அரபு தேசிய வாதம்

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அரபு உலகம் தன்னகத்தே இருபத்திரெண்டிற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்டு இயங்குகிறது. மேற்கில் மெளரிடேனியாவில் துவங்கி கிழக்கில் ஓமன் வரையிலும் நீண்டு கிடக்கிறது.
அரபு உலகத்தின் அரேபியாவை உள்ளடக்கிய ஆசியப்பகுதி மஷ்ரக் (Mashreq) என அழைக்கப்படுகிறது. எகிப்து மற்றும் சூடானை தவிர்த்த வடஆபிரிக்க பகுதி – மக்ரப் (Maghreb) என்று சொல்லப்படுகிறது.
அரபு உலகின் முக்கிய மத்தியகிழக்கு நாடுகளாக எகிப்து, இரான், இராக், இஸ்ரேல், பாலஸ்தீன், சிரியா, துருக்கி, ஜோர்டான், பெகரின், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதிஅரேபியா ஐக்கிய அரபு குடியரசு, ஏமென் ஆகியவை விளங்குகின்றன.
வடஆபிரிக்காவின் அல்ஜீரியா, லிபியா, மொரோக்கோ, துனீஷியா, சூடான், சோமாலியா, எத்தோபியா, கென்யா, நமீபியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளும் இந்த வரிசையில் இடம்பெறுகின்றன.
உலகின் மிகப்பெரிய முதல் பத்து பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி நாடுகளாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, குவைத், ஈராக், கத்தார் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அரபுதேச அரசியலிலும் அரசுகள் உருவாக்கத்திலும் எண்ணெய் அரசியல் பிரதான பங்கினை வகிக்கிறது.
பெரும்பான்மையாக அரபு உலக மக்கள் இஸ்லாம் சமயத்தை பின்பற்றுகிறார்கள். பல நாடுகளிலும் இஸ்லாமே அரசு சமயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷரீஅத் சட்டங்கள் சில நாடுகளின் பகுதி சட்டவியல் அமைப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன. பிற சில நாடுகளின் அரசு மதசார்பற்ற தன்மை கொண்டதாகவும் செயல்படுகிறது.

