களென்று ஏதுமில்லை. அவ்வாறே பொருளாதார அடிப்படையிலான பிரதிபலனை எதிர்பார்த்து, இணைந்திருக்கிற முதலாளிகள்- அடிமைகள் பந்தத்திலும், பின்னவர்களான அடிமைகள் விடுபடவாய்ப்பில்லை. இது எதனாலெனில் அடிமைகள் தேவை தமக்கு அவசியமற்றதுபோல வெளியிற்காட்டிக்கொண்டாலும், அதிகாரத்தினைக்கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தந்திரத்தினை முதலாளிகள் அறிந்தவர்கள், முதலாளிகளைச் சார்ந்திருக்கும் அடிமைகளும், எஜமானர்களிடம் தங்களுக்குள்ள தேவையென்ன என்பதை, அவர்களுடைய எதிர்பார்ப்பு மற்றும் அச்சத்தின் காரணமாக தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அடிப்படையில் இருவருக்குமே உடனடியாகத் தங்கள் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும், எனினும் உண்மையில் நடப்பது என்ன, ஒடுக்கப்பட்டவனைவிட, அவனை அடக்கிவேலை வாங்குகிறவனுக்குச் சாதகமாகவே அனைத்தும் நடக்கின்றன. அதன் காரணமாகவே தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கு நீண்டகாலம் பிடித்திருக்கிறது.

இன்றைக்கும் பெண் என்பவள் ஆண்சார்ந்தவள் அல்லது ஆணின் அடிமை என்று கூறலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உலகில் சம உரிமை இல்லை என்பதுதான் உண்மை. அவளுடைய நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறபோதிலும், இன்றைக்கும் அவள் பல விடயங்களில் வாய்ப்புகளின்றி முடங்கிக்கிடக்கிறாள். உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணையும் பெண்ணையும் சமமாய் பாவிக்கிற சட்டங்களில்லை, சொல்லப்போனால், அவை பெரும்பாலும் பெண்களுக்குப் பாதகத்தை இழைக்கும் தன்மையன. தொன்றுதொட்டு சமுதாயத்தில் நிலவிவரும் மனப்பாங்குகள், தெளிவாக பெண்களின் உரிமையை வரையறுக்க உதவுவதில்லை, விளைவு அவை ஏட்டளவில் பிரசுரிக்கப்படுவதோடு சரி.
பொருளியல் உலகிற்கு வருவோம். இருவரும் வெவ்வேறு பிரிவினரெனினும், உரிமைகளில் சமபங்கினர், ஆனால் இங்கே என்ன நடக்கிறது, ஈடானத் தகுதிகளுடன் பெண்கள் போட்டியிடுகிறபோதும் உயர்வானப் பணிகள், கூடுதலாக ஊதியம், உயர்த்திக்கொள்வதற்கா¡ன வாய்ப்புகள், சலுகைகள் என அனைத்துமே ஆண்களுக்கானது. அரசியலாகட்டும், தொழிற்சாலைகளாகட்டும், அதிக எண்ணிக்கையில் இருக்கிறவர்களும், உயர்ந்த பதவிகளை வகிப்பவர்களும் ஆண்களே. தவிர ஆண்வர்க்கத்திற்கே உரிய அதிகாரத்துடன், செல்வாக்கும் இணைந்துகொள்ள நமது பிள்ளைகளின் கல்விக்கொள்கைகளில் விழிப்புணர்வுகள் இல்லை. நமது கடந்தகாலம் என்பது ஆண்களால் தீர்மானிக்கப்பட்டது, அக்கூறுகளைத்தான், புதியவை என்றபேரிலே இன்றைய காலகட்டத்திலும் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகின் முன்னேற்றத்திற்குத் தங்களை அற்பணித்துக்கொள்ள பெண்கள் முனையும் இத் தருணத்திலும், இவ் உலகம் தங்களுக்கானதென்பதில் ஆண்கள் உறுதியாய் இருக்க, பெண்களும் அதை மறுப்பதில்லை. ‘உங்கள் நடவடிக்கைகளுக்கு இனி துணை நிற்பதில்லை என்றோ, ‘உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்துவராதென்றோ, பெண்ணொருத்தி சொல்லத் துணிந்தால் நாளைக்கு அவள் தனது மேலான துணையுடன் இணைந்து பெறக்கூடிய நன்மைகளை இழக்கவேண்டிவரும்.. எசமானன் ஆகிய ஆண், தனது அடிமை ஆகிய பெண்ணுக்கு வேண்டிய பொருட்களைத் தந்து அவளது உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறான். இவ் வாழ்வாதாரத்தை நம்பி அவளும், தனக்குள்ள பொருளாதார அபாயத்திலிருந்தும், சுதந்திரமென்ற பேரில் அபௌதிக இன்னல்ககளுக்கான வீண்கனவுகளிலிருந்தும் விடுபட நினைக்கிறாள். ஆணோ பெண்ணோ நம் ஒவ்வொருவரும் ‘கர்த்தாவாக’ நம்மை நிலைநிறுத்திக்கொள்ள தார்மீக உரிமையுண்டென்று நினைக்கிறோம். அதே நேரத்தில் சுதந்திரமென்ற சொல்லில் ஈர்க்கபட்டு அவதிப்படுவதைவிட, பிறர் கட்டுப்பாட்டின் கீழ் வாழமுடிந்தால் போதுமென்றும் விரும்புகிறோம். இதொரு பாவப்பட்டச் சாலை, பயணிப்பவர் -அடிமை, கருவி, பறிகொடுத்தல் சொற்களை புரிந்து நடக்கவும், அடுத்தவர் மனமறிந்து சேவகம் செய்யவும், தமது மேன்மையை ஒளிக்கவும், தகுதியைத் தாரைவார்க்கவும் தெரிந்தவர். ஆனால், பயணிப்பவர் தமது இருப்புக்கான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் உள்ள சங்கடங்களையும், உள நெருக்கடிகளையும் தவிர்க்கமுடியும் என்பதால் ஒருவகையில் எளிதான சாலை. ஓர் ஆணுக்கு, அவன் காரியம் யாவிலும் உளமார கேள்வியின்றி கைகொடுப்பதற்கு, ஓர் கருவி தேவை, அதற்குப் பெண் பொருத்தமானவள் என்பது அவனது முடிவு. பெண்ணுக்கும், தான் ‘கருவியாக’ இருப்பதில் பெரும்பாலும் மகிழ்ச்சி, ஏனெனில், அவளிடத்தில் தன்னை கர்த்தாவாக நிலைநிறுத்திக்கொள்ள வலிமையான ஆதாரங்களில்லை, தவிர பரஸ்பர எதிர்பார்ப்பற்ற துணையென்ற அனுபவமும் அத்தைகைய நிலைபாட்டின் அவசியத்தை அவளுக்கு உணர்த்தி இருக்கிறது.

