பழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

சேதுபதி அருணாசலம்


“ஈஸ்வர வருஷம், 1938, பங்குனி மாசம், 19-ம் தேதி கோனானூரில் வாழும் பேரம்மாவூர் கட்டையனின் மனைவி குமாரியின் நினைவாக”

*****
ப்ரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை அவர் படை வீரன் பாடுவது போலமைந்த சோகம் ததும்பும் நாட்டுப்புறப் பாடல் புத்தகம் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் பின் வரும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன.

“வீரர்களே! நீங்கள் இப்போது வெற்றிகொள்ளப்போகும் நாட்டு மக்கள், ஏராளமான சிற்பங்களை வழிபடக்கூடியவர்கள். அவற்றை ஏதும் செய்து விடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். வரலாற்றுச்சின்னங்களையும் பாதுகாத்துப் பெறுவதுதான் முழுமையான வெற்றி!”

(நெப்போலியன் எகிப்து நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றபோது, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த வெற்றியைச் சுவைக்க ஆர்வமாக இருந்தத் தன் வீரர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்தது).

*****
‘தொடரும் தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பு’ – Foundation Against Continuing Terrorism – FACT என்னும் அமைப்பு 16-பிப்ரவரியிலிருந்து 20 பிப்ரவரி 2007 வரை ‘மொகலாயக் குறிப்புகளின் படி – ஒளரங்கசீப்’ (Aurangzeb – as he was according to Mughal Records) என்றொரு கண்காட்சியை நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில் ஒளரங்கசீப்பின் ஆட்சியைப் பற்றிய சமகாலத்திய அதிகாரபூர்வமான மொகலாய அரசுக்குறிப்புகள், அரசாணைகள், மொகலாய ஓவியங்கள் மற்றும் மொகலாயப் புத்தகங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் ஆவணங்களிலிருந்து தெரியவரும் விஷயங்களைத் தொகுத்து பேராசிரியர் V.S.பட்நாகர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரையிலிருந்து தெரியவரும் ஒளரங்கசீப்பின் கொடூரச் செயல்களும், மதவெறியும் மிகவும் மனவேதனை அளிப்பவை. அதிலும் ஒளரங்கசீப்பால் இடித்து அழிக்கப்பட்ட இந்துக்கோயில்கள் எண்ணற்றவை.

ஒளரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷ¤கோக் (Dara shukok) மதுரா(Madura)- வின் கேசவ ராய் கோயிலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்த வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடிச்சுவரை நீக்கச் சொல்லி ஆணை பிறப்பித்த ஒளரங்கசீப், “இஸ்லாமிய மதப்படி ஒரு கோயிலைப் கண்ணால் பார்ப்பதுகூட முறையற்ற செயல்” என்று கூறியிருக்கிறார். தாராவைப் போன்று நடந்து கொள்வது ஒரு முஸ்லிம் செய்யக்கூடிய செயல் அல்ல என்றும் கூறினார்.

தாரா ஒரு பரந்த மனம் படைத்த அறிவார்ந்த முஸ்லிம். உபநிடதங்களை மொழிபெயர்த்தவர். தன் தந்தை ஷாஜஹானின் அன்புக்குப் பாத்திரமானவர். மக்களுக்கும் அவர்மேல் பெரும் மதிப்பு இருந்தது. பட்டத்து இளவரசரான அவர்தான் அடுத்து மன்னராக வேண்டியிருந்தது. போரில் அவரைத் தோற்கடித்து மொகலாய கிரீடத்தை சூட்டிக் கொண்டார் ஒளரங்கசீப்.

