முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

செல்வன்


முஷாரப் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டாலும்,வெளியிட்டார். அதை படித்து விட்டு எல்லாரும் சிரியோ சிரி என சிரிக்கிறார்கள். பாகிஸ்தானில் பலருக்கு அதை படித்து விட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம். முழுக்கோழியை திருடி முழுங்கியவன் மாட்டிக்கொண்டால் எப்படி முழிப்பான்?அப்படி முழிக்கிறார் முஷார்ரப். அவரது புத்தகம் பற்றி மிக கடும் விமர்சனங்கள் பாகிஸ்தானிய எழுத்தாளர்களால் எழுப்பப்படுகின்றன.பாகிஸ்தானின் லிபரல் எழுத்தாளர் ஆயிஸ் அமீர் சாட்டை அடியாய் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்.

“தேச தலைவர்கள் பதவியில் இருக்கும்போது கோஸ்ட் ரைட்டிங் மூலம் தன் சுயசரிதையை எழுதுவது வழக்கம்தான்.(கோஸ்ட் ரைட்டிங் என்றால் இன்னொருத்தரை விட்டு எழுத சொல்லி அதை தானே எழுதியதாக டிராமா ஆடுவது.முஷார்ரப்புக்கு இருக்கும் வேலை பளுவில் அவரா இதை எழுதியிருக்க போகிறார்? என்கிறார் ஆயிஸ் அமீர்).இதற்கு முன் அயூப் கான் ஒரு சுயசரிதை எழுதினார்.அது பிளாட்பார கடைகளில் போய் சேர்ந்து மாமிசம், பழம் ஆகியவற்றை பொட்டலம் கட்ட தான் பயன்பட்டது. ஐயூப்கான் போல் படைவீரன் – ஜனாதிபதியான முஷார்ரப்பும் அதே வேலையை செய்துள்ளார். ஐயூப்கானின் சுயசரிதைக்கு ஏற்பட்ட நிலைமை தான் இதற்கும் ஏற்படும்.

அமெரிக்காவுக்கு இந்த மனுஷன் புஸ்தகம் விற்க போனாரா,அல்லது பாகிஸ்தான் நலனை காக்க போனாரா?அவர் கூட 70 கேபினட் மந்திரிகள் போயுள்ளனர்.உல்லாச டூர் அடிப்பதென்றால் நம் மந்திரிகளுக்கு சொல்லவா வேணும்? புஸ்தகம் வெளியிட்ட சைமன்& ச்சுஸ்டர் கம்பனி முஷாரப்புக்கு ஒரு மில்லியன் டாலர் கொடுக்கிறது.பாகிஸ்தானிய கரன்சியில் இது பெருந்தொகை. ஆனால் அமெரிக்காவில் இது பிஸ்கோத்து காசு.

ரிச்சர்ட் ஆர்மிடேஜ் பாகிஸ்தானை குண்டு வீசி கற்காலத்துக்கு கொண்டுபோவேன் என சொன்னது பற்றி நிருபர்கள் முஷாரப்பிடம் கேள்வி கேட்டபோது முஷார்ர்ப் சொன்ன பதிலை கண்டு அலறுகிறார் ஆயிஸ் அமீர்.இப்படியும் ஒரு பதிலை ஒரு ஜனாதிபதி சொல்ல முடியுமா என வியக்கிறார்.அப்படி என்ன சொன்னார் முஷார்ரப்? “புஸ்தக கம்பனியிடம் செய்த ஒப்பந்தப்படி புஸ்தகம் வெளியாகுமுன் அதை பற்றி நான் பேசக்கூடாது….”

