எல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி!

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

நரேந்திரன்


அமெரிக்காவின் Forbes Magazine (www.forbes.com) பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்கான அறிமுகம் யாதெனில், அப்பத்திரிகை மிகப் பெரும் அமெரிக்கச் செல்வந்தர்களில் ஒருவரான ஸ்டீவ் •போர்ப்ஸ் (Steve Forbes) என்பவரால் நடத்தப்பட்டு வருகிற, உலகெங்கிலும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைக் கொண்ட, விஸ்தாரமான வியாபார நுணுக்கங்களை, தகவல்களை உள்ளடக்கிய ஒரு புகழ் பெற்ற பத்திரிகை என்பதாம். ஸ்டீவ் •போர்ப்ஸ் 2000-ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, ஆரம்பச் சுற்றுகளிலேயே தோற்றுப் போனவர் என்பது ஒரு சிறிய உப தகவல்.

Forbes சஞ்சிகையானது வியாபாரத் தகவல்களுக்காக மட்டுமல்லாது இன்னொரு விஷயத்திற்கும் புகழ் வாய்ந்தது. அதாகப்பட்டது, ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் உள்ள பில்லியனர்களின் (கோடீஸ்வரர் என்பர் தமிழர்) தகவல்களைத் திரட்டி, அவர்களிடம் உள்ள பணத்தின் அளவைக் கணக்கிட்டு, வரிசைப்படுத்தி வெளியிடுவது. அத்தகைய பில்லியனர்களின் பண இருப்பு அமெரிக்க டாலர்களில் மதிப்பிடப்பட்டு, அதன்படி வரிசைப் படுத்தப்படுவார்கள். ஒரு பில்லியன் டாலர் = 1000 மில்லியன் டாலர்; ஒரு மில்லியன் டாலர் = பத்து இலட்சம் டாலர்கள் என்பதறிக.

2006-ஆம் ஆண்டிற்கான பில்லியனர்களின் வரிசையை சென்ற வாரம் வெளியிட்டது •போர்ப்ஸ். வழக்கம் போல பில் கேட்ஸ்தான் உலகின் மிகப்பெரிய பில்லியனர், மற்றவர்கள் எல்லாம் அவருக்குப் பின்னால்தான் என்பதெல்லாம் நமக்கு அநாவசியமானதொரு சமாச்சாரம். அதற்கும் மேலே, அமெரிக்கப் பணக்காரர்களைப் பற்றித் தெரிந்து நமக்கொன்றும் ஆகப் போவதில்லை. எனவே அதனைப் புறந்தள்ளுவோம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் இந்திய பில்லியனர்கள் பற்றி. அதிலும் குறிப்பாக இந்த வருடம் •போர்ப்ஸ் லிஸ்டில் புதிதாக இடம் பிடித்திருக்கும் ஒரு மல்ட்டி பில்லியனரைப் பற்றி. அவர் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த, சன் டி.வி.யின் அதிபரான கலாநிதி மாறன்தான் அந்த பில்லியனர். சொத்து மதிப்பு, $2 பில்லியன் டாலர்கள். ஒரு யு.எஸ் டாலரின் மதிப்பு தோராயமாக நாற்பத்தைந்து ரூபாய்கள். நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரைப் பற்றி மேலும் ஆராய்வதற்கு முன்னால், மற்ற இந்திய பில்லியனர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

சென்ற ஆண்டில் இந்தியாவில் நாற்பது மிகப் பெரும் பில்லியனர்களின் சொத்து மதிப்பு $106 பில்லியன் டாலர்களில் இருந்து $170 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதிலும் முதல் பத்து பணக்காரர்கள் மட்டுமே ஏறக்குறைய $112 பில்லியன் டாலர்கள் வைத்திருக்கிறார்கள். பஞ்சாபில் ஒருவர், புது தில்லியில் ஒன்பது, மும்பையில் பதினாறு, புனேயி மூன்று, பெங்ளூரில் எழுபேர், சென்னையில் ஒரே ஒருவர், கலாநிதி மாறன், பில்லியனர்களாக இருக்கிறார்கள். மிட்டல் ஸ்டீல் தலைவரான லஷ்மி மிட்டல், விப்ரோவின் ஆஸிம் ப்ரேம்ஜி மற்றும் அம்பானி சகோதரர்கள் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு,

http://www.forbes.com/business/2006/11/16/richest-indians-billionaires-biz_06india_cz_nk_1116richindiansintro.html

