சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

S.D. நெல்லை நெடுமாறன்


நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் பதிற்றுப்பத்து மிகப் பழமையான நூலாகும். சேர வேந்தரின் புகழ்பாடும் இந்நூலில் ‘நிழல் வாழ்நர்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். கல்வெட்டுகளிலும் நிழல் என்ற சொல் இடம் பெற்றுள்ளதை அறிகின்றோம். நிழல் என்ற சொல் வீரரைக் குறிக்கிறது என அறிஞர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பதிற்றுப்பத்து நூலோடு ஒப்பிட்டு நோக்கலாம்:

“மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து
மன்னெயி லெறிந்து மறவர் தரீஇத்
தொன்னிலை சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்கு
கோடற வைத்த கோடாக் கொள்கையும்”

“கரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக் கழலையும் அணிந்து பகை மன்னர்களின் நிலைபெற்ற மன்னெயில்களை எறிந்து அவற்றில் வாழும் மறவர்களைப் பிடித்துக் கொண்டு பழைதான நிலமைச் சிறப்பினையுடைய நின்னிழலில் வாழும் வீரர்க்குக் கொடுமை அறும்படி வைத்த பிறழாக் கொள்கையும்” என்று பழையவுரையில் கூறியிருப்பதில் ‘நிழல் வாழுநர்’ என்று அழைக்கப்பட்ட சான்றோர் சான்றோர் பற்றிச் சுட்டிக் காட்டப்படுகிறது. பனந்தோட்டு மாலை அணிந்த வீரர்குடியே சான்றோர் மரபினர் “நிழல் வாழ்நர்” எனத் தெளிவாகிறது. மன்னெயில் எறிந்து கொள்ளப்பட்ட பகை மன்னர்க்குரிய மறவருக்கும் “நின்னிழல் வாழ்நர்” என்ற பகைமை கொள்ளாத சேரரின் வீரருக்கும் வேறுபாடு இப்பாடலால் வெளிப்படுகிறது. இருப்பினும் சேரமான் நார்முடிச்சேரல் மறவர் வீரர்களைச் சிறப்பித்து வாழச் செய்துள்ளான்.

“நார்முடிச் சேரனின் போர்நிழற் புகன்றே” என்று பதிற்றுப்பத்து கூறுதலைப் பார்ப்போம். தலைமகன் போல அவன் போர்நிழல் வாழும் வீரரும் கொடையுள்ளத்தினர் என்று பழைய உரையாசிரியர் தெளிவுபடுத்தி உள்ளார். “நின்போராகிய நிழலை என்றும் உளவாக உள்ள நிலைமக்கள்” என்றார். இவர் கூலிப்படையில் அமைந்தவர் அன்று. போரில் அமைதியுடைய வீரர் என்று கொள்க. இவரும் தலைமக்கள் என்றும் அறிக. “போர்நிழற் புகன்ற சுற்றம்” என்பதற்குப் பழைய உரைகாரர் ‘படைத்தலைவர்’ என்றார். இத்தகைய படையை மூலப்படையென்றும் முடிவு கொண்டுள்ளனர். மேலும் பழைய உரைகாரர், “நாட்டினை அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற போர்க்கொள்கையை மாற்றியென்ற வாறென்றும் சிறப்பானே இதற்கு நிழல்விடு கட்டி பெயராயிற்று” என்று கூறுதல் நிழலாகிய வேந்தரும் நிழலாகிய வீரர் என்பதாலும் நிழல்விட்டு கட்டி என்றார். வேந்தனை விட்டு நீங்காத வீரர் நிழற் என்று தெரிகிறது. வேந்தனின் நிலைப்படையில் உறுதி கொண்டு இறுதியை ஏற்றுக் கொள்ளும் வீரர் ‘நிழல்’ எனப்பட்டனர்.