அரபு உலகின் அரபு அல்லாத மக்கள்

அரபு உலகத்தை ஒன்றுபடுத்தும் ஒரு சக்தியாக அரபு மொழி அமைகிறது. இது தரப்படுத்தப்பட்ட பழமை மொழியை மட்டுமல்ல விரிந்து பரந்து கிடக்கும் பிரதேசத் தன்மையை உள்வாங்கிய வட்டார மொழி வழக்குகளாகவும் உள்ளன. இந்த பின்னணி சார்ந்த இஸ்லாமிய உலகம் அரபு மொழியில் தங்களது கலாச்சார பாரம்பரியத்தையும், சமயத்தின் நம்பிக்கைகளையும், வழிபாட்டையும், இறையியல் அறிவுப் பகுதியையும் உட்செரித்து வைத்துள்ளன. வடஆபிரிக்காவில் அராபிய இனத்தை முன்னோர்களாகக் கொள்ளாத கறுப்பு ஆப்பிரிக்கர்கள், பெர்பர்கள் (Berbers) அரபு தவிர்த்து தங்கள் தாய்மொழியிலேயே உரையாடிக் கொள்கின்றனர். இந்த மக்கள் இப்பிரதேச மண்ணின் சொந்தக்காரர்களாகவும் பூர்வகுடி மக்களாகவும், அரபுகளின் குடியேற்றத்திற்கும் இஸ்லாத்தின் வருகைக்கு முன்பேயும் இங்கு வாழ்பவர்களாகவும் உள்ளனர்.
ஈராக்கின் வடக்குப் பகுதிகளில் பதினைந்து முதல் இருபது சதவிகிதமும், சிரியாவில் ஐந்து முதல் பத்து சதவிகிதமும் மலையக மக்கள் குர்துகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் மொழி குர்திஷ் ஆகும். இம்மொழி பாரசீக மொழியோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. ஆனால் அரபியோடு தொடர்பு இல்லை. சுயஆட்சி, தேசிய விருப்ப அடிப்படையில் குர்து இனமக்கள் உருவாக்க நினைக்கும் ஒரு நாடு குர்திஸ்தான் என்பதாகும். இதன்விளைவாக ஆளும் முஸ்லிம் அரசுக்கும் குர்திஷ் சிறுபான்மையினருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குர்திஷ் சிறுபான்மையினர் அரபு அல்லாத இரானில் ஐந்து முதல் பத்து சதவிகிதமும் துருக்கியில் இருபது சதவிகிதமும் வாழ்கின்றனர்.
அரபு அல்லாத மக்களின் விஷயத்தில் ஈராக்கின் துர்க்மேன் அசிரியன்கள் மற்றும் யூதர்களும் உள்ளடங்கும். இதில் 1948ல் யூதர்களுக்கான நாடு இஸ்ரேல் உருவாக்கப்பட்டவுடன் பெரும்பான்மை யூதர்களும் அங்கேயே தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அரபு யூதர்கள் அன்றாட வாழ்வில் ஹீப்ரு மொழியையே பேசுகின்றனர்.
அரபு லீகு அரசியல் இயக்கம் அரபு உலக சிந்தனை குறித்த ஒரு வரையறைக் கூறுகிறது. அரபு ஒரு மனிதனின் மொழி, அரபு பேசும் நாட்டில் வாழ்தல், அரபு மொழி பேசும் மக்களின் மீது பரிவும் அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுதலுமே அரபு சிந்தனையாக கருதப்படுகிறது. அரபு லீகு இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் அரபு மக்களை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்துதல் ஆகும். அரபு லீக் நாடுகள் காலனி ஆதிக்கத்தின் உற்பத்தி நாடுகளாகவே காணலாம். அதன் எல்லைகள் வேறுவித இனக் குழுக்களையும் அல்லது புவியியல் எல்லைகளையும் கொண்டிருக்கின்றன. பல அரபு நாடுகளின் எல்லைப் பகுதி அரபு இனம் இல்லாத சிறுபான்மை இன மக்களைக் கொண்டே உள்ளது. இதுவே ஈராக்கிற்கு உள்ளே எல்லைகளில் வாழும் ஈரானியர்களும் சூடானின் கறுப்பு ஆப்பிரிக்க மக்களையும் இவ்வகையில் குறிப்பிடலாம்.
மன்னர்கள், அமீர்கள் அல்லது ஷேக்குகள் பகுதி தன்னாட்சி கொண்ட ஆட்சியாளர்கள் இந்த புதிதாக உருவாக்கப்பட்ட நாடுகளை ஆள்வதற்கு காலனிய ஆட்சியாளர்களாலேயே தேர்வு செய்யப்பட்டனர். காலனிய ஆட்சியாளர்களுக்கான பணிகளை செய்வதற்கு ஏற்ப இந்த எல்லைகளில் மாற்றங்களையும் செய்துள்ளனர்.
இந்நிலையில் அறுபதுகள் வரை பல ஆப்பிரிக்க நாடுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்து விடுதலை பெறவில்லை. இதற்கான விடுதலைப் போராட்டங்களின் விளைவாக காலனிய அரசுகள் விடுதலையை உருவாக்கின. இத்தகையதான சில நாடுகளின் எல்லைகள் அந்நாடுகளில் செயல்பட்ட ஆட்சியாளர்களிடம் விவாதிக்காமலேயே பிரிட்டீஷ் அல்லது பிரெஞ்சு காலனியவாத நலன்களின் அடிப்படையிலேயே உருவாக்கினார். குறிப்பாக ஷெரீப் ஹ¤சைன் இபின் அலியை தள்ளிவைத்துவிட்டு பிரிட்டனும் பிரான்சும் கையெழுத்திட்ட ஸ்கைஸ் – பைகாட் ஒப்பந்தம் (Sykes – Picot Agreement) மற்றும் பல்போர் பிரகடனத்தை (Balfour Declaration) கூறலாம்.
அரபு உலகின் அரசியல் எல்லைகள் கட்டமைக்கப்படுகையில் அரபு சிறுபான்மையினர் நாடற்றவர்களாக அரபு அல்லாத நாடுகளில் ஷாகல், ஹான், துருக்கி, ஈரானில் ஆக்கப்பட்டுள்ளனர். இதுபோன்றே அரபு அல்லாத சிறுபான்மையினர் அரபு நாடுகளிலும் இப்பிரச்சி¨யை எதிர்கொள்கின்றனர்.