காரிகில் காமடி கார்கில் யுத்தம் பற்றி முஷார்ரப் அடித்த காமடி கூத்தை பிய்த்து எறிகிறார் ஆயிஸ் அமீர்.பாகிஸ்தான் படை வீரப்போர் புரிந்ததாகவும்,ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான சப்ளையும்,விடுவிப்பும் தராமல் அரசு அவர்களை கைவிட்டு விட்டது என்கிறார் அமீர்.மரணத்தின் பிடிக்கு சென்று விட்டனர் பாகிஸ்தான் படையினர்,ஆனால் அப்போதும் அவர்கள் தம் மன உறுதியை இழக்கவில்லை. இந்தியர்கள் கடும் இழப்புக்கு பின்னும் தளராமல் பல இடங்களை கைப்பற்ற துவங்கினர். மாஸ்டர் ஸ்ட்ரோக் என நினைத்து செய்யப்பட்ட கார்கில் பின்விளைவுகளை தர துவங்கியது.நவாஸ் ஷெரிப் கிளின்டனை சந்திக்க அவசர அவசரமாக ஓடி பாகிஸ்தான் படைகளை பின்வாங்க வேண்டுகோள் விடுக்கும்படி கோரினார்.பாகிஸ்தானின் தோல்வியை மறைக்க அப்போது அந்த சாக்கு தேவைப்பட்டது. ஆக, இப்படிப்பட்ட தோல்வியை வெற்றி என ஜல்லி அடிக்க நிரைய திறமை தேவைப்படுகிறது.அது முஷாரப்புக்கு நிறையவே இருக்கிறது என சாடுகிறார் ஆயிஸ் அமீர்.

அல்கொய்தா உறுப்பினர்களை (பாகிஸ்தானியர் உட்பட) சிஐஏவிடம் பிடித்து கொடுத்து தலைக்கு இவ்வளவு என கூலிப்படை கணக்காய் பணம் வாங்கியதை மானம், மரியாதை உள்ள எந்த ஜனாதிபதியாவது எழுதுவாரா என சொல்லி, சொல்லி மாய்ந்து போகிறார் ஆயிஸ் அமீர்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் பாகிஸ்தானில் குண்டு போட்டு கற்காலத்துக்கு கொண்டுபோயிடுவேன்” என ரிச்சார்ட் ஆர்மிடேஜ் சொன்னார் என ஒரு அடி அடித்தார், அமெரிக்காவே விழுந்து,விழுந்து சிரித்தது. இதுவரைக்கும் எந்த ஜனாதிபதியும் இப்படி “அவன் என்னை கிள்ளினான்,குத்தினான்” என ஸ்கூல் குழந்தைகள் மாதிரி புகார் செய்ததில்லை.இவர் அதை சொல்லிவிட்டு அமெரிக்கா போய் ஜார்ஜ்புஷை சந்தித்து சிரித்து பேசுகிறார். கை கொடுக்கிறார். இது என்ன காமடின்னு அமெரிக்கவே விழுந்து,விழுந்து சிரிக்குது.

பாகிஸ்தானில் அவனவனுக்கு இதை கேட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம்.பின்ன மிலிட்டரி ஜெனெரலே பயந்தா அப்புறம் அந்த நாட்டு ராணுவத்துக்கு என்ன மதிப்பு?”எனக்கு பயமா இருக்கு”ன்னு எவன் வேணா சொல்லலாம்,மிலிட்டரிகாரன் அதுவும் பாகிஸ்தான் முப்படை தளபதி சொல்லலாமோ?:-))

ரிச்சர்ட் ஆர்மிடேஜ் என்னதான் சொன்னார்? “மிகவும் மோசமாக மிரட்டினார்” என்கிறார் முஷார்ரப்.ஆனால் அப்படி மிரட்டிய ரிச்சர்ட் ஆர்மிடெஜ் அதன்பின் பல முறை பாகிஸ்தான் வந்துள்ளார்.அவர் வந்தபோதெல்லாம் அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு ஓடியவர்…………….. சாட்சாத் முஷார்ரபே தான்.

“கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் வெற்றி அடைந்தது” என இன்னொரு ஜோக்கையும் அடித்து வைத்துள்ளார் முஷார்ரப . முதலில் அண்னாத்தே என்ன சொல்லிட்டிருந்தாருன்னா கார்கிலில் சண்டையிட்டது “சுதந்திர போராட்ட தியாகிகள்” என கதை அடித்தார். கார்கிலில் ஏதடா தியாகிகள் என குழம்ப வேண்டாம். சூடான்,வடகிழக்கு பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகளை தான் சுதந்திர போராட்ட தியாகி என்றார்(இப்போது அந்த தியாகிகளை இவரே தடை செய்து விட்டார்.அவர்கள் இவருக்கு 3 பாம் வைத்தார்கள்.தப்பித்து விட்டார்:-)