‘நிழல்’ என்னும் மலையர் குலம்

பதிற்றுப்பத்து குறிப்பிட்டது போன்று புறநானூறும் நிழல் பற்றிய குறிப்புகளைத் தருகிறது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மலையமான் மக்களை யானைக் கிடுவுழிக் கோவூர் கிழார் என்ற புலவர் பாடி உய்யக் கொண்டது பற்றிய பாடலாகும். மலையமான் மக்களை,
“தமது பகுத்து உண்ணும் தன்நிழல் வாழ்நர்”

என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளன்மையுடைய குடியான வீரர் மரபில் மலையமான் குலத்தில் பிறந்தவர் இச்சிறார்கள் என்பதாம். பழையவுரையில் நிழல் வாழ்நர் மரபினர் என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே அரசகுடியின் கிளைகளை நிழல் வாழ்நர் என்று குறிப்பிட்டார்கள் என்று கொள்க. மலையமான் மரபிலே உதித்துச் சோழனிடம் சேனாபதியாக அமைந்தவன் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் மாறோக்கத்து நப்பசலையார் அரசவாகையில் இவனைப் பாடியுள்ளார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நான்கு வருணத்திற்கும் என வாகை இருந்ததை இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலை கூறுவதை அறிய வேண்டும். பிற்காலம் சுந்தர சோழனின் மனைவி அதாவது பேரரசன் முதலாம் இராச ராச சோழனின் தாய் மலையமான் குலத்தவள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். மலையர்குலம் நிழல் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது எண்ணத்தகுந்ததாம்.

மலையரசனாகிய குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடிய பாடலில்
“நாள் முரசு இரங்கும் இடனுடைய வரைப்பில் நின்
தாள் நிழல் வாழ்நர் நன்கலம் மிருப்ப
வாள்அமர் உழந்த நின் தாளையும்”

“முரசு முழங்கும் இடனுடையதான எல்லையின் கண் நினது தாள் நிழல் வாழ்நர் வாளாற் செய்யும் போரின் கண்ணே” என்பதால் நிழல் வாழ்நர் ஆகச் சுட்டிக் காட்டப்படுவோர் வீரக்குடியினர் என்று புலனாகும். தாள்நிழல் என்பதற்கு “வீரன் தாள் நிழல்” என்று சீவக சிந்தாமணி குறித்திருப்பதை உ.வே.சாமிநாதய்யர் எடுத்துச் சொல்லியுள்ளார். எனவே இலக்கியத்தில் நிழல் என்ற சொல்லுக்கு வீரர் என்ற பொருள் உண்டு என்று அறியற்பாலதாம். ஐய்யனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலை
அழலவிர் பைங்க ணரிமா னமளி
நிழல்வீர் பூண் மன்னர்நின் றேக்கத் – கழல்புனை

என்பதால் சிங்கம் சுமந்த நிழல்வீரர்தனை ஆபரணமாகப் பெற்ற மன்னர் நின்று வாழ்ந்த என்பதாம். சிங்கக் கொடிக்கு அரசகுலம் உரிமை கோரியதும் எண்ணுதற்குரியது.

இராமாயணக் காதையில் இராமபிரானின் “நிழலாக அமைந்தோன்” அவன் தம்பி இலக்குமணன் என்பது புராணப் பாடம். ‘நிழல்’ என்ற வீரர்கள் வேந்தனோடு முரண்படாது, அவனோடு இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவர்கள். அதாவது வேந்தனுக்கு மெய்யாகவே துணை நின்றோர். தலைவன், தலைவி பற்றி “நின்னை விட்டு நீங்காத நிழற்போல என்னை விட்டு நீங்காமற் திரிகின்றவனே” என்று நச்சினார்க்கினியர் குறிஞ்சிக் கலியில் உரை செய்தார். உடன் இருத்தல், ஒன்றி இருத்தல், இணைந்து வாழ்தல் என்ற வாழ்க்கை முறைமையில் நிழல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இன்ப துன்பங்களில் உடனிருப்போர் ஆகிய வீரர் என்பதாம். நமது இலக்கியங்களில் பதிற்றுப்பத்து சொல்லும் வீரர்களில் சான்றோர் என்ற வீரர் வேந்தனிடம் வேறுபட்டு நின்றதாக அந்நூல் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் பிற வீரர்குடியைக் குறிக்கும் சொற்கள் வேந்தனின் பகைமை கருதிச் சுட்டிக் காட்டப்படுகிறது எண்ணத்தகுந்ததாகும். “வேல்நிழல் புலவோர்க்கு கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்” என்ற மலைபடுகடாம் பாடல் அடிக்கு நச்சினார்க்கினியர் தம் உரையில் “வேற்போரின் விளக்கத்தையுடைய அறிவுடையோர்க்குக் கொடுத்தற்கரிய நாடும் ஊரும் முதலியவற்றைக் கொடுத்த அவனுடைய குடியிலுள்ளோர் தோற்றரவும்” என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய வீரர்கள் அறிவுடையோர் என்றும் தொல்லோர் என்றும் அறியமுடிகிறது. வேந்தனின் குடியிலுள்ளோர் நிழல்வீரர் என்ற அறிவுடையோர். இவர் நாடும் நகரமும் பெற்ற போர்க்குடி மரபினர் என்று உணரற்பாலதாம். கலித்தொகை நச்சினார்க்கினியர் உரையில் அரசன் நிழல் எனப்படுகிறான். எனவே நிழலார் என்போர் குடிகாக்கும் தலைவரான ஒளியுடைய அரசர் எனப் பொருள் கொள்ளுதல் சரியானதாகும்.

