நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

கே. ராமப்ரசாத்


உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organaisation) நலவாழ்வு என்பது என்ன? எனச் சொல்ல உடல்நலம், மனநலம் இணைந்த சமுதாயத்துடன் கூடிய இணக்க நிலைச் சூழல் என்று சொல்கிறது. (Health is defined as physical, mental and social well being). சுதந்திரம் [அடுத்த வாரம் சுதந்திர தினம்] என்று பேச வரும்போது இந்த மூன்று அறிவியலும் இணைந்த சூழலில் இதன் பொருள் புது அர்த்தம் கொள்கிறது.

இன்று ஒரு பதினைந்து வயதுக் குழந்தை தன் வாழ்நாளில் அதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் நேரகாலம், பள்ளியில் படிக்கச் செலவிடும் காலத்தை விட அதிகமாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வாழ்க்கைப் பற்றிய மதிப்பீடுகள் அக்குழந்தைகளின் மனதில் சுலபமாக ஏற்றப்படுகின்றன.

இதுபோன்ற செயல்களை “மூளைச் சலவை செய்வது” என்று சொல்லாம். இந்தச் செயல்களுக்கு உள்ளாகும் நபர் இநத அணுகுமுறையைத் தவறாக நினைப்பதில்லை.

இது பெரும் பனிமலையின் ஒரு உச்சி மட்டுமே. இன்னும் பல செயல்களை அடுக்கிச்சொல்ல முடியும். பொதுவாக தியானம், யோகா போன்ற செயல்கள் ஒருவரின் மனதை நிலைநிறுத்தப் பயன்படுகின்றன. உடல் நலத்தையும் அவை காக்கின்றன என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை.

திரும்பத் திரும்ப ஒலிக்கும் மென்மையான ஒலி/இசை இதயத்துடிப்பிற்கு இணையாக அமையும் பட்சத்தில், ஒருவரின் விழிப்புணர்வு சீராக அமையும் என்ற வகையில் ஒரு பயிற்சி உண்டு. இதுபோலவே சீரான ஓய்விற்கு பல பயிற்சிகள் நிலவுகின்றன.

எண்ணங்களை நிறுத்துவது என்று ஒரு பயிற்சி உண்டு.

இதற்கு,

1. தியானம்,
2. திரும்பத் திரும்ப ஒரு வார்த்தையை உச்சரிப்பது,
3. தாள லயத்துடன் கூடிய நடைப்பயிற்சி

எனப் பல இன்றைய சூழலில் உண்டு. மனநலமும், உடல்நலமும் இணைந்த பயன்பாட்டிற்கு இச்செயல்கள் உதவுகின்றன. என்.எல்.பி என்ற ஒரு பயிற்சியும் மிகப் பிரபலம்.

மேற்சொன்ன அனைத்து வழிமுறைகளும் நல்லவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இவை அனைத்தும் ஒருவரின் விழிப்புணர்வைக் கட்டுப்படுத்தித் “தட்டையான மனம்” என்ற ஒரு நிலையை ருசித்துப் பார்க்க வழிவகை செய்கின்றன. சில ஆன்மீகக் குழுக்கள் இந்நிலையை மிக உயர்ந்த நிலையாக வர்ணித்து மகிழ்கின்றன.

என் பார்வையில் இப்படித் தட்டையான மனநிலையில் வாழப் பழகியவர்கள், மந்தை ஆடு போல நடப்பார்கள். இவர்களை எப்படியும் சொன்ன பேச்சுக்கு வளைக்கலாம்.

நான் சொல்வதெல்லாம் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர், என்ன நடக்கிறது என்பதையும் தொடர்ந்து இவ்விதச் செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் மாற்றம் நன்மை பயக்குமா? என்று சுய விசாரணை செய்துகொண்டால் ஆபத்தில்லை. அப்படிச் செய்யாவிட்டால் அவர்களுக்குத் தான் பிரச்சினை. அதுவும் இது ஒரு தனிநபர் பிரச்சினையல்ல. ஒரு சமுதாயப் பிரச்சனை.

ஒருவரின் அன்புக்கு ஆளாகிவிட்டால், அன்புக்கு ஏங்கியபடி அலையும் மனநிலை என்பது இருக்காது. அதுபோலவே, அமைதியான வாழ்க்கை என்பது ஒருவருக்கு அமைந்துவிட்டால் அமைதியைத் தேடி அலையும் போக்கு இருக்காது. அமைதியைத் தேடும் தேவை ஏற்படும்போது, சுதந்திரம் என்பதின் பொருள் உணர்ந்து தேடினால் தன் சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

***
Wilhelm Reich எழுதிய Listen, Little Man! என்ற புத்தகத்தின் நினைவாக இக்கட்டுரை.
இப்புத்தகம் பற்றிய விவரங்களுக்கு
http://www.listenlittleman.com/


kramaprasad@gmail.com

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்