மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

ஹமீது ஜாஃபர்


பெட்டியை அடைத்துக்கொண்டிருந்த தேவையற்ற பொருள்களை வெளியேற்ற எண்ணி பழைய குப்பைகளைக் குடைந்து கொண்டிருந்தேன். ஏராளமான காலாவதியான காகிதங்கள், தேவையற்ற கடிதங்கள், சான்றிதழ்கள், அறிக்கைகள் இப்படி பல முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஒவ்வொன்றாக எடுத்து படித்துவிட்டு குப்பையில் போட்டுக்கொண்டிருந்தேன். அவைகளுக்கிடையில் ஒரு மங்கிய வெள்ளை கவர் ஒன்று; அதனுள்ளே பழுப்பேறிய நிலையில் மூன்றாக மடிக்கப்பட்ட A4 சைஸில் ஒரு வெள்ளை காகிதம், பிரித்துப் பார்த்தபோது அது ஐக்கிய அரபு கப்பல் கம்பெனியிலிருந்து எனக்களிக்கப்பட்ட ரிப்போர்டின் நகல்.

Dear Sirs,
I herewith submit for your attention details of the attack by Iran Forces on the vessel M.V. Al Farwaniyah whilst passing Abadan at 0915 hrs Dt. 21-9-80. என்று தொடங்கி இன்னும் சில விபரங்களையும் தந்து முடிவில் at 1309 hrs. Remainder of river transit without incident. Pilot disembarks at Rooka Buoy. Vessal proceeds to Kuwait என்ற தகவலுடன் ஒப்பிட்டிருந்தார் அதன் Master J.P.Scallan.

அதை மீண்டும் படித்தபோது என் வாழ்வில் மறக்கமுடியாத அந்த பயங்கரம் என் கண் முன்னே ஓடத்தொடங்கியது.

ஆம்! இருபத்தைந்தாண்டுகளுக்குமுன் கப்பல் பழுது பார்க்கும் கம்பெனி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1980 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 45 க்கும் 50 டிகிரி செல்ஸியஸுக்குமிடையில் விளையாடிக்கொண்டிருந்த கோடை வெயில் சற்று தணிந்து வந்துகொண்டிருந்தது. சுமார் 200 பேர் தங்கக்கூடிய அது ஒரு Accommodation Barge – அதில், வியர்வையின் துணையால் உடம்புடன் ஐக்கியமாகிவிட்ட ஆடையுடன் எனக்களிக்கப்பட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்போது மலையாள நண்பன் ஓடிவந்து ‘ஜாபர்.. நின்னெ கம்பெனியிலெ விளிக்கின்னு, டிரைவர் பொறத்தெ நிக்கின்னு’ என்றான்.

‘சரி, இந்த வேலை..?’

‘அதெ ஞான் நோக்கிக்கொள்ளா, நீ வேகஞ்செல்லு’ என்றான்.

நான் வெளியே வந்தபோது பாகிஸ்தானி டிரைவர் நிஃமத் கான் காத்துக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் ‘ஜாபர் பாய், ஆப் கோ ச்சான்ஸ் மிலா’ என்றான். என்ன விஷயம் என்று கேட்டபோது ஆப் ஜஹாஜ் பர் ஜானேக்கா (நீங்கள் கப்பலில் போகவேண்டும்) என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிரைவருக்கு வேறு விபரம் எதுவும் தெரியவில்லை.

கம்பெனியை அடைந்ததும் எனக்காக காத்துக்கொண்டிருந்த ஜெனரல் மேனேஜர் பால் டால்பட், ‘Jaffer, you have to sail with the ship this evening, go and get ready’ என்றார்.

‘What is the job?’ என்றேன்.

‘There are two jobs. One is, the boiler tubes were burst, you have to change the tubes and another one is the failed hydraulic crane to be repaired. Another three, Mr. Regie, Mr. Patel and Mr. Fernandes also coming with you.’ என்று பதிலை அளித்துவிட்டு புறப்படுவதற்கு ஆயத்தமாக சொன்னார்.

