மருந்தின் விலை ரூ. 1,20,000 உயிர் குடிக்க வரும் நோவார்ட்டிஸ்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

கே. செல்வப்பெருமாள்



நோவார்ட்டிஸ் (Novartis) எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் சுவிஸ் நாட்டை சேர்ந்தது. மருந்து உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு
வரும் இந்நிறுவனத்தின் வருட வருமானம் 1,60,000 கோடி ரூபாய். மருந்து உலகின் பகாசூர நிறுவனமான நோவார்ட்டிஸ் இரத்த புற்று
நோயாளிகளுக்கான க்ளிவாக் (Glivec) மருந்து ஒன்றினை உற்பத்தி செய்கிறது. இம்மருந்திற்கு 60 நாடுகளில் காப்புரிமை பெற்று தன்னுடைய ஆக்டோபஸ் கரத்தை நீட்டியுள்ளது. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள காப்புரிமை அலுவலகத்தில், க்ளீவாக்
மருந்திற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தது.நம்முடைய காப்புரிமை அதிகாரிகள் இம்மருந்து புதிய கண்டுபிடிப்பல்ல;
மேலும் இந்திய காப்புரிமை சட்டம் 3ன பிரிவின் படி இதனை புதிய கண்டுப்பிடிப்பாக அங்கீகரிக்க முடியாது என்று சான்று
வழங்கி விட்டது. இது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய மருந்துகளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளை வெறுமனே இரசாயன
மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. நோவார்ட்டிஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
இந்திய அரசிற்கு எதிராக ஒரு வழக்கினை தொடுத்துள்ளது. என்ன வழக்கு தெரியுமா? இந்திய அரசின் காப்புரிமை சட்டம் 3ன பிரிவை
நீக்க வேண்டும். இது காட் (GATT) ஒப்பந்தம் வகுத்துள்ள வர்த்தகம் சார்ந்த அறிவுச்சார் சொத்துரிமை சட்டத்திற்கு எதிரானது என்று இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய காப்புரிமை சட்டத்திற்கு வேட்டு வைக்க துணிந்து விட்டது.

உண்மையில் இந்த நிறுவனம் தன்னுடைய மருந்து புதிய கண்டு பிடிப்புதான் என்று நிறுவுவதற்கு மாறாக, குறுக்கு வழியில் ன்னுடைய வியாபார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது. மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த
நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடுபவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜி மற்றும்
நம்முடைய மாஜி சட்டமந்திரி ஒருவர். இவர்கள் யாருக்கு காவலானர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டியுள்ளது. சரி, இந்த மருந்துக்கு பின் உள்ள ரகசியம் என்ன என்று பார்த்தால் மிக சுவரா°யமாக இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அதுபோலதான் நோவார்ட்டிஸ் தற்போது ஆடிக் கொண்டிருப்பதன் மர்மம் புரிய
வரும். இரத்த புற்று நோய்க்கான மருந்துகளை இந்தியாவில் ஏற்கனவே ரான்பேக்ஸ்சி போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்து
விற்பனை செய்து வருகிறது. இம்மருந்துகளின் விலை ஒரு மாதத்திற்கு ரூ. 8000 முதல் ரூ.12,000 மட்டுமே. ஆனால், இதே வகை
மருந்தான நோவார்ட்டிஸின் க்ளீவாக் ஒரு மாதத்திற்கு ரூ. 1,20,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒருவேளை இந்த மருந்திற்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்பட்டால் இந்திய மற்றும் மூன்றாம் உலக நோயாளிகளுக்கு இருக்கும் ஒரே வழி மரணம்தான். ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு வளரும் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்துதான் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் AIDS நோயாளிகளின் பெருக்கத்தால் அந்நாட்டு
மக்கள் பெரும்அவதியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நோவார்ட்டிஸ் போன்ற நிறுவனங்களின் சதித் திட்டத்திற்கு இரையானால் உலக மக்களின் நிலை என்னவாகும்?
கொலைக்காரன் கையில் கத்தியை கொடுத்த கதையாகி விடும்.

எனவே ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் நோவார்ட்டிஸின் இந்த வழக்குக்கு எதிரான குரல் ஓங்கத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள பத்திரிகை அறிவு ஜீவிகள் இது சம்பந்தமான விஷயம் குறித்து மூச்சே விடுவதில்லை. இதுதான் வர்க்க பாசம்
என்பது.

காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதால் இந்திய காப்புரிமை சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய மாற்றங்கள் ஏகபோக மற்றும் பகாசூர நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். வளர்ந்த வரும் அல்லது புதிய
கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பவர்களுக்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது உலக வர்த்தக நிறுவனத்தால். அதாவது, ஏற்கனவே இந்திய காப்புரிமை சட்டம் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கியது. ஆனால், புதிய சட்டப்படி இது 20 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பழைய சட்டத்தில் ஒரு பொருளை செய்யும் முறைக்குதான் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் பல்வேறு செய்முறைகளை கையாண்டு கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மார்க்கெட்
ஏகபோகங்களின் பிடிக்குள் செல்லாமல் இருப்பதில் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு இருந்தது. தற்போதை சட்டத்தில், பொருளுக்கு
காப்புரிமை வழங்கப்படுகிறது. அதாவது இங்கே செய்முறை என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவர் ஒரு பார்முலாவை பயன்படுத்தி புதிய மருந்து கண்டுப்பிடித்திருந்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதுபோன்ற
மருந்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்படாது. இத்தகைய சட்டத்தைத்தான் தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று
வாதிடுகிறது நோவார்ட்டிஸ்.

இன்றைக்கு இந்தியாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். இது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. மேலும் பலபுதிய பெயர்த் தெரியாத நோய்களெல்லாம் நம்மை பயமுறுத்திக் கொண்டு வரும் சூழலில் நோவார்ட்டிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலைகளுக்குநம்முடைய சட்டம் எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காமல் இந்திய நாட்டின் இறையான்மையை காக்க வேண்டும். ஏனென்றால் சமீப காலத்தில், இந்திய நீதித்துறை ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே தன்னுடைய தீர்ப்பை வழங்கி வருகிறது. எனவே, தற்போதைய காப்புரிமை சட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் வலுவான போராட்டத்தின் பின்னணியில் ஒரு குறைந்தபட்ச வலைப் பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளோம். இதனை இழப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மேலும், இதனை பாதுகாக்க வேண்டும் என்றால், அது இந்திய மக்களின் கைகளிலேயே உள்ளது. விரட்டியடிப்போம் நோவார்ட்டிசை!


ksperumal@gmail.com

Series Navigation

கே. செல்வப்பெருமாள்

கே. செல்வப்பெருமாள்