ஐடி’யாளர்களின் பார்வை சரியா,தவறா?

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

அறிவன், சிங்கப்பூர்.


இன்றைய ஹைடெக் நகரங்கள் என சொல்லப்படும் இந்திய தகவல்தொழில்துறை சார்ந்த நகரங்களில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றவர்கள் பார்வையில் வெறுப்பையும்,அந்த நகரங்களில் வாழும் மற்ற துறைகளைச் சார்ந்த மக்களின் பார்வையில் ஐடி துறையாளர்களைப் பொறாமையுடனும்,விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் மனோபாவமும் வளர்ந்து வருகிறது எனச் சொல்கிறது அவுட்லுக் இதழின் ஒரு கட்டுரை.(http://www.outlookindia.com/full.asp?fodname=20071217&fname=Cover+Story+%28F%29&sid=1&pn=1)
அது அளிக்கும் புள்ளி விவரங்களின் படி பெருவாரியான தூண்டப்படாத தாக்குதல்கள்,அடிதடி சண்டைகளில்-சுமார் 65 % க்கும் அதிகமான,பதிவான வழக்குகளில்(Unprovoked assaults) ஐடி யாளர்களே இலக்காக இருந்திருக்கிறார்கள்.
இதற்கான காரணங்களாக அது பட்டியலிடுவது எட்டமுடியா நிலைக்குப் போய்விட்ட வீடு,வணிக இடத்துக்கான வாடகை நிலை,இதன் காரணமான நடுத்தர வாசியின் சிதைந்து விட்ட ‘அரையடி அகல சொந்தவீடு’ கனவு;எல்லாப் பொருள்களிலும் உள்ளாகியிருக்கும் விலை ஏற்றம்-இதற்கு ஐடி யாளர்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது எனினும்,இந்தியா போன்ற ஒரு under developed தேசத்தில் ஒரு சாரார் எளிதாக சம்பாதிக்கும் 30000,40000 ஆன மாத சம்பளம்,நாட்டின் பொருளாதாரத்தில் பாய்ச்சப்படும் போது,சந்தையின் பண உள்வரவு அதிகமாகிறது,அது இயல்பான பணவீக்கத்திற்குக் காரணமாகிறது என்னும் நிலை;
இவை எல்லாமே ஓரளவு ஒத்துக் கொள்ளக் கூடிய வாதங்களாகவே இருக்கின்றன.
இன்போஃசிஸ் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஒரு சமூக ஆர்வலர் என்பது நமக்குத் தெரியும்,அவர் விரித்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இதற்கெல்லாம் ஒரு உரைகல்.அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பெங்களூருவில் ஒரு பூ விற்கும் பெண்மணி ஒரு ஐடி’யாளருக்கு பூ விற்கையில் அப்போதைய நிலவும் விலையை விட சுமார் 35 சதம் அதிகம் விலை சொல்லி விற்றிருக்கிறார்,சுதா அப் பூப் பெண்மணியிடம் ‘ஏனம்மா இப்படி அதிகவிலை சொல்கிறாய்’ எனக் கேட்க, ‘நீ சும்மா இரு,அவர் ஐடி கம்பெனியில் இருக்கிறார்(அந்த இளைஞர் தன் அலுவலக கழுத்துப் பட்டையை அணிந்திருந்திருக்கிறார்,பெரும்பாலான ஐடி’யாளர்கள் இதை பெருமையுடன் செய்கிறார்கள்),இவ்வளவு சம்பாதிக்கும் போது அவர்கள் கொடுக்கலாம்,உன் வேலையப் பார்த்துக் கொண்டு போ’ என்ற பதில் கிடைத்திருக்கிறது.
இந்த நிலை வந்ததற்கு,பெருவாரியான இதர சக சமூக மக்கள் ஐடி’யாளர்களை எதிரி மனோபாவம் கொண்டு பார்க்கும் நிலைக்கு,யார் காரணம்? உடனே,அவர்களின் சம்பாதிக்க இயலாத,பொறாமைதான் காரணம் என்று buck passing முறையில் நம்மில்(நானும் ஐடி துறையில்தான் இருக்கிறேன்)பலர் பதில் கூறலாம் எனில்,அது இன்னும் பொது சமூகத்திலிருந்து நம்மை வேறுபடுத்துமோ என்ற எண்ணம் தோன்றுவது தவிர்க்க இயலாததாயிருக்கிறது.

