காட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

திசைகள் அ.வெற்றிவேல்


நவீன தமிழ் இலக்கியவாதிகளுக்கு இது நல்ல காலம் போலத் தோன்றுகிறது. சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிந்தனையாளர்.ரவிக்குமார் இதில் முதலாவது ..சல்மா வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார்.அதனால் இலக்கியவாதி ஒருவர் அமைச்சராகும் வாய்ப்பு நழுவிப்போனது.இன்று கவிஞர்.கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி செல்கிறார்.அவர் தனது பதவிக்காலத்தில் திறம்பட பணியாற்ற வாழ்த்துக்கள்.

தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட நாளில் இருந்து காட்சிகள் மாறும் கழகத்தில் வரவேற்கக் கூடிய இரண்டாவது நிகழ்வு இது.முதல் நிகழ்வு மாறன் குடும்பத்து பிடியில் இருந்து தி.மு.க மீண்டது. உண்மையான கழகத் தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.அரசியலையும் வியாபாராமாக்கப் பார்த்த மாறன் குடும்பத்தில் இருந்து தி.மு.கவை மீட்டெடுத்த செயல் 83 வயதிலும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலைஞரின் மாபெரும் சாதனை.மாறனையும் சன் டி.வியையும் விலக்கி வைத்த நாள் முதல் மாறும் காட்சிகள் வரவேற்புக்குடையதாக உள்ளது.மருத்துவர்.ராமதாஸ் மலர்ந்த முகத்துடன் கலைஞரைச் சந்தித்துச் சென்றதும், சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தனியாருக்கு போகாமல் இருக்குமாறு முடிவெடுத்ததும் குறிப்பிடத் தகுந்தவை.மாறன் குடும்பத்தார் துணை இல்லாமல் டெல்லி சென்ற முதல்வர் மகிழ்வுடன் திரும்பியதும் முக்கியமானது.”ஆங்கிலம் சரஸ்வதி அளித்த கொடை” என்று தூக்கிப் பிடித்த மாறன் இல்லாத இச்சூழலில் பள்ளி,நீதிமன்றம்,அரசு அலுவலகம் போன்றவற்றில் தமிழுக்கு உரிய மரியாதை இனிமேலாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும், தி.மு.க அனுதாபி என்ற முறையில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.அது சமயமே கனிமொழியை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.அக்கடிதம் கலைஞர் கைக்கு கிடைத்த விபரம் தெரியவில்லை.இருந்தும் எனது வேண்டுகோள் தாமதமாகவாவது நிறைவேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி.

எனது இந்த வேண்டுகோள் எதற்காக என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.ஒரு தமிழ் இலக்கியவாதி அரசியல் பதவிக்கு வரவேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்ல..இந்தியத் தலைநகரில் கலைஞருக்கு, தி.மு.கவிற்கு, கழகத் தலைமைக்கு நம்பிக்கையானவர்கள் இருந்து, முரசொலி மாறன் இடத்தை நிரப்ப வேண்டும் என்பது தான் எனது முதல் நோக்கம்.1972- அ.தி.மு.க உதயமான நாளில் இருந்து டெல்லியில், தனக்கு நம்பிக்கையானவர்களை இருக்கச் செய்யும் முயற்சியில் கலைஞருக்குத் தொடர் தோல்விகள்தான். முரசொலி மாறன் மட்டும் விதிவிலக்கு. க.ராசாராம்,நாஞ்சில் மனோகரன்,செழியன்,ஜி.லெட்சுமணன்,வைகோ என்று மாறி மாறி கலைஞர் முதுகில் குத்தியவர்கள் மத்தியில் மாறன் மட்டுமே தனது மாமாவிற்கு விசுவாசமாக கடைசிவரை இருந்துள்ளார்.முதுகில் குத்தியவர்கள் வரிசையில் மாறன் மகன் தயாநிதியும் சேர்ந்ததுதான் இதில் மிகப்பெரிய சோகம்.

தனது மகளுக்கு மட்டும் பதவி கொடுப்பது என்ன நியாயம்? கட்சிக்காக உழைத்த எத்தனையோ கழகத் தோழர்கள் இருக்கையில் மகளுக்கு மட்டும் என்ன முன்னுரிமை என்ற வினாவிற்கு மேலே சொன்ன விளக்கம் போதும்.பதவியையும் பணத்தையும் பார்த்தவுடன் கலைஞருக்கு துரோகம் செய்யத் துணியும் இன்றைய அரசியல்வாதிகளை எப்படி நம்புவது?

மாறன் போன்று ,கனிமொழியும் தனித்த சிந்தனை உடையவர்.முற்போக்கு சிந்தனையாளர். கழகச் சிந்தனையாளர்கள் வரிசையில் மாறன், தென்னரசு போன்று கழக மரபுகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கக் கூடியவர்.பெண்களுக்கு 33 விழுக்காடுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டிய இத்தருணத்தில் பெண்ணியம் குறித்து முற்போக்கான கருத்து கொண்டுள்ள கனிமொழி மாநிலங்களவைக்குச் செல்வது வரவேற்கப்பட வேண்டியது. முக்கியமாக ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்க முயற்சித்தால், உலகமெங்கும் வாழும் புலம் பெயர்ந்தவர்கள் கனிமொழியை என்றும் மறக்க மாட்டார்கள்.சிறு பத்திரிக்கைப் பின்புலம் உள்ளதால், ஈழ மக்களின் கண்ணீர் கனிமொழி அறியாதது அல்ல.நல்லது நடக்கும் என்று நம்புவோமாக.

இத்தனைக்கும் மேலாக கனிமொழி முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டிய வேலை..மறைந்த மாறன் இடத்தை நிரப்பி கலைஞர் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்.மாறன் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதான பொறுப்பு அல்ல.கனிமொழின் படிப்பும் அறிவும் நண்பர்களிடம் பழகும் அவரது சுபாவமும் மாறன் இடத்தை அடைவதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

தமிழ் சிறு பத்திரிக்கை மற்றும் தமிழ் இலக்கிய வாசகன் என்ற முறையிலும்,தி.மு.கவின் அனுதாபி என்ற முறையிலும், 1972 -ல் இருந்து தி.மு.கவுடன் பயணம் செய்த பயணி என்ற முறையிலும், வரவேற்கத்தகுந்த இந்த அறிவிப்புக்கு கலைஞர் அவர்களுக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு கனிமொழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Series Navigation

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்