பதிற்றுப்பத்து ‘மெய்மறை’ என்ற சொல்லினை எடுத்து இயம்புகிறது. இதற்கு வேந்தருக்குக் கவசம் போன்றவர்கள் என்ற பொருளும் அறிஞர்கலளால் சொல்லப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து நூலில் “சான்றோர் மெய்ம்மறை”, “பூழியர் மெய்ம்மறை”, “வில்லோர் மெய்ம்மறை”, “மழவர் மெய்ம்மறை” என்று குறிப்பிடுவதை உற்று நோக்குவோம். சேரருக்கு வில்லவர், பூழியர் என்ற பட்டப்பெயரும் உண்டு. மழவர் குடியோடு தொடர்பு ஏற்பட்டதால் சேரர் குடிக்கு மழவர் உரிமை கோரினர். மேலே சேரர் குடியின் பட்டப் பெயராகவும் இணைத்துக் கொண்ட பெயராகவும் அமைந்து சிறந்த பெயர்கள் வில்லியர், பூழியர் என்பதாம். சேரர் குடியோடு மலைவாழ் வீரர் குடியான மழவர் என்பார் வேந்தர் குடியோடு இணைந்தனர். இதன் பொருட்டு உரிமையும் கோரினர். இனி மெய்ம்மறை வீரர் பெயரில் ‘சான்றோர்’ என்பதைப் பார்ப்போம். “நிழல் வாழ்நர்” என்று சொல்லப்பட்ட சான்றோர் இவரது பெயரால் “சான்றோர் மெய்மறை” என்பதை உற்று நோக்கின், இதுவே சேரரின் இனப்பெயர் என்று புலப்படும். நான்கு விதமாக மெய்ம்மறை சொல்லப்படுதலை உற்று நோக்கும் போது மூன்று பெயர்கள் சேரர் குடியின் பட்டப்பெயராகவும் ஒன்று இனப்பெயராகவும் கொள்ளத் தடையில்லை என்பதாம்.

“எ•கா டூனங் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன்”

மார்பில் காயம் ஏற்பட்டு மெய் சிதைந்து அம்மார்பில் சாந்தினைப் பூசி மறைத்திருக்கும் சான்றோர் பெருமகன் என்பதால் செல்வக் கடுங்கோ என்ற சேரமான் சான்றோர் இன மரபினன் என்று அறியக்கிடக்கின்றது. வாளோடு வடக்கிருத்தல் என்ற வீரர் கொள்கையின் இனவழிப் பெயர் சான்றோர் என்பதாம். வாளடு வடக்கிருத்தல் என்ற நிலையில் வேந்தனோடு உடனிருந்து உயிர்விடுதல் சான்றோர் கொள்கையாகும். அரசனின் நிழல் எனவே உடனிருந்தனர் எனக் கொள்க. இவரைக்” கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோன்” என பதிற்றுப்பத்து கூறுவதும் எண்ணத் தகுந்தது. சேரனின் புகழ்பாடும் தகடூர் யாத்திரை “தருக்கினானே சான்றோர் மகன்” என்று வீரர் குடியை அடையாளம் காட்டும். நிழல் என்ற சொல் வேந்தனையே குறிக்கும். ஏனெனில் நிழல் என்று வேந்தர் குறிப்பிடப்பட்டனர். அவர் வாழ்நர் என்பது வேந்தன் நிழல் என்பதாலேயே வாழுநர் என்றனர். இவரெ “நாடு வாழ்நர்”, “வாழ்க்கை வாழ்நர்” என்று சிறப்பிக்கப்பட்ட வீரர் குடியினர். இச்சொல்லே “நாடு வாழுமவர்” வாழ்க்கை வாழுமவர் என்று மாற்றம் பெற்றது எனலாம்.

