தமிழர் நீதி

This entry is part of 34 in the series 20070621_Issue

புதுவை ஞானம்.


அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம்.

தெய்வாதீனமாக , ‘தமிழர் நீதி’ என்ற கட்டுரையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த சென்னை உயர் நீதி மன்றத்தின் ‘தீர்ப்புத் திரட்டு’ ஆகஸ்ட் 1980 இதழ் கிடைத்தது. அதில் வெளிவந்த ‘ சென்ற நூற்றாண்டில் நீதி மன்றங்கள் தமிழில் எழுதிய தீர்ப்புகள்’ பகுதியில் வெளிவந்த இரு தீர்ப்புகளில் ஒன்றினை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். இவை மொழி பெயர்ப்புகள் அல்ல.நீதிபதிகளால் தமிழிலேயே எழுதப்பட்டவை ஆகும்.


1874 , அப்பீல் நம்பர் 17

சிவில் கோர்ட்டு 73 ஆம் வருடம் நம்பர் 196.

வடகாடு நல்ல பிரமனம்பலகாரன் வகையரா 12 . . . அசல் வாதிகள்
அப்பீல் பிரதிவாதிகள்.

மேற்படியூர் சின்னப்பயல் வகையரா 10 . . . அசல் பிரதிவாதிகள்
அப்பீல் வாதிகள்.

ஒரு கோவிலில் வாதிகளுக்கு பதிலாக தீவட்டி பிடிக்கிறதுக்காக மாத்திரமில்லாமல் பிரீதி விஷயமாயும் பிரதிவாதிகளுக்கு விடப்பட்டு அனுபவித்து வருகிற ஒரு நிலத்தை அப்படிக்கி தீவட்டி பிடிக்கத் தவரினால் இழந்து போவதாக உடன் பட்டிருந்தாலும் அது அபராத வக்கனையாகையால் அதன் படி நிறைவேற்றிவிக்க தகாது.

1.வடகாடு கிராமத்திலிருக்கிற முத்து மாரியம்மன் கொவில் திருவிளாவில் வாதிகளுக்காக தீவட்டி பிடித்து வர வேண்டியதுக்கு வாதிகளின் முன்னோர்களால் பிரதிவாதிகளின் முன்னோர்களுக்கு மரந்தலையுள்பட நிலங்கள் விடப்பட்டு அனுபவித்துக்கொண்டு மேற்படி வேலையை செய்து வந்த அவர்கள் இப்பால் செய்யாதுனால் மேற்படி நிலம் வகையரா கிடைக்க வேண்டியதாகவும் அப்படிக்கி வேலை செய்யாதவரை தாவா நிலங்களை விட்டு விடுகிறதென்ற தஸ்தவேஜு ஆதாரங்களிருப்பதாயும் வாதிகள் தாவா.

2. 2வது தவிர மற்ற பிரதிவாதிகள் வாதிகளின் தாவா முமுமையையும் மறுத்து மேற்படி கிராமத்தில் வீசம் கரைக்கி பாக்கியஸ்தர்களான தங்களுக்கு தாவாவில் குறித்த நிலங்கள் பிராசீனமான சொந்தமென்ற வகைகளாய் அறிவிக்கிறார்கள்.

3. இந்த வழக்கை விளங்கிய அசல் கோர்ட்டார் வாதிகள் பாரிசமாக தீர்மானித்திருக்கிறார்கள்.

4.அதற்கு சம்மதமாகாத 2 வது தவிர மற்ற பிரதிவாதிகள் செய்துகொண்ட இந்தப்பீலைப்பற்றி அவர்கள் வக்கீல் அப்பாத்துரை சாஸ்திரியையும் இந்தப்பீல் ஹியரிங்கிக்கு ஆஜராகாத 2 _ 3 _வாதிகள் தவிர மற்ற வாதிகள் வக்கீல் கிர்ஷ்ண சாஸ்திரியையும் வைத்து நாளது ஜூன் மாதம் 18ந்தேதி ஹியரிங்கு செய்யப்பட்டிருக்கிறது. உபய பக்கத்திலும் அசலில் தங்கள் தங்கள் கட்சி ரூபிக்கப் பட்டிருப்பதாக பேசப்பட்டிருப்பதுடன் ஒரு சிறிய பட்டிக்காட்டிலுள்ள கொவிலுக்கு வருஷத்துக்கு ஒரு தடவை சுவல்ப அயிவேஜியைக் கொண்டு நடக்குந்திருவிழாவில் போடப்படுகிற கொஞ்சமான தீவட்டிகளில் வாதிகளின் ஈவுக்குள்ளதை பிரதிவாதிகள் பிடிப்பதற்காக தாவாவில் குறித்த பெருந்தகையுள்ள நிலங்களை விட்டுக் கொடுத்ததாக வாதிகள் சொல்வதின் அசம்பாவிதத்தை யோஜிக்க வேண்டியதாக பிரதிவாதிகள் தரப்பில் கட்சி சொல்லப்பட்டும் அதற்கு எதிரிடையாய் வாதிகள் பக்கத்தில் மேற்படி நிலங்கள் கேவலம் தீவட்டி பிடிப்பதற்காக மாத்திரமன்னியில் பிரீதி விஷயமாகவும் கூட கொடுக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுமிருக்கிறது.