இத் தருணத்தில் நம்முன் எழும் கேள்வி: இத்தனைச் சிக்கலுக்கும் ஆரம்பம் எது? அனைத்து இருமை இயல்புகளையும்(Duality) போலவே ஆண் பெண் என்ற இருமை இயல்பும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பிணக்குகளுக்குக் காரணமென்று மொக்கையாகச் சொல்லிவிடலாம். ஐய்யமின்றி வழக்கம்போல, இருவரில் வெற்றிபெறுகிறவன் அதாவது தனது வன்மையை நிரூபிப்பவன், முழுமுதற்கடவுள் வரம்புகளற்ற பெருமான். இதுவரை நமக்குப் புரிகிறது. அடுத்து வருவோம், அதெப்படி வரலாற்றின் தொடக்கத்திலிருந்து ஆண்கள்மட்டுமே வெற்றிபெற்று பவனிவர முடிந்திருக்கிறது? இவ்விருமை யுத்தங்களின் முடிவில், பெண்களும் வாகைசூடி இருக்கலாம், அல்லது வெற்றி தோல்வி எவர்பக்கம் என தீர்மானிக்கவியலாத சூழ்நிலையும் இருந்திருக்கலாம், இலையென சொல்லமுடியுமா? இதுவரை ஆண்களுக்கான உலகமாக இருந்து இன்றைக்கு மாற்றத்திற்கு உட்படுகிறதென்பது எப்படி? இந்த மாற்றத்தினால் நன்மைகள் ஏதேனும் உண்டா? வருங்கால உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது, என்ற நிலை வருமா?

இப்படியான கேள்விகள் கேட்கப்படுவது இதுதான் முதன்முறை என்று அல்ல. அதற்கான பதிலும் ஏராளமாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஆனால் பெண்ணை மற்றமை,(The Other) என தீர்மா¡னமாகக் ஆண் கருதியதால், எப்படி நியாயப்படுத்தப் பட்டிருப்பினும், சொல்லப்பட்ட பதில்களால் நாம் நிறைவை அடைந்ததில்லை: அப்பதில்கள், ஆண்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆண்களால் ஒப்பிக்கப்பட்டவை என்பதும் உண்மை. ” பெண்களைக்’ குறித்து ஆண்கள் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே நம்பகத்தன்மை அற்றவை, ஏனெனில் அங்கே நீதிபதி வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள், சாட்சிகள் அனைவருமே ஆண்கள்”, கூறியவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிகம் அறியப்படாதப் பெண்ணியல்வாதியான, பூலென் தெ லா பார்(Poulain de la Barre). தங்களைப் படைப்புக்கடவுளாக ஆண்கள் சித்தரித்துக்கொண்டு ஆண்கள் மகிழ்வதை, தொன்றுதொட்டு உலகமெங்கும் பார்த்துவருகிறோம். ‘தெய்வச்செயல், அவன் என்னைப் பெண்ணாய்ப் படைக்கவில்லை”, என காலைப் பிரார்த்தனையில் யூதர்கள் கடவுளைச் சிலாகிக்க அவர்களது மனைவியரோ மற்றொரு பக்கம், ஆண்டவன் அருள், அவனது விருப்பத்திற்கிணங்க என்னைப் படைத்தான்’, எனப்பணிவுடன் பெருமிதம் அடைவார்கள். ‘தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்தற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்’, பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான். ஆக கடவுள் தந்த இவ் வரத்தினை முழுமையாக ஆண்கள் அனுபவிக்க வேண்டுமெனில், ஒன்று அவர்களின் நிரந்தரச்சொத்து என்கிற தகுதியைப் பெற்றாக வேண்டும், இரண்டாவது, அதற்குக் குறைகளேதும் நேர்ந்திடக்கூடாது; இந்த ஆதிக்க உண்மை அவர்களது உரிமையைத் தேடிபெற உதவிற்று. “இங்கே சட்டங்களை இயற்றியவர்களும், வடிவமைத்தவர்களும் சரி பின்னர் அவற்றை கோட்பாடுகளாக மாற்றி அமைத்த சட்ட நிபுணர்களும் சரி ஆண்கள், எனவே அவை அனைத்துமே ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன”, இதைக் கூறியவரும் ‘பூலென் தெ லா பார்’ என்பவரே.

பெண்களின் சார்நிலை பூமியின் நலனுக்காக, விண்ணில் தீர்மானிக்கப்பட்டது என்பதை வலியுறுத்த, நமது மக்கள் பிரதிநிதிகளும், மதகுருமார்களும், தத்துவ ஞானிகளும், எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும், போராடி இருக்கிறார்கள். ஆண்களுடைய கண்டுபிடிப்புகளான மதங்களும், ஆதிக்க உணர்வில் அவர்களுக்குள்ள நாட்டத்தை வெளிப்படுத்துகின்றன. ஏவ் மற்றும் பண்டோரா புராணகதைகளில், பெண்களுக்கு எதிராக ஆண்கள் திரண்டதைப் பார்க்கிறோம். அரிஸ்டாடில் மற்றும் புனித தோமையார் மேற்கோள்களையே சமயம் தத்துவத்திலும், மெய்விளக்கவியல் தத்துவத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். பழங்காலந்தொட்டு அங்கதக் கலைஞர்களும், அறவோர்களும், பெண்களின் பலவீனத்தை மேடையேற்றி மகிழ்ந்திருக்கிறார்கள். பெண்களை காட்டுமிராண்டித்தனமாக வசைபாடி மகிழ்வதையே நோக்கமாகக்கொண்ட நமது பிரெஞ்சு இலக்கியங்களையும் நன்கு அறிவோம்.