தண்டநீதித் தலைவரான சான்றோர் என்பதால் கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டு

“நாடு வாழுமவர்க்கு இருபத்துநாற் கழைஞ்சும்
வாழ்க்கை உடையவருக்கு பந்நிரு கழைஞ்சும்”

தண்டநீதிக்குத் தரப்படல் வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

வேம்பற்றூராரின் திருவாலவாயுடையார் புராணம்
“——இறைநெறி முறைமை யோங்கச்
சாற்றரும் பெரிய தண்டம் செய்யுமின் சான்றோ ராயின்”

என்பது எண்ணிடத்தக்கதாகும். தண்டநீதி செய்யும் அரசவைக்கு மற்றொரு பெயர் சான்றோர் அவை என்பதாம். அரசனின் தொடர்ச்சியைப் பெறும் வீரன் தண்டநீதி தலைவனாவான். கற்றோர் போற்றும் கலித்தொகை சான்றோர் அவையிருந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டும்.

‘நிழல்’ என்ற சொல் கேரள நாட்டுக் கல்வெட்டுகளில் பயிலுவதாக அறிஞர் எம்.ஜி.எஸ். நாராயணன் தன் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்தார். “மூத்த கூற்றிற்கு அமைந்த நிழல்” என்பதை எடுத்துக்காட்டி ஆய்ந்து ‘வீரர்’ எனக் குறிப்பிட்டார். அவ்வீரர் குடி யார்? என்று அவர் உணர்ந்து அறியவில்லை.

முதலாம் ஆதித்த சோழனுக்குரிய வெண்பாவில் அமைந்த கல்வெட்டு பாடல் அண்மையில் டாக்டர் செ.இராசு, இரா.பூங்குன்றன் போன்ற அறிஞர்களால் கண்டறியப்பட்ட கல்வெட்டாகும். கோவை மாவட்டம் பச்சைப்பாழியில் கிடைத்த இக்கல்வெட்டு இந்தியாவிலே தொன்மை வாய்ந்த் பெருவழி பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டாகும். இராசகேசரி பெருவழி கல்வெட்டுப் பாடலை அறிவோமாக.

“திருநிழலு மன்ன யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்க – ஒருநிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர் கோக்கண்டன் குலம்”

என்பதை இரா.பூங்குன்றன் அறிந்து கட்டுரையாக்கியுள்ளார். திருநிழல் ஆட்சி என்றும் படையமைப்பு பற்றி விளக்கி ஒரு நிழல் போல் வாழியர் என்று கூறுதல் சோழர் குடி வீரர் பற்றியதாகும். இவரை ஒப்பற்ற படைவீரர் பிரிவினர் என்று பூங்குன்றன் கூறுகின்றார். இக்கல்வெட்டில் சேர மன்னர், களப்பிரர் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாகக் கருதி ஆய்வது தவறானதாகும். ஏனெனில், கோழியர் என்ற பெயர் உறையூர் ஆண்ட சோழற்குரியதாகும். கோக்கண்டன் என்ற குலம் அரசர் குடியான சோழருடையதாகும். இவர் நிழல் என்று அழைக்கப்பட்ட வீரர் குடியினர் என்று உறுதியாகிறது. அணுக்கத் தொண்டர் என்பார் பணிமக்களாகும். நிழல் என்ற வீரர்குடி, அரசனின் மரபுவழி வீரர் என்பவரேயாவர். மேலே சொல்லப்பட்ட கல்வெட்டு வைத்தவன் முதலாம் ஆதித்த சோழன் என்பதும் அவனது குல வீரர்கள் நிழல் என்று கூறப்பட்டார்கள் என்பதும் பொருத்தமுடையதாகும். இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியாகும்.

