சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை..

This entry is part of 34 in the series 20070419_Issue

ஜடாயு


சமீபத்தில் உத்திரப் பிரதேச நீதிமன்றம் முஸ்லீம்கள் 18.5% அந்த மாநிலத்தில் உள்ளதால் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று ஒரு அதிர்ச்சி வைத்திய தீர்ப்பை அளித்தது. வழக்கம் போல, முஸ்லீம் ஓட்டு வங்கியைக் குறிவைத்திருந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரசுக்கு இது வயிற்றில் புளியைக் கரைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாக அவசர அவசரமாக அறிப்பு செய்தது எந்த முஸ்லீம் அமைப்பும் அல்ல, முலாயமின் கட்சி! என்ன அக்கறை பாருங்கள்.

அதே நாளில் தெற்கே தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்யப் படும் என்று சட்டசபையில் தன் கரகர குரலில் கருணாநிதி அறிவிக்கிறார். ஏற்கனவே தமிழகத்தின் 69% அநியாய இட ஒதுக்கீட்டுக் கொள்கை உச்சநீதி மன்றத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு! இட ஒதுக்கீட்டுக்குக் காரணம் – சிறுபான்மையினர்!

இந்த “சிறுபான்மை” என்ற லேபிள் எப்படி உண்மை நிலையை மறைத்து, திரித்து அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டுவங்கியை விருத்தி செய்து மக்களை ஏமாற்றவே பயன்படுகிறது என்று பார்ப்போம்.

சிறுபான்மை என்ற சொல் இந்தியா முழுதும் மொத்தமாக மத அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களைக் குறிப்பதற்காகவே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த லேபிளால் அழைக்கப் படுபவர்கள் பாவப் பட்டவர்கள், கஷ்டப் படுபவர்கள், அவர்களை முன்னேற்ற பிரத்தியேக “சிறுபான்மை கமிஷன்” உண்டு என்ற கருத்துக்கள் ஆணி போல அறையப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்தக் குழுவில் வரும் சீக்கியர்கள் தான் இந்தியாவிலேய சராசரி தனிமனித வருமானம் (average per capita income) மிக அதிகமாக உள்ள சமூகக் குழு! எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தும் செல்வத்தைப் பெருக்கும் பார்சிகள், ஜெயின்கள் ஆகிய குழுக்கள் தங்களுக்கு என்று எந்த சிறுபான்மை சலுகைகளையும் வேண்டிக் கேட்காதவை, இவற்றை பட்டியலில் இருந்து எடுத்து விட்டாலும் இந்த சமூகத்தினர் கண்டிப்பாக தெருவில் வந்து சண்டையிடப் போவதில்லை.

இன்னொரு சிறுபான்மைக் குழுவான கிறித்தவர்கள் கல்வி, வேலை மற்றும் பல மனிதவளக் குறியீடுகளில் முன் நிற்கின்றனர். பிரிட்டிஷாரால் இந்த நாட்டு மக்களிடமிருந்து பிடுங்கப் பட்ட நிலபுலன்கள், நிறுவனங்கள் போன்ற சொத்துக்கள் பலவற்றையும் சுதந்திரத்திற்குப் பின் ஜம்மென்று அனுபவிக்கும் உரிமையையும் பெற்று, இந்திய தேசம் வழங்கும் மத சுதந்திர உரிமைகளையும் அருமையாக துஷ்பிரயோகம் செய்து வெளிநாட்டு மிஷநரி நன்கொடைகளோடு வளப்ப வாழ்வு வாழும் வாய்ப்புகள் பல படைத்த சமூகக் குழு இது.

சச்சார் கமிட்டி அறிக்கைகள் தொடர்பான சர்ச்சைகளுக்குள் இறங்காமல் பார்த்தால், சராசரியாக முஸ்லீம்கள் பல குறியீடுகளில் இந்துக்களை விட அதிகமாகவும் (சராசரி வருமானம்), சிலவற்றில் சமமாகவும் (சராசரி கல்வியறிவு), சிலவற்றில் இந்துக்களை விடக் குறைவாகவும் (சராசரி பெண்கல்வி) வருகிறார்கள்.

மொத்தத்தில் பெரும்பான்மை என்ற பாரத்தை, பொறுப்புணர்வை, சிலுவையை சுமக்க வைக்கப் பட்டுள்ள இந்துக்கள் தான் இந்தியாவில் சராசரியாக எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின் தங்கியுள்ளனர். அப்படியானால் யாருக்கு சலுகைகள் தேவை? யாருக்கு பொருளாதார உதவிகள் தேவை? ஊன்றுகோல்கள் ஓடி விளையாடுபவருக்குத் தேவையா தத்தித் தள்ளாடுபவருக்குத் தேவையா? “சிறுபான்மை” என்று அழைக்கப் படும் இந்த மதக் குழுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள், இடஒதுக்கீடு வழங்குமானால் அது ஏற்கனவே பின்தங்கியுள்ள எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்களிடம் இருந்து அவர்கள் வாய்ப்புகளைப் பறிப்பதாகத் தான் இருக்கும். இது ஒருவகையில் அநீதி.

