சூரன் போர்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

அ.முத்துலிங்கம்


ஐந்தாம் வகுப்பு சரித்திரப் பாடப் புத்தகத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல்மூலம் பயணம் செய்தது வாஸ்கொடகாமா, உலகத்தை முதன்முதல் சுற்றியது மகெல்லன் என்றெல்லாம் படித்திருக்கிறோம். மகெல்லனுடைய நீண்ட பயணத்தைப் பற்றிய புத்தகம் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன் பெயர் Over The Edge of the World. அதை எழுதியவர் பெயர் Lawrence Bergreen. மகெல்லனைப் பற்றி பல புத்தகங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும் இந்தப் புத்தகம் வித்தியாசமானது. இதை எழுதிய ஆசிரியர் பல வருடங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஸ்பெயினுக்கும், போர்சுக்கல்லுக்கும் இன்னும் பல முக்கியமான இடங்களுக்கும் சென்று அந்த நாட்டு நூலகங்களில் மகெல்லனுடைய மூல ஆவணங்களை நேரடியாக ஆராய்ந்தவர். மகெல்லனுடைய கப்பலில் பயணம் செய்த பிகவெட்டா என்பரின் நாட்குறிப்பையும், கப்பல்களில் பாதுகாக்கப்பட்ட தினக்குறிப்புகளையும் ஆராய்ந்து அஇதன் முடிவில் எழுதியதுதான் இந்தப் புத்தகம்.
ஸ்பெயினிலிருந்து ஐந்து கப்பல்களில் 260 பேர்களுடன் மகெல்லன் 1519ம் ஆண்டு புறப்பட்டான். ஒரேயொரு கப்பல் மூன்று வருடம், ஒரு மாதம் கழித்து ஸ்பெயின் துறைமுகத்தை திரும்பி வந்தடைந்தது. அதில் 18 பேர் எஞ்சியிருந்தனர். அந்தக் கப்பல்தான் முதன்முதலில் உலகத்தைச் சுற்றிய கப்பல். அதன் பெயர் விக்டோரியா. அதில் மகெல்லன் இஇல்லை, பாதி வழியிலேயே அவன் கொலை செய்யப்பட்டுவிட்டான்.

இன்றைக்குச் சரியாக 500 ஆண்டுகளுக்கு முன்னர், 1506ம் ஆண்டு, அலெக்சாந்தர் என்ற போப்பாண்டவர் உலகத்தை வடக்கு தெற்காக கோடு கிழித்து இரண்டு கூறாகப் பிரித்தார். உலகத்தின் கிழக்குப் பக்கம் போர்ச்சுக்கல்லுக்கு சொந்தம்; மேற்குப் பக்கம் ஸ்பெயினுக்கு சொந்தம். காரணம் இரண்டு நாடுகளுமே முதல்தரமான கடற்படைகளை தம்மிடம் வைத்திருந்தன. இரண்டுமே புதுப்புது நாடுகளை பிடிப்பதில் தீவிரம் காட்டின. ஆகவே போப்பாண்டவர் கிழக்கே பிடிக்கும் நாடுகளை போர்ச்சுக்கல்லும், மேற்கே பிடிக்கும் நாடுகளை ஸ்பெயினும் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார். இந்தப் போட்டி எல்லாம் லவங்கம், கறுவா, சாதிக்காய் போன்ற நறுமணச் சரக்குகளைக் கைப்பற்றுவதற்குத்தான். அந்தக் காலத்தில் தரைமார்க்கமாக இவற்றைக் கொண்டுவருவதில் பாதுகாப்பில்லை. வழிப்பறிக் கொள்ளையர் பயம். ஒரு றாத்தல் தங்கத்திலும் பார்க்க ஒரு றாத்தல் நறுமணச்சரக்கின் மதிப்பு அதிகம். கிழக்கே இஇருந்த நறுமணச்சரக்கு தீவுகளுக்கு கடல் பாதையை யார் முதலில் கண்டுபிடிப்பது என்பதில்தான் போட்டி.