தண்டநீதித் தலைவர்கள் அரசனின் நிழல் என்பதாலேயே நிழல் வாழ்நர் என்றார் போலும். நிழல் என்று கூறப்பட்ட இவர் நிழலோர் என்றும் அழைக்கப்பட்ட முதன்மைப்படுத்தப்பட்ட அரசகுல வீரர் என்பதில் ஐயமில்லை. கி.பி. 1000ஆம் ஆண்டினைச் சார்ந்த கல்வெட்டு
“இராம வளநாடு வாண்ண பாலித்து கண்ணன்
கண்டன் பணியுடையவளும் அறுநூற்றுவருந்
நிழலோடும் பாட்டாற் செய்த காரியமாவது”

இராமவள நாடு வாழுமர் கண்ணண் கண்டன் மற்றும் இவனது பணி செய் மக்களும் அறுநூற்றுவரும் வீரர் என்று முடிவு கொண்டுள்ளனர். வீரர்குடியில் நிழலோர் அல்லது நிழல் என்ற வீரருக்கும் அறுநூற்றுவருக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது. அறுநூற்றுவர் பணி மக்கள் தொடர்பான வீரர் என்று கொள்ளத்தக்க சான்றுகள் கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன.

கி.பி. 1008இல் அமைந்த கல்வெட்டு“நிழலும் பணியும் கூடிய அட்டிக்” என்று குறிப்பிடுவதால் ‘நிழல்’ என்ற வீரமரபும் ‘பணியும்’ என்ற பணிமக்கள் பிரிவில் வந்தோரும் கூடி முடிவு கொண்டுள்ளனர் என்று புலனாகிறது. மேலும் ‘நிழல்’ என்போர் பணிமக்கள் மரபினர் அன்று என்றும் தெளிவுறுகிறது. இருபாலோரும் அரசனிடமே பணிபுரிகின்றனர். இருப்பினும் வேறுபட்ட இனப்பிரிவினர் என்பதால் பணிமக்களை ‘பணியினர்’ என்று வேறுபடுத்தினர் என்று கொள்க.

கி.பி. 1021இல் அமைந்த கல்வெட்டு
“மூத்த கூற்றினுக்குக் கமைஞ்ச நிழலும்
பணியும்…”

இக்கல்வெட்டு தரும் பாடம் மூத்த கூறு என்பதற்கு அமைந்தோர் நிழல் என்போர் இவரும், பணி மக்களும் என்பதற்காகவே பணியும் என்றார். மூத்தகூறு என்பது மூப்புகூறு என்றும் மூப்பரு செய்வித்த அதிகாரமாகும். இத்தகைய அதிகாரம் பெரும்பாலும் நகரங்களில் நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது. முதுகூறு என்ற பொருளையும் மூத்தகூறு பெறும். ‘கிராமகூறு’ என்ற அடிப்படையில் கூறு செய்வார் என மணியக்காரர் அழைக்கப்பட்டார். அரசனின் அரண்மனையைச் சுற்றி இருக்கும் பகுதியில் மூப்புகூறு அரச குலத்தவன் பெற்றதாக நாட்டுப்புறப் பாடல்கள் சான்றளிக்கின்றன. ‘மூத்தகூறு’ என்பதற்கு டாக்டர் சுப்பராயலு ‘மூதுகூறு’ என்று குறிப்பிடுகின்றார். புறப்பாட்டு மூத்த அதிகாரம் என்ற மூத்தகூறு பற்றி மேலும் அறியலாம். மூத்த அதிகாரம் என்பதற்குத் “தலைமை அதிகாரம்” என மிகச் சரியான பதிலை கலாநிதி வேலுப்பிள்ளை ‘சாசனமும் தமிழும்’ என்ற நூலில் தருகின்றார். “நன்றுழை நாடு வாழுந் திருக்கடித் தானத்து உத்திர கணத்தாரும் நிழலும் பணியும் கூடி வேணாடுடைய சிரிவல்லவன் கோதை வர்ம்மர் உத்திரவிழா” பற்றிக் குறிப்பிடுகிறது. பாஸ்கர ரவிவர்மரின் ஆட்சியில் பங்குனி உத்திரவிழா ஆண்டுதோறும் நடைபெற ஏற்பாடு செய்துமுள்ளனர். ஏற்பாடு செய்தவர்கள் கோயில் கணத்தார், நிழல் என்ற வீரர் மரபினர் மற்றும் பணிமக்களும் கூடி முடிவு கொண்டுள்ளனர்.