பட்டத்துக்கு வந்த ஒளரங்கசீப், தன்னை ஒரு இஸ்லாமியக் காவலராகக் காட்டிக் கொண்டிருந்தார். (இதற்கு முன்னர் பதவியிலிருந்த அக்பரும், அவரைத் தொடர்ந்த ஷாஜஹானும் இந்துக்களிடம் அன்பாக நடந்து கொண்டது பல இஸ்லாமிய மதத்தலைவர்களை எரிச்சலுக்குள்ளாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). பதவியேற்றபின் ஷரியத்துகளின்படியும், உலாமா(Ulama) எனப்படும் இஸ்லாமியக் கூட்டமைப்பு மற்றும் மதத்தலைவர்களின் அறிவுரைகளின்படியும் நடப்பதாகக் காட்டித் தன்னை ஒரு இஸ்லாமியப் பாதுகாவலராகக் காட்டிக் கொண்டார் ஒளரங்கசீப். இந்த உலாமாவிற்கு ஏழாவது, எட்டாவது நூற்றாண்டில் அரேபியா, பெர்ஸியா மேலும் ஈராக்கில் எழுதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய விதிகளும், கோட்பாடுகளும் எந்தச் சூழ்நிலையிலும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் மாற்றப்படக்கூடாதவை; மீறப்படக்கூடாதவை.

இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தவறாமல் பின்பற்றுவதாகக் காட்டிக் கொண்ட ஒளரங்கசீப்புக்கு இந்துக்கோயில்களை இடிப்பது ஒரு முக்கிய கோட்பாடாக இருந்தது. பேராசிரியர் V.S.பட்நாகரின் கட்டுரையிலிருக்கும் சில கோயில் இடிப்புச் சம்பவங்களை இங்கே அப்படியே மொழி பெயர்த்துத் தருகிறேன்.

“1669-இல் ஆம்பர் (Amber) ராஜா ஜெய் சிங் இறந்த பின்னர் இந்துக் கோயில்களை இடிக்கச் சொல்லியும், இந்துக்களின் பள்ளிக்கூடங்களை இடிக்கச் சொல்லியும், பொது இடங்களில் இறை வழிபாட்டைத் தடை செய்தும் ஒரு ஆணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுராவின் சிறப்பு வாய்ந்த கேசவ ராய் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மசூதி ஒன்று எழுப்பப்பட்டது. மாஸிர்-இ-ஆலம்கிரி (Maasir-I-Alamgiri) என்ற நூலின் ஆசிரியரின் கூற்றுப்படி, அக்கோயிலில் இருந்த விக்ரகங்கள் ஆக்ராவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொடர்ந்து எல்லோராலும் மிதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பேகம் சாஹிபா (Begum Sahiba) கட்டிய மசூதிப்படிகளின் கீழ் புதைக்கப்பட்டன. மதுரா நகரம் இஸ்லாமாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே இதை விளக்கும் ஓவியம் உண்மையாக நடந்த நிகழ்ச்சியை பிரதிபலிப்பதே தவிர, ஓவியரின் கற்பனையில் உதித்ததல்ல.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்து மதத்தினரின் மரியாதைக்குரிய கோயில்களாக விளங்கிய சோமநாதர் ஆலயம், பனாரஸின் விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார் ஒளரங்கசீப். இந்துக்கோயில்களை இடிப்பதில் ஒளரங்கசீப்பிற்கு இருந்த வெறி போர்க்காலங்களில் இன்னும் அதிகமாகியது. நூற்றுக்கணக்கான இந்துக்கோயில்களை இடித்து இஸ்லாமிய நன்னம்பிக்கையைப் பெறும் வாய்ப்பு, ஜோத்பூரின் மஹாராஜா ஜஸ்வந்த்சிங் இறந்த பின்னர் மார்வார் ரதோர்களை ஒழிப்பதற்காக 1679 – இல் நடந்த போர் சமயத்தில் கிடைத்தது. ஆனால் மேவார் ராஜா மஹாராணா ராஜ்சிங் தங்கள் மரபுப்படி ரதோர்களுக்கு வெளிப்படையான ஆதரவுக்கரம் நீட்டினார். ஒளரங்கசீப் மார்வார் – மேவார் படைகளுடன் போரிட நேரிட்டது. அப்போது ராணா ஏரிக்கரையில் அமைந்திருந்த கோயில்களும் உதய்பூரைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கோயில்களும் ஒளரங்கசீப்பின் ஆணைப்படி இடிக்கப்பட்டன. அதில் மஹாராணாவின் அரண்மனைக்கு முன்னால் கட்டப்பட்டிருந்த பிரபலமான ஜகன்னாத் ராய் கோயிலும் அடக்கம்.

அதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் சித்தூரின் பிரபலமான கோட்டையைப் பார்வையிடுவதற்காகச் சென்றபோது அப்பகுதியிலிருந்த 63 கோயில்களை இடிக்கச் சொல்லி ஆணையிட்டார். அதில் கும்பர்களின் காலத்தைச் சேர்ந்த சில மிகச்சிறந்த கோயில்களும் அடக்கம். (மேற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த) மார்வார் பகுதியிலிருந்து மட்டும் வண்டி வண்டியாக விக்ரகங்கள் எடுத்து வரப்பட்டு ஒளரங்கசீப்பின் ஆணைப்படி அரச சபைக்குக் கீழும், ஜூம்மா மசூதியின் படிகளுக்குக் கீழும் புதைக்கப்பட்டன. இத்தகைய மனிதத்தன்மையற்ற, கொடூரமான ஒளரங்கசீப்பின் நடத்தைகள் இந்துக்களை அவரிடமிருந்து வெகு தொலைவில் தள்ளி வைத்தது. இருப்பினும் அவர்கள் அந்த அரசாட்சியைப் பொறுத்துக் கொண்டுதான் வந்தார்கள்.

ஜூன் 1681 – இல் மிகச்சுருக்கமாக இரண்டு வரிகளில் எழுதப்பட்ட அரசாணையின் மூலம் ஒரிஸ்ஸாவின் மிகப்பிரபலமான பூரி ஜகன்னாதர் கோயிலை இடிக்க உத்தரவிட்டார் ஒளரங்கசீப். அதன் பின்னர் செப்டம்பர் 1682 – இல் பிரபலமான பனாரஸின் பிந்து-மாதவ் கோயிலும் ஒளரங்கசீப்பின் ஆணைப்படி இடிக்கப்பட்டது. துர்கா தாஸ் ரதோரின் வழிகாட்டுதல் மூலம் சத்ரபதி சிவாஜியின் மகன் ஷாம்பாஜியுடன் இணைந்து கொண்டு தன் ஆட்சிக்குத் தலைவலியாக இருந்த தன் மகன் அக்பரை எதிர்ப்பதற்காக தக்காணாத்திற்கு வந்தார் ஒளரங்கசீப். அப்போது (செப்டம்பர் 1, 1681) தான் வரும் வழியிலிருக்கும் அத்தனை கோயில்களையும் இடிக்குமாறு உத்தரவிட்டார் ஒளரங்கசீப். அந்தச் சுருக்கமான அரசாணையில் புதிய கோயில்கள், பழைய கோயில்கள் என்ற பேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் புரண்பூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பெரும்பாலான கோயில்களை, அப்பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இடிக்காமல் அப்படியே விட்டு விடுமாறு முடிவு செய்திருக்கிறார். தனக்கிருந்த மதவெறியின் உச்சத்தில் தன்னுடைய நட்பு நாடான ஆம்பர் (Amber) பகுதியிலிருந்த கோயில்களைக் கூட விட்டு வைக்கவில்லை ஒளரங்கசீப். ஆம்பர் பிரதேசத்தில் இடிக்கப்பட்ட கோயில்களில் ஆம்பருக்கு அருகிலிருக்கும் கோனேர் (Goner) என்ற ஊரைச் சேர்ந்த பிரபலமான ஜகதீஷ் கோயிலும் அடங்கும். தன் வாழ்நாளின் இறுதி வரை கோயில் இடிப்புக் கொள்கையை கைவிடவில்லை ஒளரங்கசீப். ஜனவரி 1, 1705 – இல் பிரபலமான பண்டரிபுரம் கோயிலை இடித்து, கோயிலைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் கசாப்புக்காரர்களை வைத்து பசுக்களை வெட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.”