மகெல்லன் போர்ச்சுக்கல் அரசன் மானுவெலின் சேவகத்தில் இருந்தான். சிறுவயதிலிருந்து அவனுக்குள் ஒரு தணியாத ஆசை. மேற்குப்பக்கமாகப் பயணம் செய்து கிழக்கே சென்று நறுமணச்சரக்குகளை அள்ளிவரவேண்டும். கொலம்பஸ் தோற்ற முயற்சியில் எப்படியும் வெற்றி பெற்று தான் பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும். போர்ச்சுக்கல் அரசனிடம் நாலு தடவை தன் பயணத்துக்கு அனுமதி கேட்டும் அவன் மறுத்துவிட்டான். இஇறுதியில் மகெல்லன் வெறுத்துப்போய் ஸ்பெயின் தேசத்து அரசனிடம் விண்ணப்பித்துக்கொள்வதற்கு சம்மதம் கேட்டான். போர்ச்சுக்கல் அரசனுக்கு தன் எதிரி நாட்டானிடம் மகெல்லன் போவது பிடிக்கவில்லை, எனினும் அவனுக்கு தன் பின்பக்கத்தை காட்டியபடி சரி என்று ஒத்துக்கொண்டான்.
ஸ்பெயின் தேசத்து அரசன் இஇளைஞன், பெயர் சார்ல்ஸ். அவன் பல மாத ஆலோசனைகளுக்கு பின்னர் மகெல்லனுக்கு அனுமதி வழங்கினான். ஐந்து கப்பல்கள், அதற்கு வேண்டிய சாமான்கள், இரண்டு வருட உணவுப் பொதிகள், மாலுமிகள், வேலைக்காரர்கள் என்று ஏற்பாடு செய்தான். ஆனால் இந்த ஏற்பாடுகளில் ஒரு பிரச்சினை இஇருந்தது. மகெல்லன் ஒரு போர்ச்சுகீசியன்; மாலுமிகள், கப்பல் ஓட்டிகள், வேலைக்காரர்கள் என்று கப்பலைச் சேர்ந்த அனைவரும் ஸ்பெயின் தேசத்தவர்கள். இஇரண்டும் பகை நாடுகள். ஆகவே மகெல்லன் தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே தீர்மானித்திருந்தான். 1519ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி மகெல்லன் தலைமையில் ஐந்து கப்பல்கள் புறப்பட்டன.
மகெல்லன் எதிர்பார்க்காமல் ஒன்று நடந்தது. போர்சுக்கல் அரசன் மகெல்லனைத் தடுப்பதற்கு ஒரு கப்பல் படையை ஏவியிருந்தான். அதிலிருந்து தப்புவதற்காக மகெல்லன் புதிய கடல் பாதைகளை உண்டாக்கி அவர்களை ஏமாற்றவேண்டும். அது தவிர, போர்சுக்கல்காரனான மகெல்லனை ஸ்பானியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்பொழுதும் ஏதாவது பிரச்சினைகளை கிளப்பியபடியே இருந்தனர். மகெல்லன் அஞ்சாநெஞ்சன்; திறமையான போர்வீரன். பயணத்தின் வெற்றிக்கு ஒழுக்கமும், கீழ்ப்படிதலும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவன். டிசெம்பர் மாத நடுவில் வட அமெரிக்கக் கரையை அடைந்ததும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்ட அவன் தீர்மானித்தான்.
மகெல்லனுடன் பிரயாணம் செய்தவர்களில் முக்கியமானவன் பிகவெற்றா. இவனுடைய வேலை நாள் குறிப்பு எழுதுவது. அத்துடன் எதிர்ப்படும் தீவுகளில் வசிக்கும் ஆதிவாசிகளுடன் பழகி அவர்கள் பேசும் மொழியை பதிவுசெய்வது. ஆதிவாசிகளுடன் மகெல்லன் பழக்கம் பிடித்து கப்பலுக்கு தேவையான பொருட்களை பண்டமாற்று செய்கிறான். ஆதிவாசிப் பெண்களுடன் மாலுமிகள் சல்லாபமாக இஇருக்கிறார்கள். சிலர் எல்லைமீறி பெண்களை கடத்திவந்து கப்பலில் ஒளித்து வைக்கிறார்கள். மகெல்லனுக்கு தன்னுடைய பலத்தைக் காட்டவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. ஸ்பானியர்கள் ஒன்று இசேர்ந்து தனக்கு எதிராக சதி செய்வதை அவன் உணர்கிறான். ஐந்து கப்பல்களில் மூன்று கப்பல்கள் அவனுக்கு எதிராக போர்செய்ய முடிவெடுக்கின்றன. மகெல்லன் தன்னுடைய தந்திரத்தாலும், அதிபுத்திக்கூர்மையாலும், தீரத்தாலும் ஸ்பானியர்களுடைய சதியை முறியடித்து சதிகாரர்களுக்கு குரூரமான தண்டனைகள் வழங்குகிறான். ஒருவனை நாலு துண்டுகளாக வெட்டி கடலில் வீசுகிறான். சிலரைக் கொலை செய்கிறான். இஇருவரை ஆளில்லாத் தீவுக்கு கடத்துகிறான். மீதி முப்பது பேருக்கு கடும் ஊழியச் சிறைவாசம். முதன்முறையாக ஐந்து கப்பல்களும் மகெல்லனுடைய முழு அதிகாரத்தின் கீழ் வருகின்றன.