கி.பி. 1218இல் அமைந்த கல்வெட்டு
“ஓடநாட்டின்று மூத்த அதிகாரம் செய்த”

என்று கூறுவதால் மூத்த அதிகாரம் மூத்தகூறு அதிகாரம் என்று புலப்படும். இது மூத்தவர் எனப்பட்ட அரசகுடியினர் செய்த ஆட்சி முறைமை என்று அறியற்பாலதாம். வேந்தனின் படைப்பற்று பலவாகும். வன்னியர், குடிபடை வேளைக்காரர் என்பது போன்று “மூத்த பரிவாரம்” என்ற மிக வலுவான படைவீரர் இருந்தனர். இவர் ‘நிழல்’ என்ற மரபினர். இதிலும் வேறுபாடான ‘இளைய நியாயத்தார்’ என்ற வீரர் குழு இருந்துள்ளது. இவர்கள் வயதால் கணிக்கப்பட்ட வீரர் அன்று பெருங்குடிக்கும் சிறுகுடிக்கும் இருந்த வேறுபாட்டில் வாழ்வியலில் அமைந்த கதைகள் இவர்களைப் படம் பிடித்துக் காட்டும் கி.பி. 992ஆம் ஆண்டு கல்வெட்டு
“மூத்த பரிவாரத்தார்”
பற்றி நமக்குத் தரும் பாடமாகும். வயதிலே மூத்தவர் இருந்த படையென்று எவர் உரை செய்வார்? கல்வெட்டுப் பாடங்களை நாம் அகராதிகளோடும், இலக்கண இலக்கியங்களோடும் ஒப்பிட்டு நோக்க முடியும். நம் வேந்தர்களைப் பாடிச் செய்யுள் இயற்றினால் அச்செய்யுள் இலக்கணம் தவறி அமைந்தால் ஆண்டவனே அதனைச் செய்தாலும் ஒப்புக்கொள்ளாது அமைந்தோர் நம் வேந்தர்குடியினர் என்று நம்மிடம் புராணம் இருக்கிறது. ‘மூத்தோன்’ என்ற சொல்லுக்கு வருவோம். தலைவன், சான்றோன், உரவோன், உயர்ந்தோன் பட்டியலுக்கு நம் அகராதிகள் கொண்டு செல்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்ட சொற்கள் இலக்கியங்களில் அரசனை அல்லவா சிறப்பித்துக் கூறுகின்றன. சிறப்புச் சொற்கள் நாளடைவில் சாதியாக மாறிவிட்டதைத் தேவநேயப் பாவாணர் விளக்கியுள்ளார்.

குறிப்பிட்ட இக்கல்வெட்டு கி.பி. 932ல் அமைந்ததாகும்.
“விவாஹ தளி னம்பியும் மூத்தவர்கள் இருவருங்
கண்டு செலுத்தக் கடவர்”

ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தளிநம்பியும் மூத்தவர்கள் இருவரும் இவரைக் கண்டு இறை செலுத்த வேண்டும், இருபாலோரும் அரசின் பணியில் முதன்மை பெற்றவர்கள் என்பதாம். கி.பி. 1010இல் அமைந்த கல்வெட்டு “கால்கரை நாடு வாண்நரே உள்பாடனும் பெருமூத்தவனுங் கூடியிருந்து” என்பதிலிருந்து நாடு வாழுமவரான உள்பாடனும் பெருமூத்தவனும் கூடியிருந்து நாட்டில் செயல்பட்டதைக் குறிப்பிடுகிறது. எனவே உயர்ந்தோர் என்போர் மூத்தோர் என்று அழைக்கப்பட்டனர் எனலாம். இதனால் வயதில் பெரியோர் என்று பொருள்படாது. மூத்தோன் என்ற சொல் பெரியோர் என்று அழைக்கப்பட்டதால் வயதில் பெரியோர் என்று கொள்ள முடியாது. மூத்தவர்கள் அமைந்த மஹாசபை என்பது மூத்தவரு என்று அழைக்கப்பட்ட அரச குலத்தவரின் சபையாகும். இதனாலேயே “சிறைவாய் மூத்தவரு” என்று அரசர்கள் குலத் தொடர்புக்காகச் சூடிக்கொண்டனர். “மூத்த நாயனார்” என்றும் தலைமை ஏற்ற மக்கள் அழைக்கப்பட்டனர். மூத்த குடியை “முற்குடி” என்றும் கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவர் முதுமக்கள் என்ற பழங்குடி மரபினர் ஆவர். முதுமக்கள் தாழியைக் கொங்கு நாட்டில் மூத்தோன் தாழி என்றனர் என்பது டாக்டர் செ.இராசு அவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பழங்குடித் தலைவர்கள் தங்களை “மூத்த அரையர்” என்று கூறிக் கொண்டனர் என்பதும் ‘விருத்த’ என்ற சொல்லால் அழைக்கப்பட்டனர் என்பதாம். குறிப்பிட்ட சமுதாயங்களில் தலைவனை மூப்பர் என்பதும் ஊர் மூப்பர் என்பதும் தெரிந்து அறிக. மூத்தகூறுக்கு உடையவரை எழுநூற்றுவர் என்று கி.பி. 1021ஆம் ஆண்டு கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது.