அகண்ட அரபுவாதம் மத்திய கிழக்கு அரபு மக்களையும், தேசங்களையும் ஒன்றிணைக்கும் கோட்பாடாகும். அரபு தேசியவாதத்தோடும் கலாச்சார தேசியவாதத்தின் வடிவமாகவும் விளங்கும் இது அடிப்படையிலே மதசார்பற்ற தன்மையையும் சோசலிச கூறையும் மேற்கத்திய அரசியல் தொடர்புடைய காலனி ஆதிக்க எதிர்ப்பையும் உள்ளடக்கி உள்ளது. இது அனைத்து அரபு மொழிபேசும் மக்களையும் அரசியல் அடையாளத்தோடு ஒன்று திரட்டியது. ஒன்றுபட்ட ஒரு அரபு தேசத்தை உருவாக்க முனைந்தது.

அரபு தேசியவாதம் அரபு உலகின் பொதுவான தேசிய சித்தாந்தத்தையும் கலாச்சார தேசியவாதத்தையும் கொண்டதுமாகும்.
வரலாறு, கலாச்சாரம், மொழி அடிப்படையில் அரபு மொழி பேசுபவர்களை ஒன்றிணைப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
அரபுகளின் தனித்தன்மை சார்ந்த சுதந்திரம் என்பது மேற்கத்திய கொள்கைகளின் தாக்கத்தை முற்றிலுமாக அல்லது பெருமளவிலாவது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அகற்றுவது ஆகும்.
மேற்கு நாடுகளின் உதவியோடு ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் அரபுலக நாடுகளின் ஆட்சியை கலைப்பதும், அந்தந்த நாட்டு மக்களின் விருப்புறுதியின் அடிப்படையில் ஆட்சியமைப்பதும் இதன் உள்ளார்ந்த செயல் திட்டமாகும்.