மகெல்லனுடைய முக்கியமான பணி அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் தண்ணீர் வழிப்பாதையை கண்டுபிடிப்பது. இஇதில் மும்முரமாக எல்லாக் கப்பல்களும் ஈடுபடுகின்றன. திரும்பத் திரும்ப அவர்கள் முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு கப்பல் பாறைகளில் மோதி சுக்குநூறாக உடைந்துவிடுகிறது. இந்தப் பயணம் தோல்வியில் முடியும் என்று தீர்மானித்த சில மாலுமிகள் மறுபடியும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். பத்து மாதங்கள் அலைந்து தேடிய பிறகு மகெல்லன் கடல் பாதையை கண்டுபிடித்து கப்பல்களை சாமர்த்தியமாகச் செலுத்தி பசிபிக் சமுத்திரத்துக்குள் நுழைகிறான். ஆனால் அவனுக்கு தெரியாமல் சதிகாரர்கள் சானன்ரோனியோ கப்பலை திரும்ப ஸ்பெயினுக்கு ஓட்டிப்போகிறார்கள். பசிபிக் மகாசமுத்திரம் மகெல்லனுக்கு முன்னே விரிந்து கிடக்கிறது. அவன் அந்த சமுத்திரத்தை அதற்குமுன் பார்த்ததில்லை. மூன்று கப்பல் தலைவர்களையும் கூட்டிவைத்து அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசிக்கிறான். எல்லோரும் ஏகமனதாக பயணத்தை தொடருவது என்று முடிவெடுக்கிறார்கள். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கப்பலை செலுத்தினால் அவர்கள் தேடும் வாசனைச்சரக்கு தீவுகள் வந்துவிடுமென்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பு எவ்வளவு தவறு என்பது அவர்களுக்கு தெரியாது.
மகெல்லனிடம் 200 ஆட்களும் மூன்று கப்பல்களும் எஞ்சியிஇருந்தன. வெகுசீக்கிரத்திலேயே கிழக்கு தீவுகள் வந்துவிடும் என்று அவனுடைய கப்பல் ஓட்டிகள் நினைத்தார்கள். ஆனால் பயணம் இஇழுத்துக்கொண்டே போனது. கப்பலில் உணவு முடியும் தறுவாயில் இஇருந்தது. பட்டினியிலும், நோயிலும் பலர் மடிந்தார்கள். ‘இஇன்றைக்கு தரை தென்படும், நாளைக்கு தரை தென்படும்’ என்று நாட்கள் கடந்தன. 98 நாட்கள், 7000 மைல்கள். நம்பிக்கை எல்லாம் இஇழந்துவிட்ட நிலையில் ஒரு தீவுக்கூட்டத்தை அடைந்தார்கள். அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இஇல்லை. மாலுமிகள் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்தார்கள். ஸ்பானிய அரசன் பிலிப் சார்பில் அந்த தீவுகளுக்கு பிலிப்பைன் என்று மகெல்லன் பெயர்சூட்டினான். உணவுப் பொருட்கள் ஏற்றவும், தண்ணீ£ர் பிடிக்கவும், பண்டமாற்று செய்யவும் பல மாதங்கள் இந்தத் தீவுகளில் தங்கினார்கள். லிமசாமா என்ற தீவின் அரசன் பெயர் கொளும்பு ராசா. இந்த ராசாவுடன் மகெல்லன் சகோதர உறவு வைத்தான். அதாவது இஇரண்டு பேரும் தங்கள் உடம்பிலிருந்து சொட்டு ரத்தத்தை எடுத்து அதைக் கலந்து குடித்தார்கள். இந்த தீவுப் பெண்களுடன் காமக் களியாட்டங்களுக்கும் குறைவில்லை. தீவு மக்கள் எல்லோரையும் மகெல்லன் கிறிஸ்தவர்களாக மாற்றினான்.
