நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

மன்சூர்ஹல்லாஜ்


உயிர்மை மே இதழில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் கட்டுரைக்காக அவரும் அவரது குடும்பத்தினரும் உள்ளூர் ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ரசூல் மற்றும் குடும்பத்தினரின் மதரீதியான சமூக வாழ்வுரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. மத அடிப்படைவாதிகள் இந்தியாவில் தொடர்ந்து கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் தாக்கி வரும் சூழலில் ரசூல் மீது இந்த ஊர்விலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசூல் இஸ்லாம் தொடர்பாக சர்வதேச அரங்குகளில் நடைபெறும் விவாதங்களை முன்வைத்து தொடர்ந்து எழுதி வருபவர். அவருடைய விவாதங்கள் இஸ்லாத்திற்குள் இருந்து அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்வைப்பவை.அவர் இறை நிந்தனையாளரோ முகமது நபி மற்றும் குரானுக்கு எதிராக எதையும் எழுதியவரோ அல்ல. அவரை ஊர்விலக்கம் செய்ததின் மூலமாக இஸ்லாம் குறித்த அறிவார்ந்த விவாதங்களில் நம்பிக்கையற்றவர்கள் மூர்க்கமான வன்முறையை அவர் மேல் ஏவி உள்ளனர்.

குடி என்பது ஒரு சமூகப் பண்பாட்டுப் பிரச்சினையே தவிர மதம் சார்ந்த பிரச்சினை அல்ல. இஸ்லாம் போன்ற பல்வேறு இனக்குழு சமூகங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஒரு பெரிய மதம் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் தொடர்பாக நெகிழ்வான நடைமுறைகளை ஆரம்பத்தில் பின்பற்றுவது இயற்கையே. மதுவகைகள் மற்றும் குடிதொடர்பாக மாறுபட்ட அர்த்தங்கள் தரக் கூடிய வாசகங்களை முன்வைத்தே ரசூல் தன்னுடைய கட்டுரையை முன்வைக்கிறார். மேலும் அவை எதுவும் சொந்தக் கண்டுபிடிப்புகளும் அல்ல. பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைத்த வாதங்களின் அடிப்படையிலேயே அவர் அக்கட்டுரையின் கருத்துக்களை தொகுத்திருக்கிறார்.இஸ்லாத்தை அறிவார்ந்தமுறையில் புரிந்து கொள்வதற்கு இத்தகைய விவாதங்கள் மிகவும் அவசியமானவை.

இது தொடர்பாக ரசூல் விரிவான முறையில் விளக்கம் அளித்த போதும் அவை பரிசீலிக்கப் படக் கூட இல்லை.அவர் மீதான சமூக பகிஷ்காரம் இந்திய அரசியல் சாசனம் ஒரு தனிநபருக்கு உத்திரவாதப் படுத்தியுள்ள மதம் சார்ந்த வாழ்வுரிமையை மறுக்கிறது. அந்த வகையில் இது அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் ஒரு தனி நபருக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றச் செயல்.

ஜனநாயகத்திலும் விவாதத்திலும் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய அறிஞர்கள் நியாயமற்ற இந்த ஊர்விலக்கத்தை விலக்கிக் கொள்ள ஜமாத்தை நிர்பந்திக்க வேண்டும். கலைஞர்களும் எழுத்தாளர்களும் ரசூல் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்தத் தடையை வன்மையாக கண்டித்துள்ளது.

மத அடிப்படைவாதத்தின் கோரப் பற்களுக்கு ஒருமுறை அடி பணிந்தால் அது நம்மை என்றென்றும் காவு கொள்ளும்.

நன்றி: உயிர்மை மாத இதழ் செப்டம்பர் 2007


mansurumma@yahoo.co.in

Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்