அரபு தேசியவாத உருவாக்கம்
முதல் உலகப்போருக்கு அரபு தேசிய சிந்தனைகளின் அரசியல் நோக்கு மிதமானதாகவே இருந்தது. அரபு தேசியவாத கோரிக்கைகள் சீர்திருத்தவாத தன்மை, துருக்கி பேரரசின் ஆளுகை எல்லைக்கு உட்பட்டதாகவும், கல்வியில் அரபுமொழியை அதிகமாக பயன்படுத்துதல், ஏகாதிபத்திய ராணுவத்திற்கு சமாதான காலங்களில் உள்நாட்டு சேவையாற்றுவதும், நோக்கங்களாயின. அரசாட்சியில் 1908 புரட்சியின் தீவிரத்தை ஒட்டி துருக்கியமாதல் திட்டம், இளந்துருக்கியர்களின் இயக்கம் விரைவுப்படுத்தப்பட்டது. அரபு தேசிய வாதம் சிரியாவில் அப்போது கூட விரிவடைந்த ஒரு மக்கள் இயக்கமாக உருவாகவில்லை. பெரும்பான்மையான அரபுகள் தங்களது முதன்மையான விசுவாசத்தை தாங்கள் சார்ந்த மதத்திற்காகோ, இனத்திற்கோ குழுவிற்கோ அல்லது குறிப்பிட்ட அரசாங்கத்திற்கோ தான் அளித்தார்கள். அரபுதேசிய வாதம் அகண்ட இஸ்லாம் சித்தாந்தத்தோடும் போராட வேண்டியிருந்தது.
1913-ல் அரபு சிந்தனையாளர்கள் மற்றும் சில அரசியலாளர்கள் பாரிஸில் கூடி முதல் அரபு காங்கிரஸ் அமைத்தனர். துருக்கிய பேரரசிடம் அவர்கள் அதிக தன்னுரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். போர்க்காலம், தவிர்த்து துருக்கிய ராணுவத்தின் உதவியை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தனர்.
துருக்கி பேரரசின் ஏதேச்சதிகார ஆட்சியின் முடிவுக்கு இத்தகைய எழுச்சி பெற்ற தேசிய உணர்வுகள் ஒரு காரணமாக இருந்தது. டமாஸ்கஸ், பெய்ரூட்டில் செயல்பட்ட ரகசிய சங்கங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. 1915-16களில் ஜமால் பாஷாவால் தேசபக்த சிந்தனையாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். துருக்கியில் எதிர்ப்புணர்வு வலுப்பட்டது.
பிரிட்டிஷார் மக்காவின் ஆட்சியாளர் மூலம் அரபு புரட்சியை முதல் உலகப்போரின்போது ஏற்படுத்தினர். துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசு அரபு தேசியவாத சிந்தனைக்கு காரணமாகவும், சித்தாந்தமாகவும் வழிகாட்டியது. துருக்கி பேரரசுக்கு எதிரான போராட்ட கருவியாகவும் இக்கொள்கை அமைந்தது. எனினும் பிரிட்டிஷ் பிரான்ஸ் ரகசிய ஸ்கைஸ் பைகாட் ஒப்பந்தப்படி கிழக்கு அரபு நாடுகளை இரு ஏகாதிபத்திய வல்லரசுகளும் பங்குபோட்டு பிரித்துக் கொண்டன.
அரபு நாடுகள் பிரிட்டிஷ், பிரான்ஸ் காலனி ஆதிக்க நாடுகளாக இருந்தன. அரபு தேசியவாதம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காலனீய எதிர்ப்பு இயக்கமாக உருவானது.
இக்காலகட்டத்தில் கம்யூனிசமும் ஒரு முக்கிய சித்தாந்த சக்தியாக எழுந்தது. முதலில் ஈராக்கிலும், பின்னர் சிரியாவிலும், எகிப்தின் பல பகுதிகளிலும் இதன் விரிவாக்கம் நிகழ்ந்தது. அரபு தேசியவாதத்தின் முதன்மை கோரிக்கைளுக்கு அரபு கம்யூனிசம் விரைவான போட்டி சிந்தனையாக முடியவில்லை.
அரபு தேசியவாதிகள் அரசியல் அடையாள உருவாக்கத்தில் மதத்தை மறுத்தார்கள். அரபு இன அடையாளத்தை முன்வைத்தார்கள். எனினும் அதிகப்படியான அரபுகள் முஸ்லிம்களாகவே இருந்ததால் புது அரபு இன தேசிய அடையாள உருவாக்கத்தில் இவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது.
அரபுகள் தங்களது மகிழ்ச்சி உலகை இஸ்லாத்தின் விரிவாக்கத்தோடு இணைத்து கண்டார்கள். சர்வதேசத்திற்குமான செய்தியை இஸ்லாம் வழங்கியது. மதசார்பற்ற அறிவு ஜீவிகள் – அரபு மக்களின் சார்பாளர்களாக இதை வெளிப்படுத்தினர்.
அரபுகளுக்கு இஸ்லாம் கடந்த காலத்தின் ஒளிமயமான வெளிச்சமாக இருந்தது. அரபுகள் நிரந்தர உண்மை அடையாளத்தை இஸ்லாமாக கண்டனர். இதை மறுஉயிர்ப்பு கொடுக்கும் வார்த்தையாகவே பாத் கட்சி மத்திய கிழக்கு பகுதி முழுவதும், தேசியவாத மண்டலங்களிலும் முதல் உலகப்போருக்கு பின், சிரியா லெபனான், மற்றும் ஈராக்கிய பகுதியிலும் ஒருங்கிணைந்து அரபு தேசியவாதம் பின்னணியோடு செயல்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் வலுவான அரசியல் கொள்கையாக உருவெடுத்த அரபுதேசியவாதம் எகிப்து, சிரியா, ஈராக், அல்ஜீரியா, லிபியா நாடுகளிலேயே முதன்மையாக செயல்பட்டன. எகிப்தில் நாஸரின் ஆட்சிக்கு பிறகு வெளிப்பட்ட இந்த கொள்கைப்போக்கு அன்வர்சாதத் அதிபராக பொறுப்பேற்றதற்கு பின் பலவீனப்பட்டது. இதற்கு எகிப்திய இன மையதேசியவாதமே அடிப்படையான காரணமாகும்.
அரபுதேசியவாதத் தலைவர்களாக எகிப்தின் கமால் அப்துல் நாஸர், முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹ¤சைன், சிரியாவின் பஷர்அல்அசாத், அல்ஜீரியாவின் அகமது பென் பெல்லா, லிபியாவின் முஅம்மர் அல்கடாபி, மொரோக்கவின் மெஹ்தி பென்பர்கா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
பலஅரபு நாடுகளும் தங்களுக்குள் நெருங்கிய தொடர்பினை வைத்துக் கொண்டபோதும் தேசிய அடையாளங்கள், அரசியல் யதார்த்தங்களால், ஒரு அரேபிய தேசிய அரசை உருவாக்குவதின் சாத்தியப்பாட்டை குறைத்து விட்டது. இஸ்லாத்தின் புத்துயிர்ப்பு, ஒரே இஸ்லாமிய அரசுக்கான அமைப்பு, முஸ்லிம் கலிபாக்களின் வளர்ச்சி அனைத்தும் அரபு தேசியவாதத்தை பின்னுக்கு தள்ளியது. இஸ்லாமியம் அரபுதேசம் கருத்தாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் அது அரபுகள் மத்தியில் அரசியல் அதிர்வை உருவாக்கியது. அரபு தேசியவாதிகள் இஸ்லாமிய ஜனநாயக கட்சிகளை ஒடுக்கியது அவர்களின் அரசியல் உயிர்ப்பிற்கு வழிஅமைத்திருக்கிறது.