முதலில் அது தியாகிகள் நடத்திய யுத்தம் என்றார்.பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை,அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தான் அரசு ஜோக் எல்லாம் அப்போது அடித்துகொண்டிருந்தது.இப்போது “அது பாகிஸ்தான் ராணுவம் இனைந்து இட்ட் சண்டை,அதில் நாங்கள் ஜெயித்தோம்” என ஒரு அடி அடித்தார் பாருங்கள்,இந்திய ராணுவத்தில் அவனவன் அரண்டு போய்விட்டானாம். பின்ன? 4000 பாகிஸ்தான் வீரர்கள் அதில் செத்ததா பாகிஸ்தான் ரிடையர்ட் ராணுவ அதிகாரிகள் பலர் சொல்லிருக்காங்க.அதை அண்ணாச்சி வெற்றி என்கிறாரே என குழம்பியுள்ளனர்

இந்தியாவுக்கு எப்படி அப்துல் கலாமோ பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு ஏ.கியூ.கான்.அவர் தான் பாகிஸ்தானின் அணுஆயுத தந்தை.அப்துல்கலாமுக்கு நாம என்ன மரியாதை தந்தோம்ணு எல்லாருக்கும் தெரியும். கான் என்ன ஆனாருன்னு தெரியுமா?வீட்டு சிறையில் களிதிண்ணுட்டு இருக்கார். காரணம் மனுஷன் அணுகுண்டை கடலைமிட்டாய் கணக்கா வர்ரவன் போறவனுக்கெல்லாம் வித்திருக்கார்.அதனால முஷாரப் அவரை பிடிச்சு உள்ளே வெச்சுட்டார். ஆனாலும் பாவம்யா பாகிஸ்தானின் அணுஆயுத தந்தை:-)

இப்ப முஷாரப் அண்னாத்தே என்ன கதை அடிக்கிறாருன்னா இந்தியாவின் அணுஆயுத திட்டம் பாகிஸ்தானை பாத்து காப்பி அடிச்சதுன்னு சொல்றார். நம்ம ஆளுங்க நமட்டு சிரிப்பு சிரிக்கறாங்க. முதல் காரணம் அது பொய் என்பது.ரெண்டாவது காரனம் பாகிஸ்தானிலிருந்து அணுகுண்டை காப்பி அடித்திருக்கவே வேண்டியதில்லை. கான் அண்ணாத்தெக்கு மாமூல் வெட்டிருந்தா அவரே குடுத்திருப்பார்.

உளவு பார்த்தல் என்பது சட்டபூர்வ நடவடிக்கை அல்ல. பல சட்டமீறல்களை செய்து தான் உளவு அமைப்புகளை நடத்த வேண்டும்.அப்படித்தான் அனைத்து நாடுகளும் செய்து வருகின்றன.அப்படி திரைமறைவில் உளவு வேலை செய்யும்போது திரையை அந்த நாடடின் ஜனாதிபதியே தூக்கினால் என்ன ஆகும்? முஷாரப்பின் புத்தகம் செய்தது அந்த வேலையைத்தான் என சாடுகிறார் பாகிஸ்தானின் லிபரல் எழுத்தாளரான இர்ஃபான் உசேன். இந்த புத்தகத்தை சுயபுராணம் என்று வகைப்படுத்துவதா அல்லது கற்பனைக் கதை என வகைப்படுத்துவதா என தெரியாமல் வரலாற்று ஆசிரியர்கள் குழம்பிப்போயிருப்பதாக கூறுகிறார் இர்ஃபான் உசேன்.

பாகிஸ்தானை கற்காலத்துக்கு கொண்டு செல்லப்போவதாக அமெரிக்கா சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்கிறார் இர்ஃபான் உசேன். பாகிஸ்தானின் மனப்பான்மை ஏற்கனவே கற்காலத்தில் தான் இருக்கிறது என்கிறார். அமெரிக்கா இப்படி சொன்ன தகவலை முஷாரப்புக்கு தெரிவித்தவர் ஐஎஸ்.ஐ தலைவர் அஹமது. 9/11 நடந்தபோது அஹமது வாஷிங்க்டனில் தான் இருந்தாராம். முஷாரப்பின் புத்தகத்தால் அஹமதுவை பற்றிய பல யூகங்கள் கிளம்பி விட்டனவாம்.