5. அசல் தீர்ப்பை மாற்ற வேண்டியதே நியாயமாகக் காணுகிறது. உபய தரப்புகளின் சாட்சிகளைப்பற்றியோவென்றால் அந்தந்த சாட்சிகள் அந்தந்த பக்கத்துக்கு சாதகமாகவே சொல்லிடிருக்கிறார்கள். ஒரு பக்கத்தின் சாட்சிகளைப் பார்க்கிலும் மற்றொரு பக்கத்தின் காட்சிகள் சிரேஷ்டப்படுத்தும்படியான விசேஷமான காரணங்களொன்றும் தென்படவில்லை.

6. தாவா நிலங்கள் தீவட்டி பிடிக்கிற வேலைக்காகவே வாதிகளின் முன்னோர்களால் விடப்பட்டதுகளென்றும் அந்த வேலை செய்ய இப்போடு தங்களால் முடியாததினால் அதுகளை வாதிவசம் விட்டு விடுவதாகவும் பல காலங்களில் பல பிரதிவாதிகளால் கிராம உத்தியோகஸ்தனிடத்தில் வாக்கு மூலங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக வாதிகள் தரப்பிலே D முதல் K வரையுள்ள தஸ்தவேஜுகள் தாக்கலாகியிருந்தாலும் அதுகளில் வெகுசாய் கீரல் கையெழுத்துக்களை உள்ளதும் உணமையானதுகளாயிருக்குமென்று இந்த கோர்ட்டாருக்கு தகுந்த விசுவாசமுண்டுபண்ணக் கூடாதுகளாயும் இருப்பதுடன் அப்படிக்கு ஆத்து சம்மதமாய் எழுதிக்கொடுக்கப்பட்ட அந்த தஸ்தவேஜுகளின் படி அதுகள் பிறந்து நாளாகியும் அனுஷ்டிக்கப்படாமல் போயிருப்பதும் கதாசித்செய்யப்பட வேண்டிய இவ்வளவு அல்பமான வேலைக்காக பிரதிவாதிகள் மொத்தமுள்ள பிரயோசனத்தை இழக்க சம்மதப்படுவதின் அசம்பாவிதத்தையும் சேர்த்து யோஜிக்கும் போது அதுகளெல்லாவற்றையும் நம்புவது நீதியென்று இந்தக் கோர்ட்டாருக்குத் தோணவில்லை.

7. 1_2_3_5_7 பிரதிவாதிகள் வகையரா சில வாதிகள் பேருக்கு மேற்படி ஊழியம் சரியாய் தாங்கள் நடத்தாதவரையில் தாவா நிலங்களை விட்டு விடுவதாக எழுதிக்கொடுத்ததாய் வாதிகள் தரப்பில் தாக்கலாயிருக்கிற ஏ அடையாள உடன்படிக்கையை பிரதிவாதிகள் ஒப்பாமலும் வாதிகள் பக்கம் மூன்று சாட்சிகளால் அது உண்மையில் பிறந்ததென்று சொல்லப்பட்டிருப்பதில் அது உண்மையான தஸ்தவேஜாயிருந்தாலும் கூட அடியில் விவரிக்கிறபடி B அடையாள ஆதிரவு முதலானதுகளால் தாவா நிலங்கள் குடுபட்டதற்கு தீவட்டி பிடிப்பது மாத்திரமே பிரதி பிரயோசனமென்று நினைக்கக்கூடாமையாயிருப்பதில் அந்த அற்ப வேலையில் தவருதலுக்காக மொத்தமுள்ள தாவா நிலங்களின் பாத்தியதையை விட்டுவிடுவதாக ஏற்பட்ட ஷரத்து அபராத வக்கணையாயும் அதிலிருந்து பிரதிவாதிகள் தப்புவிக்கப் படுவது தர்மமாயும் இந்தக் கோர்டாருக்குத் தோணப்படுகிறதே தவிர நிறைவேற்றத்தகுந்ததாகத் தோணப்படவில்லை.

