பத்வா என்றோரு நவீன அரக்கம்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

தாஜ்


இஸ்லாமியர்களால், ‘அல்லா’ ‘முகம்மது’ என்கிற வார்த்தைக்கு அடுத்து அரபி மொழியில் இன்று பிரபலமாக அறியப்படும் வார் த்தையாக ‘பத்வா’ முன் நிற்கிறது. பத்வா என்றால் தீர்ப்பு என்று அர்த்தப்படுத்தலாம். தீர்ப்பு என்பது நீதி சம்பந்தப்பட்டது. இஸ்லாத்தின் நீதி என்பது ‘சரீயத்’ சார்ந்தது. அந்த சரீயத்தையே பல முஸ்லீம் நாடுகள் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டது காலம்.
அவர்களது வழக்காடு மன்றம் ‘சரீயத்’ தாண்டிய பல விதமான தீர்ப்புகளை உள்ளடக்கியதாக மலர்ந்துக் கொண்டிருக்கிறது.

காலத்தினூடே நிகழும் மாறுதல்களில் புறவய அனைத்தும் கூட மாறுதல் கொள்ளும். இயற்கையின் நியதியது. அதை மறுப்பவர் களும், மீறுபவர்களும் அதன் சக்கரச் சுழற்சியில் சிக்குவார்கள். இது எப்பவும் காணக்கூடும் யதார்த்தம்தான். இன்னும், கற்கால வெளியில் வாழுவதாக நினைத்துக் கொள்ளும் மனநிலை முல்லாக்கள், ஆலீம்கள், மௌலிகள் தெற்கு ஆசியாவில் இன்றைக்கு ஆங்காங்கே தலை எடுக்கிறார்கள். இஸ்லாத்தின் முரணாக இவர்களது பார்வையில் படுபவர்கள் எப்பவுமே எழுத்தாளர்கள் மட்டும்தான். உடனே பத்வா என்று விடுகிறார்கள். எப்பவோ வளைகுடா அரபு நாடுகளால் தூக்கி வீசிய அந்த மழுங்கிய ஆயுத த்தை இவர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தத் துருவையெல்லாம் தூக்கி வீசியப் பிறகுதான், அங்கே அந்த அரபிகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள் என்றோ, அந்த முன்னோற்றத்தில் பங்கெடுத்து சம்பாத்திக்கவே இந்த ஆயுதம் தாங்கிகளும் அலைகிறார்கள் என்பது வேடிக்கையான காட்சி! அவர்களுக்கு இந்த நடப்பின் யதார்த்தம் புரிவதும் இல் லை. புரிந்தால் அல்லவா தங்கள் ஏந்தியிருக்கும் துருப்பிடித்த அந்த ஆயுதத்தை கீழே போடப் போகிறார்கள்.

பொதுவில் இஸ்லாத்திற்கு விரோதமாக, படு ஜரூராக இயங்கும் இஸ்லாமியர்கள் இங்கு நித்தம் ஆயிரம் உண்டு. இந்த அத்தனைப்
பேர்களும் மத போர்வள்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை. சொல்லப் போனால், ஒருவகையில் அவர்கள் இவர்களுக்கு செல் லப் பிள்ளைகளாகி விடுகின்றார்கள். எழுத்தாளன் மட்டும்தான் பாவி. அவனது ஞானம் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது குறி. அவன் நூல் பிடித்த மாதிரி எழுத வேண்டும் இவர்களுக்கு! விமர்சனம் என்று எழுத்தாளனின் பேனா இவர்கள் பக்கமோ, இவர்கள் பொத்திப் காப்பதாக நினைக்கும் மதத்தின் பக்கமோ திரும்பிவிடக் கூடாது, உடனே பத்வாதான். அதுவும் பத்தாதென்று அடி உதை என்றும் கிளம்பி விடுகிறார்கள். விழுது விட்டு வளர்ந்து நிலைத்திருக்கிற ஓர் மதம், ஒரு எழுத்தா ளனின் இரண்டுப் பக்க விமர்சனத்தால் பழுதுப் பட்டு இத்துவிடும் என்கிற நினைப்புதான் எத்தனை இலேசானது. எதிரிகளைவிட இவர்கள்தான் தங்கள் மதத்தை குறைத்து மதிப்பிடக் கூடியவர்கள். நிஜத்தில் எத்தனைப் பெரிய பாதகம்!