அன்று, 1980 செப்டம்பர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை நாங்கள் நால்வரும் Immigration formalities எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு துபை ‘மினா ராஷித்’ துறைமுகத்திலிருந்து புறப்பட்டோம். மாலை 5 மணிக்கு எங்களையும் சுமந்துக்கொண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டு 35ஆயிரம் டன் எடை சரக்குகளை சுமக்கும் திறன்கொண்ட , முப்பதாண்டுகள் உலகை பலமுறை வலம் வந்த, M.V. Farwaniyah என்ற பெயரைத்தாங்கிய அந்த மங்கை ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரும் ஒரே துறைமுகமான எழில்மிகு பஸராவை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினாள்.

என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. ஈராக் வரலாற்று சிறப்பு வாய்ந்த நாடு, பஸரா பல அறிஞர்களை ஈன்றெடுத்த நகரமல்லவா? பாக்தாதுக்கு ஒரு சிறப்பு என்றால் பஸராவுக்கு வேறொரு சிறப்பு. செல்வ சிறப்புமிக்க பேரரசர் ஜுனைதுல் பகுதாதியை இறைநேசராக மாற்றி தன்னை சிறப்பு படுத்திக்கொண்ட நகரம் பாக்தாது என்றால் தன் வாழ்நாள் முழுவதும் இறை காதலிலேயே கரைந்த ஞானி ராபியத்துல் பஸரியா என்ற சீமாட்டியை உலகிற்கு தந்து பெருமைப் பட்டுக்கொண்ட நகரம் பஸரா. பஸராவில் பிறந்து தத்துவக் கல்விக்கூடத்தை நிறுவிய அறிஞர் ஹஸன் பஸரி அவர்களைப் பற்றி இமாம் கஜ்ஜாலி அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்:

“… திருத்தூதர்களைப் போல் பேசிய ஒரு மனிதரைப் பார்க்கவேண்டுமா? ஹஸன் பஸரியின் வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள், நபித்தோழர்களின் பண்புக்கு உவமானம் வேண்டுமா? நீங்கள் தேடி எடுக்கவேண்டிய நூல்: ஹஸன் பஸரியின் வரலாறு”

இத்தகைய அறிஞர்கள் பிறந்த ஊரை பார்ப்பதென்றால் என்னைப் போன்றவர்களுக்கு ஆசை வராமல் இருக்குமா?

மாலை 5 மணிக்கு துபை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், break water ஐ கடந்து pilot இறங்கியதும் சிறிது சிறிதாக தன் வேகத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆறு மணிக்கு நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு எங்களுக்களிக்கப்பட்ட பணியைத் தொடங்க ஆயத்தமானோம். சாதாரணமாக எல்லா கப்பல்களிலும் மாலை ஆறிலிருந்து ஏழு ஏழரைக்குள் இரவு உணவு முடிந்துவிடும்.

முதலில் எங்கிருந்து துவங்குவது, எப்படி செய்வது, எத்தனை நாட்களுக்குள் முடிப்பது என்று ஒரு திட்டத்தை நாங்கள் வகுத்தோம். ஏனென்றால் திட்டமிடுவது என்பது வேலைக்கான நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்ல , ஒரு ஒழுங்கையும் ஏற்படுத்தும்.

நாங்கள் இரண்டு பிரிவாக பிரிந்துகொண்டோம். A பிரிவில் நானும் ரஜியும், B பிரிவில் பட்டேலும் பெர்னாண்டஸும். A பிரிவிலுள்ளவர்களின் வேலை, burst ஆன பைப்புகளை அகற்றுவதும் அவை பொருத்தப்பட்டுள்ள துளைகளை சுத்தப்படுத்துவதும். B பிரிவிலுள்ளவர்களின் பணி அகற்றப்பட்ட பைப்புகளுக்குப் பொருத்தமாக புதிய பைப்புகளை வளைத்து உருவாக்குவதும் அதன் உரிய இடத்தில் பொருத்துவதும்.