இப்போது கலாநிதி மாறன் விஷயத்திற்கு வருவோம். ஒரு தமிழர் பில்லியனர் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பது பெருமையா இல்லையா என்பதனை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.ஆனால் அவ்வளவு செல்வத்தை எப்படி அவரால் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முடிந்தது என்பதுதான் என் கேள்வி. Unethical Business Practices என்று சொல்லப்படுகின்ற சாம, தான, பேத, தண்ட ஆயுதங்களைத் தயங்காமல் போட்டியாளர்களின் மீது பிரோயோகித்ததனால் அல்லவா? தன் தகப்பனாரும், பாட்டனாரும் பின்னனியில் தங்கள் அரசியல் செல்வாக்கினை உபயோகித்து அத்தனை தகிடு தத்தங்களையும் செய்ததினால் அல்லவா இந்த முன்னேற்றம்? மறுப்பாரா கலாநிதி மாறன்? இலவச தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தின் பின்னனிக் காரணங்கள் என்ன? ஜனங்களின் மீதான கரிசனமா? உண்மையான கரிசனம் உள்ளவர்கள் கிராமச் சாலைகளையும், நீராதாரங்களையும் அல்லவா சீர்படுத்துவார்கள்? அதை விட்டுவிட்டு இலவசமாக, வீணாக அரசாங்க வரிப்பணத்தைச் செலவிடுவதின் உண்மைக் காரணம் என்ன? இன்னொரு பில்லியன் சம்பாதிக்கும் ஆசை மட்டும்தானே? இதைத்தான் விஞ்ஞான பூர்வக் கொள்ளை என்பார்களோ?

விஞ்ஞான பூர்வ கொள்ளையில் ஒரு குறிப்பிட்ட திராவிடக் கட்சியின் தலைமையை மிஞ்ச ஒருவருமில்லை. கிராமங்களுக்கு சிமெண்ட் சாலை போடுவதாக திட்டம் அறிவிக்கப்படும். சிமெண்ட் சாலை போடத் தேவையான சிமெண்ட் ஒரு குறிப்பிட்ட ஆலையிலிருந்து பெருவாரியாக வாங்கப்படும். பின்னனியில் அந்தச் சிமெண்ட் ஆலையின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராக ஒரு முக்கியத் தலைவர் இருப்பார். அவ்வப்போது காரணமில்லாமல் சிமெண்ட் விலை ஏற்றப்படும். ஆக திட்டம் நிறைவேற, நிறைவேற கல்லாவும் நிரம்பி வழியும். யாரும் எதுவும் சொல்ல இயலாது. அதிக விலை கொடுத்து சிமெண்ட் வாங்கிய அப்பாவி பொதுஜனம், தன் விதியை நொந்தபடி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திரிவார்.

இன்னொரு திராவிடக் கட்சியின் தலைமைக்கு விஞ்ஞானம் கொஞ்சம் ‘வீக்’கான சப்ஜெக்ட். சமீபத்தில் கொஞ்சம் இம்ரூவ்மெண்ட் தெரிகிறது. மல்லையா போன்ற மதுபான வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டு “மிடாஸ் டச்” கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கல்லா நிரப்புவதற்கான ஒரு யுக்திதான். ‘குடி’மகனைச் சுரண்டும் யுக்தி.

இவையெல்லாம் சிறு உதாரணங்கள் மட்டுமே. அத்தனையும் எழுத இங்கு இடமில்லை.