நாஸரிசம்

எகிப்திய முன்னாள் அதிபர் கமால் அப்துல் நாஸரின் அரபு தேசிய அரசியல் சித்தாந்தமே நாஸரிசமாக சொல்லப்படுகிறது.
அகண்ட அரபு அரசியலில் இது மிக முக்கிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. 1952-ல் நடைபெற்ற இராணுவப்புரட்சி தொடர்ந்து இடம் பெற்ற நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள், மன்னராட்சி முறை ஒழிப்பு, ஆஸ்வான் உயர் அணை கட்டுமானம், சூயெஸ் கால்வாய் மீதான உரிமை, சோவியத்துடனான உறவு என பல வளர்ச்சி நிலைகளை எட்டியது. அறுபதுகளில் இது தேசிய இயக்கமாகவும் உருமாறியது. 1967ல் இஸ்ரேலுடன் நிகழ்த்திய ஆறுநாட்கள் போர் எகிப்தை பலவீனப்படுத்தியது.
நாஸரிச கோட்பாடு புரட்சிகர அரபு தேசிய மற்றும் அகண்ட அரபு சித்தாந்தத்தை, சோசலிசத்தோடு இணைத்துக் கொண்டது. கிழக்குலக மற்றும் மேற்குலக சோசலிச சித்தாந்தத்தை அரபு சோசலிசம் எனப் பெயரிட்டது. வளர்ந்து வரும் முஸ்லிம் தீவிர சிந்தனைக்கு மாற்றான மதசார்பற்ற சித்தாந்தத்தினை பேசியது. நவீனமயமாதல், தொழில்மயமாதல் சார்ந்து பழமைச் சமூகத்தை மாற்றியமைக்கப் போராடியது. காலனிய ஆதிக்கம், ஜியோனிசம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உருவாகின. இதுபோன்ற அணிசேரா நாடுகள் இயக்கத்தின் அரசியலில் எகிப்து அதிபர் நாஸரின் பங்கு மிக முக்கியமானதாகவும் இருந்தது.

நாஸரிச கோட்பாடு இன்றும் அரபு நாடுகள் சிலவற்றில் அரசியல் சக்தியாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்கட்சிகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் என சிறிய அளவில் மட்டுமே இதன் பங்கேற்பு இருக்கிறது.
இந்நாளில் நாஸரியர்கள் பெருவாரியாக ஜனநாயகத்தை ஆரத்தழுவியும், மதசார்பற்ற சித்தாந்த கொள்கையை முக்கியத்துவப்படுத்துகின்றனர். எகிப்து மக்களின் சிறிதளவு ஆதரவினை கொண்டவர்களாக மட்டுமே நாஸரியவாதிகள் இருக்கிறார்கள்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்