அந்த பாய்லர் மேல் கீழாக இரண்டு drum களைக் கொண்டது. அந்த இரண்டு drumகளையும் பைப்புகள் மூலம் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே பைப்புகள் ‘வில்’ போல் வளைந்த நிலையில் இருந்தன. சேதமான பைப்புகளை மேலும் சேதப்படுத்தாமல் எடுக்கவேண்டும். காரணம் அதன் அமைப்பும் அளவும் மாறக்கூடாது. ஆகவே oxcy acetylene gas னால் cut பண்ணாமல் disc grinding cutter கொண்டு பக்கத்து பைப்புகளுக்கு பாதகம் வராமல் மிக சிரத்தையுடன் ஒவ்வொரு பைப்புக்கும் அடையாளங்கள் இட்டு துண்டித்து எடுத்தோம். எடுத்த பைப்புகளை B பிரிவிலுள்ளவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் புதிய பைப்புகள் உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.

சேதமடைந்த பைப்புகளை நீக்கினால் மட்டும் போதாது, அது பொருத்தியிருந்த துளைகளில் ஒட்டியிருக்கும் துண்டுகளை எடுத்தாக வேண்டும், துளைகளை சரியாக்க வேண்டும், அவற்றில் burrs இருக்கக்கூடாது. ஆகவே அடுத்த கட்ட செயலாக துண்டு பைப்புகளை எடுக்கத் தொடங்கினோம். அப்படி எடுக்கும்போது துளை பெரிதாகிவிடக்கூடாது, அதனுடைய முகம்(face) சேதமடைந்துவிடக்கூடாது எனவே மிகுந்த கவனத்துடன் எங்கள் பணியை செய்தோம். தவிர அதன் துவாரங்களை ‘பென்சில் கிரைண்டர்’ என்று சொல்லக்கூடிய சிறிய நுணுக்கமான கிரைண்டரைக்கொண்டு சுத்தம் செய்தோம். எங்கள் பணி முடிந்த பிறகு ஒவ்வொரு பைப்பாக அதன் உரிய இடத்தில் அவர்கள் பொருத்திய பிறகு அவற்றின் வாயை விரிவு (flare) படுத்தவேண்டும். அப்போதுதான் பைப் உறுதியாக நிலைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பாய்லரில் உற்பத்தியாகும் நீராவி கசியாமல் இருக்கும். அப்போது எங்களிடம் Hand Flaring Tool மட்டுமே இருந்தது, எனவே அதைக்கொண்டு மிக சிரமப்பட்டு பைப்புகளின் இரண்டு வாய்களையும் விரிவாக்கினோம்(expanding). ஒவ்வொரு பைப்புக்கும் சுமார் 20 நிமிடங்கள் பிடித்தன.

என்கள் பணி முடித்த பிறகு pressure test பண்ணியாக வேண்டும். எனவே பாய்லரில் தண்ணீரை நிறைத்து boiler feed pump மூலமாகவே 18 bar வரை pressure test செய்து கப்பலின் தலலமைப் பொறியாளரின் அங்கீகாரத்துக்குப் பின் பாய்லரை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தோம். பத்து நாட்களுக்குள் எங்கள் பணி முடிந்துவிட்டது.