மோந்த்தெர்லாந்தின்(Montherland) எழுத்தில், அத்தனை வீரியம் இல்லையென்றாலும், ழான் தெ மேங்(Jean de Meung)5 ஏற்படுத்திவைத்த மரபினை அவரும் பின்பற்றுகிறார். ஒருசில சமயங்களில் காரணத்தோடும், பெரும்பாலான நேரங்களில் எந்த முகாந்தரமுமின்றியும்; உண்மையில் தங்களைக் குறித்த முடிவினைத் தாங்களே எடுக்கும் எண்ணத்தை மறைத்தும் அவர்கள் செயல்படுகின்றனர். “பாலினங்களில், குறைகளை மன்னிப்பதைக்காட்டிலும், குற்றஞ்சுமத்துவது சுலபம்”, என்கிற மோந்தேஞ்(Montaigne) கூற்றை இங்கே நினைவு கூற தக்கது. ஒருசிலவற்றைத் திட்டமிட்டே ஆண்கள் செயல்படுத்துகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. பெண்களுக்கான உரிமைகளை வரம்புக்கு கொண்டுவருவதற்காக உருவாகிய ரோமானியர் சட்டம் “பாலினங்களின் பிரச்சினைகளென்று “மடமை மற்றும் பலவீனங்களை” முன்வைக்கிறது. இக்குணங்களால் இக்கட்டான நேரங்களில் குடும்பத்தின் ஆண்வாரிசுகளுக்கு ஆபத்தென்று, அச்சுறுத்தல் வேறு. பதினாறாம் நூற்றாண்டில் மணமானப் பெண்கள் ஆண்களுடைய பாதுகாப்பில் இருக்கவேண்டுமென புனித அகஸ்டினிடம் முறையிட்டவர்கள், அப்பெண்களுக்கு அதாவது மணம் முடித்தப் பெண்களுக்கு, முடிவெடுக்கும் ஆற்றலோ, திட சிந்தனையோ இல்லை என்பதை அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார்கள், இதில் வேடிக்கை என்னவென்றால் திருமணமாகாதப் பெண்கள் தங்கள் உடமை மற்றும் செல்வத்தினை, பராமரிக்கும் விடயத்தில் இவர்களுக்கு உடன்பாடிருந்தது. இவைகளையெல்லாம் படிக்கிறபோது நமக்கு அதிர்ச்சி. பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்துமே ஆநீதியானது, ஒருதலைபட்சமானது எனபதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட மோந்தேஞ்,” தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தீர்மானிக்கபட்ட விதிகளை மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டென்றும், கபடச்செயல்களையும், தெருச்சண்டைகளையும் தங்களிடையே நிகழ்த்திக்கொள்வதற்கான காரணங்கள், இருபாலருக்குமே நிறைய இருக்கின்றன,” என்று கூற முற்பட்டபோதிலும், பெண்கள் தங்கள் பிரச்சினைக்களுக்காக முன்நிற்பதுபற்றி வாய்திறக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் அப்படியான மாற்றத்தை, சனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக்கொண்ட ஆண்களிடத்தில் முதன்முதலாகச் சந்திக்கிறோம் திதெரோ(Diderot)7 போன்றவர்கள், பெண்களும் ஆண்களைபோலவே ஓர் மனித உயிர் என்று எழுதத் துணிந்த காலம் அது. பின்னர் ஜான் ஸ்டூவர்ட் மில்(John Stuart Mill)8 பெண் சார்ந்து பேசினார், எழுதினார் என்ற போதிலும், இவர்கள் போக்கில் ஒருசார்புநிலை இருந்ததை மறுப்பதற்கில்லை. அடுத்து பத்தொன்பதாம் நூற்றாண்டு – தொழிற்புரட்சியின் காலம் -இங்கே பெண்ணியல் வாதப் பிரதிவாதங்கள், போராட்டங்கள் அனைத்துமே அவரவர் தேவைக்கான செயல்பாடுகளாக இருந்தன. விவசாயம் வீடு என்றிருந்த பெண்களுக்குத் தொழிற்சாலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. ஊதியம், வேலைநேரமென்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்தக் கட்டாயம், கொள்கை கோட்பாடென பேச்சளவில் இருந்த பெண்களை, வீதியில் இறக்கிற்று.. நில உடமைக் கொள்கைகள் தங்கள் செல்வாக்கினை ஒரு பக்கம் இழந்துகொண்டிருக்க, மேட்டுக்குடியினர், தனிநபர் சொத்துரிமைக்கு உதவும், பழமையான குடும்ப அமைப்புமுறைக்கு மீண்டும் திரும்புகின்றனர், எனினும் பெண்கள் விடுதலை என்பது சமுதாயத்தின் அழிவுபாதைக்கானது என பொருள்கொள்ளபட்டு, அவர்களுக்கான இடம், வீடென்று சொல்லபட்டது. பெண் தொழிலாளர்களின் குறைந்த ஊதியமும், கூடுதல் நேரம் பணியாற்றிமையும், தொழிற்போட்டியாளர்களாக அவர்களை ஆண் தொழிலாளர்கள் கருதும் நிலைமை உருவாயிற்றூ.. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் என்பதை மெய்ப்பிக்கும்வகையில் நேற்றுவரை உதவிய சமயம், தத்துவம், சமயக்கோட்பாடுகளோடு புதிதாக உயிரியல், சோதனைவழி உளவியல் என்ற அறிவியல் கூறுகளைத் துணைசேர்த்துக்கொண்டார்கள். அனைத்திற்கும் மேலாக ‘வேற்றுமையால் அனைவரும் சமம்’ என்ற வாக்கியத்தைத் தூக்கிப்பிடித்து, தங்கள் இனத்தவரோடு சேராத பிறவற்றோடு பெண்களை நிறுத்த முன்வந்தனர். இக்கொள்கையின் மீதான அக்கறையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒன்று; அமெக்க கருப்பரின மக்களுக்காக ஜிம் க்ரோ உபயோகித்த முக்கியமான வேதவாக்கு, ‘வேற்றுமைகளிருப்பினும் அனவரும் சமம்’ என்ற சொல் உண்மையில், மோசமான இனப்பாகுபாட்டிற்கு வித்திட்டது.