“மூத்த கூற்றில் எழுநூற்றுவரும் பணியுடைய நாயனும்
ஊரு ஊரிடவகை வெள்ளாளரும்”

என்பதால் மூத்தகூறு அமைந்த நாடுவாழுநரான எழுநூற்றுவரும் பணியுடைய நாயரும் அதாவது (பணிசெய் மக்கள் பட்டியலில் இடம்பெற்ற நாயர்) ஊரில் இருக்கின்ற வேளாளர்களும் சொல்லப்படுவதால் அரசுமக்கள், அகம்படியரான நாயர், நாலாம் குலத்தவரான வேளாளர் என்று அறிந்து கொள்வோமாக. மூத்தகூறு என்பதற்குக் கிராமத்தார் ஆன கிராம ஆட்சி முறைமை கூறினார். கிராம ஆட்சி முறைமையின் தலைவன் கிராமணி எனப்பட்டான். வேதங்களிலும் புராணங்களிலும் தலைவன் கிராமணி எனப்பட்டான். இதன் தொடர்பான எச்சம் தமிழகத்திலும், ஈழ நாட்டிலும் நமக்குக் கிடைப்பது எண்ணத்தகுந்தது.

மேலும் மூத்த என்பது பற்றி அறிய கல்வெட்டுகளைக் கொள்ளலாம். கி.பி. 898ஆம் ஆண்டு கல்வெட்டு,
“மூத்த தேவியார் இளங்கோ பிச்சி”

இவள் அரசனின் பட்டதேவி ஆவார். இதுபோன்று அரசர்கள் மூத்த உடையார் எனப்பட்டனர். இவர் பட்டபெருமக்கள் எனப்பட்ட ஆட்சிக்குரிய மூத்தவர் கி.பி. 775ஆம் ஆண்டு கல்வெட்டு
“ஊரான் பண்டு மூத்தார் கொள்ள”

இக்கல்வெட்டு மூத்தார் என்ற அரசகுலத்தவர் என்கிறது. ஊராளராக மூத்தார் என்ற தலைமக்கள் இருந்தார் என்பதை கி.பி. 1200ஆம் ஆண்டுக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. “ஊராளர் பண்டு மூத்தார் கொள்ள” என்பதால் அறியலாம். ஊராளர் கொள்ள என்பதை கி.பி. 1021ஆம் ஆண்டு கல்வெட்டோடு ஒப்பிட்டு நோக்குக.

இதற்கும் மேற்கோளாக ஒன்றினைக் கொள்ளலாம். கி.பி. 1000ஆம் ஆண்டு கல்வெட்டு
“மன்றாடிகளும் குடியில் மூத்தான் பணி செய்வது”

என்று குறிப்பதைப் பார்ப்போம். குடியில் மூத்தவன் என்பது ஊர் நாட்டாமையைக் குறிப்பிடுமே அன்றி, பெரியவர் என்று வயது முதிர்ந்தவரைக் குறிக்காது. மன்றாடிகள் பல சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவரிலும் வேறுபட்ட மூத்தான் ஓர் குடியினர் என்பதாம். குடியில் மூத்தான் என்பது சமூகத்தில் முத்த குடியைச் சுட்டிக்காட்டும் என்பதில் ஐயமில்லை. எல்லா குடிகளிலும் நாட்டாமை என்ற அமைப்பு தோன்றிவிட்டது எண்ணத்தகுந்தது.

