ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

சித்ரா சிவகுமார்


காலை வணக்கத்தை ஜப்பானியர்கள் இப்படிக் கூறுகின்றனர்.

ஜப்பானின் தட்ப வெப்ப நிலை மிகவும் மோசமானது என்றே சொல்லலாம். வடக்குப் பகுதியில் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும். மத்திய கீழ் பகுதிகளில் சற்றே இதமானதாக இருக்கும்.

குளிர்காலங்களில் ஹொக்கைடோ தீவுகளில் உள்ள மலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டு இருக்கும். குளிர் அதிகம் இருக்கும் இந்த நாட்களில்இ ஜப்பானியர்களும் மேலும் பல்வேறு நாட்டுப் பயணிகளும் இங்கே பனிச்சறுக்கு விளையாட்டிற்காகக் கூடுவர்.

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நாடு. டோக்கியோ நகரில் 1923ல் ஏற்பட்ட நில நடுக்கம் 140000 மக்கள் வரை விழுங்கியது. அடுத்த பெருத்த நில நடுக்கத்திற்காக மக்கள் காத்திருப்பதை நான் அங்கு சென்ற போது காண முடிந்தது. இந்த பத்து வருடங்களில் டோக்கியோ நகரில் சிறிய நிலநடுக்கங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன.

1995ன் கோபே நில நடுக்கம் சற்றே பெரியதானாலும் அதில் 5000 மக்கள் வரை இறந்தனர். மக்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டு இருந்தன. இரயில் போக்குவரத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

ஜப்பானில் பெரும்பாலும் வீடுகள் நிலநடுக்கத்திற்கு ஏற்ப கட்டப்படுகின்றன. அடுக்கு மாடி கட்டிடங்களே ஆனாலும் அவை நிலநடுக்கத்தின் போது ஆடும் தன்மை கொண்டதாக அமைக்கப்படுகின்றன. அதனால் நில அதிர்வுகள் ஏற்பட்ட போதிலும் இடிந்து விழும் அபாயம் மிகக் குறைவாகவே இருக்கும் வகையில் பொறியியல் தொழில் நுட்பத்துடன் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

இத்தகைய நிலநடுக்கங்கள் கடலில் ஏற்படும் போது சுனாமிப் பேரலைகள் ஏற்படுகின்றன. 1923 நிலநடுக்கம் 33 அடிகள் (10 மீட்டர்கள்) உயரம் வரை அலைகளை ஏற்படுத்திஇ வெள்ளத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தியதாம்.

இன்று வரையிலும் இத்தகைய சுனாமி அலைகள் ஜப்பானின் கரைகளைத் தொட்ட வண்ணம் தான் இருக்கின்றன.

அடுத்த அபாயம் தைபூன் என்று சொல்லும் சூறாவளிக் காற்று. கோடைக் காலங்களின் இறுதியில் அவை ஜப்பானைத் தாக்கும். அவை நம் நாட்டுப் புயலைப் போன்றவை. காற்று மிகவும் பலமாக வீசும். ஒரு மணிக்கு 100 மைல்கள் வேகத்திற்கு அடிக்கக் கூடியது. அவை மரங்களை வேரோடு சாய்க்க வல்லது. தைபூன் என்பது சீன மொழிச் சொல். அதற்கு ‘சக்தி மிக்க காற்று” என்று பொருள். ஜப்பான் ஒரு வருடத்தில் 30 தைபூன்கள் வரை பார்க்கும். 24 மணி நேரங்களில் 30 செ. மீ வரை மழை பெய்யும் அளவு காற்று வீசும். செப்டம்பர் மாதம் தான் அதிகமான மழை வீசும் காலம்.

எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்டாலும் அத்தனையும் கண்டு கொள்ளாமல் மேன்மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது ஜப்பான். பயணிகளாகச் செல்வோர் ஏப்ரல், மே மாதங்களில் சென்றால் நன்றாகச் சுற்றிப் பார்க்கலாம். மே மாதம் முதல் வாரம் ‘தங்க வாரம” என்று அழைக்கப்படும். இந்த வாரத்தில் மூன்று பொது விடுமுறைகள் உண்டு என்பதால் ஜப்பானியர்கள் அந்த வாரத்தில் முழு விடுப்பு எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று திரும்புவர். இரயில் விமானப் பயணங்களுக்கு இடம் கிடைப்பதும் சற்றே கடினம். இருந்தாலும் இவ்விரு மாதங்களில் தான் ஜப்பானில் அதிகப் பயணிகள் வருகின்றனர்.


chitra@netvigator.com

Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்