இந்த ‘வேற்றுமைகளின் அடிப்படையில் அனவரும் சமம்’ எனகருப்பின மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கபட்ட சொல்லை பெண்களுக்கு எதிராகவும் கையாண்டது ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. பொதுவாக எந்த இனமாக இருக்கட்டும், சாதியாக இருக்கட்டும், வர்க்கமாக இருக்கட்டும், அல்லது பால் அடிப்படையிலான பிரிவினராக இருக்கட்டும், எவரென்றாலும், அவர்களுள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பில் பேதங்கள் இருப்பதில்லை. பாரம்பரியப் பெண்களாகட்டும், கருப்பின உயிர்களாகட்டும், யூதர்களாகட்டும் அனவரும் சமம். இவர்களுள், யூதர்களை பிறரோடு ஒப்பிடல் முடியாதென்பதும் உண்மை எனினும், அவர்கள் மீதிருந்த இனப்பகையையும், இந்தமண்ணில் வாழ தகுதியற்றவர்கள் என தீர்மானிக்கப்பட்டு எதிரிகள் அவர்களைப் முற்றிலுமாக அழிக்க நினைத்ததையும் இரண்டாம் பட்சமாக கொள்ள முடியாது. ஆனால் பெண்களுக்கும் கருப்பின மக்களுக்கும் ஆழமான ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு இனங்களுமே தங்கள் தந்தைவழி ஆதிக்கத்தினின்று விடுபட முயல, நேற்றுவரை அவர்களது எசமானவர்களாக இருந்தவர்களுக்கு, அவர்களை விடுவிக்க விருப்பமில்லை, எப்போதும்போல தங்கள் தயவிலேலேயே அவர்களை வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணம். அதற்காக இனிக்க இனிக்க புகழ்வார்கள், கருப்பர்களென்றால்: நல்ல நீக்ரோ அதாவது சூதுவாது அறியாதவன், விளயாட்டுப்பிள்ளை, உல்லாசி, அடைமொழிகளுக்கு உரிய அடக்கமான கருப்பன், பெண்களென்றால் உத்தமி, அதற்கான தகுதிககளாக அவளிடம் எதிர்பார்ப்பது:பேதைமை, விளையாட்டுத்தனம், பொறுப்பற்றவள் ஆகிய அடைமொழிகளுக்கு உரிய அடக்கமான பெண்மணி. இதற்கான முடிவுகளை அவர்களுக்கு எடுக்க உதவிய சூழலை உருவாக்கியவர்களும் அவர்களே. அமெரிக்க வெள்ளையர்கள், கறுப்பர்களை காலணிமெருகூட்டும் பையன்கள் தகுதிக்கு உருவாக்கியிருக்கிறார்கள், எனக் கூறியதன் மூலம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, கறுப்பர்கள் காலணிகள் மெருகு ஊட்ட மட்டுமே தகுதியுடைவர்கள், என்று சொல்கிறார். தாழ்த்தப்பட்டவன் என்ற காரனத்தினாலேயே ஒருவனை அல்லது ஒரு கூட்டத்தை அப்படியான வட்டத்திற்குள்ளேயே நிறுத்துவதென்பது, உலகில் ஒத்த சூழலுள்ள எல்லா இடங்களிலும் உண்மை என்றாகிறது. இங்கே இருப்பு என்ற சொல்லை சரியாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம். அது நிலையானதல்ல, அது மாற்றதிற்குரியது. ஆம், இன்றைய தேதியில் பெண்கள் பொதுவாகப் ஆண்களினும் பார்க்க தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்களது வாழ்க்கைமுறையும் சூழல்களும் சில சாத்தியங்களுக்கு வித்திட்டு இருக்கின்றன. இது தொடரக்கூடுமா? என்பது நமக்குள்ள கேள்வி.

ஆண்களில் அநேகர் அதாவது இருபாலருக்கும் இடையேயான யுத்தத்தில் தோற்காத ஆண்களைத் தவிர்த்து மற்றவர்கள்- தொடரும் என்கின்றனர். பழமையில் நம்பிக்கைக் கொண்ட மேட்டுக்குடி வர்க்கத்தினர் பெண்விடுதலையை தங்கள் நலன்களுக்கும், காலங்காலமாய் பேணிக்காத்த கலாச்சார பண்பிற்கும் ஏற்பட இருக்கும் அபாயமாக கருதுகின்றனர். பெண் போட்டியாளர்களை பலரும் அச்சத்துடன் பார்க்கின்றனர். ‘Hebdo-Latin’ என்ற இதழில், மருத்துவம் அல்லது சட்டம் படிக்கும் பெண்களால் எங்கள் வேலைக்கு ஆபத்தென மாணவன் ஒருவன் எழுதினான். தனது உரிமைகள் குறித்தோ, பொருளாதார பலன்கள் என்பது ஓரினத்தின் சார்பானது அல்ல என்பது குறித்தோ அவன் கேள்வி எழுப்பவில்லை. அடக்குமுறையினால் ஏற்படும் ஒரே நன்மை, அடக்குகிறகூட்டத்திலும், உதாசீனபடுத்தப்பட்டு ஒரு சிலர் இருப்பர். அவர்களிடத்தில் தாங்களும், உயர்ந்தவர்களே என்ற எண்ணத்தை உண்டாக்கும் சாத்தியங்கள் அங்கே ஏற்படுவது உண்டு. தெற்கில் இருக்கும் அமெரிக்க வெள்ளையன் ‘ஊத்தை’யான கறுப்பன் நிலை எனக்கில்லை என்று பெருமிதம் கொள்வான். இதை நன்கு வசதிபடைத்தவன் தந்திரமாக இப்பெருமிதத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறான். அவ்வாறே சராசரி மனிதனுக்கும் பெண்ணொருத்தியோடு ஒப்பிடுகிறபோது தன்னைக் கடவுள் இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.

