புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

பா.சத்தியமோகன்



1882ல் சித்திர பானு வருடத்தில் தோன்றினார் மாகாகவி பாரதி. அவர் தோன்றிய போதே சூரியனும் உதித்துவிட்டது. ஆம். பானு என்பது சூரியன்.

ஏழு வயது முதலே அருட்கவி பொழிந்தார் சுப்பையா .ஆம் . ஏழு வயதில் நம் கவிதைச்சூரியனின் பெயர் சுப்பையாதான்! அதனால்தான் எட்டயபுரம் சமஸ்தானத்துப் புலவர்கள் பத்து வயதிலேயே அவருக்கு “பாரதி” எனும் பட்டம் சூட்டிப் போற்றினர்.

பாரதியின் அன்றைய நிலை என்ன? பாரதியை இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவிக்காகவும் போற்றுகின்றனர். ஆனால் அவர் வாழ்ந்த காலம் அப்படியா?
அவரைச்சுற்றிலும் அறியாமை கோட்டை எழுப்பப் பட்டிருந்தது. எந்த வித அறியாமைகள்?

1.சுதந்திர வேட்கையிலாத – பயம் கொண்ட மக்கள் ஒருபுறம்!

2. பண்டிதத்தமிழால் எந்தவித கருத்துகளும் பரவாமல் பாதிப்பு ஒருபுறம்!

3. வறுமை மிகு சொந்த வாழ்க்கை ஒருபுறம்!

இப்படி மூன்றுவித தேள்களும் கொட்டினால் நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? தோல்வியை ஒப்புக்கொண்டு மரணத்திற்கு தயாராகி இருப்போம். “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவதற்கு” தயாராகி இருப்போம். நாம் ஒரு கவியாக இருந்தால் “ எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!” என்று கத்துவோம். அவரோ “ எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என்று கவிதை தீட்டினார். எப்படி அவரால் பாட முடிந்தது? எது காரணம்?

எதையும் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் அவர் நோக்கியதால்தான் அவரால் அப்படி பாட முடிந்தது. அவரது நம்பிக்கைக்கு ஆதாரமாய் இந்த ஒரு வரி போதும். அது எந்த வரி?

“இருள் என்பது குறைந்த ஒளி” என்கிறது அவர் கவிதை வரி! இருள் கூட ஒளியின் வகைதான் என்று எப்படிப்பட்ட மகத்தான நம்பிக்கை இருந்தால பாடமுடியும்! சற்று யோசித்துப்பாருங்கள்.

“அச்சம் தவிர்” என்று புதிய ஆத்திச்சூடி பாடினார் மகாகவி. அது மட்டுமா?
“யானைக்கால் உதை” என்று ஒரு குட்டிக்கதையும் எழுதியிருக்கிறார் .
அவசியம் அனைவரும் படிக்கவேண்டும்.

சுவைமிகு வாழைப்பழத் தார் தொங்குகிறது ஒரு பெட்டிக் கடையில். அந்த வழியே செல்கிற பள்ளிக்கூட பசங்களுக்கு திருடித் தின்னும் ஆசை. பெட்டிக்கடை ஆளுக்குத் தெரியாமல் பறிக்க வருகிறார்கள். அவனுக்கு யானைக்கால்.

“ டேய் பசங்களா! ஸ்டூலிலிருந்து எழுந்து வந்தேன்னா அவ்ளோதான்! இந்தக்காலால் உதச்சா எப்டி இருக்கும் தெரியுமா!” என்று பயமுறுத்தி வைக்கிறான். பயந்து ஓடிப்போகிறார்கள்.இப்படியே நாட்கள் செல்கின்றன.
ஒருநாள் – ஒரே ஒரு – சின்னப்பையன் – அந்த பெட்டிக்கடை ஆள் இருக்கும்போதே தைரியமாகப் பறித்துகொண்டு ஓடுகிறான். அவனை ஓட முடியாமல் ஓடிப் பிடிக்கிறான் கடைக்காரன். தனது யானைக்காலால் ஓங்கி கோபமுடன் ஒரு உதை கொடுக்கிறான். “ஐயோ .. இன்னிக்கு செத்தோம்”
என்று கத்துகிற அந்த பையனுக்கு அதிர்ச்சி! ஆம். அந்த உதை வலிக்கவே இல்லை. “ டேய் எல்லாரும் ஓடி வாங்கடா! தலையாணியால அடிச்சா மாதிரி மெத்துனு இருக்கு ஓடியாங்கடா” என்று அந்த கதை முடிவு பெறும்.

இப்படித்தான் நாமும் நிறைய்… ய்.. ய்.. ய முன் பயங்கள், யூகம் செய்து கொள்ளும்பயங்கள் நம்மைத் தாக்க அனுமதிக்கிறோம். பாரதியை வரையச்சொன்னால் முண்டாசு வரையலாம். மீசை வரையலாம். வரும்காலத்தில் நம் உருவத்தை எவரேனும் வரைவதற்கு, அச்சமின்மை எனும் வர்ணமும், அசைக்கமுடியா நம்பிக்கை எனும் தூரிகையும் நாம் கொள்வோமாக!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதிலையே!

*****************

Why delete messages? Unlimited storage is just a click away. Go to http://help.yahoo.com/l/in/yahoo/mail/yahoomail/tools/tools-08.html

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்