H.G.ரசூலோ, தஸ்லீமா நஸ்ரினோ முரன்பாடாக எழுதுகின்றார்கள் என்றால், அதற்குறிய மற்று விளக்கத்தை மக்கள் சபைமுன் வைப்பதுதான் வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தின் செயலாக இருக்க முடியும். அவர்களுக்கு எதிராக ‘பத்வா’ என்னும் செயல்பா டுகள் நிச்சயம் வளர்ந்த மனிதர்களின் அடையாளமாக இருக்க முடியாது. முரண் கொண்டவர்களால் மதினாவுக்கு விரட்டப் பட்ட நாயகத்திற்கு, அங்கு ஆண்ட கிருஸ்துவ மன்னன் அடைக்கலம் தருகிறான். சரிசமாக இருக்க வைத்து மத ரீதியான ஐய்யப்பாடு களை கேள்வியாக முன் வைக்கிறான். நபிகள் தனது பக்கத்து தெளிவை முன்வைக்கிறார்கள். 1400 வருடகால முன்மாதிரி இது.
எத்தனை உயர்ந்த நாகரீகத்தின் சாட்சி அது. வரலாற்றோடு தேங்கிவிட்டக் கூடியதா இந்த அழகிய முன்மாதிரிகள்?

பத்வா புகழ் முல்லாக்களே… உங்களுக்கு ஞானத்தை தருகிற இறைவன்தான் அவர்களுக்கும் / அப்படி இயங்க அவர்களுக்கும்/ ஞானத்தை தருகிறான். அப்படி அவர்கள் எழுத, பின் நிற்கும் கிரியையில் இறைவனின் பங்கே அந்தமும் ஆதியும் அற்ற பங் காக இருக்கிறது என்பதை ஏன் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்? ஒருவரைப் பார்த்த மாதிரியேவா எல்லோரையும் இறைவன் படை த்திருக்கிறான்? இந்த முரண்பாடுதான் ஏன்? இது புரியும் நேரம் இறைவனுக்கும் பத்வா என்பீர்கள்!

H.G.ரசூலும், தஸ்லீமா நஸ்ரினும் இடது சாரி சிந்தனை கொண்டவர்கள். இன்றைக்கு இந்தியாவில் இந்துத்துவாவுக்கு எதிரான இஸ் லாமியர்களின் தோய்ந்துபோன குரலை முன் எடுத்துச் செல்பவர்கள் இடதுசாரிகள். அவர்களில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகித த்தினர் இந்துகள்! இந்து மதத்திற்கு வைரியாக நின்ற பெரியாரும் ஓர் இந்து! தொட்டதற்கெல்லாம் பத்வாவை தூக்கிக் கொண்டு அலையும் இஸ்லாமிய கற்கால வாசிகள் குறைந்தப் பட்சமானா இந்த நடப்புகளை, கிரீடம் தாங்கிய தங்களது தலையைத் திருப்பி நான்குப் பக்கமும் பார்க்க வேண்டும்! அது குறித்தும் யோசிக்க வேண்டும்.

H.G.ரசூல் மற்றும் தஸ்லீமா நஸ்ரின் எழுத்துகளுக்கு எதிராகப் பாயும் பத்வாவையும், அவர்கள் மீதான வன்முறைகளையும் அநாகரீகத்தின் அடையாளமாக பார்க்கிறேன். அரக்கத்தின் கொடூரமாக கணிக்கிறேன். நாகரீகத்திற்கு எதிரான அநாகரீகங்கள்
எந்த காலத்திலும் ஏற்புடையது அல்ல. எழுத்தினூடான சிந்தனைகளினால் சூடு கொண்டாலும், அந்த வழியில் மாற்று தேடுவதே அவர்களின் மாண்பாம்!

********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்