பொதுவாக குடும்பத்தில், குழந்தை பருவத்திலும், இளமைபருவத்திலும் தங்கள்வீட்டுப் பெண்மணியைப் பார்க்கிற ஆண் அவள் வளர்ந்த ஆணைபோலவே உடுத்தவும், சமுதாயத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதாகவும் நினைக்கிறான். அவன் வளர்ந்து இளைஞனாக மாறுகிறபோது தனது காதல் மற்றும் இச்சை அனுபவங்களில், காதலிக்கிற, அல்லது இச்சைகொள்கிற பொண்ணின் சுதந்திரம், மற்றும் மறுப்பினை தெரிந்துகொள்ள நேரிடுகிறது, பிறகு ஒருத்தியை திருமணம் செய்துகொள்கிறான், போதுமான அளவிற்கு தனது மனைவியையும், தாயையும் மதிக்கிறான், ஆக தனது குடும்பவாழ்க்கைமூலம், பெண்கள் ஓரளவு சுதந்திரமானவர்கள் என்கிற முடிவுக்கு வருகிறான். அதன்படி இருபாலருக்கும் இடையில் ஏற்றதாழ்வென்று எதுவுமில்லையென்றும், ஆணுக்கும் பெண்ணுமிடையே ஒருசில வேறுபாடுகள் இருப்பினும் குடும்ப உறவில் இருவரும் சமம் என்பது அவன் முடிவு. எனினும் ஆணுக்கு ஈடாக பெண் உழைப்பதில்லை, என்பதை அவதானிக்கிறபோது அவளை அவனுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள மனமின்றி அதற்கு இயற்கையிலேயே பெண்ணின் படைப்பு அப்படி என சமாதானம் செய்துகொள்கிறான், மனைவியிடத்தில் அன்பு செலுத்துகிறவனாகவும், அவள் காரியங்கள் யாவைக்கும் கைகொடுப்பவனாகவும் இருப்பதால், பெண்ணைச் சமமாக நடத்துவதாக ஆண் எண்ணிக்கொள்கிறான். இருவருக்குமிடையேயான ஏற்றதாழ்வுகள் அவன் வரையில் இல்லை. ஆனால் இல்லத்தில் பிரச்சினைகள் என்று வருகிறபோது, நிலைமை மாறுகிறது. நீ பாதி நான் பாதி என்பதெல்லாம் உதட்டளவில் என்றாகிறது, ‘ஏக நாயகன் நானே’ என்பதுபோல நடந்துகொள்கிறான். பெண்கள், தங்கள் உரிமைகளுக்கென்று போராடுவது அவசியமற்றது, அவர்களை ஆண்களுக்கு இணையாகவே நடத்துகிறோம் எனச் சொல்லிக்கொண்டே, இன்னொருபக்கம், ஒருபோதும் ஆணும்பெண்ணும் சமமாக முடியாது, அதற்காக அவர்கள் போராட்டம் ஊர்வலமென்று வெளியில்வருவது வீணான வேலை, என்பதே இன்றையதினத்தில் பெரும்பாலான ஆண்களின் கருத்து. இத்தகைய நெருக்கடிக்கு ஆண்கள் உள்ளாவதற்கான காரணம், அன்றாட வாழ்க்கையில் பெண்களுக்கு இனப்பாகுபாடுகளினால் ஏற்படுகிற பிரச்சினைகளும், விளைவுகளும் வெளிப்படையாக அத்தனை பூதாகரமானதாகத் தெரிவதில்லை. ஆனால் உண்மையில் பெண்கள், மனம்சார்ந்த, அறிவு சார்ந்த பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள், அதைப் பலரும் இயல்பானதென்று எண்ணவும் செய்கிறார்கள். பெண்ணிடம் மிகவும் பரிவாக இருக்கிற ஆண், அவளுக்கான பிரச்சினைகளை ஒருபோதும் அறியமாட்டான். அவ்வாறே தனக்கான சிறப்புரிமைகளைப்(privileges)- அதைப்பற்றிய போதிய ஞானமுமின்றி – போராடிப்பெற நினைக்கும் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கான வேதனைகள், சிக்கல்கள் புரியாது. இனியும் பெண்கள்மீது தொடர்ந்து நடத்தபடும் தாக்குதல்களை நம்மால் அனுமதிக்க முடியாது, ‘உத்தம பெண்’ என்று உருவகப்படுத்தி, செய்யப்படும் அர்சனை சொற்களுகோ, இவ்வுலகில் எதையும் இழக்கத் தாயாரில்லை என்கிற ஆணோடுதான் அவள் வாழ்க்கை எனத் தீர்மானிக்கப்படும் ஆர்வத்திற்கோ நம்மால் தொடர்ந்து உடன்படமுடியாது.