பஸரா நகரம் கடலிலிருந்து சுமார் 55 கி.மீ தூரத்தில் ‘சத்தல் அராப்’ என்ற நதிக்கரையில் இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்து பாயும் யுப்ரட்டீஸ், டைகரீஸ் நதிகள் பஸராவின் எல்லைக்குட்பட்ட ‘அல் குர்னா’ என்ற இடத்தில் சங்கமித்து , சத்தல் அரபாக பரிணமித்து , அறுபது கி. மீ தூரம் பயணம் செய்து அராபிய வளைகுடாவில் இணைகிறது. எந்த கப்பலும் அனுமதி இல்லாமல் நேராக சத்தல் அரபில் நுழைந்துவிட முடியாது எனவே 38 மணி நேர பயணத்துக்குப் பின் எங்கள் கப்பல், நதியின் நுழைவாயிலிருந்து சற்று தூரத்தில் நங்கூரமிட்டபின் 10ஆயிரம் குதிரை சக்திக் கொண்ட Main Engine தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது. நாங்கள் அடைந்தபோது இரவாகிவிட்டது, இரவு நேரத்தில் நதியில் எந்த கப்பலும் பயணம் செய்யமுடியாது தவிர pilot இல்லாமல் கப்பலை அசைக்கமுடியாது எனவே பொழுது விடியும் வரை காத்திருந்தோம்.

காலை உணவை முடித்துவிட்டு பணியை மீண்டும் தொடங்கிய சற்று நேரத்தில் சுமார் 7.30 அல்லது 8.00 மணிக்கு main engine மீண்டும் உறுமத்தொடங்கியது. ஆம், எங்கள் கப்பல் பஸராவை நோக்கி நகரத் தொடங்கியது. சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் அரை வேகத்திலும் சென்றுக்கொண்டிருந்தது. (கப்பலின் வேகத்தை Dead Slow; Slow Speed; Half Speed; Full Speed என்றே குறிப்பிடுவார்கள் Main Engine-ன் சுழற்சியை வைத்து). காலை 10.00 மணிக்கு தேனீரை எடுத்துக்கொண்டு நதியின் அழகை ரசிக்க எஞ்சின் ரூமிலிருந்து மேலே வந்தேன்.

ஒரு பக்கம் ஈரான் மறுபக்கம் ஈராக், இந்த இரு நாடுகளுக்கும் எல்லையாக நதி ஓடியது. இந்த நதி யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளும் தங்கள் பலத்தை காட்டிக்கொண்டிருந்தன. ஈரானில் ஷா ஆட்சி ஒழிந்து கொமெனி தலமையில் ஜனநாயகம் மலர்ந்தது மேற்கத்தியவர்களுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது கொமெனியை ஒழித்துவிட்டால் முந்தய ஆட்சியில் கண்ட சுகத்தை அனுபவித்துக்கொண்டு குளிர் காயலாம் என்ற நப்பாசையில் ஈராக்கிற்கு மறைமுகமாக அள்ளி கொடுத்து ஆதரித்தனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு, தங்கள் கணக்கு தவறு, குடித்தது மனப்பால் என்று உணர்ந்துகொண்டது; ஈராக்கை பரமஎதிரியாக்கியது சிதம்பர ரகசியமான விஷயம்.