கி.பி. 951ஆம் ஆண்டு கல்வெட்டு
“மூத்தோர் இருவரும் சிறைக்கரையில்
மூத்தவனுங்கூடி”

என்பதால் மூத்தவர் வம்சம் எனப்பட்ட தலைமக்கள் கூடியதைக் கூறுகிறதே அன்றி முதியோர் இல்லம் நடத்திய கூட்டமன்று. முதுபெரும் சான்றோர் எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட வீரர் மரபினர். ஸ்ரீதரன், நாக.கணேசன் ஆகியோர் கண்டறிந்த கல்வெட்டு ஆவணம் இதழில் பதிவாகியுள்ளது.

“ஸ்வஸ்திஸ்ரீ கொற்றவன் கோ முந்நூற்றுவருக்கு மூத்தோரோம்
மக்களம் ஐம்பெருங் குழுவுக்கு”

என்ற நாகநல்லூர்க் கல்வெட்டு மேலும் தொடர்ச்சி கிடைக்கவில்லை. இருப்பினும் மூத்தவர் மக்கள் பற்றி அறிகின்றோம். ஐம்பெரும்குழு பற்றி இக்கல்வெட்டாலே அறிகின்றோம். உடையார் மூத்தவாள் என்று அரசர்கள் அழைக்கப்பெற்றனர். இடங்கைப் படையின் நாயகரான கைக்கோளர் “மூத்தவாள் பெற்ற” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு உள்ளனர். இளைய படையினர் கைக்கோளர் போன்றவரே. குமரி மாவட்டம் சுசீந்தரம் கல்வெட்டு திருப்பாப்பூர் மன்னரை “மூத்த திருவடி” என்று கூறுகிறது. ஆதித்தவர்மரான செய்துங்க நாட்டு மூத்ததிருவடி திருக்குறுங்குடியில் செண்பக ராம சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்த அய்யன்குட்டி வீட்டில் தன் வீடாகக் கருதித் தங்கியுள்ளான். இதன் காலம் கி.பி. 1483 ஆகும். சேர மன்னர்குடி சிறைவாய் மூத்தவர் என்று கூறியதும் தெளிந்துள்ளோம்.

மேலும் மூத்த கூறுதனை மூப்புக் கூறு என்று பாண்டியர் பற்றிய இலக்கிய ஆவணங்கள் கூறுகின்றன. மூப்பரசாந்தரதொட்டி என்றால் அரண்மனை என்று ஆவணங்களால் அறிகின்றோம். மூப்பரு, மூத்தவரு, முதிராஜி என்ற சொற்கள் தலைமக்களைக் குறிக்கும் என்பதும் புலனாகும். மூத்தவர் சாதி என்று கேரளாவில் எச்சமூகத்தைக் குறிப்பிடுகின்றனர் என்று இனம் கண்டு கொள்க. குறிப்பாக மூப்பர் என்ற சாதியினரில் வைணவராக அமைந்து இருப்போர் தங்கள் கோயில்களை “நிழல்தாங்கல்” என்று பெயரிட்டு அழைப்பது திருவிக்கிரமனாகிய மகாவிஷ்ணுவின் நிழல் என்ற சமூகத் தொடர்ச்சி என்று அறிவோமாக. குமரி மாவட்டத்திலும், தென்பாண்டி நாட்டிலும் நிழல் தாங்கல் என்பதற்கு அய்யாவழி பெருமக்கள் “சான்றோர் தாங்கல்” என்று அழைப்பதும் அறியற்பாலதாம். தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் சூத்திரத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சான்றோர் கோவில் என்று சுட்டிக்காட்டுவதை அறிவோமாக. இராஜராஜேச்சுவரம், வரகுண பாண்டீச்சுவரம் என்று அரசன் பெயரால் அழைக்கப்பட்டமையாலேயே மேலே சொல்லப்பட்ட கோயில்களைச் சான்றோர் கோயில் என்றார். நிழல்தாங்கல் என்பது வீரர் தொடர்பான சான்றோர் கோயில் என்பதாம். ஆநிரை கவர்தல் போரில் வெட்சிப் போரில் இறந்தவர் அமைந்த கல் வேடியப்பன் கல் என்றும், கரந்தைப் போரில் இறந்தவன் கல் சாணாரப்பன் கல் என்றும் கூறும் வழக்கு தகடூர் நாட்டில் (தர்மபுரி) இருப்பது அறியற்பாலதாம்.

nellai.nedumaran@gmail.com

Series Navigation