அடுத்தது சேபுத் தீவு. இஇந்த மக்கள் மகெல்லனை கடவுளாகக் கொண்டாடினார்கள். சேபு அரசனுக்கு இருநூறு மனைவிகளும், ஆசைநாயகிகளும். மதுபான விருந்துகளும், காம விளையாட்டுகளும் தொடர்கின்றன. இந்த தீவு ஆண்கள் தங்கள் குறிகளில் சலங்கை மணிகளைச் சுற்றித் தைத்திருப்பார்கள். அவர்கள் நடக்கும்போது மணிகள் ஒலிக்கும், பெண்கள் நடக்கும்போது மெட்டி ஒலிப்பதுபோல. அந்தச் சத்ததைக்கேட்டு பெண்கள் கிளர்ச்சி அடைவார்களாம். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் பிடித்த வழக்கம் என்று பியவெட்டா தன் டையரிக் குறிப்புகளில் எழுதிவைக்கிறார். சேபுத் தீவிலே மட்டும் 2200 பேரை கிறிஸ்துவர்களாக மகெல்லன் மாற்றினான்.
கொஞ்சம் கொஞ்சமாக மகெல்லன் தன் பயணத்தின் முக்கியத்துவத்தை மறந்து தீவு வாசிகளை கிறிஸ்துவர்களாக மாற்றுவதில் தீவிரம் காட்டினான். கிட்டத்தட்ட மதபோதகராகவே மாறிவிடுகிறான். அடுத்துவந்த சின்னத்தீவு அவனுக்கு முழுச் சவாலாக அமைகிறது. அதன் ராசா ‘லப்புலப்பு’ மகெல்லன்னை கடவுள் என்று மதித்து வணங்க மறுக்கிறான். மகெல்லனுக்கு ஆத்திரம். லப்புலப்புவை தாக்கி அடிபணிய வைக்க மகெல்லன் முப்பது ஆட்களுடன் தீவுக்குள் பிரவேசிக்கிறான். லப்புலப்பு 1500 ஆட்களுடன் மறைந்திருந்து எதிர்பாராதவிதமாக மகெல்லனைத் தாக்குகிறான். தப்பும் வழியெல்லாம் மூடிவிட்டதால் மகெல்லன் வெட்டுப்பட்டு சாகிறான். அவனுடைய உடம்பு துண்டு துண்டாக கடலில் மிதக்கிறது. அவனுடன் வந்த மீதிப்பேர் ஓட்டம் எடுக்கிறார்கள். உலகத்தை வெல்லப் புறப்பட்ட மகெல்லன் ஒரு சின்னஞ்சிறு தீவைக் கைப்பற்றமுடியாமல் அனாதரவாக மடிந்துபோகிறான்.
பழுதாகிவிட்ட ஒரு கப்பலை அந்த தீவிலேயே எரித்துவிட்டு எஞ்சியுள்ள மாலுமிகள் இரண்டு கப்பல்களில் புறப்பட்டு வாசனைச் சரக்கு தீவுகளை ஏழு மாதங்களாகத் தேடி கண்டுபிடிக்கிறார்கள். தீவு வாசிகளை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சியை இப்பொழுது கைவிட்டாகிவிட்டது. இரண்டு கப்பல்கள் நிறையவும் சரக்குகளை ஏற்றுகிறார்கள். அந்தச் சமயம் பார்த்து ஒரு கப்பல் உடைந்துபோக அதைப் பழுதுபார்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விக்டோரியா என்ற கப்பலை மட்டும் எல்கனோ என்பவன் செலுத்திக்கொண்டு புறப்படுகிறான். வந்த பாதை வழியாக திரும்பிப் போகாமல் ஆப்பிரிக்காவை ஒட்டி கரையோரமாக கப்பலை ஓட்டுகிறான். இதுவும் நீண்ட பயணம். உணவும் பற்றாக் குறையினாலும், நோயினாலும் பலர் செத்து விழுகிறார்கள். எல்கானோ விடாப்பிடியாக கப்பலை செலுத்துகிறான். அவன் திறமையான தலைவன். அவர்கள் பழுதுபார்க்க விட்டு வந்த கப்பலை போர்ச்சுக்கல் படை கைப்பற்றிவிட்டது. இப்போது எஞ்சியது விக்டோரியா மட்டுமே.
எல்லோரும் நம்பிக்கை இழந்த நிலையில் விக்டோரியா ஸ்பெயின் துறைமுகத்தை வந்தடைகிறது. ஆவிகள் போல 18 பேர் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். கப்பல் திரும்பிய நாள் 1522ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி. பயணத்திற்கு எடுத்த காலம் மூன்று வருடம், ஒருமாதம். அவர்கள் கொண்டுவந்து சேர்த்த வாசனைச் சரக்குகளின் மதிப்பு முழுச்செலவுகளை கொடுத்த பின்பும் லாபம் ஈட்டியது. உலகம் சுற்றிய முதல் கப்பல், பணத்தில் மாத்திரம் லாபம் ஈட்டவில்லை; ஒரு நாளும் அவர்களுக்கு லாபம். அவர்கள் மேற்கு நோக்கிப் பயணம் செய்தபடியால் ஒரு நாள் அதிகமாகியிருந்தது. எப்படி ஒரு நாள் கூடியது என்ற புதிரை விடுவிக்க அவர்களுக்கு மேலும் பல மாதங்கள் எடுக்கும்.