இரண்டு நாட்டின் கரைகளிலுமே கண்ணுக்கெட்டிய தூரம் பச்சை பசேலென்ற பேரீட்சைத் தோப்பு. ஈரானைவிட ஈராக்கில் அடர்த்தியாகவும் பஸராவரை நீண்டிருந்தது. ஈரானில் சில இடங்களில் பாலையாகவும் சில இடங்கள் தொழில் நகரங்களாகவும் இருந்தன. கரையோரமிருந்த கொரம்ஷஹர் சிறு துறைமுகப் பட்டணமாகவும் அடுத்திருந்த அபதான் பெட்ரோல் சுத்திகரிப்பாலை உள்ள நகரமாகவும் இருந்தது. பஸராவிலிருந்து சில கப்பல்கள் திரும்பிக்கொண்டிருந்தன, இரண்டு கப்பல்கள் எங்கள் பின்னால் தொடர்ந்துகொண்டிருந்தன. நதி, சில இடங்களில் குறுகலாகவும் சில இடங்களில் அகலமாகவும் இருந்தது. சில இடங்களில் எதையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர், Propellerலிருந்து வந்த அலைகள் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்தன போலும். அவர்களைப் போல நானும் உற்சாகத்துடன் இருந்தேன். காரணம் இது எனக்கு புது அனுபவம்! பல முறை கப்பலில் பயணம் செய்துள்ளேன் அவை எல்லாம் கடலில் மட்டுமே, இப்போதுதான் முதன்முறையாக நதியில் பயணம் செய்கிறேன். கடலில் பயணம் செய்வதற்கும் நதியினுடே பயணம் செய்வதற்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது. கடலில் பயணம் செய்யும்போது நான்கு பக்கமும் கடலைத் தவிர வேறு எதையும் பார்க்கமுடியாது, ஆங்காங்கே சில கப்பல்கள் போவதைப் பார்க்கலாம்; சில வேளைகளில் அபூர்வமாக டால்ஃபின்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்க்கலாம்; வானத்தில் மிக உயரத்தில் வெண்புகையினால் நீளமாகக் கோடு வரைந்துக்கொண்டு விமானம் பறப்பதைப் பார்க்கலாம். ஆனால் நதியின் இரு கரைகளிலும் இயற்கை காட்சிகளையும் கூடவே இயற்கையுடன் போட்டிப்போட்டுக்கொண்டு வளர்ந்து வரும் நகரங்களின் உயர்ந்த கட்டிடங்களின் அழகையும் பார்க்கும் வாய்ப்பு வேறு எங்கு கிடைக்கும்?

இயற்கையையும் செயற்கையையும் ஒருசேரப் பார்க்கும்போது மனித ஆற்றல் ஒன்றும் குறைந்ததல்ல! பல்லாயிரக்கணக்கானப் படைப்பினங்களில் மனிதனுக்கு மட்டும் ‘இறைவனின் பிரதிநிதி’ என்ற பெருமை உண்டு. அனைத்து உயிரினங்களும் தம் தம் வேளை எதுவோ அதைமட்டும் செய்கின்றன, அதை மீறி எதையும் செய்ய இயலாது. ஆனால் மனிதன் மட்டும் எதை எதையோ செய்கிறான்; நினைத்ததை எல்லாம் சாதிக்கிறான்; இறைவனைப் போல் விதவிதமாகப் படைக்கிறான். இறைவன் கல்லைப் படைத்தான், மனிதன் கட்டிடத்தைப் படைக்கிறான்; இறைவன் மண்ணைப் படைத்தான், மனிதன் கண்ணாடியை படைக்கிறான்; இறைவன் மரத்தைப் படைத்தான், மனிதன் அவற்றிலிருந்து பல்விதமான பொருட்களைப் படைக்கிறான்; இறைவன் தாதுக்களைப் படைத்தான், மனிதன் அவற்றிலிருந்து உலோகங்களைப் படைக்கிறான்; இறைவன் மின்சக்தியைப் படைத்தான், மனிதன் அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகிறான். இப்படி பிரதிநிதித்துவத்தை பெருமையோடு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

அதனால்தான் என்னவோ இறைவனை அடியோடு மறந்துவிட்டான்!

ஏறக்குறைய பணிரண்டு மணிநேர பயணத்துக்குப் பின் இரவு 8-00 மணி அளவில் பஸரா துறைமுகத்தை அடைந்தது. கஸ்டம்ஸ் அலுவலர்களும் ஷிப்பிங் ஏஜண்டும் வந்து வழக்கமாக உள்ள அவரவர் பணியை செய்தனர் கூடவே மதுபானங்களை லாக்கரில் வைத்து சீல் வைத்தனர். அங்கு மதுபானங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிய TVயில் தேசிய உணர்வையூட்டும் பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சதாம் உசேன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். எல்லா நிகழ்ச்சிகளும் அரபி மொழியில் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆங்கில நிகழ்ச்சி என்பது மருந்துக்கூட இல்லை. மொழி அறியாத காரணத்தால் புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதைமட்டும் ஊகிக்க முடிந்தது. ஊகிக்கமுடிந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, காரணம் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் தெரியவில்லை. சாதாரணமாகவே இருந்தது.