இப்படியாக இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் அத்தனையும் சமகால அதிகாரபூர்வமான குறிப்புகள் மற்றும் பெர்ஸியக் குறிப்புகளான மாஸிர்-இ-ஆலம்கிரி போன்ற FACT கண்காட்சியின் காட்சிப்பொருட்களின் குறிப்புகளே ஆகும்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள் அனைத்தும் வட இந்தியக் கோயில்களாகவே இருப்பதால், தென்னிந்தியக்கோயில்கள் எந்தச் சேதமும் ஆகாமல் தப்பி விட்டதாக நினைக்கவேண்டாம். ஒளரங்கசீப்பின் காலத்திற்கு முன்னரே 1300-களில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியக் கோயில்கள் அனைத்தையும் சூறையாடியிருக்கிறார். பிரபலமான ஸ்ரீரங்கம் கோயிலின் நகைகளைச் சூறையாடிக் கொண்டு, தங்கத்திலான உற்சவர் சிலையையும் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார் மாலிக் காபூர். அந்தத் தங்க விக்ரகத்தின் அழகில் மயங்கிய அவருடைய மகள் அந்த விக்ரகத்தின் மேல் காதல் வயப்பட்டு இரவு பகல் பாராமல் தன்னுடனே வைத்துச் சீராட்ட பயந்துபோன மாலிக் காபூர், அதை ஸ்ரீரங்கம் கோயிலுக்கே திருப்பித் தந்துவிட்டார். வேற்று மதக்கடவுள் விக்ரகத்தின் மேல் காதல் வயப்பட்டு, அதற்காக உயிரையே விட்ட ஒரு பெண்மணி தோன்றிய அதே மொகலாயப் பேரரசில்தான், விக்ரகங்களை மசூதிப் படிகளாகப் பயன்படுத்திய ஒளரங்கசீப்பும் தோன்றியிருக்கிறார். இந்துக் கோயில்களுக்கு நன்கொடைகள் கொடுத்துப் பராமரித்த தாராவின் தம்பிதான் அதே கோயில்களை இடித்துத் தள்ளியிருக்கிறார். அங்கே மாடுகளை வெட்டச் சொல்லியிருக்கிறார்.

கோயில் என்பது ஒரு மத அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு வரலாற்றுப் பெட்டகம். எளிதாக அழிந்து விடக்கூடியப் பல்வேறு கட்டுமானங்களைத் தவிர்த்து, மத அடிப்படையில் நீடித்து நிற்கக்கூடிய கோயில்களில்தான் ஏராளமான கல்வெட்டுகள் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன. அக்கல்வெட்டுகளும், சிற்ப வேலைப்பாடுகளும், சுவரோவியங்களும், கட்டட நுணுக்கங்களும் ஒரு சமுதாயத்தின் வரலாற்றையும், அரசியல், கலை, பண்பாடு ஆகியவற்றில் அந்த சமுதாயம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைச் சுட்டும் காரணிகள். சமீபத்தில் தாராசுரம் கோயிலுக்கு நான் சென்றிருந்த போது, அக்கோயிலின் முதல் தளத்தின் சீரமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. அச்சீரமைப்பு வேலையை அருகிலிருந்து எனக்குப் பார்க்கக் கிடைத்தது. அக்கோயிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒரு செங்கல் இப்போது நாம் உபயோகப்படுத்தும் செங்கலைப் போல நான்கு மடங்கு பெரியது. அப்படியென்றால் அந்தக்காலத்தின் சூளைகள் எவ்வளவு பெரியவையாக இருந்திருக்கும். செங்கல்களை எத்தனை நாட்கள் சூடுபடுத்தியிருப்பார்கள் – என்பதைப்பற்றியெல்லாம் நானும் கோயில் அதிகாரியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இது நான் கூறிய ‘சமுதாயப் பார்வை’ என்பதற்கான ஒரு மிகச்சிறிய, சாதாரண உதாரணம் அவ்வளவே!