மகெல்லன் கண்மூடித்தனமாக பிரயாண ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அவனுடைய பயணம் அன்றைய வானவியல் ஆராய்ச்சகளின் அடிப்படையில், விஞ்ஞான முறையில் திட்டமிடப்பட்டது. போர்ச்சுக்கல்லில் அப்பொழுது கிடைத்த அத்தனை முதல் தரமான உலக வரைபடங்களையும், ஸ்பெயினில் பாதுகாக்கப்பட்ட ரகஸ்ய வரைபடங்களையும், உன்னதமான கடல் கருவிகளையும் மகெல்லன் பயன்படுத்தினான். அவன் காலத்தில் தீர்க்கரேகை கண்டுபிடிக்கப்படவில்லை. மணிக்கூடு இஇல்லை; மணல் கடிகாரம்தான். மிகக்கடினமான இந்தப் பயணத்தை தொடங்க மகெல்லன் வாழ்நாள் முழுக்க தன்னை தயார் செய்திருந்தான். அட்லாண்டிக் – பசிபிக் கடல் பாதையை பத்து மாத காலமாகத்தேடி கண்டுபிடித்தான். அமெரிக்க கண்டத்தை தாண்டியவுடன் இஇந்தியா வந்துவிடும் என்று அந்தக் காலத்தில் பலரும் நினைத்திருந்தார்கள். ஏழாயிரம் மைல்கள், 98 நாட்கள் பசிபிக் சமுத்திரத்தில் அலைந்தான். அவனுடைய பயணம், முதல் சந்திர மண்டலப் பயணத்துக்கு சமமானது. முதன்முறை உலகம் உருண்டை என்பதை அந்தப் பயணம் சந்தேகமற நிரூபித்தது. மகெல்லனுக்கு பின்னர் உலகம் முன்புபோல இருக்கமுடியாது; மாறிவிட்டது.
போர்ச்சுக்கல்லில் மகெல்லன் துரோகியாகக் கருதப்பட்டான். ஸ்பெயினிலோ அவன் வெறுக்கப்பட்டான். ஸ்பெயின் அரசன், அவனை நம்பிக் கொடுத்த பொறுப்புக்கு தகுதியுடையவனாக அவன் நடந்துகொள்ளவில்லை என்று கருதினான். அவன் கொடூரக்காரனாகவும், சித்திரவதைக்காரனாகவும், அரச அவிசுவாசியாகவும் கருதப்பட்டான். பயணத்தின்போது பல ஸ்பானியர்களை சிறைவைத்தான், சிலரை கொலை செய்தான். வேறு சிலரை ஆளில்லா தீவுகளுக்கு நாடு கடத்தினான். உலகில் ஒரு நாடும் அவன் வெற்றியை போற்றவில்லை. உலகத்தில் எங்கேயும் அவனுக்கு கௌரவம் கிட்டவில்லை. ஒருவர்கூட நினைவில் வைக்கவும் இல்லை.
பிலிப்பைனில் உள்ள மக்ரன் தீவில், ஏப்ரல் 27ம் தேதி வருடாவருடம் சூரன் போர் போன்ற ஒரு விழா கொண்டாடப்படுகிறது. ஒரு சின்னஞ்சிறு தீவு அரசன் மகெல்லனை எதிர்த்து நின்றதை அது நினைவுகூருகிறது. மகெல்லன் கொல்லப்பட்ட அதே கடற்கரையில் இந்த நாடகம் நடக்கிறது. இஒருவன் ராசா வேடம் போடுவான், மற்றவன் மகெல்லன் வேடம் தரிப்பான். இந்த நாடகப் போரில் மகெல்லன் மடிகிறான்; தீவு அரசன் வெல்கிறான். மகெல்லனுடைய உடல் கடல் அலைகளில் விழுந்து கிடக்கிறது. பார்வையாளர்கள் ஓவென்று ஆர்ப்பரித்து வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
உலகம் முழுக்க மகெல்லனை மறந்தாலும் இன்றும் வருடா வருடம் நடக்கும் அவனுடைய வதம் மூலம் மனித ஞாபகத்தில் அவன் வாழ்கிறான்.


amuttu@gmail.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்