கப்பல் கரையை அடைந்தபிறகு எங்கள் பணியிலும் சில மாற்றங்களை செய்துகொண்டோம். நகரைக் காணவேண்டுமே! எனவே காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடித்துவிட்டு 6 மணிக்கு நகரை வலம் வர புறப்பட்டுவிடுவோம். துறைமுகத்திலிருந்து நகரின் மையப் பகுதிக்கு சென்றுவிடுவோம், அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சுற்றிபார்த்துவிட்டு நடுஇரவில் மீண்டும் கப்பலுக்கு வந்துவிடுவோம்.

பஸரா மற்ற நகரங்களைப் போலல்லாது சற்று மாறுபட்டு காணப்பட்டது. அந்நகரைக் காணும்போது ஆம்ஸ்டர்டாம் நினைவுக்கு வந்தது. ஆம்! அப்படிதான் அந்நகரம் காட்சியளித்தது. சத்தல் அராப் நதியிலிருந்து பல கால்வாய்கள் பிரிந்து நகரின் உட்புறமாக சென்றன. சில கால்வாய்களில் சிறிய படகுகள் இருப்பதைக் கண்டோம். இரவு நேரமாக இருந்ததால் தெளிவாகப் பார்க்கமுடியாவிட்டாலும் நிலா வெளிச்சத்தில் ஓரளவு பார்க்க முடிந்தது. ஆனால் அவை தூய்மை இல்லாமல் இருந்தாலும் இரு மருங்கிலும் பேரீட்சை மரங்கள் இருந்ததால் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதை உணர்ந்தோம். கடைத்தெருக்களில் வெளிநாட்டுப் பொருட்களை அவ்வளவாக காணமுடியவில்லை. ஒரு சில பொருட்கள் இருந்தன, அவற்றின் விலைகளும் அதிகமாகவே காணப்பட்டன. உள்நாட்டு உற்பத்தி இல்லாவிட்டாலும் வெளிநாட்டுப் பொருட்கள் கிடைப்பது அரிதாகவே காணப்பட்டது. வெளிநாட்டவர்களில் குறிப்பாக கொரியர்கள் அதிகமாக காணப்பட்டனர். அவர்கள் கட்டுமானப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் உரையாடியபோது தெரிந்துக்கொண்டேன்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நைட் கிளப்புகள் வரிசையாகக் காணப்பட்டன. 5 தினார் கொடுத்து உள்ளே சென்றால் Belly Dance பொழுது விடியும்வரை கண்டு வரலாம்.

ஒரு வார காலம் நாங்கள் அங்கு தங்கி இருந்தோம் என்று சொல்வதைவிட ஒரு வாரத்துக்குள் சரக்குகள் இறக்கப்பட்டுவிட்டன. இந்த காலகட்டத்திற்கிடையில் எங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை முழுமையாக நிறைவுசெய்துவிட்டோம். Pressure Test ன்போது கண்டுபிடிக்கப்பட்ட சின்ன குறைகளையும் சரிசெய்து பாய்லரை இயங்க வைத்தோம்.

மறுநாள் 21-9-80 அன்று காலை சரியாக 6-00 மணிக்கு எங்கள் கப்பல் பஸரா துறைமுகத்தைவிட்டு புறப்பட்டது. மீண்டும் பார்க்க வாய்ப்பிருக்குமா என்ற கேள்விக்குறியோடு அந்நகரத்தையும் துறைமுகத்தையும் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு எங்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பணியைத் தொடங்க ஆயத்தமானோம்.