Figure 1 Tharasuram Temple

ஏதோ கடந்த நூற்றாண்டுகளில்தான் என்றில்லை, மதவெறி தலைக்கேறி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளை தாலிபான் தீவிரவாதிகள் இடித்துத் தள்ளிய கொடுமை சில வருடங்களுக்கு முன்பு நடந்ததுதானே! பேரா.V.S.பட்நாகர் கட்டுரையின் இறுதிப் பத்தி ஒளரங்கசீப்புக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் சில நாடுகளுக்கும், சில மத அமைப்புகளுக்கும் பொருந்தும். “ஒரு அரசாங்கத்தின் முக்கியமான தூண்கள், பொதுமக்களின் அன்பும், ஆதரவுமேயன்றி, ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் ஏதோ ஒரு வேற்று நாட்டில் எழுதப்பட்ட மதக்கோட்பாடுகள் இல்லை என்ற விஷயத்தை இறுதிவரை ஒளரங்கசீப் புரிந்துகொள்ளவேயில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஒளரங்கசீப்பின் சாவு இந்திய வரலாற்றின் ஒரு இதிகாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அவர் ஒரு சிதைந்து கொண்டிருந்த பேரரசை, ஊழல் மிகுந்த, திறமையில்லாத நிர்வாகத்தை, மனம் தளர்ந்து போயிருந்த ராணுவத்தை, மக்களிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்ட ஒரு அரசாங்கத்தைத் தனக்குப் பின்னே விட்டுச் சென்றிருந்தார்.”

****
மத உணர்வுகளை முன்னிறுத்தி வரலாற்றுச் சின்னங்களை அழித்தது ஒருபுறம் இருக்க, அரசியல் கொள்கை ரீதியாக வரலாற்றுச் சின்னங்களை அழித்தக் கொடுமையும் இருக்கிறது.

1966 முதல் 69 வரை சீனாவில் அதன் கம்யூனிஸ அதிபர் மா சே-துங் (Mao Tse-tung) நடத்திய “கலாச்சாரப் புரட்சி” (Cultural Revolution) – யில்தான் அப்படிப்பட்ட அழிப்புகள் நடந்தேறின. ஒளரங்கசீப்புக்குத் தன் மதத்தலைவர்களைச் சரிகட்டித் தன்னை ஒரு அரசனாக அழுத்தமாக நிலைநாட்ட இந்துமத எதிர்ப்பு எப்படி ஒரு உடனடித்தீர்வாக இருந்ததோ, அதே போல் மாவோவுக்குத் தன் கட்சிக்குள்ளே சரிந்து வந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்த உதவியது இந்த கலாச்சாரப் புரட்சி.

இப்புரட்சியில் மாணவர்கள் தூண்டிவிடப்பட்டு எண்ணற்ற ஆசிரியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்புரட்சியில் பலியானவர்களின் அதிகாரபூர்வப் பட்டியல் இன்றுவரை வெளியிடப்படவில்லை. யூகின் வாங் (Youqin Wang) என்ற சீனர் இப்புரட்சியை நேரில் பார்த்தவர்களைப் பேட்டி கண்டு இறந்தவர்கள் பட்டியல் தயாரித்து வலைத்தளம் அமைத்திருக்கிறார். (அந்த வலைத்தளம் சீனாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.) இப்புரட்சியில் ‘நான்கு பழமைகள்’ – Four olds என்று வகைப்படுத்தப்பட்ட “பழைய கருத்துக்கள், பழைய கலாச்சாரம், பழைய வழிமுறைகள், பழைய பழக்கங்கள்” (“Old ideas, old culture, old customs, old habits”) ஆகியவற்றை அழிப்பதை ஒரு பேரியக்கம் போல் நடத்தினார்கள்.