ஏற்கனவே மத ரீதியான சிறுபான்மை என்ற இந்த சலுகையைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இந்த சமூகக் குழுக்கள் அரசு உதவியில் அல்லது அங்கீகாரத்தில் ஓடும் தங்கள் நிறுவனங்களை ஏதோ தங்கள் குழுக்களின் தனிச் சொத்து போல பாவித்து வருகின்றன. இவற்றின் கல்வி வாய்ப்புக்களை அரசு சமூகம் முழுமைக்கும் விரிவாக்க முயலும் போதெல்லாம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன. இவற்றுக்கு முனைந்து அங்கீகாரம் வழங்கும் அரசு இந்துக்கள் (தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால் கூட) கல்வி நிறுவனங்கள் நடத்த முற்படுகையில் ஆயிரம் கேள்விகள் கேட்கப் பட்டு, முட்டுக் கட்டைகள் போடப் படுகின்றன. இதையும் மீறி பல இந்து கல்வி நிறுவங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பது ஒரு சாதனை தான்.

வளர்ச்சியை விடுங்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் வாழ்வுரிமையே கேள்விக்குரியதாக உள்ளது. 1980களில் நடந்த திட்டமிட்ட இன அழிப்பில் காஷ்மீர் இந்துக்கள் தங்கள் சொந்த பூமியைவிட்டுத் துரத்தப் பட்டு தம் நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் கிறித்தவர்களாக மாறிய பழங்குடியினர் சிறுபான்மையினராக உள்ள இந்துப் பழங்குடியினரை இதே ரீதியில் இன அழிப்பு செய்து வருகின்றனர். இத்தகைய இந்து சிறுபான்மையினரின் அவலத்தை எடுத்துரைத்தால் ஏளனம் தான் பதிலாகக் கிடைக்கிறது. என்ன கொடுமை!

மதம் தவிர, மற்ற பல வகையிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மொழி, சாதி மற்றும் வேறு பல காரணங்களால் சிறுபான்மையினராகி அதன் காரணமாகவே அல்லலுறும் எத்தனையோ சமூகக் குழுக்கள் பற்றி தேசிய அளவில் பெரிய அக்கறை இல்லை. சொல்லப் போனால் சிறுபான்மையினர் பற்றிய நமது கண்ணோட்டம் ஒவ்வொரு மாநில அளவிலும், பிரதேச அளவிலும் இருந்து தானே தொடங்க வேண்டும்? பிராமணர்கள் தமிழகத்தில் சிறுபான்மை சாதியினர், அஸ்ஸாமில் வாழும் பீகாரிகள், மணிப்பூரில் வாழும் வங்காளிகள், திரிபுராவில் ஜமாத்தியாக்கள் இவர்கள் எல்லாரும் சிறுபான்மையினர் மட்டுமல்ல, அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆதிக்க சக்திகளான பெரும்பான்மையினரால் ஏறி மிதித்து நசுக்கப் படுபவர்கள்! ஆனால் சிறுபான்மையினருக்கான எந்த உரிமைகளும், சலுகைகளும் ஏன் இவர்களுக்கு கிடைக்கவில்லை? யோசிக்க வேண்டிய விஷயம் இது.

பாரதம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூகச் சூழல்கள் வலைப் பின்னலாக நிலவும் நாட்டில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பொதுப் படுத்துதலான குழு அடையாளங்கள் பெரும் குழப்பத்தையும், மயக்கத்தையும் தான் ஏற்படுத்துகின்றன. ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் “பெரும்பான்மை மனப்பான்மை” (majoritarion mindset) என்பது இப்படி அடையாளம் காணப்படும் இந்துக்களிடம் இருக்கிறதா? பல்வேறு வகையில் பிளவு பட்டுக் கிடக்கும், சகிப்புத் தன்மையின் இலக்கணமாகத் திகழும் இந்து சமுதாயம் பற்றி இப்படிச் சொல்வது குரூர நகைச்சுவை. காஷ்மீரில் வாழ்வுரிமை இழந்தவர்கள் இந்தப் “பெரும்பான்மை” மக்கள்!

“சிறுபான்மை மனப்பான்மை” (minority mindset) என்பது பொதுவாகக் குறைவாக இருக்கும் மக்கள் குழு எப்போதும் பாதுகாப்பின்மை பற்றிய உணர்வோடு வாழ்வது என்பதைக் குறிக்கும். ஆனால் இந்தியாவில் இந்தப் பெயரால் தங்களை அழைத்துக் கொள்ளும் கிறித்தவ, இஸ்லாமியக் குழுக்கள் தான் தாங்கள் ஓரளவு அதிகம் வாழும் இடங்கள் பலவற்றில் அராஜக, ஆதிக்க சக்திகளாக இருக்கின்றன. இத்தகைய இடங்களில் தங்களது குழு ஒற்றுமை காரணமாக பிளவு பட்டிருக்கும் இந்து சமுதாயம் மீது அதிகாரமும் செலுத்துகின்றன. அதே சமயம் தேசிய அளவில் “சிறுபான்மை” என்று கூக்குரல் இட்டு சலுகைகள் பெறவும் துடிக்கின்றன!

இந்த பொத்தாம் பொதுவான “மனப்பான்மை” வாதங்கள் பாரதத்தின் சமூக சூழலில் பொருள் இழக்கின்றன, நேர்மாறாகின்றன, குழம்பிப் போகின்றன.

நம் நாட்டிற்கு உண்மையான தேவை தனிமனித உரிமைகள் தான், எந்த குழுவுக்கான பிரத்தியேக உரிமைகளும் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு இவற்றுக்கான உரிமைகள். இவற்றை சரியாகப் பெறுபவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் நிலையை மாற்றி அவர்கள் பெரும்பான்மையினராக ஆகச் செய்வதே நாட்டின், அரசின், அரசியல் கட்சிகளின் கடமை.

The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities – Ayn Rand

“உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது” – அயன் ராண்ட்


http://jataayu.blogspot.com

Series Navigation