இரண்டாவது பணி, கிரேனில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாரை சரிசெய்வது. இரண்டுபேர் க்ரேனின் கதவைத்திறந்து சிஸ்டத்தை ட்ரேஸ் அவுட் செய்துக்கொண்டிருந்தனர். நான் வெளியே நின்று நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒருவனுக்கு எஞ்ஜின் ரூமில் சிறிய வேலை ஒன்றிருந்தது. ஈரானிய நகரமான கொரம்ஷஹரைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நகரமான அபதான் தெரிந்தது. அதை நெருங்கியபோது ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது. ஆலைப் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் வந்திருக்கலாம் என்ற நினைப்பில் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த நினைப்பு மாறுவதற்குமுன் படபட வென துப்பாக்கியால் சுடும் சத்தமும் Navigation Bridge லிருந்து “They are firing, come inside” என்று கேப்டன் கத்தின சத்தமும் ஒரே நேரத்தில் கேட்டபோது எங்களுக்கு ஒரு வினாடி ஒன்றும் புரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் நாங்கள் எந்த கிரேனில் வேலை செய்துக்கொண்டிருந்தோமோ அந்த கிரேனை பல குண்டுகள் துளைத்தன. வெளியே நின்ற நான் பாய்ந்துசென்று கிரேனுக்குள் புகுந்துக்கொண்டு கதவை மூடிவிட்டேன். நெஞ்சு படபடவென்று அடித்தது, உடம்பு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது, பயத்தால் உடம்பு நடுங்கியது. ஒரு சில நிமிடங்கள் வரை ஒன்றுமே தோன்றவில்லை. உள்ளே இருந்த இருவரும் என்ன? என்ன? என்று பதறினர். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, ‘we are fired’ என்று மட்டும் சொல்லிவிட்டு கதவை மெல்லத்திறந்து பார்த்தபோது hatch ஐ (சரக்குகள் வைக்கும் பகுதி) சுத்தப்படுத்திக்கொண்டிருந்த கப்பல் சிப்பந்திகள் accommodation ஐ நோக்கி ஓடுவதைக் கண்டேன். உடனே நாங்கள் மூவரும் ஒரே பாய்ச்சலில் கீழே இறங்கி accommodation ன் மையப்பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கே எங்களுக்கு முன்பாக எல்லா பணியாளர்களும் கூடிவிட்டனர். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை, எல்லோரிடமும் பயம் கவ்வி முகம் வெளுத்துப்போயிருந்தது. ஒரு ‘பாம்’ வீசினால் போதும், அம்போதான், கப்பல் மூழ்கிவிடும், தப்பிப்பது என்பது இயலாத காரியம். பத்துபதினைந்து நிமிடம் கழித்து, ‘We are safe, Iraqi gun boat escorting us’ என்ற கேப்டனின் அறிவிப்பு இண்டர்காமில் கேட்டபிறகுதான் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருந்தாலும் பயம் முற்றிலுமாக நீங்கவில்லை.

சற்று நேரம் கழித்து ஒவ்வொருவராக வெளியே வந்து பார்க்க ஆரம்பித்தோம். எங்கள் கூடவே இரண்டு gun boat கள் வருவதை காணமுடிந்தது. ஆனால் அவர்கள் எங்களை உள்ளே போக சொல்லி சமிக்கை காண்பித்ததால் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்று உணர்ந்து மீண்டும் உள்ளே வந்துவிட்டோம். இதற்கிடையில் நைட் ஷிஃப்ட்டை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்த 3rd Engineer வெளியே வந்து மரண பயத்தில் நின்றுகொண்டிருந்தார். அவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர். விசாரித்தபோது அவருடைய அறையை குண்டு துளைத்திருப்பதாக சொன்னார்.

உள்ளே சென்று பார்த்தபோது எங்களுக்கே பயம் வந்துவிட்டது. அவர் தலை வைத்திருந்த இடத்திலிருந்து அரை அடி தூரத்தில் ஒரு துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது. Fraction of second கப்பல் மெதுவாக சென்றிருந்தாலோ அல்லது ஈரானியர்கள் முன்னதாக சுட்டிருந்தாலோ அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்திருப்பார், ஒரு மரணம் நிகழ்ந்திருக்கும், கப்பல் ஒரு என்ஜினியரை இழந்திருக்கும். யாருடைய பிரார்த்தனையோ மயிரிழையில் தப்பித்தார்.