*

அவ்வப்போது ஏதாவது சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லி நம்மை அதிர வைப்பதில் திரு. கருணாநிதி மிகவும் சமர்த்தர். “நானொரு கம்யூனிஸ்ட்” என்றார் ஒருநாள் திடீரென்று. என்னால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கம்யூனிசம் என்பது தமிழில் “பொதுவுடமை” என்று அறியப்படுகிற ஒன்று. பொதுவுடமையின் ஆதாரக் கொள்கை இருப்பதை எல்லாம் பகிர்ந்து கொள்வது. அப்படி என்றால் தன்னிடம் இருப்பதை எல்லாம் பொதுவில் பகிர்ந்து கொடுக்கப் போகிறா கருணாநிதி? அப்படி ஒன்றும் செய்யக் கூடியவர் அல்லவே அவர்! ஒருவேளை துட்டடிப்பதைக் குறைத்துக் கொள்வேன் என்று சூசகமாகத் தெரிவிக்கிறாரோ? தமிழ்நாட்டிற்கு உண்மையிலேயே நல்ல காலம் பிறந்து விட்டதோ? யோசித்துப் பார்த்து ஒன்றும் புரிபடாமல் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன்.

கருணாநிதிதான் வார்த்தைச் சித்தராயிற்றே! பின்னனி இல்லாமலா சொல்லியிருப்பார்? மிகச் சமீபத்தில்தான் புரிந்தது அதன் அர்த்தம். அதாவாது, திரு. கருணாநிதி சொல்லாமல் சொல்வது தானொரு வட கொரிய, கியூபா பாணிக் கம்யூனிஸ்ட் என்பது. எப்படி கிம்-இல்-சங்கிற்குப் பின்னால் அவரது மகன் கிம்-ஜோங்-இல் ஜனாதிபதியானாரோ, •பிடல் காஸ்ட்ரோவிற்குப் பின்னால் அவரது தம்பி ராவுல் காஸ்ட்ரோ கியூபா அதிபரானாரோ, அப்படியே தனக்குப் பின்னால் தன் மகனான ஸ்டாலின் “மட்டுமே” தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்! இதுதான் “தோழர்” திரு. கருணாநிதி தமிழர்களுக்கு உணர்த்திடும் சேதி! அதாகப்பட்டது, “கம்யூனிஸம் இஸ் எ •பேமிலி பிஸினஸ்”. வேறு யாருக்கும் அதில் இடமில்லை.

பெரும்பாலான கம்யூனிஸ்ட்கள் அல்லது தங்களை கம்யூனிஸ்ட்களாகச் சொல்லிக் கொள்பவர்கள் சந்தேகமில்லாமல் சுரண்டல் பேர்வழிகள், சுயநலமிகள் என்பதற்கு இன்னொரு ஆதாரம் இது.

•பிடல் காஸ்ட்ரோ சென்ற வருட Forbes millionaire லிஸ்ட்டில் இடம் பிடித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமோ?

பொதுவுடமை ஒரு பூப்பந்து
என்காதில் வந்து நீ சுற்று!

*

தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகள் மிகத் திறமையாக நடத்தப்படுகின்ற கிரிமினல் எண்டர்பிரைஸ்கள். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருக்காது. டாப்-டு-பாட்டம் அயோக்கியர்கள். வட்டார காவல்துறை அதிகாரியை விடவும் வட்டச் செயலாளருக்கு வலிமை அதிகம். அவர்களை எதிர்த்து எந்தவொரு நேர்மையான அதிகாரியும் பணி செய்ய இயலாது. மீறிச் செய்ய நினைப்பவர்கள் பந்தாடப்படுவார்கள் அல்லது பட்டப் பகலில், பலர் பார்க்க பரலோகம் அனுப்பி வைக்கப்படுவார்கள். இன்றைய நிதர்சனம் இது. இல்லாவிட்டால் மக்களின் வாழ்க்கை ஆதாரமான ஏரிகளும், குளங்களும், ஊருணிகளும், கண்மாய்களும் ஆளும் கட்சி அடிப்பொடிகளினால் ஆக்கிரமிக்கப்படும் போது, நியாய உணர்ச்சியுள்ள எந்தவொரு மனிதனும் எதிர்ப்பானே? அப்படி எந்த தமிழ்நாட்டு அரசாங்க அதிகாரியாவது செய்ய முடியுமா? அல்லது செய்யத்தான் விடுவார்களா? வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிப்பது முதற்கொண்டு அத்தனை அராஜகங்களையும் திராவிடக் கட்சிகளினால் வெற்றிகரமாகச் செய்ய முடிகிறது. சட்டம், நீதி, நேர்மையெல்லாம் உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான்.

இந்திய ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியவர்களில் மிக முக்கியமானவர் திரு. கருணாநிதி. ஜெயலலிதாவும் இதற்கு கிஞ்சித்தும் சளைத்தவரல்ல. இன்னும் சொல்லப்போனால், அதிகாரத்திலிருக்கும் திருவாளர் கருணாநிதி, ‘எதிரி’க் கட்சித் தலைவியான ஜெயலலிதாவை “புனித மேரி அன்னை” போலத் துலங்கச் செய்வதில் வல்லவர். அந்த அளவிற்கு ‘அடிவெட்டு அராஜக’த்தைக் கட்டவிழ்த்து விடுவார். வாழ்க ஜனநாயகம்!

இன்றைக்குத் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கும் மிகப் பெரும் பிரச்சினை நீர் பற்றாக்குறைதான். இன்னும் சில வருடங்களில் பூதாகரமாக உருவாகவிருக்கும் இந்த பிரச்சினை குறித்து இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு அக்கறை எதுவும் இல்லை. இரு திராவிடக் கட்சிகளும் மற்ற மாநிலங்களுடன் இருக்கும் தாவாக்களை சுமுகமாக தீர்ப்பதற்குத் தேவையான திறமையற்றவர்களாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பது போன்ற பம்மாத்து வேலைகளைத் தவிர, உண்மையான, உறுதியான நடவடிக்கைகள் இதுவரை இல்லவே இல்லை. அதிலும் திருவாளர் கருணாநிதி தமிழ்நாட்டின் நதி நீர்ப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பார் என்று நம்புவது போன்ற பைத்தியக்காரத்தனம் வேறெதுவும் இல்லை. காரணம், முதலீடுகள்!.

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினையில் கேரளாவை பகைத்துக் கொள்ள அவரொன்றும் முட்டாளில்லை. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்குமான கேரள முதலீடுகளுக்கு ஆபத்து வருவதை அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் (மேலும், சேட்டன்மார்களுக்கும் திரு. கருணாநிதிக்குமான உறவு அலாதியானது!). அதே கதைதான் காவிரிப் பிரச்சினைக்கும். ‘கன்னட ரணதீரப் படே’ கர்நாடகாவில் அவரின் முதலீடுகளை ஒரு கை பார்த்துவிடும் என்பதனை அவரொன்றும் அறியாப் பிள்ளையல்ல. ஆந்திர கிருஷ்ணா நதி நீரிலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. முதலீட்டிற்கு ஆபத்து வரக்கூடும். மேலும் ரெட்டிகாரும், நாயுடுகாரும் ஒன்று சேர்ந்து ‘அரவாடுகளை’ ஒரு கை பார்த்து விடுவார்கள்.

நதி நீர்ப்பிரச்சினை மட்டுமில்லை. இலங்கை இனப் பிரச்சினையிலும் அதே கதைதான். அங்கும் அவருக்கு முதலீடுகள் இருப்பதாக உலவும் சந்தேகங்கள் உண்மையாக இருக்கலாம். இனப்படுகொலையை எதிர்த்து கருணாநிதி குரல் கொடுப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கும் சில இலங்கைத் தமிழர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்யவதற்கில்லை. வேண்டுமானால் அவ்வப்போது “லிப் சர்வீஸ்” கொடுப்பார். அத்தோடு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவருக்கு அதனால் இலாபம் எதுவுமில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும், அட்சய பாத்திரமான சோனியா காந்தியை எதிர்த்துக் கொள்ள அவருக்கென்ன பித்தா பிடித்திருக்கிறது?

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்