மாவோவின் “சிகப்புப் படை” ஷாங்காய், டியெந்த்ஸின் (Tientsin), சைநிங் (Sining), லாசா (Lhasa) என்று சீனாவின் அத்தனை பகுதிகளிலும் இருந்த பல்வேறு அரண்மனைகள், ஆலயங்கள், கலையரங்குகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், இன்னபிற பழமையான கட்டடங்கள் அத்தனையையும் இடித்துத் தள்ளினார்கள். இந்த இடங்களிலெல்லாம் இருந்த கலைப்பொருட்களையும் விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கினார்கள். அதில் சில கட்டடங்களும், கலைப்பொருட்களும் இரண்டாயிரம் வருடப் பழமை வாய்ந்தவை. கடைகள், கல்வி நிறுவனங்கள், தெருக்கள் ஆகியவற்றின் புராதனப் பெயர்கள் நீக்கப்பட்டு, மாவோ தொடர்பான பெயர்களோ அல்லது கம்யூனிஸம் தொடர்பான பெயர்களோ சூட்டப்பட்டன.

ஒரு புறம் – எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத ஏழாம் நூற்றாண்டு விதிகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் பழமைவாதம், இன்னொரு புறம் – பழமை என்று எந்த விஷய்த்தையும் அழித்துத்தள்ளிய பைத்தியக்காரத்தனமான புதுமைவாதம். ஆனால் இரண்டு ‘வாதங்களும்’ வரலாற்றுச் சின்னங்களை மண்ணோடு மண்ணாக்கின.

இப்படிப் ‘புதுமைகள்’ செய்த கம்யூனிஸ அரசாங்கம் கலைப்பொருட்களின் கண்காட்சிக்கெல்லாம் அனுமதி கொடுத்ததே கிடையாது. அதிலும் சீனாவின் கலைப்பொருட்களும், கலாச்சார விஷயங்களும் சீனாவைத் தாண்டிப் பிற நாட்டு மக்கள் பார்த்ததே கிடையாது. வரலாற்று ஆர்வலர்களான ஜெஸ்ஸிகா ராஸன் (Jessica Rawson), ஈவிலின் ராஸ்கி (Evelyin Rawski) போன்றோர் சீன கலை, வரலாறு குறித்து ஆய்வு செய்வதற்கு சீன நாட்டுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களையும், புலம் பெயர்ந்த சீனர்களையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஏன், சீன மக்களே பெரும்பாலான சீனக் கலைப்பொருட்களைப் பார்த்தது கிடையாது. ஆனால் இப்போது சீனப் பொருளாதாரம் உலகமயமாக்கலைச் சார்ந்து நிற்பதால் தன் கலாச்சாரப் பழம்பெருமைகளைக் காட்டிப் பிற நாடுகளைக் கவரும் கட்டாயத்தில் இருக்கிறது சீனா.

நவம்பர் 2005 – இல் லண்டனில் “மூன்று பேரரசர்கள்” (Three Emperors) என்ற பெயரில் சீனக் கலைப்பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. அதில் சீனாவை ஒரு வலுவான நாடாகக் கட்டமைத்த மூன்று முக்கிய க்விங்(Qing) பேரரசர்கள் ஆட்சிக்காலத்திய (1622 – 1795) கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த க்விங் அரச பரம்பரை 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை சீனாவை ஆட்சி செய்து வந்தது.