தலிபான் கும்பல் மீது தாக்குதல் நடத்த போவதாக அமெரிக்கா சொல்லி, அதை தவிர்க்க வேண்டுமானால் பின்லேடனை ஒப்படைக்க வேண்டும் என்றதாம். அப்போது முல்லா ஓமரிடம் தூது போக அஹமது தலைமையில் ஒரு தூதுக்குழு போனதாம். அங்கே போய் அஹமது டபிள் கேம் ஆடினாராம். கொஞ்ச நாள் விட்டு பிடியுங்கள்,சண்டையை இழுங்கள் என ஐடியா கொடுத்ததே அஹமதுவாம்.

ஐ.எஸ்.ஐ என்பது ஒரு பொறுக்கிகளின் குண்டர் படை என சாடுகிறார் இர்ஃபான் உசைன்.சில நாட்களுக்கு முன் ஐ.எஸ்.ஐயால் அனுப்பப்பட்ட குண்டர் படையினர் ஒரு வீட்டில் புகுந்து ஒரு இளைஞனை அடித்து துவைத்தனராம். அந்த இளைஞன் செய்த தவறு என்ன?ஐ.எஸ்.ஐ அதிகாரி ஒருவரின் மகனும் அவனும் நெருங்கிய நண்பர்களாம். நண்பர்களுக்கிடையே சின்ன உரசல். ஐ.எஸ்.ஐ அடியாள் படையை அனுப்பி அடித்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால் ஐ.எஸ்.ஐ கும்பல் அடித்த இளைஞன் ஒரு ஆர்மி ஆபிசரின் மகனாம். பல வீரப்பதக்கங்கள் வாங்கியவராம். விவகாரம் பெரிதாகி கடைசியில் முஷரப்பே அந்த ஜெனரலுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்க வேண்டி வந்ததாம்.

“ஐ.எஸ்.ஐ மீது எனக்கு 200% நம்பிக்கை இருக்கிரது” என்கிறாராம் முஷாரப். ஆனால் பாகிஸ்தானியரே ஐ.எஸ்.ஐ கும்பலின் கோணிப் புளுகுகளை நம்புவதில்லையாம். இங்கிலாந்தில் குண்டுவைக்க முயன்று பிடிபட்ட ஒரு பாகிஸ்தானிய இளைஞன் ஐஎஸ்.ஐ தான் தனக்கு பயிற்சி அளித்தது என இங்கிலாந்து போலிசிடம் ஒப்புதல் வாக்குமூலம் தர,ஐ.எஸ்.ஐ அவன் குடும்பத்தை அடித்து உதைத்து அந்த வாக்குமூலத்தை திரும்ப பெற வைத்ததாம். இப்படிப்பட்ட கோணிப்புளுகு அமைப்பான ஐ.எஸ்.ஐயை பற்றி உண்மையை தன் அடுத்த புத்தகத்தில் எழுதுவாரா முஷார்ப் என கேட்கிறார் இர்ஃபான் ஹூசைன்.

இது எல்லாவற்றையும் விட மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் புத்தகம் வெளிவந்த சிலநாட்களிலேயே அதை வாங்க ஆளில்லாமல் அமேசான் அந்த புஸ்தகத்துக்கு 50% வரை தள்ளுபடி கொடுத்து விற்கிறது .இதை கேட்டா முஷாரப் அண்ணாத்தேக்கு ரத்தகொதிப்பே வந்துடும், பாவம்.இதை ஒரு சிறந்த நகைச்சுவை சித்திரமா விற்க அமேசானுக்கு ஐடியா கொடுத்தா விற்பனை பிச்சுகிட்டு ஓடும்.என்ன சொல்றீங்க? எப்படியோ சர்வதேச அளவில் சிரிப்பு மூட்டிய முஷாரப்புக்கு என் பாராட்டுக்கள்.இந்த சிறந்த நகைச்சுவை சித்திரத்தை அனைவரும் வாங்கி படித்து இன்புறுவீர்களாக. ஓம் சாந்தி.

www.holyox.blogspot.com
www.groups.google.com/group/muththamiz


holyape@gmail.com

Series Navigation

செல்வன்

செல்வன்