நான் பிறந்தது ஒரு கிராமும் இல்லாத,டவுனும் இல்லாத ஒரு இரண்டும்கெட்டான் ஊரில்.பள்ளிப் படிப்பெல்லாம் ஊரில்தான்,கிராமம் சார்ந்த கல்வி,இளங்கலை கணிதம் மதுரை விவேகானந்தாவிலும்,பட்டயக் கணக்காளர்-Chartered Accountant-கல்வி கோவையிலும் படித்தேன்.
90 களின் ஆரம்பத்தில் சிஏ முடித்தவர்கள் அப்போதைய நிலவரத்தில் கம்பெனிகளில் நல்ல வேலை கிடைத்தால் வருடம் 5 லட்சம் அல்லது 6 லட்சம் ஆண்டு வருமான அளவில் கிடைக்கும்,இது இந்திய அளவில் முதன்மைத் தர வரிசைகளில் வந்தால்.இல்லாதவர்கள் ஆனாலும் நல்ல கல்வித் தகுதியுடன் இருப்பவர்கள் சுமார் 4.5 லட்சம் அளவில் கிடைக்கும்.
பொறியாளர்கள் போன்ற மற்ற துறையாளர்கள், 90 களின் ஆரம்பத்தில் ரூ.4000 மும் அதற்குக் குறைந்த சம்பளத்திலும் வேலை செய்ய தயாராய் இருந்தார்கள்.
ஆனால் இப்போது ஒரு பொறியியல் பட்டம் பெற்றவர்,சரியான முன்னேற்பாட்டுடன் முயற்சி செய்தால் ஐடி துறையில் ஆரம்ப சம்பளம் 30000 வாங்க முடிகிறது.இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 4 கம்பெனிகள் தாண்டுவதன் மூலம் 8 லட்சம் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் இன்றும் கல்லூரி விரிவுரையாளர்,கணக்காளர்,மருத்துவர் என அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் இந்தவித வேகமான சம்பாத்திய வழிமுறை இல்லை.இன்னும் மெட்ரோ தவிர்த்த மற்ற ஊர்களில் நகர்களில் சாதாரண மக்களின் நித்த வருமானம் ரூ200 க்குள் இருப்பது சாதாரணம்.

இந்த வேகமான,எளிதான சம்பாத்தியமே ஐடி’யாளர்களின் சமூகம் சார்ந்த பார்வைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறதோ என்பதும் என் எண்ணம்.

இந்த எளிதான பணம் வாழ்க்கையின் சகல திக்குகளையும் உரசிப் பார்க்கும் சோதனை மனோபவத்தை அளிக்கிறது;பெரும்பாலான ஐடி’யாளர்கள் வேலையின் பொருட்டு பெற்றோரை விட்டு தள்ளி வசிக்கும் இன்றைய சூழ்நிலையில் ‘எதையும் ஒருமுறை’ முயற்சித்துப் பார்க்கும் இளமை மனோபாவம் எந்தவித கட்டுறுத்தல்களோ,தடுமாற்றமோ இன்றி Pub, Party சார்ந்த வாழ்க்கைச் சூழலுக்கு எளிதாக மாறிவிடுகிறது.
மத்திய 90 களில் நான் கணக்காளராக பணி புரிந்த நாட்களில் நான் தங்கியிருந்த மேன்சன் என்றழைக்கப்படுகிற விடுதிகளின் 20 அறைகளில் மிஞ்சினால் 2 அறைகாரர்கள் பீர் மட்டும் திரவ வகைக் காரர்களாக இருப்பார்கள்;ஆனால் இன்றைய நிலை அப்படியா என எண்ணினால் நமக்குக் கிடைப்பது ஆயாசமே.
அது அவரவர் உரிமை,அவர் சம்பாத்தியம் அவர் குடிக்கிறார்,அவரால் சமூகத் தொந்தரவு ஏதும் இல்லை என வாதிடலாம்; ஆயினும் வாழ்வின் விழுமியங்கள் எனக் கருதப்பட்ட விதயங்கள் இன்று எளிதாய் புறந்தள்ளப் படுகின்றன என்பது கண்கூடு;இதன் பிற் சேர்க்கையாக எவையெல்லாம் நல்லன என நாம் வாழ்ந்த சமூகம் சொன்னதோ அதையெல்லாம் ‘ஹெ’ என எள்ளும் ஒரு பார்வையும் வந்தாயிற்று,சமீபத்திய ஒரு பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்த போது திருமுறைகள் பற்றிய சில பதிவாளர்களின் எள்ளல் விமரிசனங்கள் கண்ணில் பட்டன;இந்தவகை விமர்சனங்கள், திருமுறைகள் பற்றிய முழுமையான அறிவும் அந்த காலகட்ட வரலாறு,சமூகப் நிலைகள் பற்றிய முழுமையான அறிவுக்கு அப்புறம் வந்தால் அது ஓரளவு புரிந்துகொள்ளப் பட வேண்டியதே;எதையுமே முழுக்க அறியாமல் வரும் இவ்வகை விமர்சனங்களின் காரணம் மேற்சொன்ன எள்ளல் மனோபாவமே,வாழ்வை-அதாவது பிழைக்கும் வழியை-வசப்படுத்திவிட்ட எனக்கு எல்லாம் எளிதானவையே என்ற ஒரு பார்வையின் விளைவு.
நம்மைச் சுற்றிய சமூகத்தில் இன்னும் ஒரு நாளில் 50 ரூபாய் சம்பாதிக்க நாள் முழுதும் மண் வெட்டும் தொழிலாளியும் இருக்கிறார்,அவரையும் உள்ளடக்கியதுதான் இந்த சமுதாயம்,நாமும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கமே என்ற எண்ணம் நம்மில் வருவதையும் அந்த எள்ளல் மனோபாவமே தடுக்கிறது.
இதன் ஒட்டு மொத்த தாக்கம் நிச்சயம் சமூக வாழ்வில் இருக்கும்,நாம் நம்ப மறுத்தாலும் கூட !

http://sangappalagai.blogspot.com/2007/12/31.html

அறிவன், சிங்கப்பூர்.


en.madal@yahoo.com

Series Navigation

அறிவன்

அறிவன்