சில தேவையற்ற சிக்கல்கள் எழுவதன் காரணமாக, பெண் விடுதலை அபிமானிகளின் நியாங்கள் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை, அதனாலேயே அவர்கள் முன்வைக்கும் வாதங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கிவிடமுடியாது. ‘பெண்கள் எழுப்பும் கேள்விகள்’ இன்றைக்கு சாரமற்றதாக இருக்கிறதென்றால், அதை வெற்று கூச்சலாகக் ஆண்கள் திரித்துகூறியிருக்கிறார்கள். கூச்சலகளென்று சொல்கிறபோதே, அவை அர்த்தமற்றதாகிவிடுகின்றன. இதுவரை நடந்திருப்ந்தென்ன? பெண் உயர்ந்தவளா, தாழ்ந்தவளா, அல்லது நிகரா? என நிருபிப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்துமே ஆணை மையமாக வைத்து என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.. ஆதாமிற்கு பிறகு படைக்கபட்டவள் பெண் என்பதால், படைப்பில் அவள் இரண்டாம்நிலை என்பது வெளிப்படை என்பவர்கள் ஒரு சிலர். மற்றும் சிலர் இல்லை இல்லை, படைப்பின் முதல் முயற்சி ஆதாமென்றும், இறைவன் ஏவாளை படைத்தபோதே, உண்மையில் நிறைவு பெற்றார், அவளே முழுமை(Perfection), அவளது மூளை சிறியதெனினும், தேவையான அளவிற்கு பெரியதுதான், பிறகு அதனைத்தொடர்ந்து அவரது முதல்படைப்பு ஒழுங்காக அமையாததால் கிறிஸ்துவைக் கடவுள் படைத்தார், என்கிறார்கள். இரு தரப்பு கருத்திற்குமே நம்மால் மாற்றுக்கருத்துக்களை அளிக்க முடியும், பெரும்பாலான நேரங்களில் இரண்டுமே பொருளற்றவைளாகவே இருக்கின்றன. ஆக பெண்ணைப் பற்றி உண்மையில் புரிந்துகொள்ள முதலில் இதுமாதிரியான சிக்கல்களிலிருந்து நாம் விடுபடவேண்டும். உயர்ந்தவர், தாழ்ந்தவர், சமமானவர் என்ற சொற்கள் பேரில், தவறான திசையில் விவாதிப்பதை விடுத்து, முற்றிலும் புதிய வகையில், இப்பிரச்சினைக்கான பதிலைத்தேடவேண்டும்.

அப்படியெனில் அதற்கான கேள்வி எது? அக்கேள்வியை எழுப்ப அல்லது கேட்க நாம் யார்? விசாரிக்கப்படவேண்டியவர்களாகவும், நீதிவழங்க வேண்டியவர்களாகவும் ஆண்,பெண் இருவருமே உள்ளதால், இருபாலரையுமே பார்வையாளர்களாக மட்டுமே கொள்ள முடியும். ஆக நடுநிலைமை வகிக்கக்கூடிய பொதுவான ஒரு தேவதை வேண்டும் எங்கே போவது? இதில் சாபக்கேடு என்னவெனில் பெண் தேவதைக்குப் பொதுவாக நன்றாகப் பேசவராது, பிரச்சினைகளின் ஆழமும் புரியாது. இருபாலுயிரொன்றை நாடலாமென்றாலும் வழிகளில்லை, அதாவது இதுவுமில்லை அதுவுமில்லை என்கிறபோது ஒன்றுமில்லை என்றாகிறது. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இப்பிரச்சினைகளை பெண்களே தீர்த்தால் என்ன? தகுதிபெற்ற பெண்கள் நம்மிடத்தில் இல்லையா என்ன? எபிமெனித்(Epimenide)9கதைகளை இங்கே இழுக்காதீர்கள். ஆண்கள் அல்லது பெண்களின் தவறான அல்லது சரியான நம்பிக்கை மற்றும் அதன்மீதான செயல்பாடுகளுக்கு எந்த அதிசயச் சாறும் பொறுப்பல்ல, அவரவர் சூழ்நிலைகளே, உண்மைகளைத் தேடச் சொல்கின்றன. மானுட வாழ்க்கையின் அனுகூலங்களைஎல்லாம் விட்டுக்கொடுத்து, தன்னடக்கத்தோடு இருக்கிற பெண்களையும் அறிந்த நமக்கு, அதன் தேவையென்னவென்று புரியாமல் இல்லை. நமது முந்தையபெண்களைப் போல சண்டைபோடவேண்டிய நிலையிலும் நாம் இல்லை, களத்தில் வெற்றியும் கிடைத்திருக்கிறது, சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் நடந்த பெண்களுக்கான விவாதத்தில், பெண்கள் சுதந்திரம் என்பது இன்றைக்கு கனவல்ல உண்மை என உறுதிபடச் சொல்லப்பட்டிருக்கிறது, ஏற்கனவே நம்மில் பலரும் பெண்ளுக்கான சங்கடங்களையும் தடைகளையும் மறந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டுக்கு முக்கியத்துவம் கொடுததுபோக இன்றைக்கு அநேக பிரச்சினைகளை கையிலெடுத்திருக்கிறோம். நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதான நம்பிக்கையை நமக்கு இந்த மாற்றம் தந்துள்ளது. தவிர நாம் பெண்வழித் தோன்றல்கள் என்பதால், ஆணைக்காட்டிலும் பெண்கள் உலகத்தைப்பற்றிய ஞானம் நமக்கு அதிகம், மானுட வாழ்க்கையில் பெண்ணாய்ப் இருப்பதன் பொருளை நன்கு புரிந்துகொண்டதின் விளைவாக சட்டென்று அதுபற்றி ஒரு ஆணைக்காட்டிலும் நம்மால் விவாதிக்க முடிகிறது, அது தொடர்பான ஞானத்திலும் நமக்கு ஆர்வம். முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன என பன்மையில் சற்றுமுன்னர் கூறினேன், அப்படிக் கூறியதால் துரிதமாகத் தீர்க்கபடவேண்டியவைப் பற்றி கேள்விகள் கூடாது என்றில்லை உதாரணமாக: பெண்களாய் பிறந்ததால் நமக்குள்ள அன்றாடப் பிரச்சினைகள் என்ன? நமக்களிக்கப்பட்ட வாய்ப்புகள் எவை? மறுக்கப்பட்டவை எவை? அவைகளில் எவை எவை நமது எதிர்கால இளம் பெண்சகோதரிகளுக்காகக் காத்திருக்கக்கூடியவை? அவர்களை வழி நடத்திசெல்வதற்கான திசைகள் எவை? பெண்களால், பெண்களுக்காக என எழுதபட்ட புத்தகங்களைக்கூட பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நமது உரிமைகளை பேசுவதில் காட்டிய அக்கறையை தெளிவான, பிறருக்கு எளிதில் புரிகிற எழுத்திலும் காட்டியிருக்கலாம். நாமிருக்கும் காலம் மிதமிஞ்சிய கருத்துவேறுபாடுகளுக்கானது என்பதை பலரும் கூறியிருக்கிறார்கள், அக்கூற்றை மெய்ப்பிக்கும் முயற்சிகளிலொன்று இப்புத்தகம்.