க்விங் பேரரசர்கள் காலத்தில் சீனாவில் கலைநுட்பங்கள், கைத்தொழில்கள் சிறப்பாக வளர்ந்தன. அரசர் அணிந்திருந்த உடைகள், கண்கவர் பீங்கான் ஜாடிகள், மரகதக்கல் சிற்பங்கள் ஆகியவை “மூன்று பேரரசர்கள்” கண்காட்சியில் மக்களின் சிறப்புக் கவனத்தைப் பெற்றன. இலக்கியம் என்று வந்தபோது க்விங் மன்னர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தார்கள். கவிதைகள் ‘சரியான’ விஷயத்தை மட்டுமே சொல்ல வேண்டும். அரசுக்கெதிராக ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறது, என்று சந்தேகம் வந்தால்கூட போதும், அந்தக் கவிஞர் மட்டுமல்ல, அவர் அப்பா, தாத்தா, சகோதரர்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் என அவர் பரம்பரையிலிருக்கும் அத்தனை ஆண் மக்களும் கொல்லப்படுவார்கள். ஒருமுறை பேரரசர் யாங்செங் (Yongzheng) க்யூ டாஜுன் (Qu Dajun) என்ற கவிஞர் எழுதிய கவிதை தனக்குப் பிடிக்கவில்லை என்று அவரைக் கொல்ல உத்தரவிட்டார். ஆனால் ஒரு பிரச்சினை. அந்தக் கவிஞர் ஏற்கனவே இறந்து விட்டிருந்தார். ஆனாலும் அந்தக் கவிஞரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அந்த உடலுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்தக் கவிஞரின் படைப்புகள் தடை செய்யப்பட்டன.

தனக்குப் பிடிக்காத கவிஞரின் படைப்புகளைத் தடை செய்த க்விங் அரசர்களின் வெறுப்புணர்வுகளுக்கும், கலாச்சாரப் புரட்சியில் பலியானவர்கள் பட்டியலைத் தடை செய்யும் கம்யூனிஸ அரசாங்கத்தின் உண்மை மீதான வெறுப்புணர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

கலாச்சாரப் புரட்சியில் அத்தனை பழம்பொருட்களும் போகி கொளுத்தப்பட்ட பின்னும் கண்காட்சி நடத்துமளவுக்கு வரலாற்றுப் பொருட்கள் அழியாமல் காப்பாற்றப்பட்டதே ஒரு தனிக்கதை. இப்பொருட்கள் பீஜிங்கிலுள்ள (Beijing) “தடை செய்யப்பட்ட நகரம்” (Forbidden City) என்றழைக்கப்படும் அரண்மனை அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவை. புரட்சியின்போது சிவப்புப் படை இந்த அருங்காட்சியகத்தை அழிப்பதற்காக நுழைந்தது. பல லட்சக்கணக்கான கலைப் பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகத்தைக் காப்பாற்ற நினைத்த மாவோவின் தளபதி சூ என்-லாய் (Chi En-Lai) அருங்காட்சியகத்தின் சுவர்களில் பெரிய பெரிய மாவோவின் போஸ்டர்களை ஒட்டி வைத்தார். மாவோவின் முகத்தைக் கிழிக்க எந்த வீரனுக்கு தைரியம் வரும்? அருங்காட்சியகமும், அதன் கலைப்பொருட்களும் அழியாமல் தப்பித்தன!