முற்றிலும் பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம் என்று உறுதியான பிறகு நாங்கள் வேலை செய்த கிரேனைப் பார்த்தோம், பல இடங்களில் சுடப்பட்டிருந்தன, பத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் துளைத்திருந்தன, உள்ளே சில குண்டுகளும் வெளியே பல குண்டுகளும் சிதறிக்கிடந்தன. Accommodation பகுதியில் பல இடங்கள் சுடப்பட்டிருந்தன.Machine gunஆல் சுட்டிருக்கிறார்கள்.

சம்பவத்திற்கு பிறகு மெதுவாக சென்றுகொண்டிருந்த எங்கள் கப்பல் முழு வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. நாங்கள் வெளியேறிக்கொண்டிருந்தபோது சரக்குகளுடன் இரண்டு கப்பல்கள் பஸராவை நோக்கி சென்றுகொண்டிருந்தன. அதன் பிறகு full scale war தொடங்கிவிட்டதால் உள்ளே சென்ற கப்பல்களும் ஏற்கனவே அங்கிருந்த கப்பல்களும் என்ன ஆனது என்று தெரியவில்லை. நாங்கள் மயிரிழையில் தப்பித்ததுமட்டுமல்ல ஒரு நாள் தாமதமாயிருந்தால் பஸராவிலேயே குடும்பம் நடத்தவேண்டிய நிலை வந்திருக்கும்.

எங்கள் பாதுகாப்புக்கு வந்த gun boat அரேபிய வளைகுடா வரை வந்தது. அங்கிருந்து எங்கள் கப்பலை வழி நடத்திவந்த ஈராக்கிய பைலட்டை ஏற்றிகொண்டு திரும்பிவிட்டது. எங்கள் கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வை உடனே குவைத்திலுள்ள தலைமை அலுவலகத்திற்கு வையர்லஸ்(VHF) மூலம் தெரிவித்ததால் அவர்களின் உத்தரவுப்படி குவைத்தை நோக்கி நாங்கள் சென்றோம். அன்று இரவு சுமார் 7 அல்லது 8 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியே சற்று தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றோம். எங்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது போல் அரை மணி நேரத்தில் கம்பெனியின் உயர் அதிகாரிகள் வந்தனர். மறு நாள் காலை இன்ஸுரன்ஸ் கம்பெனியின் சர்வேயர்கள் வந்து கப்பலை inspection செய்தனர்.

எல்லா formality களும் முடிந்தபிறகு அன்று பகல் அங்கிருந்து புறப்பட்டு 36 மணி நேர பயணத்துக்குப் பின் துபை வந்து சேர்ந்தோம். நடந்த சம்பவத்தையும் நாங்கள் தப்பிப் பிழைத்து வருகிறோம் என்பதையும் கப்பல் நிறுவனம் எங்கள் கம்பெனிக்கு உடனே அறிவித்திருந்ததால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஈரான் ஈராக் யுத்தம் தொடங்கிவிட்டதை TV News மூலம் அறிந்த துபைவாழ் என் உறவினர்களும் ரூம் நண்பர்களும் என்னைப் பார்த்தபிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்போதிருக்கும் அளவுக்கு தொலைத்தொடர்பு வசதி அப்போது இல்லாமலிருந்ததால் நான் ஈராக் சென்று வந்த விபரம் எதுவுமே என் வீட்டிற்கு தெரியாமல் போனது ஆறுதலான விசயம். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து war zone என்று அறிவிக்கப்பட்டிருந்த ஈரானுக்கு சொந்தமான strait of harmoze க்கு சென்றபோது எனக்கு துளி பயம் இல்லை.


maricar@eim.ae

Series Navigation

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்