சாதகமான கேள்விகள், அனுகூலமானத் தீர்மானங்கள், சமுதாயத்தில் ஏற்றதாழ்வுகளால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள், என அனைத்தையும் சிந்தித்து, பண்புகள் அனைத்தையும் விழுமியங்களாக அடையாளப்படுத்தபட்டு; குறிக்கோள்கள் களங்கமற்றவை என விளக்கமும் சொல்லப்படும். நடுநிலையுடன், மானுடப் பிரச்சினைகளை சொல்வது சாத்தியமில்லை. ஆரம்பத்திலேயே எதற்காக எழுதுகிறேன் அதற்கான நோக்கம் என்ன என தெளிவாக சொல்லப்படவேண்டுமென நினைக்கிறேன், வீணாக அதை ஒளிப்பதோ, மறைமுகமாக அக்கருத்தை வலியுறுத்துவதோ முறையாகாது. இதனால் உயர்ந்தது, தாழ்ந்தது, சிறந்தது, மோசமானது, முன்னேற்றம், பின்னடைவு என ஒவ்வொன்றிற்கும், பக்கத்திற்குப் பக்கம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் அவசியமும் இல்லை. சஞ்சிகைகளில், பெண்கள் பற்றிய எழுத்துகளை வாசிக்கிறபோதெல்லாம், நம் கண்ணிற்படுகிற மிக முக்கியமான விஷயம் ‘பொது நலம்’, இச்சொல்லை, ஒவ்வொருவரும் விரும்புகிற, அல்லது பேணிக்காக்க நினக்கிற சமுதாய நலம் பற்றியதென்று பிறர் பொருள்கொள்ள, நம்மை பொறுத்தவரையில் பொதுநலம் எனபது ‘தனிநபர் நலத்திற்கு’ உத்தரவாதம் அளிக்கப்படுவது என நினைக்கிறோம். பொது அமைப்புகள் மீதான நமது மதிப்பீடு என்பது தனிநபருக்கு நடைமுறை வாழ்க்கையில் அவ்வமைப்புகள் ஏற்படுத்தித் தரக்கூடிய வாய்ப்புகளைப் பொருத்தது. தனி நபர் நலன் எனச் சொல்ல முற்படுகிறபோது, மகிழ்ச்சி என்ற சொல்லை அதனுடன் சேர்த்து நாம் குழப்பிக்கொள்வதில்லை; இங்கேதான் அடிக்கடி மாற்றுக்கருத்துக்கு நாம் உட்படுகிறோம்; ஓட்டுரிமை உள்ள பெண்களைக்காட்டிலும் அந்தப்புர பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா? வீட்டு வேலைக்காரியைக்காட்டிலும், ஒரு பெண் தொழிலாளி மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கலாம். இந்த மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு உண்மையான பொருளைச் சொல்வது அரிது, சில நேரங்களில் அதன் விழுமியங்களை மூடிமறைக்கிறபோது மேலும் கடினம். அடுத்தவர் மகிழ்ச்சியை அளப்பதற்கான வழிமுறைகளென்று ஏதுமில்லை, ஆனால் அவர்களுக்கு நம்மால் ஏற்படுத்தித் தரப்படும் சூழ்நிலையை, மகிழ்ச்சியென சொல்ல முற்படுவோம்., ஓரிடத்தில் ஓய்வாய் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதெனில், தேக்கநிலை (வாழ்க்கைக்கு சபிக்கப்பட்டிருப்பதுகூட மகிழ்ச்சி என்றாகிறது. ஆகவே இம்மாதிரியான சிந்தனைப்போக்கைப் பற்றி எழுதவோ, பேசவோ நாம் விரும்புவதில்லை. நமக்கான திட்டம் நமக்கான பாதையென்று நினைப்பது, நெறியான, நியாயமான வாழ்க்கையன்றி வேறல்ல. உயிர்கள் யாவையும் தமது குறிக்கோள்கள் திட்டங்களை முன்வைத்து ஒருவித பரம்பொருள் நிலையை அடைய நினைப்பவைபோல செயல்படுகின்றன. சுதந்திரத்தை எட்டுவதற்கு, வேறுபல சுதந்திரங்களின் ஊடாக செல்லவேண்டியது அவசியம். எதிர்கால வளர்ச்சிக்கான கதவுகள் காலவரையன்றி திறக்ககப்படாதவரை, நிகழ்கால இருப்பினைபற்றிப் பேசிப்பயனில்லை. ஒவ்வொரு முறையும் பரம்பொருள் அல்லது மேன்மை நிலையை(Trancendance) எட்டிய உயிர் மீண்டும் தொடக்கநிலைக்குத் திரும்புவதென்பது, அவனது “நான்’ என்ற இருப்பிலும், வெற்று சந்தோஷங்களிலும் சரிவினை உண்டுபண்ணும்; இவ்வீழ்ச்சி உளவியல் அடிப்படையில் பெரிய பாதிப்பாகிறது, இதனைச் சம்பந்தப்பட்ட உயிரி உணருகிறபோது, வதைபடுகிறபோது, ஏமாற்றம், அடக்குமுறை இரண்டும் அவ்வுயிரியை மோசமான திசைகளுக்குத் திருப்புகின்றன. தனது ‘இருத்தலை’ குறித்து சந்தேகிக்கிற ஒவ்வொரு தனிநபருக்கும், வாழ்க்கை படிநிலையில் தன்னை மேன்மைபடுத்திபார்க்கிற இலட்சியமுண்டு. உண்மையில் பெண்ணுடைய இன்றையநிலை புதிரானது, ஒருபுரம் பிற மனிதரைப்போலவே சுதந்திரமாகவும், தனித்தியங்குவதுபோலவும் உணரும் அவள் மறுபுறம், தன்னை ஆண், ஓர் வேற்றுலகத்து பிறவியாக நடத்துவதாகவும் உணருகிறாள். அவளைக் கருவியாகப்(Object) பிறர்கைப்பாவையாக