****
இப்போதெல்லாம் கலைப்பொருட்களை கம்யூனிச அரசாங்கமே ஆனாலும் சரி, ஜாக்கிரதையாகக் கீறல் கூட விழாமல் பொத்திப் பாதுகாக்கிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து இப்பொருட்களை வாங்கிக்கொள்ள செல்வந்தர்கள் இருக்கிறார்கள். இப்படி கலைப்பொருட்கள் வாங்குவதற்குக் கலையார்வம் ஒரு காரணமாக இருந்தாலும் தங்கள் அந்தஸ்தைக் காட்டிக்கொள்ளும் காரணத்துக்காகவும் இப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிக் குவிக்கிறார்கள். எத்தனை ஐம்பொன் சிலைகள், விரித்த சடையுடன் ஒற்றைக்காலைத் தூக்கி நடனம் புரியும் நடராஜர் சிலைகள் தமிழகக் கோயில்களிலிருந்து காணாமல் போயிருக்கும்! தமிழ்நாடு என்றில்லை, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூட தேவாலயங்களின் கலைப்பொருட்கள் திருடப்பட்டு விற்கப்படுகின்றன. நீண்டநாட்களாகப் ப்ரான்ஸில் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்த ஒரு திருடன் கைது செய்யப்பட்டான். விசாரித்ததில் அவன் 174 (!) தேவாலயங்களில் கொள்ளையடித்திருப்பதாகவும் அவனுடைய கொள்ளுத்தாத்தா நெப்போலியன் படைத்தளபதியாக இருந்திருக்கிறார் என்றும் தெரியவந்தது. வரலாற்றுச் சின்னங்களை எதுவும் செய்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு தன் வீரர்களைக் கேட்டுக்கொண்ட நெப்போலியனுக்குத் தெரிந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்.

****
கிராமப் புறங்களில் ‘சுமைதாங்கிக்கல்’ என்ற ஒரு விஷயத்தைப் பார்த்திருப்பீர்கள். கர்ப்பிணியாக இறந்து போகும் பெண்ணின் நினைவாக அதை நட்டு வைப்பார்கள். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் தங்கள் சுமைகளை அந்த சுமைதாங்கிக்கல்லில் இறக்கி வைத்து இளைப்பாறிவிட்டுப் போவார்கள். அப்படி இளைப்பாறுபவர்கள் வாழ்த்துவதால் இறந்து போன அந்தப்பெண்ணின் ஆன்மா சாந்தியடையும் என்பது அதன் தாத்பர்யம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த அந்த இரண்டு வரிகள் என் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமத்திலிருந்த ஒரு சுமைதாங்கிக்கல்லில் எழுதப்பட்டிருந்த வரிகள்தான். சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது அந்த சுமைதாங்கிக்கல்லைக் காணவில்லை. அந்த கிராமத்தில் கலாச்சாரப் புரட்சியின் புதுமைவாதமோ, மதப் பழமைவாதமோ கிடையாது. சமூகப் பண்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பான இதுபோன்ற சுமைதாங்கிக்கற்களுக்கு வரும் காலங்களில் கிடைக்கப்போகும் வரலாற்று மதிப்பைத் தெரிந்து கொண்டு யாரேனும் எடுத்துச் சென்று விட்டார்களோ என்னவோ?

-sethupathi.arunachalam@gmail.com

பின்குறிப்புகள்:

1) ‘தொடரும் தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பு’ – Foundation Against Continuing Terrorism – FACT என்னும் அமைப்பு 16-பிப்ரவரியிலிருந்து 20 பிப்ரவரி 2007 வரை டில்லியில் நடத்தும் ‘மொகலாயக் குறிப்புகளின் படி – ஒளரங்கசீப்’ (Aurangzeb – as he was according to Mughal Records) கண்காட்சி பற்றிய மேல் விவரங்கள்:
Place: Habitat Centre. Palm Court
Date:16th to 20th February 2007
Time: 9 Am to 8 Pm

For any information, contact:
Franவூois Gautier
41 Jorbagh, New Delhi 110003
Tel: 24649635 / 9811118828

2) பேரா.V.S.பட்நாகர் கட்டுரையின் மூலம்:
http://www.agni.nl/cms/download.php?id=89366,425,1

3) யூகின் வாங் (Youqin Wang) ன் – ‘கலாச்சாரப் புரட்சியில்’ இறந்தவர்களைக் குறித்த இணையதளம்: http://www.chinese-memorial.org/


sethupathi.arunachalam@gmail.com

Series Navigation

சேதுபதி அருணாசலம்

சேதுபதி அருணாசலம்