8. மேற்படி B வாதிகள் தரப்பில் ரூபிக்கப்படாவிட்டாலும் அதை வாதிகள் தங்களுக்கு ஆதாரமாக கொண்டு வந்திருப்பதில் அதின் வாசகங்களால் அவன்கள் கட்டுப்பட வேண்டிய நியாயமாகயிருக்கிறது. “அந்த ஆதிரவில் இந்த கோவில் வேலைக்கித்தான் பார்த்துவாவென்று காணி தந்து பெண்ணும் தந்து பெண்ணடிகாணியும் தந்து வச்சிருந்தமே இப்போ உனக்கு சம்மதமில்லாமற்போனால் நாங்கள் தந்த காணியும் தந்துபோட்டு பெண்ணுகளையும் தாலியறுத்துப்போட்டு ஓடிப்போ”வென்று வாதிகளின் முன்னோர்கள் சொன்னார்களென்று வாசகம் ஏற்பட்டும் அந்தப்படி தீவட்டி பிடித்து வரத் தவரினால் “ தந்த காணி இழந்து பெண்டுகளையும் இழந்து ஜாதியார் நீங்கலாகப் போவோமாகவும்” என்று கண்டும் எழுதப்பட்டதாயிருக்கிறது. இதனால் தாவா நிலம் காணியென்றும் பெண்ணடிக்காணியென்றும் பேர் பெரப்பட்டும் அதற்கு பிரதி பிரயோசனங்களில் வாதிகளின் முன்னோர்களின் பிரதிவாதிகளின் முன்னோர்கள் கல்லியானம் செய்துகொண்ட விஷயமும் ஒன்றாய் இருந்ததாய் தெரியவருகிறதும் தவிர இந்தப்பீல் ஹியரிங்கி காலத்திலும் அவ்வளவு மொத்தமுள்ள நிலங்களை பிரதிவாதிகளின் முன்னோர்களுக்கு விட்டுக்கொடுபட்டதுக்கு பிரீதியும் ஒரு முக்கிய காரணமாயிருந்ததென்று வாதிகளின் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தாவா நிலம் வாதிகளின் முன்னோர்களால் பிரதிவாதிகளின் முன்னோர்களுக்குக் கிடைத்ததாயிருந்தாலும் மேற்படி B அடையாள ஆதிரவினால் வெளியாகிறபடி அது காணியாகக் கொடுபட்டும் கணக்குக்கெட்டாத காலமாய் அப்படியே அனுபவிக்கப்பட்டும் மேன்மை பொருந்தியிருக்கிற பிரதிவாதிகளின் பாத்தியதையை தீவட்டி பிடிக்கவில்லையென்ற அற்ப காரணத்தினால் இழக்கச்செய்வது மேற்படி B அடையாள ஆதிரவில் கண்டபடி அதற்காக பிரதிவாதிகளை அவர்களுடைய பெண் பிள்ளைகளை இழக்கச்செய்வதும் பிரதிவாதிகள் ஜாதி நீங்கலாகப் போகச்செய்வதும் எவ்வளவு நியாயக்குறைவோ அவ்வளவு நியாயக்குறைவாகவேயிருக்கும். ஆகையால் இக்விட்டீ தர்மநியாயப்படி பிரதிவாதிகள் அந்த ஷரத்தில் நின்றும் நீக்கப்படுகைக்கி தகுதியானவர்களாகவேயிருக்கிறார்கள்.

9. ஆகையால் அசல் தீர்ப்பை ரத்து செது வாதிகளுக்கு பிரதிவாதிகளின் பேரில் இவ்வழக்கு செல்லாதென்றும் அசலப்பீலின் அவரவர் சிலவை அவரவர் பொருத்துக் கொள்ளுகிறதென்றும் தீர்மானிக்கலாச்சுது.

1874 வருட ஜூன் மாதம்,30 ம் தேதி.


தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.
j.p.pandit@gmail.com

Series Navigation