அதாவது தொடக்கநிலையிலேயே, பாரம்பரியபெண்ணாக வைத்திருக்க ஆண்கள் முனைவதற்கு, பெண்களுடைய மேன்மை நிலை நோக்கில், தன்னலமும், தனியுரிமை நாட்டமும் இருப்பதே காரணமென்று வாதிடுகிறார்கள். இதில் பெண்களுக்கான பிரச்சினை என்னவென்றால் அவள் இருமுனைகளில் போராட வேண்டியுள்ளது. பிற உயிர்களைப்போலவே ‘தன்னலம் முக்கியம்’ என நினைத்து தன்பொருட்டு செயல்படுதல் ஒருபக்கம், இச் சமுதாயம் தன்னை ஒருபொருட்டாக பிறர்மதிப்பதில்லையே என்ற வேதனை மறுபக்கம். இப்படியான சூழ்நிலைகளுடன் பெண்களை வைத்துக்கொண்டு ஒரு சமுதாயம் எப்படி தனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ல முடியும்.? அவளுக்கான பாதைகள் என்ன? அவைகளில் ஒருவழிப்பாதைகள் எவை எவை? பிறர் சார்ந்த வாழ்க்கை அவளது விதியென்ற நிலையில் என்றைக்கு அவள் சுதந்திரத்தைச் சுவாசிப்பது? பெண் சுதந்திரத்தைப் பேணமுடியாத சூழ்நிலைகள் எவை? அவைகளிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் உண்டா? இவைகளெல்லாம் நம்முன் உள்ள அடிப்படை கேள்விகள், அவைகளுக்கான விடைகளை அறிவதற்கான விருப்பம் நமக்கிருக்கிறது. அதாவது எனது அக்கறைகள் அனைத்துமே தனி ஒருவன் அல்லது ஒருத்திக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் பற்றியது, ஆனால் அவ்வாய்ப்புகளால் கிடைக்கிற மகிழ்ச்சிகள் எனக்கு முக்கியமல்ல, அவ்வாய்ப்புகள் உருவாக்கித் தருகிற சுதந்திரம் முக்கியம்.

இப்பிரச்சினைகள் அனைத்திற்குமே, உடற்கூற்றின் அடிப்படையில், உளவியல் அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்போமென்றால் அவைகள் பொருளற்றதாகிவிடும். எனவே முதற்கட்டமாக உயிரியல், உளப்பகுத்தாய்வு, இயற்பொருள்வாதங்களின் பெண்களைக் குறித்த பார்வை என்ன என்பதை விவாதிக்க இருக்கிறேன். பிறகு ‘உத்தம பெண்கள்’ என்ற சொல்லின் இன்றைய நிலை என்ன, ஏன் பெண்களை ‘மற்றமையாக'(the Other)- அதாவது அந்நியராகக் கருதும்போக்கு இருக்கிறது- இக்கருத்தில் ஆண்களின் மனப்பாங்கு என்ன – என்பது குறித்து முயற்சிக்கிறேன். அடுத்து பெண்கள் தரப்பினைச் சார்ந்தவளாக, அவளுக்கான உலகம் எது, அவளுக்கென தீர்மானிக்கபட்ட உலகிலிருந்து விடுபட்டு, மானுடவாழ்க்கையில் தனக்குரிய பங்கை அடைய நினைக்கும் பெண்ணுக்கான சங்கடங்களென்ன? என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி-அணங்கு – பெண்ணெனும் இரண்டாமினம் தொடராக அணங்கில் வெளிவருகிறது. .
—————————————————————————————————————————————————————-
1. Trotskyste – Leon Trotskyயால் உருவாக்கப்பட்ட Trotskisme சித்தாந்தவாதிகள். Leon Trotsky 1917ம் ஆண்டு ரஷ்யபுரட்சியின்போது ஸ்டாலினுக்குத் துணைநின்றவர். கருத்துவேற்றுமைகாரணமாக கட்சியிருந்தும், சோவியத் யூணியனிலிருந்தும் 1927ம் ஆண்டு வெளியேற்றப்பட்டவர்.
2. ‘The Kinsey Report- (அமெரிக்க ஆண்களின் பாலியல் நடத்தைகள்)- என்ற நூலை C.Kinsey எழுதவில்லையா எனக்கேட்பதில் பொருளில்லை, அந்நூலின் கருத்து வேறு.
3. August Bebel(1840-1913):Bebel was born in Deutz, near Cologne; he founded the Sachsische Volkspartei (“Saxon People’s Party”) in 1867
4. Montherland, Henry de (1895-1972) எழுத்தாளர்.
5. Jean de Meun அல்லது, Jean de Meung (1240-1305) -பிரெஞ்சு கவிஞர்
6. Michel de Montaigne(1533-1592) – எழுத்தாளர்
7. Denis Diderot (1713-1784) எழுத்தாளர் மற்றும் மெய்யியல் அறிஞர்
8. John Stuart Mill(1806-1873) மெய்யியல் அறிஞர்
9. Epimenide -Epimenides of Knossos (Crete) was a semi-mythical 6th century BC Greek seer and philosopher-poet, who is said to have fallen asleep for fifty-seven years in a Cretian cave sacred to Zeus, after which he reportedly awoke with the gift of prophecy.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா