கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

மன்சூர்ஹல்லாஜ்



காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கான முன்மொழிவையோ கருத்துச் சுதந்திரத்தையோ எல்லா மதங்களின் அடிப்படைவாதிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற கட்டுரையை எழுதியதற்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கமும் ஊர்விலக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்துத்வாவின் இஸ்லாமிய எதிர்ப்பு துவேசங்களை எதிர்கொள்ளும் தற்காப்புணர்வில் அதேவகைப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கும் என்பதின் வெளிப்பாடான இந்த நடவடிக்கையை புதுவிசை வன்மையாக கண்டிக்கிறது.குர்ரானிய வசனங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ள இக் கட்டுரை எவ்வகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்று அவர் அளித்த விளக்கத்தை ஏற்று அவர்மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தக்கலை ஜமாத்தாரை கேட்டுக் கொள்கிறோம்
(புதுவிசை,ஜூலை- செப்டம்பர் 2007)


எழுத்துசுதந்திரத்துக்கும் கருத்துசுதந்திரத்திற்கும் எதிராகமீண்டும் தனது காலித்தனத்தை காட்டுத்தர்பாரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது மத அடிப்படைவாதம். எழுத்தாளர் எச்.ஜி.ரசூல் உயிர்மை இதழில் இசுலாமிய மதத்தின் அடிப்படை என்றழைக்கப்படுபவை யதார்த்தத்தில் கடைபிடிக்கப்பட்டுவருபவைகளுக்கு எப்படி எல்லாம் எதிராக இருக்கிறதென்று விவரிக்கப் போக ஊரைவிட்டும், தர்காவைவிட்டும் தள்ளிவைத்து தனது இரண்டாவது கொடிய தாக்குதலை நிகழ்த்திக் கொண்டதின் மூலம் மதம் என்ற ஒன்று இருக்கும் வரை அது நாட்டுக்கு நாடு கலத்திற்குக் காலம் வேறுபடுகிறது என்பதை ஏற்கமுடியாது எனும் மாவோவின் கருத்து உண்மையாக்கப்பட்டுள்ளது. இதை புத்தகம் பேசுது அனைத்து மனிதநேயப் படைப்பாளிகளுடன் இணைந்து வன்மையாக கண்டிக்கிறது. கருத்து சுதந்திரத்தையும்,எழுத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் பொறுப்பு. இல்லையேல் போராடிப் பெறவேண்டியது நம் மனித நேயர்கள் அனைவருக்குமான தார்மீகக் கடமை.
(புத்தகம்பேசுது மாத இதழ் செப்டம்பர் 2007)


எச்.ஜி.ரசூல் என்ற கவிஞர், அவருடைய ஒவ்வொரு கவிதையும் படிமங்களாய்ப் பயணிக்கும்.படிமங்களுக்குள் பயணித்தால் காட்சிகளாய் விரியும்.கட்சிகள் யதார்த்தங்களை விரித்துக் காட்டும்.யதார்த்தங்கள் இஸ்லாமிய சமூகத்தின் சிந்தனைபோக்கு, மதத்தின் இருண்டப் பக்கங்கள்,வாழ்வுவகை, நடவடிக்கைகளுக்கு நடத்திச் செல்லும்.
மதச்சமூகத்தின் திரைகள் ஆயிரம்,தனித்த வாழ்வுமுறை சடங்குசம்பிரதாயம்,பலதாரமண உறவு,பெண்ணடிமை என்னும் ஒவ்வொரு திரையையும் அவரது ஒவ்வொரு கவிதை உருவிக் கீழே எறிகிறது.இதனை எழுதத் தொடங்கிய போது மதச் சமூகம் வெட்டுக்கத்திகளை தூக்கிக் கொண்டுவந்தது.
வந்துதிக்காத ஒர் இனத்தின் நபி – என்றகவிதை
பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது
ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்
நபிமார்களென்று.
திருகுரான் காட்டியது
கல்லடியும் சொல்லடியும் தாங்கி
வரலாறாய் மாறியது
இருபத்தைந்து நபிமார் என்று.
ஆதம் நபி…அய்யூப்நபி..
………… ………
ஈசாநபி…மூசாநபி…
இறுதியாய் வந்துதித்த
அண்ணல் முகமது நபி…
சொல்லிக் கொண்டிருந்த போதே
செல்லமகள் கேட்டாள்…
இத்தனை இத்தனை
ஆண் நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?

இந்த ஒரு கவிதை மட்டுமன்று,இது போன்ற பல கருத்து அம்புகள் அவரது அம்புறாத் துணியிலிருந்து புறப்பட்டதற்காக பாதிப்படைந்தார்.
இப்போது மத அதிகாரத்தின் உச்சத்திற்குப் போய் ஆடுகிறார்கள் இப்போது வெளியான கட்டுரைக்காக அவரை ஊர்விலக்கம் மதவிலக்கம் செய்து தீர்ப்பு உரைத்திருக்கிறார்கள்.
இஸ்லாமியச் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர் – காபிர் என அறிவிக்கப்படுகிறார்.காபிர் என்றால் அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து மட்டுமன்று அவர் இயங்கும் குடும்பத்திற்குள்ளிருந்தும் விலக்கப்பட்டார்.மனைவி,குழந்தைகளும் அவருடையவர்களல்லர். விளக்கம் தந்த அவரை கலிமா சொல்லச் செய்து மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.ஜமாத்துக்கள்,உலமாக்கள் கருத்துப்படி புதிதாக முஸ்லிம் ஆனவர்.மீண்டும் அவரை ஊர்விலக்குசெய்துள்ளார்கள்
உலகம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தில் நடுங்கிக் கொண்டிருப்பதான ஒரு மாயையை அமெரிக்கா போன்ற உலகப் பேரரசுகள் விதைதுக் கொண்டிருக்கிண்றன. மார்க்க நடைமுறை என்ற பெயரில் உள்ளூர்ப் பயங்கரவாதம் அதை உறுதி செய்துவிட வேண்டாம்.
(கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 2007 – சூரியதீபன்)


mansurumma@yahoo.co.in

Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்